Published:Updated:

வீணாகும் வரிப்பணம்... விடை தெரியாத விசாரணை கமிஷன்கள்!

மு.க.ஸ்டாலினுடன் நீதிபதி அருணா ஜெகதீசன்
பிரீமியம் ஸ்டோரி
மு.க.ஸ்டாலினுடன் நீதிபதி அருணா ஜெகதீசன்

‘அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?’ என்பதை அறிவதுதான் இந்த கமிஷனின் நோக்கம்

வீணாகும் வரிப்பணம்... விடை தெரியாத விசாரணை கமிஷன்கள்!

‘அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?’ என்பதை அறிவதுதான் இந்த கமிஷனின் நோக்கம்

Published:Updated:
மு.க.ஸ்டாலினுடன் நீதிபதி அருணா ஜெகதீசன்
பிரீமியம் ஸ்டோரி
மு.க.ஸ்டாலினுடன் நீதிபதி அருணா ஜெகதீசன்

ஒரு விஷயத்தை இழுத்து மூட வேண்டுமென்றால், ‘கல்லைப் போடு அல்லது கமிஷனைப் போடு’ என்று அரசு வட்டாரங்களில் காமெடியாகச் சொல்வார்கள். ஆளுங்கட்சிக்குப் பெரிதாக ஒரு விவகாரத்தில் சிக்கல் வந்தால், உடனே அவர்கள் செய்வது கமிஷன் அமைப்பதுதான். ஆனால், ‘அந்த கமிஷன்கள் என்ன செய்கின்றன, தங்கள் விசாரணையை முடித்தனவா, அறிக்கை கொடுத்தனவா, அதன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டனவா’ என எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காது. மக்களின் மறதி, ஆள்வோருக்கு வசதியாகப் போய்விடுகிறது. இன்னொரு பக்கம் அந்த கமிஷனில் இருப்பவர்களுக்கான சம்பளம், படிகள், வாடகை, வழக்கறிஞர்கள் கட்டணம், இதர செலவுகள் எனக் கோடிக்கணக்கில் பணம் தண்ணீராக இறைக்கப்படுகிறது. தமிழகத்திலும் கடந்த ஆட்சிக்காலங்களில் பல்வேறு கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அவை என்னவாகின? முக்கியமான கமிஷன்களை மட்டும் இங்கு பார்ப்போம்!

வீணாகும் வரிப்பணம்... விடை தெரியாத விசாரணை கமிஷன்கள்!

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அதை விசாரிப்பதற்காக 25.09.2017 அன்று ஆரம்பிக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன். ‘அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?’ என்பதை அறிவதுதான் இந்த கமிஷனின் நோக்கம். இதற்கு இதுவரை ஆன செலவு 2.62 கோடி ரூபாய். ஆணையத்தின் விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நின்றுபோயிருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்பை வகித்த ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் என்று பெரிய பட்டியலே ஆணையத்தால் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் குறுக்கிட்டதால், நீதிமன்றத் தடையை விலக்க அப்போதைய அ.தி.மு.க அரசும் உரிய முயற்சியை எடுக்கவில்லை. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம்’ என்று தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் தொடர்பாக நிலுவையிலிருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

வீணாகும் வரிப்பணம்... விடை தெரியாத விசாரணை கமிஷன்கள்!

நீதிபதி ராஜேஸ்வரன் கமிஷன்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி 2017-ம் ஆண்டு, ஜனவரி மாதம் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பல இடங்களில் காவல்துறை தடியடி நடத்தியது. இந்தத் தாக்குதலில் பொதுமக்களின் உடைமைகள் சேதப்படுத்தப் பட்டன. சென்னையில் நடுக்குப்பம் மீன் சந்தை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தக் கலவரங்களில் பொதுச் சொத்துகளுக்கும் தனிச்சொத்துகளுக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து விசாரிக்கவும், சட்டம, ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராயவும், காவல்துறை கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டதா என்பதை விசாரணை செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் 1.2.2017 அன்று விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. செயலாளர், செக்‌ஷன் ஆபீஸர், உதவியாளர் மற்றும் இரண்டு டிரைவர்கள், மூன்று அலுவலக உதவியாளர்கள் என கமிஷனுக்கு ஆட்களை நியமனம் செய்த தமிழக அரசு, முதற்கட்ட செலவுத் தொகையாக 2.06 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது.

கடந்த ஆண்டு தனது விசாரணை அறிக்கையை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நீதிபதி ராஜேஸ்வரன் ஒப்படைத்துவிட்டார். ஆனாலும், அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிடவில்லை. விழுப்புரம் எம்.பி-யான ரவிக்குமார், ‘ராஜேஸ்வரன் கமிஷனின் அறிக்கையையும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்’ என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இப்போதைய தி.மு.க அரசாவது அந்த விவரங்களை வெளியிடுமா?

வீணாகும் வரிப்பணம்... விடை தெரியாத விசாரணை கமிஷன்கள்!

நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன்

தூத்துக்குடியில் 23.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் ஆகியவை குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. முதற்கட்ட செலவுத் தொகையாக 27.75 லட்ச ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதுவரையில் சுமார் 2.75 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

கமிஷனின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை உடனே பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விசாரணை கமிஷனின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்டார். நீதிபதி அருணா ஜெகதீசன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘‘எனது இடைக்கால அறிக்கையில் மூன்று பரிந்துரைகளைச் செய்திருந்தேன். தேவையற்ற வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்; மேற்படிப்பு, வேலைவாய்ப்புக்கு இடையூறு ஏற்படாத நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தேன். அரசு ஏறத்தாழ எனது பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார். இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து விசாரணை கமிஷன் தனது இறுதி அறிக்கையை நோக்கிப் பயணிக்கிறது. நூற்றுக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்படவிருக்கிறார்கள். எனவே, விசாரணை நிலுவையில் உள்ளது.

வீணாகும் வரிப்பணம்... விடை தெரியாத விசாரணை கமிஷன்கள்!

நீதிபதி சிங்காரவேலன் கமிஷன்

தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அருகே நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் இளவரசனும், பக்கத்து கிராமமான செல்லங்கொட்டாயில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் கலப்புத் திருமணம் செய்துகொண்டார்கள். இரு தரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பெற்றோருடன் செல்ல திவ்யா மறுத்ததை அடுத்து, அவரின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். அதையடுத்து 7.11.2012 அன்று இரு சமூகங்கள் இடையே மோதல் ஏற்பட்டு, நத்தம் காலனி உள்ளிட்ட சில இடங்களில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, உடைமைகள் கொளுத்தப்பட்டன.

திவ்யாவை இளவரசன் கடத்திச் சென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, தாயுடன் செல்ல விருப்பம் தெரிவித்து, அவருடன் சென்றார் திவ்யா. அதற்கு மறுநாள் 4.7.2013 அன்று தருமபுரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இளவசரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இளவரசனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஐந்து ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டு, 2018, ஆகஸ்ட்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், ‘இளவரசன் மரணம் தற்கொலையே’ என்று விசாரணை அறிக்கையை சிங்காரவேலன் கொடுத்தார். அந்த அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்து மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். அது இதுநாள் வரை நடக்கவில்லை. இந்த விசாரணை கமிஷனுக்கு ஆன செலவுத்தொகை 2.06 கோடி ரூபாய்.

வீணாகும் வரிப்பணம்... விடை தெரியாத விசாரணை கமிஷன்கள்!

நீதிபதி ரகுபதி கமிஷன்

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து, நீதிபதி ரகுபதி தலைமையில் 2012-ம் ஆண்டில் கமிஷன் அமைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இந்த ஆணையத்தை எதிர்த்தும், ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்துசெய்யக் கோரியும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டு ரகுபதி ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மூன்று ஆண்டுகள் செயல்படாமல் இருந்த ஆணையத்துக்குச் செய்யப்பட்ட செலவு உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதுவரை 4.11 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றம் தடை விதித்திருந்த மூன்றாண்டுக் காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘இது வீண் செலவு இல்லையா?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அந்த விசாரணை கமிஷனைக் கலைக்கச் சொல்லி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 2018, அக்டோபர் 1-ம் தேதியுடன் கமிஷன் விசாரணை நின்றுபோனது.

இவற்றில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பான கமிஷன் தவிர்த்து, மற்ற எந்த விசாரணை கமிஷனும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரவில்லை. இவற்றில் மக்கள் வரிப்பணம் எவ்வளவு வீணாகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். தெரிந்தே, இது மாதிரியான தவறுகளை ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இனியாவது ஆட்சியாளர்கள் கமிஷன்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

***

கமிஷன்கள் உருவாக்கப்பட்டது ஏன்?

கடந்த 1952-ம் ஆண்டு ‘விசாரணை கமிஷன்கள் சட்டம்’ இயற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் விசாரணை கமிஷனை நியமிக்கிறது. விசாரணை கமிஷன்களுக்குக் காலக்கெடுவும் ஆளும் அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. ‘நடந்த சம்பவத்துக்குக் காரணங்கள் என்னென்ன, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்’ என்பதை அரசுக்கு அறிக்கை வடிவில் சிபாரிசு செய்வதற்காகத்தான் இந்த கமிஷன்கள் உருவாக்கப்படுகின்றன. விசாரணைக்குப் பிறகு, இறுதி அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்போதுதான், அது பொதுமக்களுக்குத் தெரியவரும். இந்த விசாரணை கமிஷன்களை அரசின் பொதுத்துறை மேற்பார்வையிடுகிறது.

வீணாகும் வரிப்பணம்... விடை தெரியாத விசாரணை கமிஷன்கள்!

துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை!

இது விசாரணை கமிஷன் அல்ல. ஆனால், கமிஷன் மாதிரி. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார்களை கூறி, நீதிபதி கலையரசனை விசாரணை அதிகாரியாகக் கொண்டு ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. 2020, நவம்பர் மாதம் விசாரணை தொடங்கியது. மூன்று மாதங்கள்தான் கமிட்டியின் காலக்கெடு. விசாரணை தொடர்வதால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கமிட்டியின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்துவருகிறது தமிழக அரசு. ‘இது தேவையில்லாத செலவு’ என்று கல்வியாளர்கள் கருத்து சொல்லியும், முந்தைய அரசு பிடிவாதமாக கமிட்டியை அமைத்தது. சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டார். விசாரணை கமிட்டி தனது விசாரணையை முடித்து கவர்னரிடம்தான் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அவரின் ஒப்புதல் கிடைத்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். அன்றைய அரசியல் சூழலில் கவர்னர் இதற்கு ஒப்புதல் கொடுக்க மாட்டார் என்று முந்தைய ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரிந்தும் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு இதுவரை ஆன செலவு சுமார் 85 லட்சம் ரூபாய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism