Published:Updated:

வினு விமல் வித்யா: நயன்தாரா... சூப்பர் ஸ்டாரா? - லேடி சூப்பர் ஸ்டாரா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நயன்தாரா -  துளசி கவுடா -  குட்டியம்மா பாட்டி
நயன்தாரா - துளசி கவுடா - குட்டியம்மா பாட்டி

- சஹானா

பிரீமியம் ஸ்டோரி

மழையாக இருந்ததால் மாலில் வழக்கமான கூட்டம் இல்லை. ஃபுட் கோர்ட்டில் காசி அல்வா வும் பனீர் ஃப்ரையும் ஆர்டர் செய்துவிட்டு, அரட்டையை ஆரம்பித்தார்கள் மூவரும்.

``ஸ்வீட் சாப்பிடுவோம்... இது, மலாலா கல்யாணம் செஞ்சிகிட்டதுக்காக!” என்று சிரித்தாள் வினு.

“நான்கூட போட்டோ பார்த்தேன். சந்தோஷமா இருந்துச்சு. பத்து வருஷத்துக்கு முன்னாடி சாவைத் தொட்டுட்டுத் திரும்பி வந்த மலாலா, இன்னிக்குப் பெண் கல்விக்கான உலக அடையாளமா மாறியிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால ரெண்டு பேர் சேர்ந்து வாழ, திருமணம் அவசியமான்னு கேட்டிருந்தாங்களே...”

“ஆமாம் வித்யாக்கா. அப்படிச் சொன்னதுக் காக மலாலாவை வறுத்தெடுத்தாங்க. இப்போ பாகிஸ்தான் கிரிக்கெட் அணியோட மேனேஜர் அஸார் மாலிக்கைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ‘அன்னிக்கு அப்படிச் சொன்னியே, இன்னிக்கு இப்படிப் பண்ணிக்கிட்டியே’ன்னு இப்பவும் ஒரு குரூப் வறுத்தெடுத்துச்சு.”

“பாதிக்கப்பட்டவங்க மேல இரக்கத்தைக் காட்டிட்டே இருக்கணும்னு சமூகத்துல சிலர் நினைக்கறாங்க. அதைத் தாண்டி அவங்க மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந் தெடுத்தா, இவங்களால தாங்கிக்க முடியற தில்ல. தன்னோட 24 வருஷ வாழ்க்கையில மலாலா சந்திக்காத பிரச்னைகளே இல் லைன்னு சொல்லலாம். இனியும் பிரச்னைகள் வரும். அதையெல்லாம் சந்திக்க இப்போ அஸாரும் துணையா இருப்பார்னு நம்புவோம்” என்றாள் விமல்.

“காசி அல்வா சூப்பரா இருக்குல்ல... !எனக்கெல்லாம் புதுசா ஒரு விஷயம் கத்துக் கணும்னா ஈஸியா கத்துக்க முடிய மாட்டேங் குது. வயசாயிருச்சோன்னு தோணுது. கேரளாவுல குட்டியம்மா 104 வயசுல எழுத்தறிவுத் தேர்வுல 89 மார்க்ஸ் எடுத்து பாஸ் பண்ணிருக்காங்க. அவங்களுக்கு எழுத்துக்கூட்டிக் கொஞ்சம் படிக்க முடியும். ஆனா, எழுதத் தெரியாது. இப்போ எழுத் தறிவுத் திட்டத்துல சேர்ந்து எழுதவும் கத்துக் கிட்டாங்க. பாட்டிக்கு, தான் சரியா பரீட்சை எழுதலையோன்னு பயமா இருந்துச்சாம். இப்போ அதிக மார்க்ஸ் எடுத்து பாஸானதுல ரொம்ப ஹேப்பியா இருக்காங்க. கேரள கவர்ன்மென்ட்டும் மக்களும் படிக்க வைக் கறதுலயும் படிக்கிறதுலயும் எவ்வளவு ஆர்வமா இருக்காங்க!”

“ஆமா, வித்யாக்கா. கேரளாதான் இந்தியாவுலயே நூறு சதவிகித எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலம். அங்க நிறைய குட்டி யம்மாக்கள் இருப்பாங்க. அதனால இனிமே நீங்க எதையும் கத்துக்க நினைக்கிறப்போ குட்டியம்மா பாட்டியை நினைச்சுப் பாருங்க. சக்சஸ்ஃபுல்லா செஞ்சு முடிச்சிடுவீங்க!” என்ற விமல், மூவருக்கும் காபி ஆர்டர் செய்தாள்.

வினு விமல் வித்யா: நயன்தாரா... சூப்பர் ஸ்டாரா? - லேடி சூப்பர் ஸ்டாரா?

“இங்கே நிறைய காலேஜ்கள்ல வேலை செய்யுற பெண்களுக்கு டிரஸ் கோடு இருக்கு. சில இன்ஜினீயரிங் காலேஜ்ல லெக்சரர்ஸ், சேலைக்கு மேல ஓவர் கோட் போட்டுதான் பாடம் எடுக்கணும். ஆனா, கேரள ஹையர் எஜுகேஷன் மினிஸ்டர் ஆர்.பிந்து, கல்வி நிறு வனங்கள்ல வேலை செய்யுற பெண்களுக்கு உடைக் கட்டுப்பாடு இல்லைன்னு சொல்லி யிருக்காங்க. உடைங்கிறது அவங்கவங்க தனிப் பட்ட விருப்பம் சார்ந்தது. அதுல அரசு தலை யிடாதுன்னு சொல்லி, எல்லாரோட பாராட்டு களையும் அள்ளியிருக்காங்க!” என்றாள் வினு.

“சூப்பர்... துளசி கவுடா பத்ம அவார்ட் வாங்கினதைப் பார்த்தீங்களா?”

“ஆமாம், வெறுங்கால்களோட அவார்ட் வாங்க வந்தாங்கன்னு ஆச்சர்யப்பட்டு மீடியாவுல நியூஸ் போட்டுக்கிட்டே இருந்தா ங்களே...” என்றார் வித்யா.

“ம்... துளசி, கர்நாடகாவுல ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண். வறுமையால சின்ன வயசிலிருந்தே காட்டுல வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அறுபது வருஷமா காட்டைப் பாதுகாத்துட்டு வர் றாங்க. லட்சக்கணக்குல மரம் நட்டிருக்காங்க. மூலிகைத் தாவரங்களை அழிவுலேருந்து காப்பாத்திருக்காங்க. வனத்துறையோட நாற்றுப் பண்ணைகளையும் கவனிச்சிட்டு வர்றாங்க. தாவரங்களைப் பத்தின இவங் களோட அனுபவ அறிவைப் பார்த்து, எக்ஸ் பர்ட்ஸே ஆச்சர்யப்படறாங்க. அவ்வளவு திறமையான துளசி கவுடாவுக்கு பத்ம கொடுத்ததுல எந்த ஆச்சர்யமும் இல்ல. ஆனா, இப்படிப்பட்டவங்களை ஏன் செருப்பு கூடப் போட முடியாத அளவுக்கு இந்தச் சமூகம் வச்சிருக்குன்னுதான் எனக்கு வருத்தமா இருந்துச்சு?” என்றாள் விமல்.

“எனக்கும் அவங்க நடந்து போனபோது இந்தக் கேள்வி வந்துச்சு விமல். பழங்குடி உடையில வந்தது அவங்க பாரம்பர்யத்தைக் காட்டுது. ஆனா, செருப்புப் போடாதத வறுமையோட அடையாளமா பாக்கத் தேவையில்ல. வேணும்னா இப்படி சொல்லலாம்... ‘கெட்டே போகாத காட்டுக் குள்ள செருப்புப் போடாம நடக்குறது மரி யாதை. கெட்டுக்குட்டிச்சுவராகிட்ட நாட்டுக் குள்ள செருப்புப் போட்டு நடக்குறதுதான் மரியாதை... என்ன என் பன்ச் எப்புடி?” என்றாள் வினு.

“அடடே பின்றியே வினு. எங்க கத்துக்கிட்ட இதெல்லாம்? அதுசரி விமல், உன்னோட ஃபிரெண்ட் ஐவிஎஃப் மூலமா குழந்தை உண்டானாங்களே... குழந்தை பிறந்துருச்சா?”

“ஆமா வித்யாக்கா. ஒண்ணு இல்ல ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்காங்க. ரொம்ப நல்லா இருக்காங்க!”

“சூப்பர்... ஐ.வி.எஃப்ல பெரும்பாலும் ஏன் ட்வின்ஸாவே பிறக்குதுன்னு தெரியல.”

“பெண்ணோட உடலுக்கு வெளியே, அதா வது சோதனைச் சாலையில கருமுட்டையையும் விந்தணுவையும் சேர்த்துக் கருவை உருவாக்குறதுதான் ஐவிஎஃப். ரொம்ப கஷ்டமான புராசஸ். சக்சஸ் ரேட்டுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கருக்களை உருவாக் கறாங்க. அதனால ட்வின்ஸ் அதிகமா பிறக் கறாங்க. இதே மாதிரி அமெரிக்காவுல தப்னா, அலெக்சாண்டர் கார்டினல் தம்பதி குழந்தை பெத்துக்கிட்டாங்க. ஆனா, அந்தக் குழந்தை டார்க் கலராவும் சுருட்டை முடியோடவும் இருந்ததைப் பார்த்ததும், இது நம்ம குழந்தையா இருக்காதுன்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. அவங்க செயற்கைக் கருவூட்டல் மையத்துல இது பத்தி கேட்டிருக்காங்க. அவங்க ஏதேதோ சொல்லித் தட்டிக் கழிச்சிருக்காங்க. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருக்காங்க. அதுல அது இவங்க குழந்தை இல்லைங்கிறது உறுதியாயிருச்சு. செயற்கைக் கருவூட்டல் மையத்துல தப்னா உடம்புல வைக்க வேண்டிய கருவை இன்னொரு பெண் ணோட உடம்புலயும், அந்தப் பெண்ணோட கருவை தப்னா உடம்புலயும் மாத்தி வச்சுட் டாங்க. அதனால தப்னா தம்பதி குழந்தை இன்னொரு பெண்ணோட வயித்துலயும், அவங்களோட குழந்தை தப்னா வயித்துல யும் வளர்ந்திருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பெண்கிட்டருந்து தப்னாவோட குழந்தையை வாங்கிக் கொடுத்திருக்காங்க. தப்னாகிட்ட யிருந்த குழந்தை அதோட பேரன்ட்ஸ்கிட்ட போயிருச்சு.”

“நல்லவேளை, குழந்தைங்க அவங்கவங்க பேரன்ட்ஸ்கிட்ட போயிட்டாங்க, நிம்மதி” என்றார் வித்யா.

“ `இது எங்க குழந்தை இல்லைங்கிற எண்ணம் ஒருபக்கம் இருந்துட்டே இருந்தாலும் எங்க குழந்தை மாதிரியே அன்பா கவனிச் சிட்டும் இருந்தோம். எங்க குழந்தை என் வயித்துல வளரலைனு நினைக்கும்போது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எங்க குழந்தை கிடைச்சதுல மகிழ்ச்சிதான். ஆனா லும் ஒரு தாயா அந்தக் குழந்தையையும் வளர்த்திருக்கேன். அதைப் பிரிஞ்சது கஷ்ட மாயிருக்கு’ன்னு வருத்தப்படுறாங்க தப்னா.''

“ஆமாம், கஷ்டம்தான்’’ என்ற வித்யா, “என்ன மூவி பார்த்தீங்க?” என்று கேட்டார்.

“ஒண்ணும் பார்க்கல” என்றார்கள் விமலும் வித்யாவும்.

“நான் ‘அண்ணாத்த’ பார்த்தேன். ஹீரோவை நல்லவிதமா காட்டறதுக்காக, ஹீரோயின், சிஸ்டரை எல்லாம் வேற மாதிரி காட்டறது நியாயமா... நயன்தாரா இன்னும் இதுமாதிரி ரோல்களைப் பண்ணணுமான்னு தோணுச்சு.”

“சூப்பர் ஸ்டார் படமாச்சே, மறுக்க முடியலபோல!”

“இவங்களும் சூப்பர் ஸ்டார்தானே?”

“ஆமாம் வினு, எனக்கு ஒரு டவுட். நயன் தாராவை ‘லேடி’ சூப்பர் ஸ்டார்னு ஏன் போடணும்?”

“சூப்பர் ஸ்டார்னு ஒருத்தர் இருக்கும்போது குழப்பம் வராம இருக்கத்தான்” என்றாள்.

“சூப்பர் ஸ்டார் நயன்தாரானு சொன்னா போதுமே! இப்படி ஒரு பட்டத்துலகூட ஜெண்டரைச் சேர்க்கறது நல்லா இல்ல.”

“நீ இப்படிச் சொல்றே விமல்... விக்னேஷ் சிவன், நயன்தாரா பர்த்டேவை கிராண்டா செலிபிரேட் பண்ணினார். அதுலகூட ஹேப்பி பர்த்டே `லேடி' சூப்பர் ஸ்டார்னு இருந்துச்சு... இதை என்ன சொல்ல?”

“ஹும்... மழை வர்ற மாதிரி இருக்கு. கிளம்பலாமா?” என்று வித்யா கேட்க, வினுவும் விமலும் தலையாட்டினர். அடுத்த இரண்டு நிமிடங்களில் மூவரின் ஸ்கூட்டிகளும் ஒவ்வொரு திசையில் பறந்தன!

- அரட்டை அடிப்போம்...

*****

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

இந்த இதழ் கேள்வி

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பிறகும் பிரான்ஸில் இருந்த அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைக்காக மேரி விண்ணப்பித்தபோது, பெண் என்ற ஒரே காரணத்துக்காக அந்த வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. இது நடந்தது 110 ஆண்டுகளுக்கு முன்பு. இதுபோன்ற மோசமான நிலை இப்போது மாறிவிட்டதா... பெண் என்ற காரணத்தால் உங்களுக் கான வாய்ப்பு எங்கேனும் மறுக்கப்பட்டிருக்கிறதா... சொல்லுங்களேன்...

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 30.11.2021

சென்ற இதழ் கேள்வி...

`தற்கால இந்தியப் பெண்கள் சிங்கிளாக இருக்கவே ஆர்வம்காட்டுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை’ என்று கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக் கிறார். இதுகுறித்து உங்கள் பார்வை என்ன? - கேள்விக்கு வாசகிகளின் பதில்கள்...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

எல்லா பெண்களுமே திருமணம், கணவன், குழந்தைகள், குடும்பம் என வாழவே விரும்புகிறார்கள். விதிவிலக்காக எங்கோ ஒரு சிலர் குடும்ப சூழல், தனிப்பட்ட பிரச்னை காரணமாக சிங்கிளாக இருந்து விடுவதுண்டு. அவர்கள் விரும்பி தனித்திருப்பதாகச் சொல்லிவிட முடியாது. கர்நாடக அமைச்சரின் இந்தக் கண்டுபிடிப்பு எந்த ஆய்வின் மூலம் சொல்லப்பட்டது என்று புரியவில்லை.வழக்கம்போல் அரசியல்வாதிகளின் அபத்தமான பல கருத்துகளில் இதுவும் ஒன்று என எண்ணிக் கடந்துபோக வேண்டியதுதான்.

- பி.கல்பனா, தஞ்சாவூர்

சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் ஜூலியானா லாமர் என்னும் வழக்கறிஞர் பதவிப்பிரமாணம் பெற தன் ஒரு வயது குழந்தையுடன் வந்திருந்ததும், டென்னெசீ மாவட்ட நீதிபதி டின்கின்ஸ் குழந்தையை தாம் தூக்கிவைத்துக்கொண்டு அவருக்கு பிரமாணம் செய்து வைத்ததும். அப்போது வைரலான வீடியோ. குழந்தை பெறுவதும், குடும்பம் பேணுவதும் மட்டுமே வாழ்வியலாக வாழ்ந்த பெண் இன்றில்லை. ஆணுக்கு நிகராக படிப்பும், சம்பாத்தியமும், எக்ஸ்ட்ரா மைல்கள் ஓடி தன் இருப்பை காட்டிக்கொள்ள வேண்டிய தேவை யும் இன்றைய பெண்களுக்கு உள்ளது. கைக்குழந் தையை காலில் போட்டுக்கொண்டு, பக்கத்தில் மூத்த குழந்தையை அரவணைத்துக்கொண்டு, மடியில் லேப் டாப்பை வைத்துக்கொண்டு அலுவலக வேலையில் ஆழ்ந்த பெப்ஸிகோ இந்திரா நூயியை அமைச்சர் அறிவாரா?

தத்து பெற்றாவது இரு பெண் குழந்தைகளை வளர்க்கும் சுஷ்மிதா சென், பிரபஞ்சப் பேரழகி இல்லையா? சித்தாள்களின் குழந்தைகள் அவர்கள் பணிபுரியும் ‘சைட்’டிலேயே மண்ணில் விளையாடுவது கட்டடம் கட்டும் ஒவ்வோர் இடத்திலும் காணும் காட்சி தானே! அமைச்சரது வாதம் ஒருதலைபட்சமானது. சிங்கிள் வுமனாக எப்பெண்ணும் விரும்பி வாழ்வதில்லை. விதிக்கப்பட்டதால் வாழ்கிறார்கள். குழந்தைகளே வேண் டாம் என இருப்பதில்லை. அது அவள் இயல்புமில்லை.

- கீதா பாலு, ஹைதராபாத்

வினுவின் வித்தியாசமான தகவல்!

மாரடைப்பு ஏற்படும்போது மார்பு வலி இல்லாமலும் இருக்கலாம். குமட்டல், அஜீரணம் மற்றும் தோள்பட்டை வலி, தாடை வலி ஆகியவைகூட மாரடைப்பு அறிகுறிகளாக உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு