Published:Updated:

பெண்களின் திருமண வயது 21... சட்டமும் சமூகமும்... ஓர் அலசல்!

பெண்களின் திருமண வயது 21
பிரீமியம் ஸ்டோரி
பெண்களின் திருமண வயது 21

திருமண வயதை 21 வயது வரை நீட்டிக்கும் போது மகள்கள் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமும் நீட்டிக்கப்படுகிறது

பெண்களின் திருமண வயது 21... சட்டமும் சமூகமும்... ஓர் அலசல்!

திருமண வயதை 21 வயது வரை நீட்டிக்கும் போது மகள்கள் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமும் நீட்டிக்கப்படுகிறது

Published:Updated:
பெண்களின் திருமண வயது 21
பிரீமியம் ஸ்டோரி
பெண்களின் திருமண வயது 21

இந்தியாவில் 18 ஆக இருந்து வந்த பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த, நிதி ஆயோக் சார்பில் அமைக்கப்பட்ட குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதையடுத்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. தொடர்ந்து, ‘குழந்தைத் திருமண தடுப்பு மசோதா 2021’-ஐ டிசம்பர் 21-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்திருக்கிறார்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா குறித்து, ‘இதனால் நகர்ப்புறப் பெண்களைப்போலவே கிராமப்புறப் பெண்களின் கல்வியும் பொருளாதாரமும் பலப்படும்; மகப்பேறுக்கு பொருத்தமான வயது’ என்று ஒரு தரப்பினர் வரவேற்க, ‘இது பொது சிவில் சட்டமாக அமல்படுத்தப்படும்; காதல் திருமணங்களுக்குத் தடையாகும்’ என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் மற்றொரு தரப்பினர். பெண்ணின் திருமண வயது உயர்த்தப்பட்டதன் பின்னணி முதல் இதன் மீதான துறைசார் நிபுணர்களின் கருத்துகள் வரை விரிவாக அலசுவோம்.

பெண்களின் திருமண வயது 21... சட்டமும் சமூகமும்... ஓர் அலசல்!

பிரதமரின் சுதந்திர தின உரை!

2020-ம் வருட சுதந்திர தினவிழாவின் போது பிரதமர் மோடி, ‘ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பெண்கள் சரியான வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதனால், பெண்களின் திருமண வயது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது’ என்று அறிவித்ததோடு, ஜெயா ஜெட்லி தலைமையில் இதுபற்றி ஆராய குழு ஒன்றையும் அமைத்தார். இந்தக் குழு, குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், இளவயது கர்ப்பங்கள், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு, அதைத் தொடர்ந்து பிரசவ தாய் - சேய் மரணங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும், பெண்களுக்கு இளவயது திருமணத்தால் கல்வியும் வேலைவாய்ப்பும் தடைப்படாமல் இருக்கவும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத் திடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் இருந்தது. இதையடுத்து, பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆய்வுக்குழுவில் எத்தனை பேர் பெண்கள்?!

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்றக் குழுவில், ஒரே ஒரு பெண் எம்.பி மட்டுமே இடம்பெற்றது, அனைத்து தரப்பையும் அதிர்ச்சியுறச் செய்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் என்ற பெண் எம்.பி-யைத் தவிர, அக்குழுவில் மற்ற 30 எம்.பி-க்களும் ஆண்கள். “நாடாளு மன்றத்தில் 110 பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், பெண்களின் திருமண வயது தொடர்பான மத்திய அரசின் முக்கிய ஆய்வுக்குழுவில் ஒரேயொரு பெண் மட்டுமே உள்ளார். பெண்களுக்கான உரிமைகளைத் தொடர்ந்து ஆண்களே தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே தொடர்கிறார்கள்’’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், ‘`எதற்கு ஒரேயொரு பெண் உறுப்பினர்; அவரையும் நீக்கிவிட்டால் ஆண்களே பெண்களின் வாழ்வு பற்றி முடிவு செய்துவிடலாம்’’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும், இன்னும் பல ஆளுமைகளும் தங்களின் கண்டனங் களைப் பதிவு செய்தனர்.

குழந்தைப்பேறுக்கு இது சரியான வயதுதான்!

சென்னையின் மூத்த மகப்பேறு மருத்துவர் ஜெய கஜராஜ், “நம் நாட்டைப் பொறுத்தவரை, திருமணம் முடிந்தவுடன் குழந்தைப்பேறு என்று எதிர்பார்ப்பதால், பெண்களின் திருமண வயதை 21 என்று உயர்த்துவது மருத்துவரீதியில் நல்லது. 20 வயதுக்கு முன்னர் திருமணமாகி கருத்தரித்தால், தாய்க்கும் சேய்க்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையில் ஆரம்பித்து உயிர் ஆபத்து வரைக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்’’ என்கிறார்.

பெண்களின் திருமண வயது 21... சட்டமும் சமூகமும்... ஓர் அலசல்!

காதல் திருமணங்களுக்கு சட்ட கடிவாளம்!

வழக்கறிஞர் சாந்தகுமாரி, ‘`இந்தியாவில் காதல் திருமணங்களுக்கான எதிர்ப்பு இன்று வரை தொடர்கதை. சுயசாதி திருமணங் களையே தூக்கிப்பிடிக்கும் மக்கள், குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காக ஆணவக் கொலைவரை துணிகிற மனப் பான்மையைப் பார்க்கிறோம். இந்த நிலையில், திருமண வயதை 21 வயது வரை நீட்டிக்கும் போது மகள்கள் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமும் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த மசோதா சட்டமானால் அது காதல் திருமணங்களுக்கான கடிவாளமாகவும் அமையும் என்பதே உண்மை.

21 வயதில் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாடில்லாமல் இருப்பார்கள், அது தாய் - சேய் நலத்தை உறுதிப்படுத்தும் என்கிற மருத்துவ வாதத்தை ஒப்புக் கொண்டாலும், ‘எனக்கு இந்த வயதில்தான் உடலில் முழு ஊட்டச்சத்து கிடைக்கும், அப்போது தான் எனக்குக் காதல் வர வேண்டும்’ என்று ஹார்மோன்களுக்குக் கட்டளை யிட முடியாது. அதனால், குழந்தைத் திருமணங்களை தடுப்பது தொடர்பான சட்டங்களை இன்னும் பலப்படுத்த வேண்டுமே அன்றி, பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பது ஏற்புடையதல்ல. இதனால், இந்துத் திருமண சட்டம், இஸ்லாமிய திருமணச் சட்டம் என எல்லாவற்றிலும் மாற்றம் செய்ய வேண்டி வரும்” என்கிறார்

கருக்கலைப்பு ஆபத்துகள்!

சமூக சமத்துவத்துக்கான மருத்து வர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், “ஒருவேளை இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், சட்டத்துக்குப் புறம்பான கட்டப் பஞ்சாயத்துகள் வயதைக் காரணம் காட்டி காதலர்களை மிக மோசமாக நடத்த ஆரம்பிக்கும். சாதி, மதம் தாண்டி காதல் கொள்பவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை. காதல் உணர்வு 21 வயது வரை காத்திருக்காது. ஆனால், சட்டபூர்வ திருமண வயது அதிகரித்துவிட்டால், கருக்கலைப்பு பிரச்னைகள் அதிகரிக்கலாம். இது பெண் களின் உயிருக்கே ஆபத்தாகலாம்” என்று இன் னொரு முக்கிய பிரச்னையைச் சொல்கிறார்.

பெண்களின் திருமண வயது 21... சட்டமும் சமூகமும்... ஓர் அலசல்!

அவசியமில்லாத சட்டம்!

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே இந்த முடிவை அரசு எடுத்திருக்கிறது என்றால், அது அரசின் செயல்பாடுகளால் நடப்பதற் கான நடவடிக்கைகளையும், விழிப்புணர்வை யும்தான் ஏற்படுத்த வேண்டுமே அன்றி, சட்டத்தை அல்ல.

ஏழ்மை நிலைக் குடும்பங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலில் சட்டத்தை நுழைப்பது, ‘21 வயசுக்குள்ள பொண்ணுக்குக் கல்யாணம் பண்ண பார்த்தாங்க’ என்று அந்தப் பெற்றோர்களை குற்றவாளிகள் ஆக்கும். இது தனி மனித சுதந்திரத்துக்கு எதிராக அமையும்.

‘அனைத்துப் பெண்களுக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் அவசியம்’ என்கிற பெண் முன்னேற்றத்துக்கான சாத்தியத்தை சமூகத் தில் கொண்டுவரும்போது, பெண்ணின் திருமண வயது தானாகவே அதிகரித்துவிடும். பெண் கல்வியில் வளர்ந்து வரும் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு முன், 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்படும் பெண்களின் சதவிகிதம் 25 ஆக இருந்தது; தற்போது அது 23 சத விகிதமாகக் குறைந்திருக்கிறது. தற்போது இந்தியப் பெண்களின் சராசரி திருமண வயது 22.1.

பெண்கள் கல்வி கற்று வேலைக்குச் செல்வது அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் திருமண வயதும் அதிகரிக்கவே செய்யும். இதற்கு தனியாகச் சட்டம் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இது அவசிய மில்லாத சட்டம்” என்கிறார்.

மத்திய, மாநில அரசுகளும் சட்டங்களும் இந்திய மகள்களின் நிகழ்காலம், எதிர்காலம் குறித்த முடிவுகளை எல்லா தளங்களிலிருந் தும் சிந்தித்து எடுக்கட்டும்.

***

பெண்களின் திருமண வயது 21... சட்டமும் சமூகமும்... ஓர் அலசல்!

உறவில் ஈடுபடுவதற்கான வயதை யார் தீர்மானிப்பது?

செக்ஸாலஜிஸ்ட் கார்த்திக் குணசேகரன்

‘`பெண்களின் ஆரோக்கியம் என்பது அவர்களுடைய வயதைப் பொறுத்தது அல்ல. அவர் களுடைய குடும்பவாகையும் பொருளாதாரத்தையும் பொறுத்தது. குழந்தைப் பருவத்திலிருந்தே சத்தான உணவுகளைச் சாப்பிட்டு வந்த பெண் குழந்தைகள் 18 வயதிலும் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். அதேபோல், 21 வயதில்தான் பெண்கள் மன முதிர்ச்சியுடன் இருப்பார்கள் என்பதிலும் உண்மையில்லை. அது அவர்கள் வளர்கிற சூழலையும் தனி மனித இயல்பையும் பொறுத்தது. ஆணோ, பெண்ணோ அவர்கள் பருவ வயதை அடைந்தவுடனே பாலியல் ஹார்மோன்கள் முழுவீச்சில் செயல்பட ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் உடலில் மாறுதல்கள் நிகழ்வதுபோலவே மனதில் பாலியல் உணர்வுகள் எழுவதும் இயல்பான ஒன்றுதான். இந்த உணர்வு நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், திருமண வயதை சம்பந்தப்பட்ட பெண்கள் தீர்மானிப்பதே சரியாக இருக்கும்.

இந்த மசோதாவைப் பொறுத்தவரை எனக்கு மூன்று கருத்துகள் இருக்கின்றன. தனக்கான சரியான ஆணை 19 வயதில் கண்டடைந்த பெண்ணிடம், ‘நீ இருபத்தியோரு வயசுலதான் திருமணம் செஞ்சுக்கணும். அதுவரைக்கும் வெயிட் பண்ணு’ என்று சொல்வதற்கு அடுத்தவர்களுக்கு உரிமை கிடையாது. ‘மேல படிக்கணும்; பிடிச்ச வேலையை செய்யணும் அல்லது குடும்பத்துக்காக வேலைபார்க்கணும்’ என்கிற தீர்மானத்தில் இருக்கிற பெண்கள், அவர்களுடைய திருமண வயதை அவர்களே தீர்மானிக்கட்டும். மூன்றாவதுதான் மிக மிக முக்கியமான விஷயம். எண்ணிக்கையில் குறைவான பெண்களுக்கு மட்டுமே இது நிகழ்வதால் பலரும் யோசிக்காத விஷயமும்கூட. சில குடும்பங்களில் பரம்பரைத்தன்மை காரணமாகப் பெண்களுக்குச் சீக்கிரமே மெனோபாஸ் வந்துவிடும். அந்தக் குடும்பங்களில் பெண்களுக்குச் சீக்கிரமே திருமணம் செய்ய விரும்புவார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எல்லோருக்கும் பொதுவாக 21 வயது என்று சொல்வது அறிவுடைமை கிடையாது.

’’உலக நாடுகளில் என்ன நிலைமை?

ஐக்கிய நாடுகள் சபை 2011-ல் உலக நாடுகளின் ஆண், பெண் சட்டபூர்வ திருமண வயதை வெளியிட்டிருந்தது. அதில் எகிப்து, சீனா, ஃபிஜி, ஜாம்பியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே பெண்ணின் திருமண வயது 21 ஆக இருக்கிறது. கியூபா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் பெண்ணின் திருமண வயது 16 ஆக இருக்கிறது. மலேசியாவில் 16-லிருந்து 21 வரை சட்டபூர்வமான திருமண வயதாக அனுமதிக்கப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் தாய்லாந்தில் இது 17 ஆக இருக்கிறது. ஜப்பான், நேபாளம் மற்றும் மியான்மரில் 20 வயது. ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், இத்தாலி, துருக்கி, நியூசிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பெண்ணின் சட்டபூர்வமான திருமண வயது 18 தான்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

அவள் விகடன் வாசகர் மணி அய்யர், ஆசிரியர் பணிக்காகத் தேசிய விருது பெற்றவர். ‘பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும் மசோதா தொடர்பான கருத்துக்கணிப்பை, துறை சார் நிபுணர்களிடமும் நாடெங்கிலும் 16 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமும் மட்டுமே நடத்தியிருக்கிறது மத்திய அரசு. இந்தக் கருத்துக்கணிப்பை பொதுமக்களிடமும் நடத்த வேண்டும். அவள் விகடன் அதை முன்னெடுக்கலாம்’’ என்று அவள் விகடன் குழுவிடம் தெரிவித்தார் மணி.

அவள் விகடன் சமூக வலைதளப் பக்கத்தில், வாசகர்களிடம் இதுகுறித்து நாம் கருத்துகள் பகிரச் சொல்லிக் கேட்டோம். முதன் கமென்ட்டாகத் தன் கருத்தைப் பதிவு செய்திருந்த பாடலாசிரியர் தாமரையின் கமென்ட் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் பகிரப்பட்டன, தொடர்ந்து பகிரப்படுகின்றன.

இதில், ‘பெண்களின் திருமண வயதைப் பெண்களே முடிவு செய்யட்டும். சமூகமோ, அரசாங்கமோ அதில் தலையிட வேண்டாம்’ என்பதே பெரும்பான்மையினரின் கருத்தாக இருந்தது. ‘திருமண வயது உயர்ந்தால் உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயரும். அது பெண்களுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் நல்லது’ என்று சிலர் கருத்து தெரிவிக்க, வெகு சிலர் மட்டுமே ‘18 வயது ஓர் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க தகுதியான வயதென்றால், திருமணம் செய்யவும் தகுதியானதே’ என்று கருத்து தெரிவித்திருந்தார்கள்.