Published:Updated:

தவறான ஆசிரியர்கள்... பலியாகும் மாணவிகள்... தீர்வு... நம்மிடம்தான்!

பலியாகும் மாணவிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பலியாகும் மாணவிகள்

யாராவது அநாகரிகமாகத் தொட முயன்றாலோ, தொட் டாலோ 1091, 1098, 14417 ஆகிய எண்களில் ஏதாவது ஒன்றை தொடர்பு கொண்டு பேச பதின்பருவப் பெண் களுக்குக் கற்றுத்தரப் பட்டிருக்க வேண்டும்.

சென்னை, கோவை, கரூர் என ஆசிரியர்களால் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதும், உச்சபட்ச துயரமாக அது தற்கொலை வரை சென்றதும் என அடுத்தடுத்து நாம் கடக்க நேர்ந்த செய்திகள் தமிழகத்தையே அதிரவைத்தன. பாலியல் குற்றம் எந்தளவுக்குப் பள்ளிகளிலும் வியாபித்திருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை அப்பட்டமாக வெளிப் பட்டிருக்கிறது. குறிப்பாக கோவை, கரூர் சிறுமிகளின் தற்கொலைகள் அரசு, காவல்துறை, பெற்றோர் என எல்லா தரப் பிலும் ஓர் அதிர்வை எழுப்பியிருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு அரணாகும் செயல்பாடாக அந்த அதிர்வை மடை மாற்ற, நாம் செய்ய வேண்டியது என்ன? பள்ளிக்கல்வித்துறை, காவல்துறையின் திட்டங்கள் என்ன? பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் என்ன? உளவியல் ரீதியாக இதை அணுகுவது எப்படி? விரிவாகப் பேசுவோம்.

தவறான ஆசிரியர்கள்... பலியாகும் மாணவிகள்... தீர்வு... நம்மிடம்தான்!

பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைக்கவிருக்கிறோம்! - அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

``அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா அமைப்பது, பள்ளி வளாகத்தில் பாலியல் குற்றங்களைத் தடுக்க உதவும். இது பெரிய புராஜெக்ட். என்றாலும் எம்.பி., எம்.எல்.ஏ. நிதியிலிருந்து இதற்கான நிதியை ஒதுக்கி அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக ஆலோசித்துக் கொண்டிருக் கிறோம். முதற்கட்டமாகப் பெண்கள் பள்ளி களில் இருந்து இது தொடங்கப்பெறலாம். அதேபோல, பணியிடங்களில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா குழு போன்ற அமைப்பு, பள்ளிகளிலும் ஏற்கெனவே இருக்கிறது. அதை வலுப்படுத்தி முழுவீச்சில் செயலுக்குக் கொண்டுவர, அக்குழுவினருக்குத் தேவையான பயிற்சி அளிக்கும் திட்டமும் இருக்கிறது.

தவறான ஆசிரியர்கள்... பலியாகும் மாணவிகள்... தீர்வு... நம்மிடம்தான்!

பள்ளிகளில், தங்கள் பிரச்னைகளைக் குழந்தைகள் பகிர்ந்துகொள்ளக்கூடிய கவுன்சலிங் செல்லாகவும் இக்குழு செயல்பட்டு உளவியல் ரீதியாக அவர்களை அணுகி வழிகாட்டும்.

தற்போது, மாணவர்களின் ஆரோக்கி யத்தைக் கண்காணிக்க அரசுப் பள்ளிகளில் மருத்துவர்கள் நேரம் உண்டு. கண் பார்வை, பற்களில் ஏற்படுகிற பிரச்னைகள் போன்ற அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யும் அந்த மருத்துவர்களுக்கு, மாணவர் களுக்குப் பாலியல் தொல்லை தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வது குறித்தும் பயிற்சி வழங்கப்படும். அதைவிட முக்கியமாக, எது பாலியல் தொல்லை என்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் வேலைபார்க்கிற அனைவருக்கும் ஏற்படுத்தும் பணிகளும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட உள்ளன.

பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் எவை யெல்லாம் பாலியல் கொடுமை, அவற்றைச் செய்தவர்கள்மீது எப்படி, எந்த எண்களில் புகார் கொடுக்கலாம், சட்டப்படி அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதை யெல்லாம், அடுத்த கல்வியாண்டிலிருந்து ஒரு பாடமாக வைக்க அரசு தீர்மானித்துள்ளது. இது மாணவ, மாணவிகளிடம் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்று எதிர் பார்க்கிறோம்.’’

தவறான ஆசிரியர்கள்... பலியாகும் மாணவிகள்... தீர்வு... நம்மிடம்தான்!

பெற்றோர்களும் பிள்ளைகளும் புகார் எண்களை குறித்துக்கொள்ளுங்கள்! - வன்னியப்பெருமாள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ADGP

‘`யாராவது அநாகரிகமாகத் தொட முயன்றாலோ, தொட் டாலோ 1091, 1098, 14417 ஆகிய எண்களில் ஏதாவது ஒன்றை தொடர்பு கொண்டு பேச பதின்பருவப் பெண் களுக்குக் கற்றுத்தரப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் தோழிக்கு அது நிகழ்ந்தாலும் அவர்கள் இந்த முன்னெடுப்பைச் செய்யலாம் என, பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டை மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும். தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். ‘நம்மளையும் விசாரிப்பாங் களோ’ என்ற தயக்கம், அச்சம் அவர்களுக்குத் துளியும் தேவையற்றது என்ற தைரியத் தையும் அவர்களுக்குள் ஆழ ஊன்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, 18 வயதுக்கு உட்பட்ட பெண் சட்டப்படி சிறுமி. காதல், ஹார்மோன் விளையாட்டு என அவருக்கு நேர்ந்த பாலியல் நடவடிக்கை யில் அவரது விருப்பமும் இருந்தாலும்கூட, அதைச் செய்தவர்தான் குற்றவாளி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங் களுக்கான ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உட்பட்டவர். சம்பந்தப்பட்ட குழந்தை இதில் குற்றவாளி அல்ல, அது பாதிக்கப்பட்ட குழந்தையே என்பதை பெற்றோர், சமூகம், பள்ளி என்று அனைத்துத் தரப்பும் புரிந்துகொள்ள வேண்டும். அரசு, சட்டம், காவல்துறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கைகோத்தால் பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் சிறுமிகளுக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைக் கட்டுப்படுத்தலாம்.’’

தவறான ஆசிரியர்கள்... பலியாகும் மாணவிகள்... தீர்வு... நம்மிடம்தான்!

இந்தக் குழந்தைகளைத்தான் டார்கெட் செய்கிறார்கள்! -
சித்ரா அரவிந்த், உளவியல் ஆலோசகர்

‘`டீன்ஏஜில் குழந்தைகளுக்குப் பொதுவாகத் தன்னம்பிக்கை இருக்காது. குழப்பான மனநிலையில், பெற்றோரிடம் சற்று இடைவெளியுடன் இருப்பார்கள். சமூக வலைதளங்கள், ஆண் நண்பர்கள், காதல், வெளியில் செல்வது என, தன் வீடு எவற்றையெல் லாம் கலாசாரக் குற்றம் என்று வரையறுத்திருக்குமோ அவற்றில் எல்லாம் ஆர்வமாக இருப்பார்கள். அப்படி வீட்டுக்குத் தெரியாமல் சில விஷயங்களைச் செய்யும் குழந்தைகளை, தங்கள் இலக்காக பாலியல் குற்றவாளிகள் ஆக்கிக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் குழந்தை ஏதாவது போஸ்ட் போட்டிருக்கிறது என்றால், ‘உங்க வீட்டுல சொல்லட்டுமா?’ என்ற மிரட்ட லுடன் ஓர் ஆசிரியர் அந்தக் குழந்தையை மிரட்டி, தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்ளலாம். மேலும், அன்புக்கு ஏங்கும் குழந்தைகள், வெகுளித் தனம், தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மை, மூளைத்திறன் குறைவு, படிப்பில் பின்தங்குவது, தன் தோழி களுக்கு இருப்பதைப்போல தனக்கு பாய் ஃபிரெண்ட் இல்லையே என்ற Peer pressure-ல் இருப்பவர்கள் என இவர்கள் எல்லாம் தவறான நோக்கம் கொண்ட ஆசிரியர்களின் டார்கெட் ஆகலாம்.

டார்கெட் செய்வதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று, நேரடியாக அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது. இது பெரும்பாலும் பரிச்சயமில்லாத நபர்களால் நடப்பது. இரண்டாவது Child sexual groomig. குழந்தையிடம் காதலிப்பதாகவோ, பாதுகாவலனாக இருப்பதாகவோ நம்பிக்கை வார்த்தை களைப் பேசுவது. சிலர் ஒருபடி மேலே போய் குழந்தையின் பெற்றோரிடமும் நன்மதிப்பைப் பெறுவார்கள். அதற்குப் பிறகு அந்தக் குழந்தையிடம் எப்படி நடந்துகொண்டாலும், பாலியல் செயல் களில் ஈடுபட்டாலும் அந்தக் குழந்தை அதைத் தவறு என்று உணராது; அன்பு என்று குழப்பிக்கொள்ளும். இந்த இடத்தில் குட் டச், பேட் டச் எல்லாம் எடுபடாது. Grooming செய்வதுதான் பெரும்பாலும் நடக்கும். குழந்தைக்கு மிகவும் பரிச்சயமான, குழந்தையிடம் அதிகாரம் செலுத்தக்கூடியவராக இருக்கும் தினமும் சந்திக்கக்கூடிய நபர், ஆசிரியர், பயிற்சியாளர் போன்றவர்கள் இதைச் செய்யலாம். கோவை சம்பவத் தில், தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நடந்ததும் இதுவே. காதலிப்ப தாக ஆசிரியர் வலையில் விழவைத்தது.

கற்பு, ஒழுக்கம் போன்ற கற்பிதங்களால் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். பதின் வயதில், இளம் வயதில் காதலிப்பது, சமூக வலைதளத்தில் வீடியோ போடுவது, தேர்வில் தோற்பதெல்லாம் குற்றமில்லை; அதைவைத்து ஆசிரியர் மிரட்டினால் அவருக்கு பயப்படத் தேவையில்லை; பர்சனல் வீடியோ, மார்ஃபிங் என்று மிரட்டலுக்கு ஆளானால் உடலைப் புனிதப்படுத்தி மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை. இவற்றையெல்லாம் முதலில் பெற்றோர் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் யாருக்கும் டார்கெட் ஆகிவிடக்கூடிய அழுத்தத்தை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. இதே புரிந்துணர்வுடன் இந்தப் பிரச்னையை, பிரச்னையுடன் வரும் குழந்தைகளை அணுகும், ஆலோசனை தரும், வழிகாட்டும் உளவியல் நிபுணர்களை பள்ளிகளிலும் அமர்த்த வேண்டும்.’’

தவறான ஆசிரியர்கள்... பலியாகும் மாணவிகள்... தீர்வு... நம்மிடம்தான்!

குழந்தைகளுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளைப் பெற்றோர் கண்டறிய வேண்டும்! - ஆனந்தி ரகுபதி, பேரன்டிங் ஆலோசகர்

‘`இந்தியப் பெற்றோர் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பதாக நினைத்து, ஒரு விஷயத்தை ஒரு கண்ணோட் டத்தில் அணுகும், தானாக முடிவெடுக்கும் அனுமதி, வாய்ப்பு, பயிற்சியை எல்லாம் அவர்களுக்கு வழங்குவதில்லை. விளைவாக, தனக்கு ஒரு துன்புறுத்தல் நிகழும்போது தைரியமாகக் குரல் உயர்த்த வேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் படுவதுமில்லை, அவர்களால் அதைச் செய்ய முடிவதுமில்லை.

குறிப்பாக, நம் பிள்ளைகளின் நடத்தைப் பற்றி யாரும் குறையோ குற்றமோ சொல்லிவிடக் கூடாது என்ற உணர்விலேயே அவர்களுக்கு ரூல்ஸ் மேல் ரூல்ஸ் போட்டு வளர்க்கிறோம். பெற்றோர், நண்பர்கள் போல பழகும், அவர்களுக்குப் பகிர்தலுக்கான வெளி அளிக் கும், அவர்களை அச்சுறுத்தாமல் ஆலோசனை கொடுக்கும் இணக்கமான சூழல் பெரும் பாலான வீடுகளில் இல்லை. இது முதலில் மாற வேண்டும்.

எந்த விஷயம் நடந்தாலும் அதை அப்பா, அம்மாவிடம் பேசுவதற்கு, சொல்வதற்குக் குழந்தைகளை இரண்டு வயதிலிருந்தே பழக்க வேண்டும். இடையில் இந்தப் பழக்கத்தைக் கொண்டுவர நினைத்தால் அது சாத்தியப் படாது. பெற்றோரும் குழந்தைகளும் ஒரே அலைவரிசையில் பழகும்போது, அதில் சின்ன வேறுபாடு இருந்தாலும் தன் குழந்தைக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை எளிதாகப் பெற்றோரால் கண்டறிந்துவிட முடியும். இல்லையென்றால் குழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் சுயத்தை மறைத்து வேஷமிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த வேஷம் எல்லா விஷயங்களிலும் பிரதிபலிக்கும். பாலியல் தொந்தரவுகள் நடந்தாலும்கூட அதை பெற் றோரிடமிருந்து மறைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்களே தவிர சொல்ல மாட்டார்கள். பிள்ளைகள் கண்ணைப் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பது, உடல் நடுக்கம் அல்லது பதற்றம், தெளிவான மனநிலையில் இல்லாதது போன்ற அறிகுறிகளை வைத்தும் அவர்கள் பிரச் னையைக் கண்டறியலாம்.

பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளை பெற்றோர் எப்படி அணுக வேண்டும்?

கோவையில் நடந்த சம்பவத்தில் தற்கொலை செய்துகொண்ட அந்த மாணவி முதலில் தன் நண்பனிடம் நடந்ததைச் சொல்லி அழுகிறாள், ஆசிரியரின் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி அழுகிறாள், பள்ளி முதல்வரிடம் அழுகையுடன் முறையிடுகிறாள், ஆனால் பெற்றோரிடம் எதையுமே பகிரவில்லை. அந்தளவுக்குக் குடும்ப அமைப்புகள் கலாசாரம் என்ற பெயரில் பெண் குழந்தைகளை மட்டுமல்ல, பெண்களையும் அச்சுறுத்துவதாக உள்ளன. இதைத்தான் முதலில் தகர்த்தெறிய வேண்டும்.

பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தையை குடும்பத்தின் அவமானச் சின்ன மாகப் பார்ப்பது, வெளியே தெரிந்துவிட்டால் பிரச்னையாகிவிடும் என அதீத பாதுகாப்பு உணர்வோடு செயல்படுவது அல்லது பெரியவர்களுக்குத் தெரியும் அனைத்து விஷயங்களையும் குழந்தைகளிடம் ஒளிவுமறைவின்றி பேசுவது என இப்படி எந்த எல்லைக்கும் செல்லக் கூடாது. அடிபட்டு ஒரு காலில் காயமாகிவிட்டால் அந்தக் காலை நாம் வெறுத்துவிடுவதில்லை. அதற்குத் தகுந்த சிகிச்சையளித்துப் பராமரித்து மீண்டும் இயல்பாக நடக்கத் தொடங்குவோம். இதை முதலில் பெற்றோர் புரிந்துகொண்டு, அதேபோல ஏதோ ஒரு சூழ்நிலையில் குழந்தை பாலியல் தொந்தரவுக்கோ, துன்புறுத்தலுக்கோ உள்ளாக நேரிட்டால் அதிலிருந்து உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

தவறான ஆசிரியர்கள்... பலியாகும் மாணவிகள்... தீர்வு... நம்மிடம்தான்!

பாதிக்கப்பட்ட மாணவிகளை எப்படி மீட்டுக் கொண்டுவர வேண்டும்?

பாலில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு, ‘உனக்கு நடந்தது ஒரு விபத்து. அப்படி நடந்ததில் உன் மீது எந்தத் தவறும் இல்லை. அதனால என்ன இப்போ... அதை மறந்துட்டு எப்பவும் போல உன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பி’ என்று தன் குடும்பம் தன்னை அரவணைத்து ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கும்பட்சத்தில், நாம் இழந்த குழந்தைகள் தற்கொலை முடிவை யோசித்திருக்கவே மாட்டார்கள்.மேலும், காலம்காலமாகத் திரைப்படம், சீரியல், தொலைக்காட்சி என அனைத்திலும் பாலியல் துன்புறுத்தல் நடந்துவிட்டால் கற்பு பறி போய்விட்டது என்பதுபோல காட்டப்படுகிறது. மாறாக, மற்ற விபத்துகளைப் போல அதுவும் கடந்து வரக்கூடிய ஒரு விபத்து என்று ஊடகம் மூலம் இளம் பெண்களுக்கு விழிப்புணர் வூட்டும் சமூகப் பொறுப்புணர்வு படைப் பாளர்களுக்கு வர வேண்டும்.

நடந்த தற்கொலைகளில், பள்ளிக்கு அது ஒரு குற்ற சம்பவம், காவல்துறைக்கு அது ஒரு வழக்கு, சமூகத்துக்கு அது ஒரு அதிர்ச்சி செய்தி. ஆனால் சம்பந்தப்பட்ட பெற்றோருக்குத்தான் அது ஈடுசெய்ய முடியாத இழப்பு. எனவே, அவர் களுக்குத்தான் இதுபோன்ற உயிரிழப்பு களைத் தடுப்பதில் பொறுப்பும், பங்கும் மிக அதிகம் உள்ளது. அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது... ஒருவேளை நாம் பாலியல் கொடுமைக்கு ஆளானாலும் நம் வீடு நம்மை அதே அன்போடு ஏற்றுக்கொள்ளும், புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கையை, அரவணைப்பை குழந்தைகள் மனதில் விதைத்து வைப்பது!”

******

தவறான ஆசிரியர்கள்... பலியாகும் மாணவிகள்... தீர்வு... நம்மிடம்தான்!

மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், குட் டச், பேட் டச் மற்றும் பள்ளிகளில் பாலியல் கல்வி உள்ளிட்ட ஆலோசனைகளில் சில திருத்தங்களைக் குறிப்பிடுகிறார்.

குட் டச், பேட் டச் அல்ல... டோன்ட் டச்!

``குழந்தைகளுக்கு மிகவும் தெரிந்தவர்களே பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர் என்பது ஆய்வறிக்கை மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யாராக வேண்டு மானாலும் இருக்கலாம். பெற்றோர் குழந்தைகளிடம், தெரியாதவர்கள் அழைத்தால் செல்லக் கூடாது, இந்தந்த இடங்களில் தொடும் ‘குட் டச்’சை அனுமதிக்கலாம், பாலுறுப்பு களில் தொடும் ‘பேட் டச்’சை அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டுமே சொல்லிக்கொடுக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. குழந்தைக்குப் பரிச்சயமானவர்கள் தவறான கண்ணோட்டத்தில் குழந்தையை அணுகும்போது ஆரம்பத்திலேயே ‘பேட் டச்’ செய்யமாட்டார்கள். ‘குட் டச்’லிருந்தே ‘பேட் டச்’ உருவாகிறது. அதனால் ‘டோன்ட் டச்’ என்றுதான் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அநாவசியமாக ஒருவரை உடலின் எந்த பாகத்தையும் தொட அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளில் பாலியல் கல்வி... அதற்கு முன்!

ஒரு முன்னேறிய சமுதாயத்தில்தான் பாலியல் கல்வியை உணர்வுமயமான கருத்தாக இல்லாமல், அறிவியல் கூற்றாக சொல்லிக்கொடுக்க முடியும். நம் சமுதாயம் அப்படிப்பட்டதல்ல. பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாகவே வீட்டில், பெண் பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வேற்றுமையை உருவாக்கிவிடுகிறார்கள். வீட்டில் தொடங்காத பாலியல் கல்வியை திடீரென்று வகுப்பில் கற்றுக்கொடுக்கும்போது அதை புரிந்துகொள்ளும் பக்குவம் மாணவர்களுக்கு இருக்காது. புதிதாக வகுப்பில் பாலியல் கல்வி கற்றுக்கொடுத்தால் பதற்றத்தையும், அருவருப்பை யும் உண்டாக்கலாம். எனவே, பாலியல் கல்வியை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். குழந்தைகள் பெற்றோரிடம் பாலியல் கல்வியைக் கற்றுக் கொள்ளும் சூழல் இருக்க வேண்டும்.’’

- ரேகா ஸ்ரீ.ஜே.பி