Published:Updated:

வினு விமல் வித்யா: சுயமரியாதை எனக்கு முக்கியம்!

  பாவனா
பிரீமியம் ஸ்டோரி
பாவனா

சஹானா ஓவியம்: பாலகிருஷ்ணன்

வினு விமல் வித்யா: சுயமரியாதை எனக்கு முக்கியம்!

சஹானா ஓவியம்: பாலகிருஷ்ணன்

Published:Updated:
  பாவனா
பிரீமியம் ஸ்டோரி
பாவனா

காபி ஷாப்... வினு, விமல், வித்யா - மூவரும் காபியுடன் கச்சேரியை ஆரம்பித்தனர்.

“இந்தப் பெண்கள் தினத்துல சோஷியல் மீடியாவை கவனிச்சீங்களா?” - பேச்சை ஆரம்பித்தாள் வினு.

“தாயுமானவள், தந்தையானவள், மல்ட்டி டாஸ்க்கிங் செய்யக்கூடியவள், பொறுமை யானவள், அன்பானவள்னு எல்லாம் வாழ்த்து சொல்லிக்கிட்டு வந்துடாதீங்கன்னு பல பெண்களும் எச்சரிக்கை விட்டிருந்தாங்களே, அதைச் சொல்றியா வினு?”

“ஆமாம், தியாக தீபம்னு எல்லாம் சொல்லி எங்களை எப்போதும் தியாகியாவே உட்கார வைக்காதீங்கன்னு வெளுத்து வாங்கிட்டாங் களே விமல்...!”

“பெண்களைப் பத்தின அண்டர்ஸ்டாண் டிங் இல்லாதவங்க, மதிக்காதவங்ககூட பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்ற மாதிரி வாழ்த்தினா எரிச்சல் வராதா என்ன?!” என்றார் வித்யா.

“ஆக்சுவலா மார்ச் 8 மகளிர் தினம் இல்ல. உழைக்கும் மகளிர் தினம். அது இப்போ வணிகமயமாகி `விமன்ஸ் டே'யா கொண்டாடப்படுது...”

“கரெக்ட் விமல். `முதல்வன்’ படத்துல ஒரு நாள் முதல்வர்னு வர்ற மாதிரி, புதுச்சேரியில் நிவேதா ஒரு நாள் சப் இன்ஸ்பெக்டரா இருந் தாங்க தெரியுமா?.”

“அது எப்படி வினு முடியும்?” என்று ஆர்வ மாகக் கேட்டார் வித்யா.

“ `விமன்ஸ் டே'க்காகப் புதுச்சேரி காவல்துறை, காலேஜ்ல தேர்டு இயர் படிக்கும் நிவேதாவுக்கு இந்த சான்ஸை கொடுத்து, செலிப்ரேட் பண்ணிருக்காங்க. ஒரு நாள் முழுக்க அந்த சீட்ல இருந்து, வேலை பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. உயர் அதிகாரிகள் லேருந்து எல்லாரும் அந்தப் பதவிக்குரிய மரியாதையைக் கொடுத்திருக் காங்க. ஈவ்னிங் பொன்னாடை போர்த்தி, பரிசு கொடுத்து நிவேதாவை அனுப்பி வச்சிருக்காங்க. என்சிசியில ஆர்வத்தோடு செயல்படறதால இந்த வாய்ப்பு தனக்கு வந்ததா சொல்றாங்க நிவேதா. பெண்கள் காவல்துறை போன்ற துறைகள்ல அதிக அளவுல பங்கேற்கணும்கிறதுக்காகத்தான் இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்தோம்னு புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்தவங்க சொல்லிருக்காங்க...” விளக்கமாகச் சொன் னாள் வினு.

“குட் ஐடியா! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் கொடுத்துட்டிருக்காங்க. இனிமே இந்த வீடுகள் எல்லாம் குடும்பத் தலைவிகளோட பெயர்லதான் வழங்கப்படும்னு தமிழக முதல்வர் சொல்லிருக்கார்” என்றாள் விமல்.

“நல்ல விஷயம் விமல். பெண்களுக்குச் சொத்துரிமை வேணும்னு கேட்டுக்கிட் டிருக்கிறப்ப, வீட்டையே பெண்கள் பெயர்ல கொடுக்கிற அரசாங்கத்துக்கு ஒரு பொக்கே கொடுத்துடுவோம். நடிகை பாவனா, முதல் முறையா அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பேசியிருக்காங்க, கவனிச்சீங்களா?” என்றார் வித்யா.

“ஆமா, அஞ்சு வருஷத்துக்கு முன்னால கடத்தப்பட்டு, சிலரால பாலியல் தாக்குதலுக்கு உள்ளானாங்க. இத்தனை நாளும் அமைதியா இருந்தவங்க, இப்பதான் தன்னைப் பத்திப் பேசிருக்காங்க. `அந்தச் சம்பவத்துக்குப் பின்னால என் வாழ்க்கையே தலைகீழா மாறிருச்சு. ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். என் இதயம் வலிக்கும் அளவுக்குக் கத்தணும்னு தோணும். பாதிக்கப்பட்டவள்ங்கிற இடத்துல யிருந்து மீண்டவள்ங்கிற இடத்துக்கு வர்ற பயணம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. செய்யாத தவறுக்காக என்னை அவமானப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் தனிமைப் படுத்தவும் முயற்சி செஞ்சாங்க. இந்த நேரத்துல எனக்கு ஆதரவாவும் பலர் இருந்தாங்க. நீதிக்கான போராட்டத்துல நான் தனியா இல்லைங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். வழக்கை நடத்த என்கிட்ட பணம் இருக்கு. என் குடும்பமும் கணவரும் உறுதுணையா இருக்காங்க. ஆனாலும், என்னால் இந்தப் பிரச்னையை எளிதா கடக்க முடியல. இந்த அஞ்சு வருஷத்துல நூறு தடவையாவது இதை விட்டுடலாம்னு நினைச்சிருக்கேன். கொஞ்ச நேரத்துல அந்த எண்ணத்துலேருந்து வெளியில வந்துடுவேன். இந்த வழக்குல நான் ஜெயிக் கணும். சுயமரியாதை எனக்கு முக்கியம். என் தரப்புல தவறில்லைன்னு நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கிருக்கு’ன்னு சொல்லிருக் காங்க” வருத்தமாகச் சொன்னாள் விமல்.

வினு விமல் வித்யா: சுயமரியாதை எனக்கு முக்கியம்!

“பணம், செல்வாக்கு இருந்தாலும் பெண் களுக்கான பாதிப்பு ஒரே மாதிரிதான் இருக்கு. 15 தடவை கோர்ட்டுல ஆஜராகி, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கேள்விகளை எதிர் கொண்டு, பதில் சொல்லிருக்காங்க. இவங்களுக்கு எதிரா அவதூறு பரப்பப்பட்டுச்சு. ஏன் இரவு ஏழு மணிக்குத் தனியா போனாங் கங்கிற மாதிரியான கேள்விகளும் வந்துச்சு. எல்லாத்தையும் தைரியமா எதிர்கொண்டு, வழக்கை நடத்திட்டிருக்காங்க. நிச்சயம் ஜெயிச்சு, வலியிலிருந்து விடுதலையாவாங்க” என்றார் வித்யா.

சற்று நேர அமைதிக்குப் பிறகு, “குஜராத்துல 2500 ஹெக்டேர் பரப்பளவுள்ள காடுகளை ஏழு இளம் பெண்கள் பாதுகாக்கறாங்க” என்று பேச்சைத் தொடர்ந்தாள் விமல்.

“காடுகளையா... வனவிலங்குகள் எல்லாம் இருக்குமே விமல்...”

“ஆமா, மாண்ட்வி, உமர்பதாங்கிற ரெண்டு காடுகளைக் காக்கும் பொறுப்புல ஏழு பெண்களும் இருக்காங்க. இந்தக் காட்டுல சிறுத்தைகள் அதிகம். கண்காணிப்பு கேமரா பொருத்துறது, சிறுத்தைகளோட நடமாட் டத்தைத் தெரிஞ்சுக்கறது, கிராமங்களுக்குள்ளே நுழையுற சிறுத்தைகளைப் பிடிச்சு காட்டுல விடுறது, விலைமதிப்புமிக்க மரங்களைக் காப்பது, சிறுத்தைகள்கிட்டருந்து மக்களையும் மக்கள்கிட்டருந்து சிறுத்தைகளையும் காப்பதுன்னு பல பொறுப்புகளைத் திறமையா பண்றாங்க. இந்த வேலைக்கு அவங்களோட பழங்குடிப் பாரம்பர்யம் ரொம்ப உதவியா இருக்குன்னு சொல்றாங்க!”என்றாள் விமல்.

“வனம், வனவிலங்குகளைக் காப்பாத்தும் செவன் சிஸ்ட்டர்ஸுக்கு வாழ்த்துகள்” சந்தோஷமாகச் சொன்னார் வித்யா.

மீண்டும் ஆளுக்கொரு காபி ஆர்டர் செய்தாள் விமல்.

“இரண்டாம் உலகப் போர் முடிஞ்சு 77 வருஷங்களாகியும் அதோட தாக்கம் இன்னும் இருந்துட்டுதான் இருக்கு. பாதிக்கப்பட்டவங் களோட கதைகள் எல்லாம் இன்னும்கூட வந்துட்டே இருக்கு. அந்தப் போர்லேருந்து இந்த மனுஷங்க பாடம் கத்துக்கல. இதோ இப்போ ரஷ்யாவும் உக்ரைனும் போரிட ஆரம்பிச்சிட்டாங்க” சீரியஸ் விஷயத்தை ஆரம்பித்துவைத்தாள் விமல்.

“ரொம்ப வருத்தமா இருக்கு விமல். பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடுறதைப் பார்க்கும்போது தாங்க முடியல. அதிகாரப் போட்டியில போர் நடக்குது. ஆனா, பாதிக்கப்படறது என்னவோ அப்பாவிகளும் பெண்களும் குழந்தைகளும் தான். இந்தப் போரோட விளைவுகள்லயிருந்து மீண்டு வர எவ்வளவு காலம் ஆகுமோ?” என்றாள் வினு.

“ம்... உக்ரைன்லேருந்து போலந்துக்குப் போகுற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் தர்றாங்க யுவானா சியாபாங்கற பெண்மணி. உக்ரைன்லேருந்து தனியா வரும் குழந்தைகள், பெண்களை அழைச்சிட்டுப் போய் இவங்க வீட்டுல வெச்சுக்கறாங்க. சொந்த நாட்டுலேருந்து எந்த நம்பிக்கையும் இல்லாம வர்றவங்க, யுவானாவின் உபசரிப்புல நெகிழ்ந்துடறாங்க. ‘எனக்கும் மூணு குழந்தைங்க இருக்காங்க. எல்லாக் குழந்தை களையும் என் குழந்தைகளாதான் நினைக் கிறேன். அவங்கள எப்படி நான் கைவிட முடியும்’னு கேட்கிறாங்க யுவானா...” நெகிழ்ச்சியான தகவல் சொன்னாள் விமல்.

“கிரேட்... யுவானா ஒரு தேவதை!” என்றார் வித்யா.

“வித்யாக்கா, நீங்க சொல்ற மாதிரிதான் எல்லாரும் சொல்றாங்க. அதை மறுக்கறாங்க யுவானா. ‘நான் ஒரு சாதாரண பெண். ஆதரவு தேடி வர்றவங்களுக்கு அடைக்கலம் தர்றது அடிப்படை மனிதப் பண்பு. இதைச் செய்யுற துக்கு எனக்கு ஏராளமான நல்ல உள்ளங்கள் உதவி செய்யறாங்க’னு சொல்றாங்க” என்ற வினு தொடர்ந்தாள்.... “ஒரு நெருக்கடியிலதான் மனுஷங்க ஒருத்தருக்கொருத்தர் உதவிசெய்து, நிலைமையைச் சமாளிக்கிறாங்க. உக்ரைனோட அண்டை நாடுகள் எல்லாம் உக்ரைன் மக்களுக்கு நெருக்கமாயிட்டாங்க.”

“ம்... இந்தப் பக்கம் ஆப்கானிஸ்தான்ல தாலிபன்களோட ஆட்சியில மக்கள் ரொம்பவே கஷ்டப்படறாங்க. ஆண்களும் பெண்களும் குழந்தைகளைக் காப்பாத்து றதுக்காக கிட்னியை விக்க ஆரம்பிச்சிட் டாங்க” - அதிர்ச்சித் தகவல் சொன்னாள் விமல்.

“கொடுமையா இருக்கே விமல்... அடிப்படை வாதிகள் ஆட்சிக்கு வந்தா இந்த நிலைமைதான்” என்றாள் வினு.

“ஏதாவது மூவி பார்த்தீங்களா?”

“இல்ல வித்யாக்கா... மூவி பார்க்கறதுக்கு ஏத்த மனநிலை இல்ல... கிளம்பலாம்” என்று எழுந்தாள் வினு. மூவரும் கிளம்பினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

******

வினுவின் வித்தியாசமான தகவல்!

காகிதப்பை தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் மார்கரெட் நைட் என்ற பெண். ஒரு பெண்ணால் இதுபோன்ற விஷயத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாது என்று கூறிய ஓர் ஆணால், மார்கரெட்டின் கண்டுபிடிப்பு திருடப்பட்டது. ஆனால், இறுதியாக 1871-ம் ஆண்டு காகிதப் பைகளைத் தயாரிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமையைப் பெற்றுவிட்டார் மார்கரெட் நைட்.

வினு விமல் வித்யா: சுயமரியாதை எனக்கு முக்கியம்!

'Me Time’ உங்களுக்கு வாய்க்கிறதா?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருந்தார்கள்.

உங்களுக்கே உங்களுக்கான நேரமான `Me Time’ உங்களுக்கு வாய்க்கிறதா? ஆம் எனில், அந்த நேரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறீர்கள்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் கடிதங்கள்...

பாடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் பாடினால் கேட்பவர்கள் காதுகளை மூடிக் கொள்வார்கள். எனக்கென்றே வாய்க்கும் ‘Me Time'-ல் வீடு முழுவதும் என் பாட்டு ஒலிக்கும். பிடித்த பாடல்களை சத்தமாக மனம் லயிக்க பாடிக் கொண்டிருப்பேன். அப்போது சோர்வு, பயம், கவலை எல்லாம் மாயமாகி விடும்.

- விஜயலக்ஷ்மி, மதுரை-9

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மாலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் எனக்கே எனக்கான நேரம். அந்த நேரத்தில் தோழிகளுடன் சேர்ந்து நடை பயணமாக பீச், மால்களுக்குச் சென்று எங்களுக்கு வேண்டியதை நாங்களே வாங்கிக் கொள்வோம். எங்கும் போக முடியாத நாள்களில் ஒன்றாக அமர்ந்து குடும்ப விஷயங்களைப் பேசுவோம். அப்படி பேசிக் கொண்டிருக்கையில்தான் சிறு சேமிப்பு பற்றி பேச்சு வந்தது. அதன்படி போஸ்ட் ஆபீஸில் தனித்தனியாக நாங்கள் ஒவ்வொருவரும் கணக்கு தொடங்கி வீட்டுச்செலவில் சிறிது சிறிதாக மிச்சப்படுத்தி சேமித்து வந்தோம். அதன் பிறகு பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஸ்டோருக்கு பாக்கெட் போடுவதற்கு ஆள் தேவை என்பது தெரிந்து வீட்டிலிருந்தே பாக்கெட் போட்டுக் கொடுப்பதற்கு சம்மதம் வாங்கிச் செய்து வருகிறேன். அதன் மூலம் எனக்கு தினமும் 150 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வீட்டில் சும்மா இல்லாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பது மனதுக்கு நிறைவாகவும் திருப்தியாகவும் இருக்கிறது.

- ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி

எத்தனை வேலைகள் இருந்தாலும் எனக்கான நேரத்தை நானே ஒதுக்கிக்கொள்வேன். அந்த நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டை பாடிக் கொண்டே தனிமையில் டான்ஸ் ஆடுவேன். தையல் மெஷினில் எதையாவது தைத்து முடிப்பேன். அதைப் பார்த்து ரசித்து என்னை நானே தட்டிக்கொடுத்துக் கொள்வேன்.

- ப்ரீதா ரங்கசுவாமி, சென்னை-4

இந்த இதழ் கேள்வி

பெண்கள் தினத்தையொட்டி பெண்களின் சாதனைகளையும் வேதனைகளையும் நிறையவே படித்தோம். அதன் பின்னணியில், இன்று பெண்களுக்கு மிக முக்கியமான தேவை எது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப் பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை,

சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி:

avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 22.3.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism