Published:Updated:

வினு விமல் வித்யா: சரித்திரத்தில் இடம்பெற்ற சாதனைப் பயணம்!

- சஹானா

பிரீமியம் ஸ்டோரி

விமல் வீட்டு பால்கனி... வினுவுக்கும் வித்யாவுக்கும் வாழைப்பூ வடை களையும் லெமன் ஜூஸையும் கொண்டுவந்து கொடுத்தாள் விமல்.

“வர வர நீயும் சமையல்ல கலக்கறே விமல்!” என்று சிலாகித்தாள் வினு.

“கிண்டல் பண்ணாதே வினு. இந்த லாக் டௌன் காலத்துலதான் வாழைப்பூவையே சமைக்கக் கத்துக்கிட்டேன். இல்லைன்னா நமக்கு எங்க நேரம் இருக்கு?”

“நீ சொல்றதும் கரெக்ட்தான் விமல். கேரளாவுல முதல் திருநங்கை மருத்துவர் ப்ரியா வைரலாயிருக்காங்க. `என்னைக் கண்டடைந்த நாள் மகிழ்ச்சி யானது. எதுக்காகவும் என் அடையாளத்தை மறைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். என்னை மாதிரியானவங்களுக்கு குடும்பம்தான் ரொம்ப சப்போர்ட் பண்ணணும். ஆனா, பலருக்கும் அந்த சப்போர்ட் கிடைக்கிறதில்லே. என் குடும்பம் என்னைப் புரிஞ்சிக்கிட்டதால தான் என்னால ஒரு மருத்துவராக முடிஞ்சது. இந்த வாழ்க்கை விலைமதிப்பில்லாதது. அதை அவங்கவங்க இயல்போட வாழ்ந்துட்டுப் போகணும்’னு ப்ரியா சொல்லியிருக்காங்க” என்றார் வித்யா.

 ஜெஸிண்டா -  ஸோயா -  ப்ரியா
ஜெஸிண்டா - ஸோயா - ப்ரியா

“ஆமா, வித்யாக்கா. குடும்பமும் சமூகமும் இனியாவது மாற்றுப்பாலினத்தவங்களை மதிக்கணும். அப்போதான் அவங்க மத்தவங் களைப் போல இயல்பா வாழ முடியும். அதே கேரளால சிங்கிள் பேரன்ட்டா இருக்கும் பெண்களுக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை தர்றதா கேரள அரசு அறிவிச்சிருக்கு. ஏற்கெனவே பட்டியல், பழங்குடி இனப் பெண்கள் இந்த உதவித்தொகை வாங்கிட்டிருந்தாங்க. இப்போ எல்லாப் பெண்களுக்கும் உதவித் தொகை கிடைக்கப் போகுது” என்ற விமல், ஜூஸைப் பருகினாள்.

“வாவ்... இந்த உதவித் தொகையால தனியா வாழற பெண்களின் சமூகப் பாது காப்பு உறுதியானா மகிழ்ச்சி. இன்னொரு சூப்பர் நியூஸ் சொல்றேன். ஏர் இந்தியா முழுக்க முழுக்கப் பெண் பைலட்டுகளை வெச்சு, சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு ஒரு ஃபிளைட்டை இயக்கி யிருக்கு. இது 16,000 கிலோமீட்டர் தூரம் எங்கேயும் இறங்காம பறக்கும் பயணம். இது பறக்கறது வட துருவத்துக்கு மேல. வட துருவத்துல விமானத்தை ஓட்டுறதுக்கு டெக்னிகல் விஷயங்கள் ரொம்ப நல்லா தெரிஞ்சிருக்கணும். நிறைய அனுபவமும் இருக்கணும். விமானி ஸோயா அகர்வால் இந்த விமானத்தை ஓட்டினாங்க. இவங் களோட இன்னும் சில பெண் பைலட்டுகளும் இருந்தாங்க. இந்த விமானப் பயணம், சரித்திரத்தில் இடம்பெற்றுடுச்சு” என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்தாள் வினு.

வினு விமல் வித்யா: சரித்திரத்தில் இடம்பெற்ற சாதனைப் பயணம்!

``கிரேட்... ஸோயா டீமுக்கு வாழ்த்துகள். காஷ்மீரில் பூஜா தேவிங்கிற 30 வயசு பெண் முதல் பஸ் டிரைவரா ஆகியிருக்காங்க. வறுமையால இந்த வேலைக்கு வந்திருக்காங்க. பஸ் டிரைவரா போக வேண்டாம்னு சொந்தக்காரங்க சொல்லியும் இவங்க கேட்கலை. இவங்களைப் பார்த்து இன்னும் பல பெண்கள் அந்தப் பகுதியில இப்படிப் பட்ட வேலைகளுக்கு வருவாங்க. இது காஷ் மீர்ல மிகப்பெரிய மாற்றம் தானே...” என்றார் வித்யா.

“ஆமாம் வித்யாக்கா. ஸ்காட்லாந்தைத் தொடர்ந்து நியூஸிலாந்தும் நாப்கின், டாம்பூன் மாதிரியான பீரியட்ஸ் பொருள்களை இலவசமா தரப் போகுது. இந்தப் பொருள்களை வாங்க வசதியில்லாததால பள்ளி, கல்லூரி மாணவிகள் லீவ் எடுத்துட்டு வீட்லயே இருக் காங்களாம். அதனால 95,000 மாணவிகளுக்கு பீரியட்ஸ் பொருள்களை இலவசமா தருவதா பிரதமர் ஜெஸிண்டா ஆடர்ன் அறிவிச்சிருக்காங்க!”

“ஜெஸிண்டா தொடர்ச் சியா கலக்கிட்டிருக்காங்க. பிரிட்டன்ல படிக்குற ஆப்பிரிக்கக் குழந்தைகளின் ஹேர் ஸ்டைலை மாணவர் களும் ஆசிரியர்களும் கிண்டல் செய்யறாங்க. பள்ளி நிர்வாகம் குழந்தைகளின் ஹேர்ஸ்டைலை மாத்தச் சொல்லுது. இந்தச் சம்பவங்களால ஆப்பிரிக்கக் குழந்தைகளோட மன நிலை ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு. இந்த இனப் பாகுபாட்டைக் களைய `தி ஹாலோ கலெக்ட்டிவ்’ங்கிற அமைப்பை அஸரியா ஃப்ரேஸர் உட்பட சிலர் சேர்ந்து ஆரம்பிச்சிருக் காங்க. இந்த அமைப்பு தங்களின் பிரத்யேக ஹேர்ஸ்டைலை மாத்தவோ கிண்டல் செய்யவோ கூடாதுன்னு சொல்லுது. குழந்தைகளோட மனநிலையை ஆரோக்கியமா வெச்சுக்க கவுன்சிலிங்கும் கொடுக்குது. `எங்க முடி அமைப்புக்கும் எங்க கலாசாரத்துக்கும் ஏத்த மாதிரிதான் நாங்க ஹேர் ஸ்டைல் பண்ணிக்க முடியும். அதை யாரும் தவறுன்னு சொல்ல முடியாது. இது அடிப்படை நாகரிகம். எங்க அமைப்பு மூலமா அவங்க சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கிட்டு வர்றோம்’னு சொல்றாங்க அஸரியா” என்ற விமல், உள்ளே சென்று இஞ்சி டீ போட்டுக் கொண்டு வந்தாள்.

“ஆஹா... லெமன் ஜூஸால கரகரப்பான தொண்டையை, இந்த இஞ்சி டீயால சரி பண்ணிடலாம்னு நினைக்கிற உன்னை எப்படிப் பாராட்டுறது விமல்...” என்று சிரித்தாள் வினு.

“உலகின் மிக முக்கியமான டென்னிஸ் பிளேயர் செரீனா வில்லியம்ஸ். 23 கிரான்ட்ஸ்லாம் ஒன்றையர் பட்டங்களை வாங்கினவங்க. முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான டென்னிஸ் பிளேயர் இயான் டிரியக், `செரீனா 15 வருஷங்களுக்கு முன்னால இருந்த மாதிரி எடையும் இல்ல, வேகமும் இல்லை. நாகரிகமா அவங்களே ஓய்வு எடுத்துக்கிட்டா நல்லது’ன்னு சொல்லியிருக்கார். இதை செரீனாவின் கணவரும் ரசிகர்களும் வன்மையா கண்டிச்சிருக்காங்க” என்றார் வித்யா.

``இப்படித்தான் வித்யாக்கா... கருத்து சொல்றேன்னு கருக் கருவாளோட திரியற ஆசாமிகளுக்கு அடுத்தவங்கள பத்தி கருத்து சொல்றதுனா அவங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி. உத்தரப்பிரதேசத்துல நடந்த பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்ணைப் பத்தி கேள்விப்பட்டீங்களா... மகளிர் ஆணையத்தில் பொறுப்பி லிருக்கும் சந்திரமுகி தேவி, `ராத்திரி அந்தப் பெண் தனியா போயிருக்கக் கூடாது. அப்படிப் போனதால்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கு’ன்னு சொல்லியிருக்காங்க. நம்ம நாட்ல ஆட்சியாளர்களும் சரி, மகளிர் ஆணையத் தின் உறுப்பினர்களும் சரி... ரொம்பப் பிற்போக்கான கருத்துகளை அடிக்கடி சொல்றாங்க. பாதிக்கப்பட்ட வங்களுக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு, இனிமேல் இப்படி ஒரு குற்றம் நடக்காத மாதிரி நடவடிக்கை எடுத்தா நல்லது. சரி... என்ன வெப் சீரிஸ் பார்க்கலாம், சொல்லுங்க'' என்றாள் வினு.

வினு விமல் வித்யா: சரித்திரத்தில் இடம்பெற்ற சாதனைப் பயணம்!

“Unpaused வெப் சீரிஸ் பாருங்க ரெண்டு பேரும். அமேஸான் பிரைம்ல இருக்கு. இது ஆந்தாலஜி. ஐந்து கதைகளை வேற வேற டைரக்டர்கள் இயக்கியிருக்காங்க. கொரோனா காலத்துல நடக்கும் கதைதான். விர்ச்சுவல் லவ், வேலையின்மை, தனிமை, தற்கொலை எண்ணம், நட்புனு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விஷயத்தைப் பேசுது. கொரோனா நெருக்கடியிலும் வாழறதுக்கான நம்பிக்கையை உண்டாக்குறது இந்தப் படங்களோட பெரிய ப்ளஸ். புலம்பெயர் தொழிலாளர் பிரச்னையைச் சொன்ன படத்தை இன்னும் பிரமாதமா எடுக்க முடியும்னு தோணுச்சு. ஆஸ்கர் வாங்கின ‘பாராசைட்’ கதையை அப்படியே எடுத்த மாதிரி இருந்துச்சு” என்றாள் விமல்.

“இன்னிக்கே பார்த்துடுவோம்” என்றார் வித்யா.

``விமல், வடைக்கும் டீக்கும் தேங்க்ஸ். வித்யாக்கா கிளம்பலாமா...” என்று எழுந்தாள் வினு.

வித்யாவுக்கும் வினுவுக்கும் பை சொன்னாள் விமல்.

(அரட்டை அடிப்போம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு