Published:Updated:

வினு விமல் வித்யா: 67 வயதில் பெஸ்ட் டைரக்டர் விருது... 100 வயதில் கம்ப்யூட்டர் வகுப்பு

 ஜேன் கேம்பியன்,  மார்கரெட் க்ரிஃப்த்ஸ்,  வித்யா பாலன்
பிரீமியம் ஸ்டோரி
ஜேன் கேம்பியன், மார்கரெட் க்ரிஃப்த்ஸ், வித்யா பாலன்

- கலக்கும் கண்மணிகள்!

வினு விமல் வித்யா: 67 வயதில் பெஸ்ட் டைரக்டர் விருது... 100 வயதில் கம்ப்யூட்டர் வகுப்பு

- கலக்கும் கண்மணிகள்!

Published:Updated:
 ஜேன் கேம்பியன்,  மார்கரெட் க்ரிஃப்த்ஸ்,  வித்யா பாலன்
பிரீமியம் ஸ்டோரி
ஜேன் கேம்பியன், மார்கரெட் க்ரிஃப்த்ஸ், வித்யா பாலன்

ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றில் பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீமை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் வினு, விமல், வித்யா மூவரும்.

“கோவிட் வந்ததுலேருந்து ஜில்லுனு சாப்பிடறதையே மறந்துட்டேன். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, சளி பிடிச்சாலும் அது கொரோனா வான்னு டவுட் வந்துடும். எதுக்கு வம்பு? இப்போ ஒரு பிரேக்குக்கு அப்பறம் சாப்பிடும் போது ரொம்ப டேஸ்டா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே ஐஸ்க்ரீமின் கடைசி துளியைச் சுவைத்தார் வித்யா.

“ஆமா, வித்யாக்கா... எல்லாருக்கும் அந்த பயம் இருந்திருக்கும். 94-வது ஆஸ்கர் விழா ரொம்ப சர்ச்சைக்குரியதா மாறிருச்சே...” என்றாள் வினு.

“வில் ஸ்மித் மனைவிக்கு `அலோபேஷியா' பாதிப்பால முடி கொட்டிருச்சு. அதை கிறிஸ் ராக் கிண்டல் செஞ்சா, எந்த ஹஸ்பண்ட் சும்மா இருப்பார்? வில் ஸ்மித் விட்ட அறையை, பாடி ஷேமிங் பண்றவங்க ஒவ்வொருத்தர் மேல விட்ட அறையாதான் நான் பார்க்கறேன். பொது இடத்துல, உலகமே பார்க்கிற விழா வுல இப்படிப் பேசியிருக்கவும் வேணாம், அறை வாங்கியிருக்கவும் வேணாம்” என்றார் வித்யா.

“அகாடமி விழாவுல இப்படிக் கிண்டல் பண்ணிப் பேசறது சகஜம்தான். அதுக்காக கிறிஸ் ராக் செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன். ஆனா, அதை வில் ஸ்மித் இன்னும் நாசூக்கா கையாண்டிருக்கலாம். இப்ப கிறிஸ் ராக்கை விட்டுட்டாங்க... வில் ஸ்மித் குற்றவாளியாயிட்டார். ‘கிங் ரிச்சர்டு’ படத்துக்காக முதல் ஆஸ்கர் விருது வாங்கின சந்தோஷத்தைக்கூட அவரால அனுபவிக்க முடியல. அகாடமி பொறுப்புலேருந்து ரிசைன் பண்ணிட்டார். இனி விசாரணையை வேற அவர் எதிர்கொள்ளணும்” என்றாள் வினு.

‘`வில் ஸ்மித் செஞ்சது தப்புனா... அதைச் செய்யத் தூண்டினது அதைவிட பெரிய தப்பில்லையா... கிறிஸ் ராக்குக்கு என்ன தண்டனை? ஒரு பெண்ணை, உலகமே பார்த்துட்டிருந்த மேடையில பாடி ஷேமிங் செஞ்சதை மன்னிக்கவே முடியாது. ஆனா, ஆஸ்கர் மேடையிலேயே அழுது மன்னிப்பு வேற கேட்டுட்டார் வில் ஸ்மித். நானாயிருந்தா மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டேன்’’ என்று கறார் குரலில் சொன்னாள் விமல்.

“ `கிங் ரிச்சர்டு’ படம் வீனஸ், செரீனா வில்லியம்ஸின் அப்பாவோட பயோபிக். ஆப்பிரிக்க அமெரிக்கர், தன் குழந்தைகளை எப்படி அமெரிக்காவோட அடையாளமா மாத்தினார்ங்கிறதுதான் கதை. ரிச்சர்டு உண்மையிலேயே கிங்தான். அந்த கேரக்டர்ல அட்டகாசமா பொருந்தியிருக்கார் வில் ஸ்மித். நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேன் கேம்பியனுக்கு இந்த வருஷம் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது கிடைச்சிருக்கு. 1967-ம் வருஷம் ரிலீசான ‘தி பவர் ஆஃப் டாக்’ நாவலை வச்சு அதே பேர்ல இந்தப் படத்தை ஜேன் இயக்கி யிருக்காங்க. ரொம்ப நல்ல படம்னு பலரும் சொல்றாங்க. நெட்ஃப்ளிக்ஸ்ல இதைப் பார்க்கணும்” என்றாள் வினு.

“ஜேன் முக்கியமான டைரக்டர். ஷார்ட் ஃபிலிம்லதான் கரியரை ஸ்டார்ட் பண்ணி னாங்க. 1993-ல ‘தி பியானோ’ படத்துல பெஸ்ட் ஸ்க்ரீன் ப்ளேவுக்கான ஆஸ்கர் அவார்டை வாங்கியிருக்காங்க. இப்போ 67 வயசுல பெஸ்ட் டைரக்டருக்கான அவார் டையும் வாங்கிட்டாங்க...” எக்ஸ்ட்ரா தகவல் சொன்னாள் விமல்.

 ஜேன் கேம்பியன்,  மார்கரெட் க்ரிஃப்த்ஸ்,  வித்யா பாலன்
ஜேன் கேம்பியன், மார்கரெட் க்ரிஃப்த்ஸ், வித்யா பாலன்

“ஜேனுக்கு ஒரு சாக்லேட் பொக்கே. எனக்கு கோகனட் ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணு” என்று சிரித்தார் வித்யா.

“ராஜஸ்தான் டாக்டர் அர்ச்சனா ஷர்மா வோட இறப்பு அதிர்ச்சியா இருக்கு” என்று வருத்தத்துடன் சொன்னாள் விமல்.

“என்ன ஆச்சு?”- ஒரே குரலில் கேட்டார்கள் வினுவும் வித்யாவும்.

“அர்ச்சனாவும் அவங்க கணவர் சுனித்தும் லால்கோட்டுல ஒரு ஹாஸ்பிடல் நடத்திட்டு இருந்தாங்க. அங்கே ஒரு கர்ப்பிணிக்கு அர்ச்சனா பிரசவம் பார்த்தபோது, உடல்நிலை மோசமாகி இறந்துட்டாங்க. அவங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் அர்ச்சனாவோட கவனக்குறைவாலதான் அந்தப் பெண் இறந்ததா சொல்லி, போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டாங்க. அதை உள்ளூர் அரசியல்வாதிகள் பெரிய பிரச்னையா மாத்திட்டாங்க. இதனால மன உளைச்சல்ல இருந்த அர்ச்சனா, மறுநாள் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. அர்ச்சனாவுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க...”

“ஐயோ பாவம்... ட்ரீட்மென்ட்டுல எந்த நேரம் என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவங்க புகார் சொல்றதைக்கூடப் புரிஞ்சுக்க முடியுது. ஆனா, இதுல அரசியல் வாதிகள் தலையிட்டு, பிரச்னையைத் திசை திருப்பி, ஒரு டாக்டரோட உயிரையே பறிச் சிட்டதை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு...” என்றாள் வினு.

“தான் எந்தத் தப்பும் செய்யலைன்னும் மருத்துவர்கள் மேல இப்படிப் பழி சுமத்தா தீங்கன்னும் லெட்டர் எழுதி வச்சிருக்காங்க அர்ச்சனா. அவங்க இப்படி அவசரப்பட்டி ருக்கக் கூடாது, விசாரணையைச் சந்திச்சிருக்க லாம். ஒரு நெருக்கடின்னு வரும்போது டாக்டரா இருந்தாலும்கூட இப்படி முடிவெடுத்துடறாங்க. அப்புறம் இந்தப் பிரச்னைக்காக நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியிருக்காங்க.”

“வருத்தமா இருக்கு விமல்... இந்தியாவுல 18 வயசுக்கு முன்னால கல்யாணம் பண்ணி வச்சா, சட்டப்படி குற்றம். ஆனாலும், குழந்தைத் திருமணங்கள் நடந்துட்டுதான் இருக்கு. கொரோனா காலத்துல இந்தக் குழந்தைத் திருமணங்கள் அதிகமாயிருச்சு. இப்பவும் பத்து வயசு பெண் குழந்தைகளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடறாங்க. அந்தக் குழந்தைங்களோ கொஞ்சமாவது படிச்சு, ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு நினைக்கிறாங்க. வறுமையும் ஆணாதிக்கமும் சேர்ந்து குழந்தைத் திருமணங்களை நடத்த வச்சிடுது. யுனிசெஃப் அறிக்கைப்படி உலக அளவுல மூணுல ஒரு பங்கு குழந்தைத் திருமணங்கள் இந்தியாவுல நடக்குது. அதாவது ஒவ்வொரு வருஷமும் 15 லட்சம் குழந்தைத் திருமணங்கள் இந்தியாவுல நடக்குதாம்” என்றாள் விமல்.

“ரொம்ப அதிர்ச்சியாயிருக்கு விமல்... வினு, நீ ஒரு நாள் ஃப்ரீயா இருக்கும்போது சொல்லு... எனக்கு கம்ப்யூட்டர்ல டவுட்ஸ் இருக்கு. எத்தனை தடவை கத்துக்கிட்டாலும் மறந் துடுது. வயசாகுதுனு நினைக்கிறேன்” என்றார் வித்யா.

“என்ன வித்யாக்கா, உங்களுக்கு வயசா யிருச்சா? டூ மச்... இங்கிலாந்துல இருக்குற மார்கரெட் க்ரிஃப்த்ஸுக்கு நூறு வயசாகுது. அவங்க பிரைமரி ஸ்கூல் டீச்சரா இருந்தவங்க. அப்புறம் ஹெட் டீச்சரா ரிடையர்டு ஆனாங்க. ஆனாலும், தொடர்ந்து எதையும் கத்துக்கவும் கத்துக்கொடுக்கவும் ஆர்வமா இருக்காங்க. இப்ப இருக்கிறவங்கள மாதிரி டெக்னாலஜி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு, கம்ப்யூட்டர் க்ளாஸுக்குப் போறாங்க. ஆர்வத்தோட கத்துக்கிறாங்க. இருக்கிற வரைக்கும் எதையாவது கத்துக்கணும். பின் தங்கிடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க!” என்றாள் வினு.

“இது ரொம்ப நல்ல விஷயம். மூவி ஏதாவது பார்த்தீங்களா வித்யாக்கா?”

“இல்ல விமல்...”

‘`நான் ஹிந்தி மூவி `ஜல்சா' பார்த்தேன். சுரேஷ் திரிவேணி இயக்கத்துல வித்யா பாலன், ஷெஃபாலி ஷா நடிச்சிருக்காங்க. ஜர்னலிஸ்ட் வித்யா பாலன் வீட்டுல வேலை செய்றாங்க ஷெஃபாலி. ஷெஃபாலியோட மகளுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுது. அதுக்குக் காரணம் யாருங்கிறதும் அவங்களுக்குள்ள நடக்கிற போராட்டமும்தான் கதை. ரெண்டு பேரும் நல்லா நடிச்சிருக்காங்க” என்றாள் விமல்.

‘`நானும் பார்த்தேன் விமல். இதுல நடிச்ச சூர்யா பத்தி சொல்லியே ஆகணும். வித்யா பாலனோட மகனா ஆயுஷ் கேரக்டர்ல சூர்யா நடிச்சிருக்கார். ஆயுஷ் செரிப்ரல் பால்சியால பாதிக்கப்பட்டவன். சூர்யாவும் செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்டவர்தான். பாதிக்கப்பட்ட கேரக்டருக்கு, பாதிக்கப்பட்ட வரையே நடிக்க வைக்கிறது இந்தியாவுலயே இதுதான் முதல் தடவைன்னு சொல்றாங்க. ரொம்ப நல்லா ஒத்துழைப்பு கொடுத்தார் சூர்யான்னு டைரக்டர், வித்யா பாலன் எல்லோரும் பாராட்டறாங்க. இந்தியாவுல பிறந்த சூர்யா இப்போ அமெரிக்காவுல வசிக்கிறார்” என்றாள் வினு.

“பெருமூளை வாதத்தால பாதிக்கப்பட்ட குழந்தைகளோட பேரன்ட்ஸ், நம்பிக்கை யோட அவங்க குழந்தைகளைப் பல துறை கள்ல கொண்டு வரலாம்னு சூர்யா மூலம் தெரியவருது. நானும் படத்தைப் பார்த்துட றேன்’’ என்றார் வித்யா.

“ஓகே, வித்யாக்கா. கிளம்பலாம். வெயில் தாங்கல” என்று வினு சொன்னதும் மூவரும் கிளம்பினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

*****

வினுவின் வித்தியாசமான தகவல்!

உலக வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, பூக்களின் வாசனை குறைந்து வருகிறது.

சமையல் எரிவாயு விலையேற்றம்... எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விலையேறுவதன் காரணமாக நீங்கள் பாதிப்புக்கு ஆளாகிறீர்களா? எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

முன்பு முப்பது நாள்கள் வந்துகொண்டிருந்த சிலிண்டரை இப்போது நாற்பத்தைந்து நாள்கள் வரை வருமாறு செய்துவிட்டேன். அதற்கு நான் கையாண்ட உத்திகள்...

  • முடிந்தவரை அடுப்பில்லா சமையல் முறையைக் கையாள்கிறேன்.

  • ‘சிங்கிள் பாட் குக்கிங்’ அதாவது, குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறிகளை ஒரே ஸ்ட்ரெச்சில் வைத்து விடுகிறேன்.

  • குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட அமருமாறு செய்வதால், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் வேலை இல்லை.

  • அரிசி, பருப்பு, சுண்டல் வகைகளை ஊறவைத்து சமைப்பதால் எரிபொருள் கணிசமாக மிச்சம் ஆகிறது.

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

குடும்ப உறுப்பினர்கள் காலையும் மாலையும் வெவ்வேறு நேரங்களில் டீ குடிப்பதால் போட்டு வைத்த டீயை ஒவ்வொரு முறையும் சூடுபடுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு பெரும்பாலும் ஒரே நேரத்தில் டீ அருந்துவதைப் பழகிவருகிறோம்.விடுமுறை நாள்களில் குடும்பத்தோடு ஹோட்டலில் சாப்பிடும் செலவை மிச்சப் படுத்தி சமையல் எரிவாயு விலையேற்றத்தை சரி செய்கிறோம்.

- ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி

தோசை வார்த்தெடுத்த பின் ஸ்டவ்வை ஆஃப் பண்ணி அந்தச் சூட்டிலேயே, குழம்பு, கூட்டுப் பதார்த்தங் களை வைத்து சூடு படுத்துவேன். அப்போது எரிவாயு மிச்சமாகும்.

சின்ன குக்கரில் சாதம் வைக்கும்போது ஒரு நீளமான டம்ளரில் பருப்பைப் போட்டு, அதனுடன் வேகவைத்து எடுத்து விடுவேன். முடிந்தவரை காய்கறிகளை வேக வைப்பதிலிருந்து, கூட்டு, பொரியல், குழம்பு வகை அனைத்தையும் குக்கரில் செய்து விடுவேன். இப்படித்தான் சமாளித்து வருகிறேன்.

- இந்திராணி தங்கவேல், சென்னை- 126

காலை டிபனுக்கு ஊறவைத்த அவல், சத்துமாவுக் கஞ்சி, ஃப்ரூட் சாலட் என எரிவாயு பயன்படுத்தாமலே சமாளிக்கிறோம். மதியம் காய் வெட்டுவது, அரிசி களைவது, மிக்ஸியில் அரைப்பது என எல்லா வேலை களையும் முடித்துவிட்டு எரிவாயுவை விரைவாகப் பயன் படுத்தி சமையலை முடிக்கிறோம். இரவு பெரும்பாலும் தரமான கையேந்தி பவனும், நல்ல கம்பெனிகளின் ரெடிமிக்ஸ் உணவுகளும் கைகொடுக்கின்றன.

- அ. யாழினிபர்வதம், சென்னை-78

முதல் போர்ஷனில் நானும் அடுத்தடுத்த போர்ஷன் களில் என் மகன் - மருமகளும், மகள் - மருமகனும் குடியிருக்கிறோம். மூன்று குடும்பங்களுக்கும் தனித்தனி எரிவாயு உண்டு.

நான் மூன்று குடும்பங்களுக்கும் ஒன்றாக சாதம் வடித்து ரசம் வைப்பேன். மருமகள் கூட்டு, பொரியல் செய்வாள். மட்டன், சிக்கன் வகையறாக்களை மகள் செய்வாள். பங்கிட்டுக்கொண்டு சாப்பிடுவோம்.

- ஆர்.ஜைபுன்னிசா, சென்னை-11

இந்த இதழ் கேள்வி

பெட்ரோல், சமையல் காஸ், தேநீர், ஹோட்டல் உணவுகள் என எல்லாவற்றின் விலையும் எகிறிவிட்டது. அரசு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப் பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி:

avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 19.4.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism