லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

வினு விமல் வித்யா: நேற்று மீடியாவில்... இன்று அமைச்சரவையில்!

 ரையன் க்ரெஸ் -  வீணா ஜார்ஜ் -  அன்னா ரூதர்ஃபோர்டு
பிரீமியம் ஸ்டோரி
News
ரையன் க்ரெஸ் - வீணா ஜார்ஜ் - அன்னா ரூதர்ஃபோர்டு

சஹானா

வீடியோ காலில் வித்யாவையும் விமலையும் அழைத்தாள் வினு.

“ஹாய் வினு, வீட்டுக்கு வந்திருக் கலாம்ல? இன்னிக்கு ஸ்பெஷல் பிரியாணி செஞ்சு வச்சிருக்கேன்” என்றார் வித்யா.

“நிலைமை சரியில்லக்கா. எங்க உறவுக் காரங்க பல பேரு கொரோனாவால பாதிக்கப் பட்டிருக்காங்க. நாம நேர்ல சந்திக்காம இருக்கறதுதான் நல்லது. இன்னொரு நாள் பிரியாணியைச் சாப்பிட்டுக்கறேன்” என்றாள் வினு.

“ஓகே, எல்லோரும் கவனமா இருப்போம். ஷைலஜா டீச்சர் பத்திதான் பலரும் பேசிட்டு இருக்காங்க. அவங்களுக்கு உலக அளவுல அங்கீகாரமெல்லாம் கிடைச்சும், ஏன் அமைச்சர் பதவி கொடுக்கலைனு தெரியலை.”

 குழந்தைகளுடன் அன்னா ரூதர்ஃபோர்டு
குழந்தைகளுடன் அன்னா ரூதர்ஃபோர்டு

‘‘ஆமாக்கா நீங்க சொல்ற மாதிரி, ஷைலஜா டீச்சருக்குக் கொடுக்கலைனு பரவலா ஆதங்கப் பட்டுகிட்டுதான் இருக்காங்க. ஆனா, இந்த முடிவால புது ஆட்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியுமே. எல்லோரும் கட்சிக்காக உழைக்கும்போது, பலருக்கும் வாய்ப்பு கொடுக்குறதுதானே நல்லது?” என்று கேட்டாள் விமல்.

“ஆமாம், ‘நானும் புதுசாதான் வந்தேன். திறமையா வேலை செஞ்சேன். அதே மாதிரி புதியவர்களும் வேலை செய்வாங்க’னு ஷைலஜா டீச்சரே சொல்லிருக்காங்க. இப்போ கேரளாவின் ஹெல்த் மினிஸ்டரா வீணா ஜார்ஜ் பதவி ஏத்திருக்காங்க. 44 வயசான வீணா, மீடியாவில் முக்கிய பொறுப்புகள்ல இருந்தவங்க. போன முறை தேர்தல்ல ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனாங்க. இந்த முறை அமைச்சராகிட்டாங்க. இவங்களும் நல்லா வேலை செய்வாங்கன்னு நம்பலாம்” என்றாள் வினு.

``ம்... கேரளாவில் முதன்முறையா மீடியாவிலிருந்து அமைச்சரான வீணாவுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம். இந்த முறை மூணு பெண்கள் அமைச்சராகியிருக்காங்க. அப்படியே தமிழ்நாட்டுல காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு டிஜிபியா பொறுப்பெடுத் திருக்கும் ஆசியம்மாளுக்கும் வாழ்த்துகளைச் சொல்லிடுவோம். 56 வயசான ஆசியம்மாள், தூத்துக்குடியைச் சேர்ந்தவங்க. எம்.எஸ்ஸி, எம்.டெக், எம்.பி.ஏ படிச்சிருக்காங்க. பல முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்காங்க. அனுபவமும் நுண்ணறிவும் கொண்டவங் களுக்கே இந்தப் பொறுப்பு வழங்கப்படுது.”

``வாவ்... சூப்பர்! அது சரி, பெண்களுக்குக் கட்டணமில்லாத பேருந்துப் பயணம் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

``ரொம்ப நல்ல விஷயம் வினு. எத்தனையோ பெண்கள் இன்னும் வீட்டுக்குள்ளேதான் முடங்கிக்கிடக்காங்க. கட்டணம் இல்லாம பயணம் செய்யலாம்னா அவங்களும் வெளியே வருவாங்க. ஏழைப் பெண்கள் எத்தனையோ பேர் சின்னச் சின்ன வேலைகளுக்காக, சிறு வியாபாரத்துக்காக வெளியே போக வேண்டியிருக்கு. அவங்களுக்கு ஒரு நாளைக்குக் குறைஞ்சது 30 ரூபாயாவது பஸ்ஸுக்குத் தேவைப்படுது. 100 ரூபா சம்பாதிக்கிற வங்களுக்கு 30 ரூபாங்கறது பெரிய தொகை. இப்ப அந்தப் பணத்தையும் அவங்க வீட்டுக்கு யூஸ் பண்ணிக்கலாம்!”

“ஆமா வித்யாக்கா. பக்கத்து வீட்ல ஒருத்தர், ஆண்களும் கம்மியா சம்பாதிக்கிறாங்க, அவங்களுக்கும் இந்தச் சலுகை வேணும்னு சொன்னார். அவங்க வீட்ல உள்ள பெண் களுக்குக் கிடைக்கும் சலுகை அவங்க குடும்பத்துக்கே கிடைக்கும் சலுகைதானேனு சொன்னேன்.”

“கரெக்ட். 2014-ம் வருஷம் நைஜீரியாவுல ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சிக்கிட்டிருந்த சுமார் 300 பெண் குழந்தைகளைக் கடத்திட்டுப் போனது நினைவிருக்கா?”

வினு விமல் வித்யா: நேற்று மீடியாவில்... இன்று அமைச்சரவையில்!

“அந்த நாட்டுல செயல்படுற ‘போகோ ஹரம்’கிற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புதான அந்தக் கடத்தலை செய்ததுங்கறதுகூட நினைவிருக்கு. அதுல கொஞ்சம் பேரை விடுதலை செஞ்சதாவும் கேள்விப்பட்டேன் விமல்.”

“ம்... அவங்க பெண்கள் படிக்கக் கூடாதுனு மிரட்டிட்டு, டிரக்கில் கடத்திட்டுப் போனாங்க. அதுல 57 பொண்ணுங்க டிரக்லேருந்து குதிச்சாங்க. அதுல ஜாய் பிஷாரா, லிடியா போகு இந்த ரெண்டு பேரும் ராத்திரி முழுக்க நடந்து, பாதுகாப்பான இடத்துக்கு வந்து சேர்ந்தாங்க. அப்புறம் ஒரு தொண்டு நிறுவனம் மூலமா அமெரிக்காவுல படிக்க ஸ்காலர்ஷிப் கிடைச்சது. ரெண்டு பேரும் பள்ளிப் படிப்பை முடிச்சு, இப்போ டிகிரியும் வாங்கிட்டாங்க. முதுகலை பட்டப் படிப்பையும் படிச்சிட்டு, நைஜீரியா வுக்குத் திரும்பி, தங்களோட தாய்நாட்டு மக்களுக்காக வேலை செய்யணும்னு நெகிழ்ச்சியோட சொல்லிட்டிருக்காங்க!”

“கிரேட்! உலகமே பேண்டெமிக்ல இருக்கும்போது, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அன்னா ரூதர்ஃபோர்டு, அசத்தலா ஒரு சாதனையை செய்திருக்காங்க. 38 வயசு அன்னா, லாயரா இருக்காங்க. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா. ரெண்டாவது குழந்தை டெலிவரி நேரத்துலதான் கொரோனா வந்து லாக்டௌன்ல உலகமே முடங் கிடுச்சு. அதுக்கு முன்னவே வயித்துல குழந்தையோடு ஓடி ஓடி, பயிற்சி செய்தாங்க. குழந்தை பிறந்து ரெண்டு வாரம் மட்டும்தான் ஓய்வு. மறுபடியும் தொடர்ந்து பிராக்டிஸ் பண்ணி, குழந்தை பிறந்த ஒன்பதாவது மாசத்துல சாதனை ஓட்டத்துக்குத் தயாராயிட்டாங்க!’’

‘‘அதென்ன சாதனை ஓட்டம்?’’

‘‘கரடுமுரடான பாதைகளின் வழியே குறிப்பிட்ட தூரத்தை ரொம்ப வேகமா சென்றடையற ஓட்டப் போட்டி (எஃப்.கே.டி) அது. இதுல பெண்களுக்கான போட்டியில 344 கி.மீ தூரத்தைச் சீக்கிரம் கடக்கணும்னுகிறது மட்டும்தான் அவங்க இலக்கா இருந்துச்சு. முதல் நாள் இரவு ரெஸ்ட் எடுக்காம ஓடினதுல ஹெல்த் பாதிக்கப்பட்டுச்சு. 25,000 கலோரி சாப்பிட்டிருக்க வேண்டிய அன்னா, 2,000 கலோரிகளை மட்டுமே எடுத்திருந்தாங்க. சக ஓட்ட வீரர் ஒருவர், குப்பிகள்ல அடைக்கப்பட்ட சத்து நிறைஞ்ச உணவைக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டு, கொஞ்ச நேரம் தரையிலயே படுத்துத் தூங்கிட்டு, ஓட்டத்தைத் தொடர்ந் தாங்க அன்னா. மூணாவது நாள் இலக்கை அடைஞ்சபோது, முந்தைய சாதனையை முறியடிச்சுட்டதா எல்லாரும் கொண்டாடிட்டாங்க.

அதாவது 62 மணி நேரம் 34 நிமிஷத்துல ஓட்டத்தை நிறைவு செஞ்சிருக்காங்க. இடையில 2 மணி நேரம் மட்டும்தான் தூங்கியிருக்காங்க. இதுக்கு முந்தைய சாதனை 79 மணி நேரம். அதைவிட, 17 மணி நேரம் குறைவா ஓடி, ஆண்கள் (எஃப்.கே.டி) சாதனைக்குப் பக்கத்துல வந்துட் டாங்க.”

“அடடா... அன்னாவுக்கு ஒரு பொக்கே பார்சல். குழந்தை பிறந்த பிறகு இவ்வளவு தூரம் ஓடணும்னா எவ்வளவு மன வலிமை வேணும்!”

‘‘நிச்சயமா மிகப்பெரிய மன வலிமை வேணும். அதேசமயம், விறகு பொறுக்கப் போன இடத்துல பிரசவமாகி, குழந்தையை ஒரு கையில தூக்கிக்கிட்டு, தலையில விறகுக் கட்டை சுமந்துகிட்டு வர்ற அளவுக்கு மகாவலிமை கொண்டவங்க நம்ம ஊர்கள்ல உண்டுங்கறத மறந்துடா தீங்க.’’

“வீடியோ கால்ல எதுவும் சாப்பிடக்கூட முடியலை. இருங்க கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கிறேன்” என்றாள் வினு.

“மெதுவா குடி. அமெரிக்காவுல ரையன் க்ரெஸ்ங்கிற பொண்ணு நர்ஸா வேலைக்குச் சேர்ந்ததுதான் அங்கே ஒரே பேச்சா இருக்கு” என்றாள் விமல்.

“ஏம்மா, உலகத்துல எத்தனையோ பேர் நர்ஸாதானே இருக்காங்க. ரையனுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டார் வித்யா.

“ஸ்பெஷல்தான் வித்யாக்கா. ரையன் மரபணுக் குறைபாட்டால பாதிக்கப்பட்டவங்க. அதாவது இணைப்புத்திசுக்களில் பாதிப்பு. அடிக்கடி தோள்பட்டை இடத்தைவிட்டு நகர்ந்துடும். அதை அவங்க அம்மா சரி பண்ணிவிடுவாங்க. டான்ஸராகணும்னு ரையன் நினைச்சாங்க. 16 வயசுல ஊன்று கோல் உதவியை நாட வேண்டியதாயிருச்சு. அதனால தன் எண்ணத்தை மாத்திக்கிட்டு, நர்ஸிங் படிக்க முடிவெடுத்தாங்க. காலேஜ்ல படிக்கும்போதே உடல்நிலை மோசமாகி, சக்கர நாற்காலியில உட்கார வேண்டிய தாயிருச்சு. அப்படியும் படிப்பை முடிச்சு, பயிற்சியும் எடுத்துக்கிட்டாங்க.

மக்களுக்குச் சேவை செய்யலாம்னு ஆர்வத்தோட காத்திருந்தவங்களுக்கு எந்த ஹாஸ்பிட்டலும் வேலை கொடுக்கல. ரெஸ்யூம் பார்த்து இன்டர்வியூவுக்குக் கூப்பிடுவாங்க. நேர்ல பார்த்ததும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. ரையனுக்கு வருத்தமாயிருச்சு. மனசைத் தளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணினாங்க. டாட்டூ போட்டுக்கிட்டாங்க. தலை முடியை வெட்டிக்கிட்டாங்க. ‘மிஸ் வீல்சேர் வெர்ஜினியா’ போட்டில கலந்து கிட்டாங்க.அதுல தன்னைப்போல உடல்நிலை பாதிக்கப்படறவங்களுக்கு வேலை செய்யணும்கிற இவங்களோட பதில், பட்டத்தை வாங்கிக் கொடுத்திருச்சு.

 ஜாய் பிஷாரா, லிடியா போகு
ஜாய் பிஷாரா, லிடியா போகு

பல இடங்கள்ல தன்னம்பிக்கை பேச்சாளரா இவரைக் கூப்பிட் டாங்க. லாக்டௌனால எதுவும் செய்ய முடியல. மறுபடியும் வேலை தேடினாங்க. கடைசியா ஒரு ஹாஸ்பிட்டல்ல வேலை கிடைச்சிருச்சு. தாய், சேய் நலப் பிரிவில் வேலை செய்ய ஆரம்பிச் சிட்டாங்க ரையன். இப்போ சொல் லுங்க... இது பெரிய விஷயம்தானே வித்யாக்கா?”

``ஆமாம், நம்பி வேலை கொடுத்த ஹாஸ்பிட்டலையும் பாராட்டணும். இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னை ரொம்ப பெருசா போயிட்டே இருக்கு. இந்த பேண்டெமிக்லயும் இவங்க தாக்குதல்களை நிறுத்தல. ரொம்ப வருத்தமா இருக்கு” என்றார் வித்யா.

“ஆமா வித்யாக்கா. இது இன்னிக்கு நேத்து நடக்கற பிரச்னையா, என்ன? ரெண்டாயிர வருஷப் பிரச்னை. கடந்த நூறு வருஷமா ரொம்ப தீவிரமாயிட்டிருக்கு. ஜெர்மனில நாஜிக்கள் யூதர்களை வதைச்ச மாதிரி, யூத நாடான இஸ்ரேல் இஸ்லாமியர்களை வதைக்குது. நியூயார்க்ல வசிக்குற இஸ்ரேல் மாணவர்கள் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தியிருக்காங்க.

அப்பாவிகள் கொல்லப்படுறதைத் தடுக் கணும்னு சொல்லியிருக்காங்க. அடுத்த தலைமுறை இப்படி உருவானாதான் இந்தப் பிரச்னைக்கு விடிவு வரும். சரி, ரொம்ப நேரமாச்சு. அரட்டையை முடிச்சுக்கலாமா?” என்று கேட்டாள் விமல்.

``ஓகே, அடுத்த மீட்ல கொரோனா குறையணும். ஸ்டே சேஃப். பை” என்று இணைப்பைத் துண்டித்தார் வித்யா.

(அரட்டை அடிப்போம்!)