Published:Updated:

Face Recognition பாசிட்டிவ் தொழில்நுட்பமா...

போராட்டங்களை ஒடுக்குவதற்கான திட்டமா?

பிரீமியம் ஸ்டோரி

எந்த ஒரு தொழில்நுட்பமும் தீக்குச்சியைப் போன்றதுதான். பயன்படுத்துவோரின் கைகளைப் பொறுத்து ஆக்கவும் பயன்படுத்தலாம்... அழிக்கவும் பயன்படுத்தலாம். ‘பல நல்ல நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்ட Face Recognition என்ற தொழில்நுட்பத்தை, தங்களுக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு’ என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

தொலைந்துபோன குழந்தைகளைக் கண்டறியவும், அடையாளம் தெரியாத உடல்கள் மற்றும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும் Face Recognition என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக, கடந்த நவம்பர் மாதம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) அறிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் சோதனை அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய டெல்லி காவல்துறையினர், ‘Face Recognition உதவியுடன் தொலைந்துபோன 3,000 குழந்தைகளைக் கண்டறிந்திருப்பதாகக் கூறியுள்ளனர். தொலைந்துபோன குழந்தைகளைக் கண்டறிவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது... இந்த இடம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. இதை வைத்து போராட்டங்களை ஒடுக்க நினைத்தால்?

கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதில் பங்கேற்கச் சென்ற பொதுமக்கள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் இயந்திரம் வழியாக அனுப்பி சோதனையிட்டனர். இது வழக்கமான நடைமுறைதான். அதன்பிறகு கேமரா மூலம் ஒவ்வொருவரின் முகத்தையும் ஸ்கேன் செய்த பிறகே நிகழ்ச்சியில் அனுமதித்திருக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களை இந்த ஸ்கேனிங் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ‘தொலைந்துபோனவர்களையும் குற்றம்புரிந்தவர்களையும் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் என்ற அறிவிப்புடன் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை, பொதுமக்கள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பயன்படுத்துவதற்கான அவசியம் என்ன?’ என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், மக்களிடையே அச்சமும் பரவியிருக்கிறது.

‘தற்போது இருக்கும் சூழலில், அரசுக்குச் சாதகமான ஒரு தொழில்நுட்பத்தை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை. டெல்லியில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது ஒரு முன்னோட்டமாகக்கூட இருக்கலாம். தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் எடுத்த நடவடிக்கைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். போராட்டம் தொடர்ந்து நடைபெற காரணமாக இருந்த ஒருசிலரை மட்டும் குறிவைத்து கைதுசெய்தது போலீஸ். இதுவே போராட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால்... எப்படியிருக்கும்? Face Recognition தொழில்நுட்பம் இருந்தால் அதைச் செய்திருப்பார்கள்.

Face Recognition
Face Recognition

ஏற்கெனவே, ஆதார் என்ற பெயரில் நாட்டில் உள்ள ஐந்து வயதுக்குமேலான அனைவரின் தகவல்களும் மத்திய அரசிடம் உள்ளன. அவற்றுடன் இந்தத் தொழில்நுட்பமும் சேர்ந்தால் அவ்வளவுதான்! அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படலாம் அல்லது வேறுவிதமான அச்சுறுத்தல்கள் கொடுக்கப்படலாம்’ - இப்படி நீளும் சந்தேகங்கள் தான் மக்களைப் பதைபதைக்கவைத்திருக்கின்றன.

Face Recognition தொழில்நுட்பம், பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படவில்லை. அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் செய்யப்பட்ட சோதனை முயற்சிகளில்கூட பல நேரம் அது தவறான தகவல்களையே காட்டியிருக்கிறது. சீனா மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அதிக மக்களின் முகங்களை தங்கள் தகவல்தளத்தில் சேர்த்திருக்கிறது. தற்போது இந்தியாவும் இந்த கோதாவில் குதித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்பது ஒருபுறமிருக்க, `இப்படிச் சேமிக்கும் தகவல்களைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பம் மத்திய அரசிடம் உள்ளதா?’ என்பதும் மிக முக்கியமான கேள்வியாக எழுகிறது. முறையான பாதுகாப்பு இல்லாததால் ஆதார் தகவல் இணையத்தில் கசிந்த கசப்பான அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொழில்நுட்பம் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டால், அது பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தை எந்த இடத்திலெல்லாம் பயன்படுத்து வோம் என்று, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட் டுள்ளது. ஆனால், இது தொடர்பான எந்தத் தனியுரிமைச் சட்டமும் இதுவரை இல்லை. இப்போது இருக்கும் இந்தியத் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66E-ன்படி, எந்த ஒரு தனிநபரையும் அவரின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பதும், அதைப் பரப்புவதும் அவரின் தனி உரிமையை மீறுவதாகக் கருதப்படும். அது தண்டனைக்குரிய குற்றம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எதன் அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது என்று தெரியவில்லை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்) தேசியச் செயலாளர்களில் ஒருவரான ச.பாலமுருகனிடம் பேசினோம். ‘‘மாற்றுக் கருத்து கொண்டவர்களின் குரல்களுக்கு செவிமடுப்பது தான் ஜனநாயகம். மாற்றுக்கருத்து கூறுபவர்களின் குரல்களை ஒடுக்குவது என்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். `அமைதியாகப் போராடுபவர் களை அரசு அச்சுறுத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. ஆனால் மத்திய அரசு, போராடுபவர்களை அச்சுறுத்துவதில் தற்போது குறியாக இருக்கிறது. தொழில்நுட்பச் சட்டப்படி தனிநபரைப் புகைப்படம் எடுப்பது தவறு என்றிருந்தாலும், தேசத்துக்கு அச்சுறுத்தல், தேசப் பாதுகாப்பு என்ற வகையில் இந்தச் செயல்பாட்டை மத்திய அரசு நியாயப்படுத்தும். ஆனால், ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் தனி உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அது நமது அடிப்படை உரிமை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் Potential Criminal ஆக பாவிக்கிறது. கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள முடியாமல், எதிர்க்கருத்துள் ளவர்களை `தேசத்துரோகி’ என முத்திரை குத்தி அவர் களை ஒடுக்கப்பார்க்கிறது. ‘தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்ற சாமுவேல் ஜான்சனின் கூற்று, தற்போது மெய்ப்பிக்கப்படுகிறது’’ என்றார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, காவல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரியான சித்தன்னனி டம் பேசினோம்.

‘‘20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பலமே டெக்னாலஜிதான். இந்த நூற்றாண்டில் செக்யூரிட்டிக்காக விரல் ரேகை, Face recogniton ஆகியவற்றைத் தான் ஸ்மார்ட் போன்களில்கூடப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இவை யெல்லாம் தனித்துவம் வாய்ந்தவை. ஒருவருடைய கைரேகை மற்றொருவரின் கைரேகையுடன் ஒத்துப்போகாது. எனவே, இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் குற்றம் புரிபவர்களை எளிதில் பிடிக்கலாம் என சீனா போன்ற நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றன.

ச.பாலமுருகன் - சித்தன்னன்
ச.பாலமுருகன் - சித்தன்னன்

இந்தியாவில் ஆர்டிகிள் 19-ன்படி, எல்லோருக்கும் தங்கள் கருத்தைக் கூற உரிமை உண்டு. அந்தக் கருத்து இந்திய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துமாறு இருக்கக் கூடாது. அப்படி இருப்பின், அதைத் தடை செய்யவும் இந்தியச் சட்டத்தின்படி அரசுக்கு அதிகாரம் உண்டு. தற்போது இந்தியாவில் நிறைய போராட்டங்கள் நடைபெறுகின் றன. அவற்றில் நியாயமான கோரிக்கைகள் பல இருந்தாலும், வெளிநாட்டுத் தூண்டுதலின்பேரில் இங்கு சில தீயசக்திகள் அவற்றை திசைதிருப்பும் வேலையையும் செய்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே, அவற்றை அரசு கட்டுப்படுத்துவதில் தவறில்லை.

போராட்டம் செய்ய வருபவர்கள், சில இடங்களில் கலகங்களை உருவாக்கி... பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கின்றனர். அவர்களில் யார் இந்த வேலையைச் செய்கின்றனர் எனத் தெரியாமல் காவல் துறையினர்‌ மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த மாதிரியான நேரங்களில் Face recognition மூலம் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள புல்லுருவிகளை எளிதாக அடையாளம் கண்டு அப்புறப்படுத்திவிடலாம். தனிநபர் சுதந்திரத்தில் தலையிடாமல், தேசத்தின் பாதுகாப்புக்கு மட்டும் இந்தத் தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்த வேண்டும்” என்றார்.

தொழில்நுட்பத்தின்மூலம் குற்றங்களைக் களைவதையும், நமது அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முயல்வதையும் நாம் மனப்பூர்வமாக வரவேற்கலாம். ஆனால், அது தொடர்பான அச்சம் மக்களுக்கு எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும், எந்தச் சூழ்நிலையிலும் அந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு அளிக்க வேண்டியதும் அரசின் கடமை. ஏனெனில், இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு!

Face Recognition பாசிட்டிவ்   தொழில்நுட்பமா...

னநாயக நாட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் தனி உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அது நமது அடிப்படை உரிமை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் Potential Criminal ஆக பாவிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு