ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வினு விமல் வித்யா: கேள்வி கேளுங்க... நிச்சயம் கிடைக்கும்!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
வினு விமல் வித்யா

சஹானா

வித்யாவிடமிருந்து வீடியோ கால் வந்தவுடன் வினுவுக்கும் விமலுக்கும் ஆச்சர்யமாகிவிட்டது.

“என்ன வித்யாக்கா, நீங்களே கூப்பிட்டிருக்கீங்க! அப்ப முக்கியமான விஷயம் வச்சிருக்கீங்க போல!” என்று உற்சாகத்துடன் பேச்சை ஆரம்பித்தாள் வினு.

“கரெக்டா கண்டுபிடிச்சிட்டே வினு! ரெண்டு நாளா மைதிலி சிவராமன் பத்தின நினைவாவே இருக்கு. அதான் உங்ககிட்ட பேசலாமேனு கூப்பிட்டேன். உங்களுக்கு அவங்களைத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. பத்து வருஷமா அல்ஸைமர் அவங்களை வீட்டுக் குள்ளேயே முடக்கிருச்சு.”

“அவங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன் வித்யாக்கா. பிரமாதமான ஆளுமை. உங்களுக்கு நல்லா தெரியுமா?” என்று கேட்டாள் விமல்.

“எங்க யூனியன் மீட்டிங்குக்கு வந்திருக்காங்க. நெருக்கமா பழகிருக்கேன். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரா, தொழிற்சங்கத் தலைவரா, ஜனநாயக மாதர் சங்கத் தலைவரா அறியப்படுற மைதிலி, ஆரம்பத்துல ஆன்மிகத்தில ஈடுபாடு கொண்டவங்களா இருந்திருக் காங்க. தனி மனித விடுதலையை நோக்கியே அவங்க கவனம் இருந்துச்சு. உயர்கல்விக்காக அமெரிக்கா போனப்ப, வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்கள் அங்கே தீவிரமா இருந்துச்சு. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் போராட்டங்களும் நடந்துச்சு. இதையெல்லாம் பார்த்த மைதிலி, தனிமனித விடுதலையிலிருந்து மக்கள் விடுதலை நோக்கி நகர்ந்திருக்காங்க. அப்புறம் ஐ.நா சபையில் ஆராய்ச்சியாளரா வேலை செஞ்சாங்க. அமெரிக்காவுக்குத் தெரியாம கியூபாவுக்குப் போயிட்டு வந்தாங்க.

வினு விமல் வித்யா: கேள்வி கேளுங்க... நிச்சயம் கிடைக்கும்!

கம்யூனிச அரசாங்கத்தால மட்டுமே மக்கள் நலனுக் காகச் செயல்பட முடியும்னு நினைச்சாங்க. இந்தியா வந்தவங்களுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டியில் புரொஃபஸர் வேலை கிடைச்சது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்ல பிஹெச்.டி பண்றதுக்கான அழைப்பும் வந்துச்சு. ரெண்டையும் மறுத்துட்டு மக்கள் பணியில் இறங்கினாங்க.”

“ராடிகல் ரெவ்யூனு ஒரு பத்திரிகை கூட நடத்தினாங்கன்னு கேள்விப் பட்டேன் வித்யாக்கா.”

“ஆமாம் விமல். இந்து என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம்... இவங்கல்லாம் மைதிலியோட ஃபிரெண்ட்ஸ். இவங்களோட இணைஞ்சு இந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்தாங்க. கீழவெண்மணி படுகொலை நடந்தப்ப, நேர்ல போய் உண்மையை வெளியே கொண்டு வந்தாங்க. அதே மாதிரி வாச்சாத்தி பிரச்னையில பாதிக்கப்பட்டவங் களுக்காகப் போராடி, நீதியை வாங்கிக் கொடுத்தாங்க. ஈவ் டீசிங்ல காலேஜ் ஸ்டூடன்ட் சரிகா ஷா இறந்து போனப்ப, ஈவ் டீசிங்குக்கு எதிரா சட்டம் கொண்டு வரக் காரணமா இருந்தாங்க. தொழிற் சங்கத்துல தொழிலாளர்கள், உழைக்கும் பெண்களுடைய உரிமை களுக்காகப் போராடினாங்க.”

“அடடா... எப்பேர்பட்ட ஆளுமை! மறதி நோய் மட்டும் இல்லைனா இன்னும் பல விஷயங் களைச் செஞ்சிருப்பாங்க” என்றாள் வினு.

“ஆமாம், வினு. போன வருஷம் ஹரியானாவிலிருந்து பீகாருக்கு தன் அப்பாவை சைக்கிள்ல வச்சு, 1200 கி.மீ தூரம் ஓட்டிட்டு வந்த ஜோதி குமாரியை நினைவிருக்கா?”

“நல்லாவே நினைவிருக்கு. லாக்டௌன்ல வாழ வழியில்லாம சொந்த ஊருக்குப் போன பொண்ணுதானே... இந்தியாவுல மட்டுமில்ல, அமெரிக்காவுல இவான்கா ட்ரம்ப் உட்பட பலரும் பாராட்டின பொண்ணாச்சே!”

“ஆமாம் வித்யாக்கா. இப்ப அந்தப் பொண் ணோட அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட் டார். 15 வயசு பொண்ணு, இவ்வளவு தூரம் ஓய்வெடுக்காம ஓட்டிட்டு வந்தது எவ்வளவு பெரிய வன்முறை? ஜோதிகுமாரி மாதிரி எத்தனை பொண்ணுங்க எவ்வளவு கஷ்டப் பட்டாங்களோ… அரசாங்கம் இவங்களை இப்படி விட்டிருக்கக் கூடாது.

“கரெக்ட் விமல். போன வாரம் டிரெண்ட் ஆன ஒரு விஷயம் சொல்றேன். கேரளா, கோழிக்கோட்டைச் சேர்ந்த 6 வயசு குட்டிப் பெண் மேஹாக் பாத்திமா. இந்தப் பொண்ணோட 3 வயசு தம்பியை இவங்க அப்பா கிரிக்கெட் கோச்சிங்ல சேர்த்துவிட்டிருக்காரு. அவனைவிட நான் பெரியவ. நான் பொண் ணுங்கிறதால என்னை கிரிக்கெட் கோச் சிங்ல சேர்த்து விடலையான்னு கேட்டிருக்கா மேஹாக். ஆடிப்போன அவ அப்பா, இவளையும் சேர்த்து விட்டுட்டாரு. பாத்திமா பிரமாதமா விளையாடறதா வீடியோ போட்டிருக்காங்க. பொண்ணுங்கிறதுக்காக ஏதாவது மறுக்கப்பட்டா, கேள்வி கேளுங்க. நிச்சயம் கிடைக்கும்னு இந்தப் பொண்ணு சொல்றா!”

“செம... உங்க கால்வலி இப்போ எப்படி இருக்கு வித்யாக்கா?”

“படியேறினா வலிக்குது. இப்போ டாக்டர் கிட்ட போறதுக்கும் யோசனையா இருக்கு.”

“டாக்டரைப் பார்த்து சரி செஞ்சுக்கோங்க. கொரோனா முடிஞ்சதும் நாம ஜாகிங் போகணும்.”

“ஜாகிங்கா!”

“இந்த வயசுக்கே இப்படி யோசிக்கிறீங்களே வித்யாக்கா. சீனாவைச் சேர்ந்த வாங் லாங் 100-வது மாரத்தான் ஓடி முடிச்சிருக்காங்க! அவங்க வயசு 70. எக்சர்சைஸ் செய்யறதுக்காக 50 வயசுல ஓட ஆரம்பிச்சாங்க. ஓட ஓட இன்ட்ரஸ்ட் அதிகமாயிருச்சு. 16 வருஷத்துல 100 மாரத்தான்ல ஓடி முடிச்சிருக்காங்க. நூறாவது போட்டியில 168 கி.மீ. தூரத்தை 40 மணி நேரத்துல கடந்திருக்காங்க!”

“சூப்பர் கிராண்ட்மாவா இருக்காங்களே!” என்று ஆச்சர்யமானாள் வினு.

“அவங்கள சீனர்கள் ‘சூப்பர் கிராண்ட்மா’னு தான் கூப்பிடறாங்க. சரி... சமோவா நாடு தெரியுமா?” என்றாள் விமல்.

“கமல் நடிச்ச விக்ரம் படத்துல வர்ற வித்தி யாசமான நாடு மாதிரி இருக்கே!” என்றாள் வினு.

“இது நியூசிலாந்துக்குப் பக்கத்துல இருக்கிற சின்ன நாடு. இங்கே வாழுற மக்கள் படிச்சவங்க, ஓரளவு வசதியானவங்க. இந்த நாட்டுல 40 வருஷமா ஒரு கட்சி ஆட்சியில் இருந்துச்சு. சமீபத்துல நடந்த எலெக்‌ஷன்ல எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிச்சிருக்கு. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபா என்ற 60 வயசு பெண் பிரதமரா ஆயிருக்காங்க. அவங்க பதவியேற்க நாடாளுமன்றத்துக்கு வந்தப்ப, அதுவரை ஆட்சியிலிருந்த கட்சிக் காரங்க தடுத்து நிறுத்தி, உள்ளே நுழையவிடலை. அவங்க வேற வழியில்லாம, நாடாளுமன்றத்துக்கு வெளியே நீதிபதியை வச்சு பதவி ஏத்துக் கிட்டாங்க. படிச்ச நாட்டுலகூட ஒரு பெண் தலைமைக்கு வர்றதை விரும்ப மாட்டேங் கிறாங்க. நவோமிதான் சமோவா நாட்டோட முதல் பெண் பிரதமர்” என்றாள் விமல்.

“என்ன அநியாயம் பாருங்க… நவோமிக்கு வாழ்த்துகள்! சினிமா, வெப் சீரிஸ் எதுவும் பார்க்கலையா நீங்க ரெண்டு பேரும்...” கேட்டார் வித்யா

``நான் டிஸ்னி ஹாட்ஸ்டார்ல `அவுட் ஆஃப் லவ்’ பார்த்தேன். இப்போ ரெண்டாவது சீசன் வந்திருக்கு. விறுவிறுப்பு குறையாம பார்க்க வச்சிருக்காங்க. கதை குன்னூர்ல நடக்குது. மீரா டாக்டர். அவங்க ஹஸ்பண்ட் ஆகாஷ் பிசினஸ்மேன். ஒரு மகன் இருக்கான். அழகா போயிட்டிருக்கிற வாழ்க்கை ஒரு நாள் நிலை குலைஞ்சு போகுது. ஆகாஷுக்கு அலியாங்கிற சின்ன பொண்ணோட ரிலேஷன்ஷிப் இருக்கு. பிசினஸ்லயும் லாஸ். மீராவோட பேங்க் பேலன்ஸையும் காலி பண்ணிருக்கான் ஆகாஷ். இந்த ஏமாற்றத்தை மீராவால தாங்க முடியல. அலியா கர்ப்பமா இருக்கிற விஷயத்தை அவங்க பேரன்ட்ஸ்கிட்ட சொல்லிடறா மீரா. சண்டை, அடிதடின்னு போய் ஆகாஷ் அலியாவோட டெல்லிக்குப் போயிடுறான். மூணு வருஷத்துக்குப் பிறகு, திரும்பி வர்றாங்க ஆகாஷும் அலியாவும். ஆனா, ஆகாஷோட கெட்ட புத்தி மீராவைப் பழிவாங்கத் துடிக்குது. மகனை அழைச்சிட்டுப் போக டிராமா பண்றான். ஆகாஷை மாட்டிவிட மீராவும் டிராமா பண்றா. இவங்க சண்டையில மகன் காயப்படறான். கடைசில தனக்கு நேர்மையா இல்லாத ஆகாஷை விட்டுப் போயிடறா அலியா. நடுத்தெருவுல நிக்கும் ஆகாஷ், மீராவைத் தேடி வர்றான். அவ என்ன பண்ணா, ஆகாஷ் என்ன ஆனான்னு முடியுது. மீராவா பிரபல பாலிவுட் நடிகை ரசிகா டுகல் கலக்கியிருக்காங்க. மாதவன் சாயல்ல இருக்குற புரப் கோலி ஆகாஷாக நடிச்சிருக்கார்.”

வினு விமல் வித்யா: கேள்வி கேளுங்க... நிச்சயம் கிடைக்கும்!

“ஓ… மனைவியின் உழைப்பைச் சுரண்டி, அன்பைச் சுரண்டி, பணத்தைச் சுரண்டி வாழுற ஒருத்தன், அவளுக்கே துரோகமும் செய்யுறான். அதுமட்டுமல்லாம, அவளைப் பழிவாங்கவும் துடிக்கிறான்… என்ன ஒரு கொடுமை” என்று வருத்தப்பட்டார் வித்யா.

“ரொம்ப நேரமாச்சு. நம்ம அரட்டையை முடிச்சுக்கலாமா?” என்று கேட்டாள் வினு.

“ஓகே வினு, திடீர்னு கூப்பிட்டாலும் இவ்வளவு நேரம் அரட்டைக்கு வந்துட்டீங்க. ஸ்டே சேஃப். பை” என்று இணைப்பைத் துண்டித்தார் வித்யா.

அரட்டை அடிப்போம்...