Published:Updated:

வினு விமல் வித்யா: நின்றுகொண்டே வேலை செய்கிறவர்களுக்குக் கிடைத்த நியாயம்!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

தமிழ்லயும் இந்தப் பாட்டு வந்தா நல்லா இருக்கும்ல. முதல்ல நான் இந்த சீரிஸைப் பார்க்கணும்

வினு விமல் வித்யா: நின்றுகொண்டே வேலை செய்கிறவர்களுக்குக் கிடைத்த நியாயம்!

தமிழ்லயும் இந்தப் பாட்டு வந்தா நல்லா இருக்கும்ல. முதல்ல நான் இந்த சீரிஸைப் பார்க்கணும்

Published:Updated:
வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

நான்கு நாள்களாக வினுவை வாட்ஸ்அப்பில்கூடப் பார்க்க முடியவில்லை என்பதால் விமலும் வித்யாவும் அவள் வீட்டுக் குச் சென்றார்கள்.

“வாங்க... வாங்க... என்ன திடீர் விசிட்!” என்று ஆச்சர்யத்துடன் வரவேற்றாள் வினு.

“உடம்புக்கு ஒண்ணும் இல்லையே... எங்க தொடர்பு எல்லைக்கே வர மாட்டேங்கிறி யேன்னு பார்க்க வந்தோம்” என்றார் வித்யா.

“சாரி, வித்யாக்கா. `மணி ஹெய்ஸ்ட் சீசன் 5' பார்க்க ஆரம்பிச்சதுலேருந்து பிஸியா இருந்துட்டேன். அதுல டோக்கியோ வேற இறந்து போயிட்டாங்க” என்று சொல்லிக் கொண்டே, இருவருக்கும் ஆரஞ்சு ஜூஸும் கராச்சி பிஸ்கட்டும் கொடுத்தாள் வினு.

“பாரு விமல், இவளைக் காணோம்னு பதறியடிச்சு ஓடி வந்தா, வெப் சீரிஸுக்காக நம்மளக் கண்டுக்கலைனு கூலா சொல்றா!”

“விடுங்க வித்யாக்கா, புரொஃபசருக்கு ஏதாவது ஆயிருந்தா நான்கூட ஒரு மாதிரி ஆயிருப்பேன்” என்று விமல் சொன்னவுடன் வினு சிரித்தாள்.

வினு ‘பெல்லா சாவ்... பெல்லா சாவ்... சாவ் சாவ் சாவ்’ என்ற ஸ்பானியப் பாடலைப் பாட ஆரம்பிக்க விமலும் சேர்ந்து பாடினாள்.

“மீனிங் புரியாமலே போராட்ட உணர்வைக் கொண்டு வருதே இந்தப் பாட்டு!”

வினு விமல் வித்யா: நின்றுகொண்டே வேலை செய்கிறவர்களுக்குக் கிடைத்த நியாயம்!

“அதுதான் பெல்லா சாவ் மகிமை! இத்தாலியில வயல் வேலை செய்த பெண்கள் தங்களோட வேலை நேரத்தைக் குறைக்கவும் ஊதியம் அதிகமா கேட்டும் ஒரு பாடலை உருவாக்கி, அதைப் பெரிய போராட்டமா மாத்தி, வெற்றியும் அடைஞ்சாங்க. அந்தப் பாடலோட வரிகளை மாத்தி, ரெண்டாம் உலகப் போர்ல நாஸிகளுக்கு எதிரா இத்தாலியப் போராட்டக்காரங்க ‘பெல்லா சாவ்’ பாடலை உருவாக்கினாங்க. அது போராட்டத்தை மிகப் பெரிய அளவுக்குக் கொண்டு போச்சு. அதுக்கப்பறம் உலகத்துல பல நாடுகளுக்கும் பரவி, போராட்டப் பாடலா நிலைச்சிருச்சு. ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள்ல பாடப்படுது. மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 ரிலீஸுக்காக இந்தியாவுல இந்தப் பாடல் இந்தியிலும் வெளிவந்திருக்கு. யாரைப் பார்த்தாலும் பெல்லா சாவ் பாட்டைத்தான் பாடிட்டு இருக்காங்க!” என்றாள் வினு.

“மணி ஹெய்ஸ்ட்னா வங்கிக் கொள்ளை தானே? இதுல எப்படிப் புரட்சிப் பாடல்?” என்று அப்பாவியாகக் கேட்டார் வித்யா.

