Published:Updated:

வினு விமல் வித்யா: சரண்யாவும் வேல்ராஜும் நானும் நீங்களும்!

 வேலி ஃபங்க்,  சாராஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலி ஃபங்க், சாராஸ்

கொரோனா னால நாம எங்கேயும் போகாமல் இருக்கோம். ஆனா, சிரிஷா பண்ட்லா விண்வெளிக்குச் சுற்றுலா போயிட்டு வந்திருக்காங்க.

வித்யாவின் வீட்டில் அமர்ந்திருந்த வினு, விமலைப் பார்த்தவுடன், “என்ன வேல்ராஜ், ஏன் இவ்ளோ லேட்?” என்று கேட்டாள்.

“சாரி சரண்யா, டிராஃபிக்” என்று சிரித்தாள் விமல்.

“உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சு? வேல்ராஜ், சரண்யானு கூப்பிட்டுக்கறீங்க” என்று குழப்பத்துடன் கேட்டார் வித்யா.

“என்ன வித்யாக்கா, தமிழ்நாட்டுல இப்ப ரித்விக்தான் (Rithu Rocks) டிரெண்டு. உங்களுக்கு அந்த வீடியோ அனுப்பினேனே, பார்க்கலையா... சின்ன குழந்தை அத்தனை கேரக்டர்ஸுக்கும் குரலை மாத்தி, ரொம்ப அழகா பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கறான். செம கியூட்டா இருக்கு” என்றாள் வினு.

“சரண்யா அண்டு வேல்ராஜ்... மின்ட் டீயை எடுத்துக்கோங்க” என்று சிரித்தார் வித்யா.

“வித்யாக்கா, டீ பிரமாதம்! கொரோனா னால நாம எங்கேயும் போகாமல் இருக்கோம். ஆனா, சிரிஷா பண்ட்லா விண்வெளிக்குச் சுற்றுலா போயிட்டு வந்திருக்காங்க. உலகப் பணக்காரங்கள்ல ஒருத்தரான ரிச்சர்டு பிரான்சன், தன்னோட நிறுவனம் தயாரிச்ச வெர்ஜின் காலக்டிக் ஸ்பேஸ் ஃப்ளைட்டுல விண்வெளிக்குச் சுற்றுலா போனார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷாவும் இவரோட சேர்ந்து விண்வெளிக்குப் போயிட்டு வந்திருக்காங்க. சின்ன வயசி லிருந்தே விண்வெளியில என்ன இருக்குன்னு பார்க்க சிரிஷாவுக்கு ஆசையாம். இப்போ வெர்ஜின் காலக்டிக் நிறுவனத்துல அரசு விவகாரங்களைக் கவனிக்கும் துறையில் துணைத் தலைவரா இருக்காங்க. விண்வெளிக் குப் போனது தன் வாழ்நாள் அனுபவம்னு சிலிர்ப்போட சொல்றாங்க. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸுக்கு அடுத்து விண்வெளிக்குப் போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூணாவது பெண் சிரிஷாங்கிறதால, இந்தியர் களும் சந்தோஷமா அவங் களைக் கொண்டாடறாங்க!”

 ஓலாஜுமோக் ஒரிசகுனா
ஓலாஜுமோக் ஒரிசகுனா

“ஒரு மணி நேரத்துல பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி போயிட்டு, திரும்பி வந்துட்டாங்க. இதே மாதிரி இன்னொரு பெண்ணும் விண்வெளிக்குப் போகப் போறாங்க. வேலி ஃபங்க் வானூர்தியாளர். 19,600 மணி நேரம் வானத்துல பறந்திருக் காங்க. 3,000 பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்காங்க. 1961-ம் வருஷம் நாசா நடத்தின விண்வெளி வீரர் களுக்கான தேர்வில் வேலி ஃபங்க் சிறப்பா செயல் பட்டாங்க. திடீர்னு நாசா அந்தத் திட்டத்தைக் கைவிட்டதால, விண்வெளி வாய்ப்பு இவருக்கு கிடைக்கல. விண்வெளிக்குப் போகணும்கிற லட்சியம் எப்படியாவது நிறைவேற ணும்னு நினைச்சாங்க. 2010-ம் வருஷம் தனியார் நிறுவனத்துல பணம் கட்டினாங்க. ஆனா, அதுக் கான அனுமதி இப்பதான் கிடைச்சது. அதுக்குள்ள அமேசான் நிறுவனத்தோட ப்ளூ ஆரிஜன் விண்வெளி நிறுவனம், தன்னோட கெளரவ விருந்தினரா வேலி ஃபங்கை விண்வெளிக்கு அழைச்சிட்டுப் போறதா அறிவிச்சிருக்கு. 60 வருஷங்களுக்குப் பிறகு, 82 வயசுல தன்னோட லட்சியம் நிறைவேறப்போற மகிழ்ச்சியில இருக்காங்க வேலி ஃபங்க்” என்று விமல் சொல்ல, வித்யா வுக்கு ஆச்சர்யமாகிவிட்டது.

``அடுத்த ஆச்சர்யமான விஷயம் சொல்றேன். அமெரிக்காவுல இந்த வருஷம் நடந்த `ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் லூசியானாவைச் சேர்ந்த 14 வயசு ஸலியா அவன்ட் ஜெயிச்சிருக் காங்க. இந்தப் போட்டியின் 93 ஆண்டுக்கால வரலாறுல ஜெயிச்ச முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் இவங்கதான். இதுக்காக 50,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 37 லட்ச ரூபாய்) பரிசா கிடைச்சிருக்கு. ரெண்டு வருஷமா அவங்க அப்பா கொடுத்த ஊக்கத்துல இந்த உயரத்தை அடைய முடிஞ்ச துனு சொல்றாங்க. 208 பேர் கூட போட்டிப் போட்டு, கிடைச்ச வெற்றி இது!”

“அது மட்டுமல்ல, அவங்க ரொம்ப வேகமா படிப்பாங்க. வேகமா கணக்குப் போடுவாங்க. ரொம்ப ரொம்ப புத்திசாலிக் குழந்தை” என்றாள் வினு.

``ஸலியா குட்டி கிரேட்! நைஜீரியாவைச் சேர்ந்த ஓலாஜுமோக் ஒரிசகுனா இப்ப புகழ்பெற்ற மாடல். அஞ்சு வருஷங்களுக்கு முன்னால இவங்க பிரெட் வித்துக்கிட்டு இருந்தாங்க. தலையில் பிரெட்டை வச்சுக் கிட்டு ஒருநாள் தெருவில் நடந்து வந்துட் டிருந்தாங்க. அப்ப பிரபல போட்டோ கிராபர் டை பெல்லோ ஒரு போட்டோ ஷூட் நடத்திட்டிருந்தாங்க. தெரியாம அந்த ஃப்ரேமுக்குள்ள ஓலாஜுமோக் வந்துட்டாங்க. அன்னிக்கு ராத்திரி டை பெல்லோ, தான் எடுத்த படங்களைப் பார்த்துட்டிருந்தாங்க. ஓலாஜுமோக்கின் முகம் ஒரு மாடலுக்கு இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் கொண்டதா இருந்ததைப் பார்த்து ஆச்சர்யப் பட்டாங்க. உடனே இன்ஸ்டாகிராம்ல படத்தைப் போட்டாங்க. பல நிறுவனங்கள் அவரை விசாரிக்க ஆரம்பிச்சாங்க. ஓலாஜுமோக்கைத் தேடிக் கண்டுபிடிச்சு, பயிற்சி கொடுத்து, மாடலிங் ஷூட் செஞ்சாங்க டை பெல்லோ. இந்தப் படம் ‘ஸ்டைல்’ மேகஸின் அட்டையில வந்துச்சு. பல நிறு வனங்கள் தங்களுக்கு மாடலா இருக்கும்படி கேட்டாங்க. இப்போ ஓலாஜுமோக் ரொம்ப பிஸி!”

“சூப்பர் ஸ்டோரி. ஒருபக்கம் பெண்கள் விண்வெளிக்குப் போயிட்டிருக்காங்க. இன்னொரு பக்கம் வரதட்சணையால உயிரை இழந்துட்டிருக்காங்க. இந்தியாவுல சமீபத்தில் பிபிசி எடுத்த ஆய்வுல 95 சதவிகிதத் திருமணங் கள்ல வரதட்சணை கொடுக்கப்படுறதா தெரியவந்திருக்கு. கடந்த 40 வருஷங்கள்ல இந்தியாவின் பல்வேறு இடங்கள்ல நடந்த திருமணங்கள் பத்தி தகவல் சேகரிச்சதுல, இந்தப் புள்ளிவிவரம் கிடைச்சிருக்கு. ரொம்ப கவலையா இருக்கு.”

“ஆமா, வித்யாக்கா. முன்னேறும்போது இந்த விஷயங்கள் எல்லாம் மறையணும். ஆனா, அதிகமாயிட்டு வருது. என்ன சொல்ற துன்னே தெரியல. விமல், வித்யாக்கா ‘சாராஸ்’ மலையாளப் படம் பார்த்தீங்களா?”

வினு விமல் வித்யா: சரண்யாவும் வேல்ராஜும் நானும் நீங்களும்!

“ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க பார்க்கணும் வினு. அமேசான் ப்ரைம்லதானே இருக்கு?”

“ஆமா வித்யாக்கா. குழந்தைப் பிறப்புல பெண்களுக்குள்ள உரிமையைப் பேசின முதல் இந்தியப் படம் இதுதான்னு நினைக்கறேன். ரொம்ப நல்லா சொல்லியிருக்காங்க. சாராவுக்குக் குழந்தைகள் மேல ஆர்வமில்ல. அவங்க சினிமா டைரக்டராகணும்னு விரும்பறாங்க. குழந்தை வேண்டாம்கிற சாரா வோட முடிவால, காதல்கள் கைகூடல. ஒருநாள் தன்னை மாதிரியே குழந்தை மேல இன்ட்ரெஸ்ட் இல்லாத ஒருத்தனை சந்திக்கிறாங்க. கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. சினிமால அவங்களுக்கு சான்ஸ் கிடைக்க ரொம்ப போராடுறாங்க. நம்பிக்கை இழந்த நேரத்துல சாரா, கர்ப்பமாயிடறாங்க. குழந்தை உண்டானதும் கணவனுக்குப் பெத்துக்கலாம்னு தோணுது. அப்போ திரைப்படம் இயக்குற வாய்ப்பும் வருது. சாரா என்ன முடிவெடுக் கிறாங்கங்கறதுதான் கதை. குழந்தை பிறந்த பின்னால எப்படி கவனிக்கிறோமோ, அதே போல குழந்தை பிறக்குறதுக்கு முன்னாலயும் திட்டமிடணும். இந்தியத் திருமணங்கள்ல பெரும்பாலும் ஒரு விபத்தாகத்தான் குழந்தை உருவாகுது. அதை ஏத்துக்கிற மனநிலையும் உடல்நிலையும் பெண்ணுக்கு இருக்கணுமே... அது ரொம்ப முக்கியம். தவறான பெற்றோரா இருக்கிறதுக்கு பதில் குழந்தை பெத்துக்காமலே இருக்கலாம். இப்படி நிறைய விஷயங்களை ஒரு டாக்டர் சொல்றார். இந்தப் படத்தோட கருத்தைப் பரவலா விவாதத்துக்குக் கொண்டு போகணும்” என்று கடகடவென்று பேசி நிறுத்தினாள் வினு.

“அடடா! மலையாளத்துல சமூகத்தை யோசிக்க வைக்கற படங்களா அடுத்தடுத்து எடுக்கறாங்க. தி கிரேட் இண்டியன் கிச்சன் அப்படித்தான் இருந்துச்சு. இப்போ சாராஸ். அழுது, ஆர்ப்பாட்டமில்லாம அழகா கதையைச் சொல்லிருக்காங்க. அன்னா பென் வழக்கம்போல செமையா நடிச்சிருக்காங்க. எனக்கு ஒரே ஒரு விஷயம்தான் நெருடலா இருந்துச்சு. குழந்தை வேணாம்னு முடிவெடுக்க, சாராவுக்கு குழந்தைகளைப் பிடிக்காதுன்னு காட்டியிருக்க வேண்டியதில்ல. குழந்தைகளைப் பிடிச்சாலும் பெத்துக்க வேணாம்னு முடிவு செய்யலாம். என்னோட ஃபிரெண்ட்ஸ் சிலர் இப்படி இருக்காங்க. அதுல ஒருத்தி ரெண்டு குழந்தைகளைத் தத்தெடுத்துக்கிட்டா” என்றாள் விமல்.

“இந்தக் கருத்தை எல்லாரும் அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க மாட்டாங்கப்பா...”

“ஆமா வித்யாக்கா. ஆனா, காலப்போக்குல ஏத்துக்க வாய்ப்பிருக்கு. சொல்லிக்கிட்டேதான் இருக்கணும். சரி, நேரமாச்சு கிளம்பலாமா வினு?”

வினு, விமல் இருவரும் கிளம்ப, வித்யா கையசைத்தார்.

(அரட்டை அடிப்போம்!)