Published:Updated:

வினு விமல் வித்யா: ஏனென்றால், நான் ஒரு பெண்!

 ஏஞ்சலா மெர்கல் -  நிகத் சாஹிபா -  கமலா பாசின்
பிரீமியம் ஸ்டோரி
ஏஞ்சலா மெர்கல் - நிகத் சாஹிபா - கமலா பாசின்

- சஹானா

வினு விமல் வித்யா: ஏனென்றால், நான் ஒரு பெண்!

- சஹானா

Published:Updated:
 ஏஞ்சலா மெர்கல் -  நிகத் சாஹிபா -  கமலா பாசின்
பிரீமியம் ஸ்டோரி
ஏஞ்சலா மெர்கல் - நிகத் சாஹிபா - கமலா பாசின்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஓர் உரை கேட்க வந் திருந்தாள் விமல். `எதிர் பாராத காரணங்களால் இன்று நிகழ்ச்சி நடை பெறாது’ என்ற அறிவிப் பைக் கண்டதும், `என்ன செய்யலாம்’ என யோசித்தாள். அடுத்த நொடியே ஒரு மின்னல் பளிச்!

உடனே வித்யாவையும் வினுவையும் அருங் காட்சியகத்துக்கு வரச் சொன்னாள். அவசர வேலைகள் இல்லாததால் அவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

``மியூஸியம் எல்லாம் திறந்திருக்கா?”

“ஆமா, வித்யாக்கா. ஆவின் ஃப்ளேவர்டு மில்க் நல்லா இருக்கு. இந்தாங்க... எடுத்துக் கோங்க” என்ற விமலிடம், ``நீ ஒரு கவிதை அனுப்பி வச்சியே, அது யார் எழுதினது? நல்லா இருந்துச்சு” என்றார் வித்யா.

“நிகத் சாஹிபா... காஷ்மீரைச் சேர்ந்தவங்க. முதல் தலைமுறையா படிச்சு வந்தவங்க. சாஹிபாவைப் படிக்க வச்சாலும் கவிதை எல்லாம் எழுதுவாங்கன்னு வீட்ல யாருமே நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்கனு சொல்றாங்க. தன்னைப் பெண் கவிஞர்னு சொல்றதையும் எதிர்க்கிறாங்க. கவிஞர்னு சொன்னா போதும்கிறாங்க. இவங்க எழுதின கவிதைகளைப் படிச்சிட்டு சிலாகிக்கிறவங்க கூட, `இது யார் எழுதிக் கொடுத்தது’னு கேட்கறாங்களாம். ஆண் விருது வாங்கினா, `அது அவன் திறமையால வாங்கினது’னு சொல்ற சமூகம், பெண் விருது வாங்கினா, ’அது பெண் என்ற காரணத்துக்காக’ வாங்கி னதா சொல்லுதுனு வருத்தப்படற நிகத் சாஹி பாவுக்குத்தான் தமிழக அரசோட கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டிருக்கு” என்றாள் விமல்.

“ஓ... கவிதை போலவே சாஹிபாவின் கருத்துகளும் பிரமாதம். வாழ்த்துகள்” என்ற வித்யா தொடர்ந்தார்...

“இந்தியாவின் முக்கியமான கவிஞர், பெண் ணியச் செயற்பாட்டாளர் கமலா பாசின்.

வினு விமல் வித்யா: ஏனென்றால், நான் ஒரு பெண்!

75 வயசுல கேன்சரோட போராடி, இறந்துட் டாங்க. `பெண் ஏன் படிக்கணும்’கிற இவங் களுடைய கவிதை ரொம்ப பிரபலம். பெண் களுக்கு எதிரா இருக்கிற ஒவ்வொரு விஷயத்தை யும் சொல்லி, `இதை மாத்தணும்னா நான் படிக்கணும். ஏனென்றால், நான் ஒரு பெண்’ன்னு அந்தக் கவிதை முடியும். கவிதை எழுதறதோட, பெண்ணுரிமைகளுக்காக வாழ் நாள் முழுசும் செயல்பட்டாங்க. `இன்றைய பெண்ணியம் என்பது இன்றைய தேவைகளைக் கருத்தில்கொண்டு விவாதிக்கப்படுது. ஆணாதிக்கத்தோட நின்னுடாம, அதிகாரப் போக்கு எந்த வடிவுல வந்தாலும் அதைக் கேள்விக்குட்படுத்துது. அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், வர்க்கப் போராட்டம், சாதி எதிர்ப்புப் போராட்டம், ஜனநாயகத்துக் கான போராட்டம், சமத்துவத்துக்கான பேராட்டம், மதச்சார்பின்மைக்கான போராட்டம்னு விரிவடைஞ்சுகிட்டே போகுது. சதி, பலதார மணம், குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை, பெண் ணடிமை முறைனு நம்மை பாதிச்ச சமூகச் சீர்கேடுகள் எல்லாத்தையும் தகர்த்தெறிய பெண்ணியம் நமக்கு உதவியிருக்கு. `நான் பெண்ணியவாதி அல்ல’னு அடுத்தமுறை அறிவிக்கிறதுக்கு முன்னாடி, வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பார்த்துடுங்க. நீங்க எங்கிருந்து தொடங்கினீங்கறதையும் எப்படி இங்கே வந்து சேர்ந்தீங்கன்றதையும் உணர் வீங்க’ன்னு கமலா சொன்னது எவ்வளவு உண்மையானது.”

“ஆமா. ராஜஸ்தானைச் சேர்ந்த கமலா பாசின் ஐ.நாவுல வேலை செய்தவங்க. `சங்கத்’, `தெற்காசிய பெண்கள் நெட்வொர்க்’ அமைப்புகளை ஆரம்பிச்சாங்க. இதுக்காகவே ஐ.நா வேலையை ராஜினாமா செஞ்சாங்க. தனிப்பட்ட வாழ்க்கையில இவங்க கணவர் ஆரம்பத்துல கமலாவை மதிக்கிறவரா இருந் திருக்கார். ஒரு கட்டத்துல வன்முறையைப் பிரயோகிக்க ஆரம்பிச்சிட்டார். அதனால கமலா, டைவர்ஸ் வாங்கிட்டாங்க. இவங்க மகள் அமெரிக்காவில ஆராய்ச்சிப் படிப்புல இருந்தப்ப இறந்துபோயிட்டாங்க. தவறான சிகிச்சையால மகன் மாற்றுத்திறனாளியா யிட்டார். இப்படிச் சொந்த வாழ்க்கையில கடினமான சூழல்களைச் சந்திச்சாலும், கமலா சமூக மாற்றத்துக்கான பணிகளை ரொம்ப நல்லா செஞ்சிருக்காங்க” என்றாள் வினு.

“என்ன விமல், ஜெர்மனியோட முதல் பெண் சான்சிலரா இருந்த ஏஞ்சலா மெர்கல் இனி பதவியில இருக்கப் போறதில்லைன்னு சொல்லிட்டாங்களே...”

“ஆமா, வித்யாக்கா. நாலு தடவை பதவி யிலிருந்துட்டாங்க. 16 வருஷத்துக்கு மேல வலுவான உலகத் தலைவரா மதிக்கப்பட்டாங்க. கடினமான சூழலை நல்லா ஹேண்டில் பண்ணினாங்க. நாடு, இனம், மதம்லாம் பார்க்காம அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தாங்க. ஜெர்மனிக்கு யார் வந்தாலும் அவங்க ஜெர்மானியர்களேனு சொன்னாங்க. ஐரோப்பிய யூனியன் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தாங்க. முதுமையும் உடல்நலப் பிரச்னைகளும் பதவியிலிருந்தது போதும்கிற நினைப்பை மெர்கலுக்குக் கொண்டுவந்துருச்சு. புகழோட உச்சத்திலிருந்த போதே விலகி, அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டுட்டாங்க!”

“பிரான்ஸ் கத்தோலிக்கத் திருச்சபையில நடந்த பாலியல் அத்துமீறல் பத்தி அறிக்கை வெளிவந்தி ருக்கு, ரெண்டு பேரும் கவனிச் சீங்களா...” என்றாள் விமல்

“இல்ல விமல்...”

“பிரான்ஸ் கத்தோலிக்கத் திருச்சபையில 70 ஆண்டுகளா குழந்தைகள் மேல பாலியல் அத்துமீறல்கள் நடந்துட்டே வந்திருக்கு. இதுல பாதிக்கப் பட்டவங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து, நியாயம் கிடைக்கிற துக்காகப் போராடிட்டு வர்றாங்க. ரெண்டரை மாசம் நடந்த விசாரணையில ரெண்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் திருச் சபையினரால பாலியல் அத்துமீறல்களைச் சந்திச்சிருக் காங்கங்கிற விஷயம் வெளியில வந்திருக்கு. திருச் சபையில அடிமட்டத்துல வேலை செஞ்சவங்க செய்த கொடுமைகளையும் சேர்த்தா, மூணு லட்சத்துக்கும் அதிக மான குழந்தைகள் பாதிக்கப் பட்டிருக்காங்கன்னு சொல் றாங்க.”

“அடக் கொடுமையே... ரொம்ப அதிர்ச்சியா இருக்கு விமல்.”

“இந்தக் கொடுமையெல் லாம் ரொம்ப வருஷமா புகாரா சொல்லிட்டே வந் தாலும் திருச்சபை கண்டுக்கல. திருச்சபையோட பேரைக் காப்பாத்துறதிலேயே கவ னமா இருந்திருக்காங்க. இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் முயற்சி எடுக்கல. வாடிகன் போப் இந்தச் செய்தியைக் கேட்டு, தான் அதிர்ச்சியடைஞ்சதா சொல்லியிருக்கார். பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு அவங்க வாழ்நாள் முழுசும் அந்த பாதிப்பு இருக்கும்னு சொல்றாங்க” என்றாள் விமல்.

“ம்… உலகம் உருண்டைதான்கிறதை மதவாதிகளும் நிரூபிக்கறாங்க. எல்லா நாடுகள்லயும் எல்லா மதங்கள்லயும் தங்களோட விகார முகத்தை யும், கொடூரமான மறுபக்கத்தையும் மறைக்கறதுக்கு மதங்களைத்தான் மாஸ்க்கா பயன்படுத்துறாங்க’’ என்று கொந்தளித்தாள் வினு.

மூவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர்.

“சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து செய்யப்போறாங்கன்னு ரொம்ப நாளா ஓடிட்டு இருந்துச்சு. இப்ப உறுதியாகிடுச்சு... அதுக்குக் காரணம் என்னன்னு ரிசர்ச் பண்ணிட்டிருக்காங்க, பார்த்தீங்களா?” என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தார் வித்யா.

“ஆமா வித்யாக்கா. தனிப்பட்ட ரெண்டு பேர் சரிவரலைனு டைவர்ஸ் பண்றாங்க. அதுல அடுத்தவங்களுக்கு கருத்து சொல்ல என்ன இருக்கு? செலிபிரிட்டின்னா இவ்வளவு தூரம் அவங்க விஷயத்துல மூக்கை நுழைக் கணுமா? இதுல, `சமந்தாவுக்கு ஜீவனாம்சம் தரக் கூடாது. நாக சைதன்யாவைவிட சமந்தா அதிகம் சம்பாதிக்கிறாங்க, புகழோட இருக்காங்க’னு ஒரு கோஷ்டி கிளம்பிருச்சு. அதுக்குப் பெரும்பாலான ஆண்கள், ஆமாம்னு ஜால்ரா வேற. சட்டத்தை மாத்தணும்கிற அளவுக்குப் போயிட்டாங்க!”

“சாதாரணமான குடும்பங்கள்லயும் இப்ப டைவர்ஸ் அதிகமா நடக்குது. பெரும்பாலான ஆண்கள் ஜீவனாம்சம் தர்றதில்ல. அவங்க செய்ற டார்ச்சர் தாங்க முடியாம, `ஜீவனாம்சம்கூட வேணாம், ஆளை விட்டா போதும்’னு நினைக்கிற பெண்கள்தான் அதிகமா இருக்காங்க. என் ஃபிரெண்டுக்கு ரெண்டு பசங்க. அந்த ஆள் கொடுமை தாங்க முடியாம டைவர்ஸ் பண்ணிட்டா. இவளுக்கு அப்போ வேலைகூட இல்ல. குழந்தைகளைப் படிக்கவைக்க ஜீவனாம்சம் கேட்டா. கோர்ட்டும் கொடுக்கச் சொன்னது. ரெண்டு மாசம் பத்தாயிரம் ரூபா வந்தது. மூணாவது மாசம் வரலையேனு விசாரிச்சா, அவன் பேங்க் வேலையை விட்டுட்டுப் போயிட்டான். `இந்த வேலைல இருந்தாதானே ஜீவனாம்சம் கொடுக்கணும், அதான் விட்டுட்டேன்’னு சொல்லியிருக்கான். என்ன ஒரு வக்கிரமான சிந்தனை... ரொம்ப கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்க் கிறா. அவன் வேற கல்யாணம் பண்ணி, ஒரு குழந்தையும் பெத்துட்டான். இப்படித்தான் இருக்காங்க பலரும்...”

“டைவர்ஸ் பண்ற ஆண்கள் பெரும்பாலும் நியாயமா நடந்துக்கறதில்ல. குழந்தைகளைப் பெண்கள் தலையில கட்டிட்டு, அடுத்த வாழ்க்கையைத் தேடிப் போயிடறாங்க. பெண்களுக்குக் குழந்தைகளைக் காப்பாத்தறதே பெரும்பாடா இருக்கிறதால, அடுத்த வாழ்க்கையை எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. என்ன சட்டம் வந்தாலும் ஆண்கள் தப்பிக்க வழி கண்டுபிடிச்சிடறாங்க. குழந்தைகளை வளர்க்கிறதுல ரெண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கு.”

“ஆமாம், வித்யாக்கா. சரி, கிளம்புவோமா? ரொம்ப நேரமாயிடுச்சு” என்று டைம் பார்த்தாள் வினு.

“கூப்பிட்ட உடனே வந்ததுக்கு தேங்க்ஸ்” என்று சிரித்தாள் விமல்.

“ஃப்ளேவர்டு மில்க்குக்கும் தேங்க்ஸ்'' என்றார் வித்யா. சிரித்துக்கொண்டே மூவரும் மியூஸியத்தைவிட்டுக் கிளம்பினர்.

- அரட்டை அடிப்போம்...

*****

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப்பரிசு காத்திருக்கிறது.

இந்த இதழ் கேள்வி

ஒரே வேலைதான்... ஆனா, சம்பளம் கம்மி... காரணம்?

அண்மையில் பிபிசி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அறியப்பட்ட ஓர் உண்மை இது. இன்னமும் உலகில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சம்பள வேறுபாடு அதிகமாகவே இருக்கிறது. அதாவது, ஆணைப் போலவே அதே வேலையைச் செய்யும் பெண், ஆணைக் காட்டிலும் குறைவான சம்பளமே பெறுகிறார். அமேசான், ஹெச்எஸ்பிசி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களிலும் இதே போக்குதான் உள்ளது. உங்கள் நிறுவனத்தில் அல்லது உங்கள் பகுதியில் இப்படி நடக்கிறதா? இதுபற்றி உங்கள் எண்ணம் என்ன?

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 19.10.2021

சென்ற இதழ் கேள்வி...

‘மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற துறைகளில் உயர்கல்வி கற்ற பெண்களில் பலர் திருமணத்துக்குப் பின் படிப்புக்கேற்ற பணி அல்லது தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி உங்கள் எண்ணம் என்ன?

வாசகி பதில்கள்... ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

பெப்சி நிறுவனத்தில் சிஇஓ பதவி கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை இந்திரா நூயி சொல்ல, `அது கிடக்கட்டும், பால் தீர்ந்துவிட்டது, முதலில் அதை வாங்கி வா” என்று அவர் அம்மா அலட்சியமாகச் சொன்னாராம். வளர்ச்சியடைந்த அமெரிக்காவிலேயே இந்த கதி. மருத்துவம் படித்துவிட்டு உயிர்காக்கும் தொழிலைச் செய்யாமல் வீட்டில் முடங்கிக்கிடப்பது மட்டுமல்ல குற்றம், மருத்துவத்துக்குப் பிறகு ஐஏஎஸ் படித்து அரசு அதிகாரியாவதுகூடத் தவறு என்றுதான் நான் நினைக்கிறேன்.

- @ஆர்.பார்வதி

கல்லூரி பேராசிரியராக இருந்த நான், என் தாயின் உடல்நிலை மற்றும் குழந்தை வளர்ப்பு கருதி அந்தப் பணியைத் துறந்தது மிகப் பெரிய முட்டாள்தனம் என இன்று உணர்கிறேன். என் தந்தை மற்றும் உறவினர் களின் உதவியை நாடியிருக்கலாம். குழந்தையைக் காப்பகத்தில் விட்டிருக்கலாம். தற்போது படிப்புக்கு சம்பந்தமில்லாத, அரசுப் பணியில் சேர்ந்தாலும், பேராசிரியர் கனவு, கனவாகவே போனது. இதற்கெல்லாம் காரணம், என் குழந்தையை நான் மட்டும்தான் வளர்க்க இயலும், நான்தான் சிறந்த தாய் என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற எனது அந்நாளைய மனநிலைதான்.

- சு.ராஜேஸ்வரி, சென்னை-23

வினுவின் வித்தியாசமான தகவல்!

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட வேகமாகத் துடிக்கிறது.