Published:Updated:

போட்டிப் பேரணி... தலையிடும் நீதிமன்றம்... முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போராட்டம்

யார் போராட்டம் நடத்தினாலும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதே மத்திய அரசின் யுக்தியாக இருக்கிறது.

போட்டிப் பேரணி... தலையிடும் நீதிமன்றம்... முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

யார் போராட்டம் நடத்தினாலும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதே மத்திய அரசின் யுக்தியாக இருக்கிறது.

Published:Updated:
விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போராட்டம்
ஒரு கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும்போது, அவர்களுக்கு எதிரே உண்ணும் போராட்டம் நடத்தி ரகளை செய்யும் காட்சிகளை நிறைய பார்த்திருப்போம். அதே மாதிரியான எதிர்ப் போராட்டம் இது. ‘கிசான் சேனா’ என ஓர் அமைப்பு. மேற்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து 20,000 விவசாயிகளுடன் டெல்லிக்குப் பேரணியாகச் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. ‘‘மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம். இதற்காகப் பேரணியாகச் சென்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் டோமரை சந்திக்கப்போகிறோம்’’ என அறிவித்திருக்கிறார், கிசான் சேனா அமைப்பாளர் தாக்கூர் கௌரிசங்கர் சிங். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கும், இவர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் இதனால் நேரலாம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ‘டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிவரும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, ‘விவசாயிகள் பிரச்னையை விரைவில் தீர்க்காவிட்டால், இது ஒரு தேசியப் பிரச்னையாக மாறிவிடும்’ என எச்சரித்துள்ளது. ‘விவசாயிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் பேசி விவாதிக்க ஒரு சுயேச்சையான குழு அமைக்கலாமா... அதுவரை புதிய வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை நிறுத்திவைக்கலாமா?’ என அட்டர்னி ஜெனரலிடம் கேட்டிருக்கிறது. மத்திய அரசின் கருத்தைக் கேட்டுச் சொல்வதாக அவர் கூறியிருக்கிறார். ‘மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்’ என்பதில் போராடும் அமைப்புகள் தீர்மானமாக இருக்கின்றன. ‘சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது. விவசாயிகளின் அச்சம் போக்கும் வகையில் சில திருத்தங்களைச் செய்யத் தயார்’ எனப் பிடிவாதம் காட்டுகிறது மத்திய அரசு. உச்ச நீதிமன்றத்தின் யோசனையைக் கேட்டால், இரண்டு தரப்புக்குமே வெற்றி கிடைத்தது போன்ற தோற்றம் ஏற்படும். இந்த யோசனைக்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளுமா என்பதே இப்போதைய கேள்வி.

போட்டிப் பேரணி... தலையிடும் நீதிமன்றம்... முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

* ஒரு மாதம் கடந்து விவசாயிகளின் தலைநகர் முற்றுகைப் போராட்டம் தீவிரமாகியிருக்கிறது. யார் போராட்டம் நடத்தினாலும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதே மத்திய அரசின் யுக்தியாக இருக்கிறது. ‘இடைப்பட்ட காலத்தில் போராடும் குழுவுக்குள் பிளவு ஏற்படுத்தலாம். விரைவில் சோர்ந்துபோய் அவர்கள் கலைந்துவிடுவார்கள்’ என்பதே அரசின் நம்பிக்கை. போராடுகிறவர்களுக்கு ‘தேச விரோதிகள்’ அடையாளம் கொடுப்பது, அவர்களின் போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பது போன்ற செயல்களை ஆளுங்கட்சி செய்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தையும் ஆரம்பத்தில் அப்படியே கையாண்டனர். ஆனால், எதிர்க்கட்சிகளைத் தாண்டி மக்கள் மத்தியிலும் விவசாயிகளுக்கு ஆதரவு எழுந்ததை பி.ஜே.பி எதிர்பார்க்கவில்லை. டெல்லியின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும் அளவுக்குப் போராட்டம் தீவிரமாகவே, பேச்சுவார்த்தைக்கு இணங்கி வந்தது மத்திய அரசு. ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் கைகூடவில்லை.

போராடும் விவசாயிகள் பிடிவாதமாக இருப்பதாகக் குறிப்பிடும் விவசாய அமைச்சர் டோமர், வெளிப்படையான வேண்டுகோள் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ‘‘எங்களுக்கு எந்த ஈகோவும் இல்லை. திறந்த மனதுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம். எந்தச் சட்டமும் நூறு சதவிகிதம் மோசமானதாக இருக்க முடியாது. எந்தப் பிரிவு பாதிப்பு ஏற்படுத்தும் என விவசாயிகள் குறிப்பிட்டால், நாம் விவாதிக்கலாம்’’ என்கிறார் அவர். போராட்டத்துக்குத் தொடர்பில்லாத விவசாய அமைப்புகளுடன் பிரதமர் மோடி இன்னொரு பக்கம் காணொலியில் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம், போராடும் விவசாயிகளுக்கு வேறு எங்கிருந்தும் ஆதரவு கிடைக்காதபடி பார்த்துக்கொள்வது மத்திய அரசின் நோக்கம்.

ஆனால், பி.ஜே.பி எதிர்பார்க்காத அளவுக்கு அரசியல் விளைவுகளை விவசாயிகள் போராட்டம் ஏற்படுத்திவருகிறது. ‘விவசாயிகள் போராட்டத்துக்கு சுமுக முடிவு எட்டாவிட்டால், பஞ்சாப்பில் நாம் அரசியல் செய்யவே முடியாது’ என பஞ்சாப் பி.ஜே.பி தலைவர்கள் டெல்லி வந்து வற்புறுத்துகிறார்கள். ராஜஸ்தானில் பி.ஜே.பி கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி, ‘விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலகுவோம்’ என அறிவித்திருக்கிறது. ஹரியானாவில் பி.ஜே.பி அரசு நிலைத்திருக்கக் காரணம், ஜன்நாயக் ஜனதா கட்சி. 10 எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட இந்தக் கட்சியில் பலரும், ‘விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகுவோம்’ என வெளிப்படையாகப் பேசிவருகிறார்கள். இந்தக் கட்சி விலகினால், ஹரியானா பி.ஜே.பி அரசு கவிழ்ந்துவிடும். இது போன்ற பிரச்னைகளால்தான், விவசாயிகள்மீது கடுமையான நடவடிக்கை எதையும் எடுக்க முடியாமல் மத்திய அரசு தவிக்கிறது. போலீஸ் அல்லது ராணுவத்தை வைத்து டெல்லியிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினால், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கொந்தளிப்பு ஏற்படும் என அஞ்சுகிறது.

* சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒடிசா மாநிலத்தின் அடையாளமாக இருந்தவை, காலஹண்டி, கோரபுட் போன்ற பகுதிகளில் நிகழும் பழங்குடியினர் பட்டினிச் சாவுகள்தான். இந்தியாவின் மோசமான துயரமாக அறியப்பட்ட அவை இப்போது நிகழ்வதில்லை. இன்று ஒடிசா மாநிலம், தன் தேவைக்கு அதிகமாகவே நெல்லை விளைவிக்கும் உபரி மாநிலமாக மாறிவிட்டது. நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மாநில அரசு நிர்ணயம் செய்ததும், ரேஷன் கடைகளில் அரிசி தருவதற்காக அரசே விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்ததுமே இந்த மாற்றத்துக்குக் காரணம். இந்த நடைமுறையே விவசாயிகளையும் காப்பாற்றியது. பட்டினிச் சாவுகளையும் தடுத்தது.

டோமர்
டோமர்
Manish Swarup

இந்த நடைமுறைக்கு ஆதாரமாக விளங்கும் குறைந்தபட்ச ஆதார விலை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் எனப்படும் மண்டிகளில் நேரடிக் கொள்முதல் ஆகியவற்றையே விவசாயிகள் கோருகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டத்தில் சேர்க்கச் சம்மதிக்கும் மத்திய அரசு, மண்டிகள் மூலம் கொள்முதல் செய்யும் நடைமுறை தொடருமா என்பதை உறுதிசெய்ய மறுக்கிறது. மண்டி கொள்முதல் முறையை ஒழித்து, தனியார் கொள்முதலை அறிமுகம் செய்த பீகாரில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுக்க அப்படி ஆகிவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் கவலை.

* நவம்பரில் தொடங்கி நடுக்கும் குளிர் டெல்லியை வாட்ட ஆரம்பித்துவிடும். இந்தக் குளிரையும், வீதிகளில் அமர்ந்து போராட நேர்ந்திருக்கும் சூழலையும் தாங்க முடியாமல் இதுவரை 25 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களை அடக்கம் செய்யும் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வோர் இறுதி அஞ்சலி நிகழ்வும் பெரும் கோபத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

* ஒரு மாத காலம்வரை அமைதியாகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நீறுபூத்த நெருப்புபோல எதிர்ப்புணர்வைக் கிளர்ந்தெழச் செய்திருக்கிறது. இந்த எதிர்ப்புணர்வு அதிகரிக்கும்போது, ஜனநாயக அமைப்புமீதான நம்பிக்கையின்மை வளரக்கூடும். இது தவறான வழிகளில் வெளிப்பட்டால், அது தேசத்துக்கே பெரும் ஆபத்தாக முடியலாம். ஜனநாயகப் போராட்டங்களில் நம்பிக்கைவைத்து வீதிக்கு வந்தவர்களை, அதே நம்பிக்கையுடன் அரசு அணுகி, தீர்வு காண்பதே சரியாக இருக்க முடியும்.