“புரொஃபசர் தலைமையில கொள்ளையடிக் கிறவங்க மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கல. அதிகாரத்துக்கும், அரசாங்கத்துக்கும் எதிரா தான் போராடுறாங்க. அவங்க இந்தப் பாட்டைப் பாடுறதுக்கான நியாயம் இந்த சீரிஸ்ல சொல்லப்பட்டிருக்கு, வித்யாக்கா!”

“ஓ... தமிழ்லயும் இந்தப் பாட்டு வந்தா நல்லா இருக்கும்ல. முதல்ல நான் இந்த சீரிஸைப் பார்க்கணும்!”

“நிறைய சீரிஸ் இங்கிலீஷ்லதான் தயாரிக் கிறாங்க. அதுல அதிக மக்களால பார்க்கப்பட்ட நம்பர் ஒன் சீரிஸ்னா ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. அதுக்கடுத்து அதிக மக்களால பார்க்கப்பட்ட சீரிஸ்னா அது ‘மணி ஹெய்ஸ்ட்' தான். ஸ்பானிஷ்ல எடுக்கப்பட்ட ஒரு சீரிஸுக்கு இந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது பெரிய விஷயம்... ஆனா, இது குழந்தைகளுக்கானது இல்ல. புரொஃபசர்தான் ஹீரோவா தெரிஞ் சாலும் எல்லா கேரக்டர்ஸுக்கும் முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருக்கு. பெண்களை ரொம்பத் துணிச்சலாவும் புத்திசாலியாவும் காட்டியிருக்காங்க!”

“அஞ்சாவது சீசனோட ஒரு பாதிதான் இப்ப ரிலீஸாயிருக்கு. மீதி டிசம்பர்ல ரிலீஸாகுது” என்றாள் வினு.

மூவரும் ஜூஸைக் குடித்து முடித்தார்கள்.

“புதுச்சேரியில இரவு 10 மணியிலேருந்து காலை 6 மணிவரை வெளியூர்லேருந்து வரும் பெண்களோட பாதுகாப்புக்குக் காவலர்கள் வருவாங்கன்னு சொல்லியிருக்காங்களே..?” என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தார் வித்யா.

“வித்யாக்கா, மேலோட்டமா பார்த்தா பாதுகாப்புன்னு தோணலாம். ஆனா, போலீஸோட வேலை என்ன? குற்றங்களைத் தடுக்குறதும் குற்றவாளிகளைப் பிடிக்குறதும் தானே... டெல்லியில பாதுகாப்புப் படையில் வேலை செஞ்சுகிட்டிருந்த 21 வயசு ரபியா சைஃபி, கொடூரமா கொலை செய்யப்பட்டி ருக்காங்க. உடம்புல 50 கத்திக்குத்துகள்... மார்ப கங்களை அறுத்திருக்காங்க. பிறப்புறுப்பைச் சிதைச்சிருக்காங்க. அவங்க பேரன்ட்ஸ் கொடுத்த புகாரைக்கூட காவல்துறை கண்டுக் கல. இப்ப ஒருத்தன் கொலை செய்ததா சரணடைஞ்சிருக்கான். இது கூட்டுப் பாலியல் வன்புணர்வா இருக்கும். ‘குற்றவாளிகளைப் பிடிக்கணும், ரபியா வுக்கு நியாயம் கிடைக்கணும்’னு எல்லாரும் போராடிட்டிருக்காங்க. இப்படிக் காவல்துறையில இருக்கிறவங் களுக்கே பாதுகாப்பு இல்லைங்கிறது ஒருபக்கம், அவங்க புகாரையும் கண்டுக் கலைங்கிறது இன்னொரு பக்கம் அதிர்ச்சியா இருக்கு” என்றாள் விமல்.

“சே... கேட்கும்போதே உடம்பு நடுங்குது. நீ சொல்றதும் சரிதான், பெண்கள் பாதுகாப்புக்கு ஆள் போடறதைவிட, குற்றம் நடக்காம பார்த்துக்கறதுதான் முக்கியம் விமல்.”

“கேரளாவுல நடந்த `ரைட் டு சிட்’ போராட்டம் நினைவிருக்கா? 2014-ம் வருஷம் ஒரு பிரபல ஜவுளிக் கடையில வேலை செஞ்ச பெண்கள், உட்கார்ந்து வேலை செய்ய அனுமதிக்கணும்னு போராடினாங்க. 2018-ம் வருஷம் அவங்க உட்கார்ந்து வேலை செய் யுறதுக்கான சட்டம் கொண்டு வரப் பட்டுச்சு. இது இப்போ தமிழ்நாட்டுலயும் அமலுக்கு வந்திருக்கு. எத்தனையோ பெண்களோட துயரம் இதன் மூலம் தீர்க்கப்பட்டிருக்கு!” என்றாள் வினு.

“ஆமாம்... இந்த டெல்லி பல்கலைக் கழகம் ஆங்கில இலக்கியப் பாடத்துலே ருந்து மகாஸ்வேதாதேவி, ‘கருக்கு’ பாமா, கவிஞர் சுகிர்தராணி படைப்பு களை நீக்கியிருக்கு. இதுக்குப் பாடத் திட்டம் சீரமைப்புனு காரணம் சொல்லியிருக்கு. ‘கட்டாயப் பாடங் களா இருந்த இந்தப் படைப்புகளைத் திடீர்னு நீக்கினதுல எந்தவித நியாயமும் இல்ல. இந்தப் படைப்புகளை மறுபடியும் சேர்க்கணும்’னு வரலாற்றா சிரியர் ரொமிலா தாப்பர், அருந்ததி ராய் உட்பட பலரும் வேண்டுகோள் விடுத்திருக்காங்க. பெண்களோட படைப்புகள் பல்கலைக்கழகப் பாடப் புத்தகங்கள்ல இடம்பிடிக்கிறதே பெரிய விஷயம்னா, அதைத் தக்க வச்சுக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கு!” என்றார் வித்யா.

“பாராலிம்பிக்ல இந்தியர்கள் கலக்கிட்டாங்க. துப்பாக்கிச் சுடுதல்ல 19 வயசு அவனி லேகாரா தங்கப் பதக்கம் வாங்கினாங்க. இன்னொரு பிரிவுல வெண்கலப் பதக்கமும் இவங்களுக்குக் கிடைச்சிருக்கு. 11 வயசுல ஒரு கார் விபத்தால இவங்க வாழ்க்கை, சக்கர நாற்காலியில் முடங்கிருச்சு. அதுலேருந்து மீண்டு, வில்வித்தை கத்துக்கிட்டாங்க. அபினவ் பிந்த்ராவைப் பார்த்து, துப்பாக்கிச் சுடுதல்ல ஆர்வம் வந்து பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. இப்போ இந்தியாவின் அடையாளங்கள்ல ஒருத்தரா மாறியிருக்காங்க அவனி. டேபிள் டென்னிஸ் போட்டியில பவினா பென் வெள்ளிப் பதக்கம் வாங்கியிருக்காங்க. டேபிள் டென்னிஸ்ல பதக்கம் வாங்கின இந்தியர்ங்கிற பெருமையும் இவங்களுக்குக் கிடைச்சிருக்கு. குஜராத்தைச் சேர்ந்த பவினா பென், 12 மாசக் குழந்தையா இருந்தப்ப போலியோவால பாதிக்கப்பட்டாங்க. இன்னிக்கு நாட்டுக்கே பெருமை தேடித் தந்திருக்காங்க. தமிழ்நாட்டு மாரியப்பன் போன முறை உயரம் தாண்டுதல்ல தங்கம் வாங்கினார். இந்த முறை வெள்ளிப் பதக்கம் வாங்கியிருக்கார். இரண்டு பதக்கங்கள் வாங்கிய முதல் தமிழ்நாட்டு வீரர் இவர்தான்!” பெருமையாகச் சொன்னாள் வினு.

“சூப்பர்... இந்த ஆப்கானிஸ்தான்ல இருந்து வரும் நியூஸெல்லாம் படிக்கிறப்ப ரொம்பக் கவலையா இருக்கு.. பெண்கள் எல்லாம் துணிச்சலா ‘ஆஸாதி’னு கோஷம் போட்டுக்கிட்டு வீதிகள்ல போராடிட்டிருக்காங்க. இன்னொரு பக்கம் போராடும் பெண்களை தலிபான்கள் தாக்கிட்டும் இருக்காங்க. ஆப்கானிஸ்தானை விட்டு பாகிஸ்தான் வெளியேறணும்னு பெண்கள் போராடிட்டு இருக்கறதை இன்னிக்குப் பார்த்தேன். முன்னாடி மாதிரி இனிமேல் பெண்களை அடக்க முடியாதுங்கிறதை தலிபான்கள் புரிஞ்சுக்கணும்” என்றாள் விமல்.

“ஆமாம், இதே ஆப்கானிஸ்தான்லதான் 150 வருஷங்களுக்கு முன்னாலேயே, ‘மலாலாய்’ங்கிற ஒரு வீராங்கனை பிரிட்டனை எதிர்த்துப் போராடியிருக்காங்க! இவங்க பேர்ல மலாலாய் ஜோயாங்கிற ஒரு போராளி இப்பவும் இருக்காங்க. பாகிஸ்தான் மலாலாவுக்கும் ஆப்கானிஸ்தான் மலாலாய் பேரைத்தான் வச்சிருக்காங்க. நிச்சயம் ஒருநாள் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்களோட உரிமைகளை வென்றெடுப்பாங்க” என்றார் வித்யா.

“விமல், கிளம்புவோமா? டோக்கியோ போயிட்டாங்களேன்னு கவலைப்படாதே... நைரோபினு யாராவது வருவாங்க” என்று வித்யா சொல்லவும் வினுவுக்கும் விமலுக்கும் ஆச்சர்யமாகிவிட்டது.

“நைரோபி போன் சீசன்லேயே இறந்துட்டாங்க வித்யாக்கா. எப்படிச் சரியா பேரைச் சொல்றீங்க?”

“நகரங்களோட பெயர்களைத்தானே வச்சிருக்காங்கன்னு சொன்னீங்க... சும்மா சொல்லிப் பார்த்தேன்... அப்படியொரு கேரக்டர் இருந்திருக்குனு நீங்க சொல்லித்தான் தெரியும்!” என்றபடி வித்யாவும் விமலும் கிளம்பினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப்பரிசு காத்திருக்கிறது.

‘பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதியை பலர் தேவையில்லாமல் சும்மாவேனும் ஊர் சுற்றுவதற்காகப் பயன் படுத்துகிறார்கள்.அதனால்தான் கோவிட் காலகட்டத்திலும்கூட பேருந்துகளில் அதிக நெரிசல் காணப்படுகிறது’ என ஆண்கள் பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுபற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 21.9.2021

சென்ற வார கேள்வி...

பெண்கள் தங்கள் பாதுகாப்பு கருதி வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என தாலிபன் எச்சரித்திருக்கிறது. நீங்கள் ஆப்கான் பெண்ணாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

வாசகி பதில்கள்...

ரொக்கப் பரிசு ரூ.250

இது பெண்களை ஒடுக்கும் சதி திட்டம். பாதுகாப்பு என்ற பெயரில் அடிமை சிறைக்குள் நம்மை தள்ளப்பார்க்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு என்பது பெரும்பான்மையான நாடுகளில் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஆப்கானும் விதி விலக்கல்ல. இதே ஆப்கானில் வீடு புகுந்து ஒரு பெண்ணை ஆறு பேர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்களே... அவர்கள் சொல்லும் அந்தப் பாதுகாப்பு அப்போது எங்கே போனது? பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு யாரும் நம் பின்னால் வர முடியாது... வரவும் மாட்டார்கள். பாதுகாப்பு என்பது நம் கையில்தான் இருக்கிறது. நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

- ஜானகி பரந்தாமன், கோவை-36.

ரொக்கப் பரிசு ரூ.250

வீட்டிலேயே இருந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடுமா? ஆனால், மனசாட்சியற்ற ஆணாதிக்க தாலிபன் அமைப்புக்கு பெண்களின் உணர்வுகள், குடும்ப கஷ்டங்கள் தெரியாது. அவர்களை எதிர்த்து சண்டையிட என்னால் முடியாது. எனவே, வொர்க் ஃப்ரம் ஹோம் என வீட்டிலிருந்தபடியே ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதிப்பேன். வேறென்ன செய்ய?

- கே.தமிழரசி, சென்னை-116.

வினுவின் வித்தியாசமான தகவல்!

பெண்கள் ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகள் பேசுகிறார்கள். இது சராசரியாக ஓர் ஆண் பேசுவதைவிட 13,000 வார்த்தைகள் அதிகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism