Published:Updated:

வினு விமல் வித்யா: மூணு மாசக் கைக்குழந்தையோடு முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்!

 ஜிஹாத் புட்டோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஜிஹாத் புட்டோ

- சஹானா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வினு, விமல், வித்யா மூவரும் காரில் கிளம்பினர்.

“எங்கே போறோம் விமல்?”

“சும்மா கொஞ்சநேரம் எங்கேயாவது போயிட்டுத் திரும்பிடலாம் வித்யாக்கா. எந்தப் பக்கம் போகலாம்னு நீங்களே சொல்லுங்க” என்றாள் விமல்.

“ஆவடி பருத்திப்பட்டு ஏரிக்கு வண்டியை விடு. ரொம்ப நல்லா இருக்காம். போட்டிங்கூட போகலாம்” என்றார் வித்யா.

“என்ன வினு, ஒரே யோசனையா இருக்கே?”

“யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதலாமான்னு யோசிச் சிட்டிருக்கேன் விமல்.”

“நீ தாராளமா எழுதலாம். ஷாநாஸ் இலியாஸ் மாதிரி முதல் முயற்சிலயே நீ ஐ.ஏ.எஸ் ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு வினு!”

“ஆமாமா... நீதான் என்னை மெச்சிக்கணும். சரி, யார் இந்த ஷாநாஸ்?”

“2020-ல நடந்த யுபிஎஸ்சி தேர்வுல ஷாநாஸ் இலியாஸும் கலந்துகிட்டாங்க. அவங்க ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்லயே ஐ.ஏ.எஸ் ஆகிட்டாங்க. மூணு மாசக் கைக்குழந்தையையும் கவனிச்சுக்கிட்டு, தேர்வுக்கும் தயாரானாங்க. எந்தப் பயிற்சி மையத்துலயும் அவங்க பயிற்சி எடுத்துக்கலைங்கிறது ரொம்ப முக்கியமான விஷயம். நேர்முகத் தேர்வுப் பயிற்சியை மட்டும் டிஜிபி சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்கிட்ட எடுத்துக்கிட்டாங்க. இது ரொம்ப ஆச்சர்யமான விஷயம்!”

 சைலேந்திர பாபு -  ஷாநாஸ் இலியாஸ்
சைலேந்திர பாபு - ஷாநாஸ் இலியாஸ்

“சூப்பர்! ஒருபக்கம் பெண்கள் இப்படி மேல மேல முன்னேறிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் குடும்ப வன்முறையால உயிரை விட்டுட்டு இருக்காங்க...” என்று சட்டென வருத்த மோடுக்குப் போன வித்யா, சில நொடி மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.

“உலகையே உலுக்கின ஒரு கொலையில தீர்ப்பு வந்திருச்சு. கொலைகாரன் சூரஜ் குமாருக்கு ரெட்டை ஆயுள் தண்டனை கிடைச்சிருக்கு. கேரளாவுல பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க உத்ரா. கற்றல் குறைபாட்டால பாதிக்கப்பட்டவங்க. அவங்களை சூரஜ் குமாருக்கு 96 பவுன் நகை, கார், 4 லட்சம் ரூபாய் கொடுத்து, கல்யாணம் பண்ணி அனுப்பிருக்காங்க. ரெண்டு பேருக்கும் ஒரு குழந்தையும் பிறந்திருக்கு. உத்ராவைக் கொன்னுட்டு, வேற கல்யாணம் பண்ணிக்க நினைச்சான் சூரஜ். இந்தக் கொடூரத்துக்குப் பாம்பு களை யூஸ் பண்ணிக்கிட்டான். முதல் முறை 10,000 ரூபாய்க்கு கட்டுவிரியன் பாம்பு வாங்கி, கடிக்க வச்சான். அதுலேருந்து தப்பி, ரெண்டு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்துத் தேறிவந்தாங்க உத்ரா. இரக்கமே இல்லாத சூரஜ், மறுபடியும் நாகப்பாம்பை வாங்கி, கடிக்கவிட்டு, கொன் னுட்டான். அடிக்கடி பாம்பு கடிச்சதால சந்தேகம் ஏற்பட்டுச்சு. விசாரணையில பாம்பை வித்தவர் உண்மையைச் சொல்லிட்டார். விலங்கு ஆய்வாளர்களும் இது கொலைங்கிறதை உறுதி பண்ணிட்டாங்க. விலங்கை யூஸ் பண்ணிச் செய்த இப்படியொரு கொடூரக் கொலையை இதுவரை பார்த்த தில்லைங்கிறாங்க வல்லுநர்கள். ஆனா, சூரஜ் அதுக் காக வருத்தப்படவே இல்லையாம்...”

“வருத்தப்படறவன் கொலை பண்ணுவானா? பிடிக்கலைனா டிவோர்ஸ் பண்ண வேண்டியதுதானே? என்ன ஒரு வில்லத்தனம்?” என்று ஆத்திரத்துடன் சொன்னாள் வினு.

“நீங்க சொல்லும்போதே நடுங்குது வித்யாக்கா. அம்மாவும் இல்லாம, அப்பாவும் இல்லாம அந்தக் குழந்தை வளரணும், பாவம்...”

“அதே கேரளாவைச் சேர்ந்தவங்க பாத்திமா அஸ்லா. பிறந்த மூணாவது நாளே எலும்புச் சிதைவு நோயால பாதிக்கப்பட்டாங்க. அவங்க அப்பாவுக்கும் இதே நோய் இருக்கு. ஏழ்மையான குடும்பம். இதுவரைக்கும் பாத்திமாவின் கால்ல அறுபது சர்ஜரி செஞ்சிருக்காங்க. ஆனாலும், படிப்புல ஆர்வமா இருந்திருக்காங்க. மகள் விருப்பப்படியே அந்தக் குடும்பம் படிக்க வச்சிருக்கு. ஹோமியோபதி மருத்துவம் படிச்சு, டாக்டரானாங்க. ஃபிரெண்ட்ஸ் மூலமா அவங்களுக்கு அறிமுகமானார் லட்சத்தீவுகளைச் சேர்ந்த ஃபிரோஸ் நெடியத். பாத்திமாவைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பினார். பாத்திமாவின் விருப்பப்படி சக்கர நாற்காலியைச் சீரா கொடுத்து, கல்யாணம் பண்ணிக்கிட்டார். டாக்டர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், ரைட்டர்னு இருக்கிற பாத்திமாவுக்கு இனி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையட்டும்” என்றாள் விமல்.

“தன்னம்பிக்கையின் அடையாளம் பாத்திமா. நடந்து முடிஞ்ச உள்ளாட்சித் தேர்தல்ல நிறைய பெண்கள் போட்டி போட்டிருக்காங்க. இதுல தென் காசியைச் சேர்ந்த சாருகலாவுக்கு 21 வயசுதான் ஆகுது. இவங்கதான் தமிழ்நாட்டின் இளம் ஊராட்சி மன்றத் தலைவர். மிகப் பெரிய ஊராட்சி மன்றத்தின் தலைவரும் இவங்கதான். திருநெல்வேலியைச் சேர்ந்த பெருமாத்தாள் பாட்டிதான் மிக வயசான ஊராட்சி மன்றத் தலைவர். 90 வயசுலேயும் கம்பீரமா நடந்துவந்து பதவி ஏத்துக்கிட்டாங்க. அரசியல்ல பெண்களின் பங்கு அதிகமாகும்போது மாற்றங்களைக் கொண்டு வர முடியும். வீட்டு ஆண்களின் பினாமியா இல்லாம, இவங்க சுயமா செயல்படணும்” என்றாள் விமல்.

“ஆமா விமல். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஜிஹாத் புட்டோவுக்குப் படிப்பு மேல தீராத ஆசை. ஆனா, 12 வயசுலேயே பள்ளிக்குப் போறதை வீட்டுல நிறுத்திட்டாங்க. அப்புறம் கல்யாணம், குழந்தைகள்னு வாழ்க்கை ஓடினாலும், படிக்க முடியலையேனு ஏக்கம் இருந்துச்சு. இதைப் புரிஞ்சுகிட்ட அவங்க பிள்ளைங்க, மறுபடியும் படிக்கச் சொன்னாங்க. 2018-ல பள்ளிப்படிப்பை முடிச்ச ஜிஹாத் புட்டோ, இப்ப டிகிரியும் வாங்கிட்டாங்க.

85 வயசுல டிகிரி வாங்கினதோட, ஆன்லைன் கிளாஸ், ஜூம் மீட்டிங்னு டெக்னாலஜியையும் யூஸ் பண்றாங்க. நிறைய குழந்தைகளுக்குப் படிப்பும் சொல்லிக் கொடுக்குறாங்க!” என்றாள் வினு.

“கிரேட்! பாலஸ்தீனத்துல 85 வயசு பெண் ணால டிகிரி வாங்க முடியுது. ஆப்கானிஸ்தான்ல ஸ்கூல், காலேஜுக்குப் போயிட்டிருந்த பெண்களால இப்போ படிப்பைத் தொடர முடியல. தாலிபன்கள் பெண் கல்வியைத் தடுக்கலைன்னு சொல்றாங்க. ஆனா, நடைமுறையில வேற மாதிரி நடந்துக்கறாங்க. பெண்கள் பள்ளி ஆரம்பிச்ச பிறகு படிக்கலாம்னு சொல்றதெல்லாம் அநியாயம். ஹவுஸ் கீப்பிங் வேலையைத் தவிர, மத்த வேலைகளைச் செய்ய பெண்களை அனுமதிக்கல. படிப்பு, வேலை கேட்டுப் போராடின பெண்களை ரொம்ப மோசமா தாக்கியிருக்காங்க. எதிர்காலத்தை நினைச்சா பயமாயிருக்குன்னு சொல்றாங்க அங்குள்ள பெண்கள். பாவம்...” என்ற வித்யா, “பருத்திப்பட்டை நெருங்கிட்டோமா விமல்?” என்றார்.

“பத்து நிமிஷத்துல போயிடலாம் வித்யாக்கா.”

“சரி, ஏதாவது மூவி பார்த்தீங்களா?”

“நான் `ஹவுஸ் ஆஃப் சீக்ரெட்ஸ்'னு ஒரு டாகுமென்டரி பார்த்தேன். டெல்லியில 11 பேர் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்களே... அதைப் பத்தின டாகுமென்டரி. இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு காரணம் என்னங் கிறதுக்கான விடை, இந்த டாகுமென்டரிலதான் கிடைச் சிருக்கு. மூணே எபிசோட்ஸ்தான் நெட்ஃப்ளிக்ஸ்ல இருக்கு” என்றாள் வினு.

“ஏன் இப்படிச் செஞ்சுக்கிட்டாங்களாம் வினு?”

“அந்தக் குடும்பத்துல எல்லாருமே அன்பானவங்க, படிச்சவங்க. அதுல ஒருத்தருக்கு பல வருஷங்களுக்கு முன்னால நடந்த விபத்துல அவருக்கு மனநிலையில மாற்றம் ஏற்பட்டிருக்கு. அப்பா தன்கிட்டே அதைச் செய்யச் சொன்னார், இதைச் செய்யச் சொன்னார். நீங்க எல்லாம் அவர் சொன்ன மாதிரி நடக்கணும். இல்லைனா தண்டனை கிடைக்கும்னு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிருக்கார். ஆரம்பத்துல நம்பிக்கை வரலைனாலும் அவர் சொன்னதுல சில விஷயங்கள் சக்ஸஸ் ஆயிருக்கு. அதுக்கு அப்புறம் எல்லாரும் அவர் சொல்றதை நம்ப ஆரம்பிச்சிட்டாங்க... இப்படி 11 வருஷமா அவர் சொன்னதே சட்டமா இருந்திருக்கு.”

“ஓ... ஒருத்தர்கூடவா எதிர்த்துக் கேள்வி கேட்கல?”

“அப்படிக் கேட்டிருந்தா இந்தக் கொடூரம் நடந்தி ருக்காதே விமல். அதான் ஆச்சர்யமா இருக்கு... ஐ.டி-ல வேலை பார்க்கற பெண்ணும் இருந்திருக்காங்க, ஸ்கூல்ல படிக்கிற பையனும் இருந்திருக்கான். ஏன் யாரும் கேள்வி கேட்கலை... பயமா, நம்பிக்கையா... எது அவங்களை அப்படி வச்சிருந்திருக்குனு புரியல.”

வினு விமல் வித்யா: மூணு மாசக் கைக்குழந்தையோடு முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்!

“எதுக்கு அந்த ஆள் இப்படியொரு முடிவெடுத்தாராம்?”

“வீட்டுல ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. கல் யாணம் நடந்தா விஷயம் வெளியில தெரிஞ்சிடும்னு நினைச்சு அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கணும்னு சொல்றாங்க. பூஜை பண்ணினா அப்பா வருவார்... நம்மை எல்லாம் காப்பாத்துவார்னு சொல்லியிருக்கார். சம்பவம் நடந்த ராத்திரி அந்த ஆளோட மனைவியும் மகனும் ஸ்டூல் வாங்கிட்டு வர்றாங்க. கடை யைத் திறந்து ஒயர் எடுத்துட்டு வர்றாங்க... டென்ஷனே இல்லாம ஒவ்வொண்ணையும் பண்றாங்க... ரொம்ப ஆச்சர்யமாவும் அதிர்ச்சி யாவும் இருக்கு.”

“ஒருத்தரை டாக்டர்கிட்ட காட்டி, ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தா, இத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது” என்றார் வித்யா.

“ஆமா, வித்யாக்கா. இதோ லேக் வந்துருச்சு. இறங்கலாம்” என்றாள் விமல்.

கனத்த மனத்துடன் மூவரும் உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள்.

- அரட்டை அடிப்போம்...

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

இந்த இதழ் கேள்வி

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பல பெண்கள் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள். இவர்கள் சுயமாகச் செயல்படுவார்களா அல்லது அவர்கள் வீட்டிலுள்ள ஆண்களே பின்னணியில் அதிகாரம் செலுத்துவார்களா? உங்கள் பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது?

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 1.11.2021

சென்ற இதழ் கேள்வி...

‘அண்மையில் பிபிசி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அறியப்பட்ட ஓர் உண்மை இது. இன்னமும் உலகில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சம்பள வேறுபாடு அதிகமாகவே இருக்கிறது. அதாவது, ஆணைப் போலவே அதே வேலையைச் செய்யும் பெண், ஆணைக் காட்டிலும் குறைவான சம்பளமே பெறுகிறார். அமேசான், ஹெச்எஸ்பிசி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களிலும் இதே போக்குதான் உள்ளது. உங்கள் நிறுவனத்தில் அல்லது உங்கள் பகுதியில் இப்படி நடக்கிறதா? இதுபற்றி உங்கள் எண்ணம் என்ன?

வாசகி பதில்கள்... ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது.

ஒரே வேலைக்கு சம்பளத்தில் பாலினப் பாகுபாடு பார்க்கும் நிலை நல்லவேளை அரசுப் பணிகளில் கிடையாது. தனியார் நிறுவனங்களில்தான் இந்தச் சுரண்டல் நடக்கிறது. சம்பளத்தின் அவசியத்தாலும், வேலை முக்கியம் என்ற குடும்ப சூழலாலும், அநீதியைத் தட்டிக்கேட்டால் வேலையை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தாலும் பெண்கள் இதை சகித்துக் கொள்கின்றனர். விவசாயப் பணிகளிலும் கட்டுமானத் தொழிலிலும் இது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகவே ஆகிவிட்டது.

- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

ஜெண்டர் டிஸ்கிரிமினேஷன் இல்லாத இடம் இருப்ப தாகவே தெரியவேயில்லை. ஸ்போர்ட்ஸில் விமன் சிங்கிளுக்கான பரிசுத்தொகை, மென் சிங்கிளைவிட குறைவு... நடிகையருக்கு சம்பளம் நடிகனைவிட குறைவு. படிக்காத கட்டுமான மேஸ்திரிகூட பெரியாளுக்குத் தரும் சம்பளத்தை அதே பணியைச் செய்யும் பெண்களுக்குத் தருவதில்லை. பெண்ணை வேலைக்கு எடுக்கும்போதே அவள் திருமணம் ஆனவளா, ஆகாதவளா என்பது முக்கிய பாயின்ட். திருமணமான பெண்ணுக்கு வீட்டுப் பொறுப்பும் இருக்கும் என்பதால் அவள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற மாட்டாள் என்பது நிறுவனர்களின் கணக்கு.

மேலும், கர்ப்பமாகிவிட்டால் பணிசெய்ய உடல் ஒத் துழைக்காது என்னும் எண்ணம், சம்பளத்துடன் மெடர்னிடி லீவு தர வேண்டுமே என்ற எரிச்சல். நிர்வாகத்துக்கு மைன ஸான இத்தனை நெகட்டிவ் பாயின்டுகள் பெண்ணை வேலைக்கு வைப்பதால்தான் எழுகின்றன. ஆண்கள் சிகரெட் பிடிக்க, பல பத்து நிமிடங்கள் வெளியேறுகின்றனர். பெண்கள் சீக்கிரம் லன்ச்சை முடித்துவிட்டு லன்ச் அவரி லேயே பணிக்குத் திரும்புகின்றனர். இவையெல்லாம் பெண்களுக்கான ப்ளஸ் இல்லையா?

அர்ப்பணிப்புடனும் நிறுவன சட்ட திட்டங்களை மதித்தும் பணியாற்றும் பெண்ணுக்கு சம்பளத்தைக் குறைப்பது நியாயமேயில்லை.

-  மல்லிகா குரு, சென்னை-33

வினுவின் வித்தியாசமான தகவல்!

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சராசரியாக சுமார் 1,400 நாள்களை மாதவிடாயில் கழிக்கிறார்கள். இது சில பெண்களுக்கு கூடவோ, குறையவோ இருக்கலாம்.