Published:Updated:

எது சரி, எது தவறு... புரியாத புதிரா பெண்?

புரிந்துணர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
புரிந்துணர்வு

புரிந்துணர்வு

லதா ரகுநாதன், ஓவியம்: ரவி

ரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஏதோ ஓர் ஆரம்பப் புள்ளி வேண்டும். இந்தக் கட்டுரையின் ஆரம்பப் புள்ளி ஹத்ராஸில் சில நாள்களுக்கு முன் நடந்த கொடுமை. இந்தச் சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை, சாதி வெறுப்பு என நம் சமுதாயத்தின் இரண்டு விஷங்கள் இணைந்திருக்கின்றன. மருத்துவச் சான்றிதழ் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படவில்லை என்று கூறுகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வி எழுகிறது. ஆனால், வன்கொடுமை பற்றிப் பேசுவதற்கு இந்த ஒரு சம்பவம் என்றில்லை. ஒவ்வொரு நாளும் ஏன் இதோ இதை எழுதும் இந்த நேரத்தில்கூட பல்வேறு மூலைகளில் இவ்வாறான வன்கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதி வெறுப்பு புரையோடிப்போயிருக்கிறது. அதன் கதையே தனி. இரண்டையும் முழுவதுமாக அழிக்க முடியாது. ஆனால், நம்மால் இயன்றவரை குறைக்க முற்பட முடியும். இதை நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும்போது கட்டாயம் சாத்தியப்படும்.

உங்கள் முன் நான் பார்த்த இரண்டு காட்சிகளை வைக்கிறேன்.

ஜெர்மனியில் ஒரு மாலைப்பொழுது. குளிர்காலத்தில் லேசாகத் தெரியும் சூரியனால் சற்றே பரவத்தொடங்கியிருந்த வெதுவெதுப்பு. இசார் நதி மியூனிக் நகரம் முழுவதும் அங்கே இங்கே சிதறி பரவி ஓடுகிறது. இங்குள்ளவர்களின் வழக்கம், இதுபோன்ற நாள்களில் சூரிய ஒளியைக் குடிப்பதற்காக இசார் நதிக்கரை ஓரம் ஒதுங்கிவிடுவார்கள். அன்று இதுபோல் ஒரு நதியின் மேல் அமைக்கப்பட்ட பாலத்தில் நின்று இயற்கை எழிலை ரசிக்கும்போது, கீழே நதிக்கரையின் மண் தரையில் முழு நிர்வாணமாக ஒரு பெண் கால்களை நீட்டிப் படுத்திருப்பதைப் பார்த்தேன். கண்களை நம்ப முடியாமல் தேய்த்துப் பார்த்தும் அவள் அசையாமல் அங்கேயே படுத்திருந்தாள். அன்று அங்கே கூட்டமாக மக்கள் குவிந்திருந்தார்கள். ஆனால், இதில் ஒருவர்கூட நின்று அவளை வெறிக்கப் பார்க்கவில்லை. சற்று தூரத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கூட இவளைச் சீண்டவில்லை.

எது சரி, எது தவறு... புரியாத புதிரா பெண்?

ஆனால், இங்கு பொதுவெளியில் குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் கூட வெறிக்கப் பார்க்கப் படுகிறார்கள், பெரும்பாலும் பெரியவர்களால். அன்று யூபார்ன் டிரெயினில் சென்றுகொண்டிருந்தேன். இரண்டு இரண்டாக எதிரும் புதிருமான இருக்கைகள். எதிர் இருக்கையில் 16 வயதுள்ள கல்லூரி மாணவர்கள்போல் தோற்றமளித்த பையனும் பெண்ணும் உட்கார்ந்திருந்தார்கள். கைகளில் புத்தகத்தை வைத்துக்கொண்டு சத்தமாக ஜெர்மன் மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று புத்தகத்தைப் பக்கமாகப் போட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுக்கத்தொடங்கி விட்டார்கள். அதிர்ச்சியில் இருந்து மீண்டு சுற்று முற்றும் பார்த்தேன். ஒருவர்கூட இவர்களைக் கவனிக்கவில்லை. அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு இவர்கள் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ இவற்றை இவ்வளவு சாதாரணமாகப் பொது வெளியில் பார்க்க முடியாது. ஆனால், எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இவை அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் நமக்குத் தவறாகத் தோன்றுவது அவர்களுக்கு ஏன் தோன்றவில்லை? அது சரியா அல்லது நாம் செய்வது சரியா? நாட்டின் கலாசாரமே அதை நிர்ணயிக்கிறது.

இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலை நாடுகளில் பொதுவெளியில் நடப்பதை நியாயப்படுத்தி, இங்கே அவற்றைக் காட்சிப்படுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. புரிந்துணர்வும் அதனால் ஏற்படக்கூடிய தெளிவும் எவ்வளவு தேவை என்பதுதான் நாம் பார்க்கப்போவது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களிலும் ஏன் மற்றவர்கள் அவர் ஆணோ, பெண்ணோ வெறித்துப் பார்க்கவில்லை. காரணம், முதல் உதாரணத்தில் பெண்கள் உடல் என்றால் இப்படித்தான் இருக்கும் அது இயற்கை. அதை மீறி அதில் ஒன்றும் இல்லை என்பது புரிந்துவிட்டதால். இந்தத் தெளிவை நம் நாட்டிலும் கொண்டுவந்தால் ஒரு பெண்ணை தவறாகப் பார்க்கும் பார்வை குறையக்கூடும். பல நேரங்களில், பெண்கள் தவறாக உடை அணிந்தால் பார்க்கும் ஆண்கள் தவறுதான் செய்வார்கள் எனும் நியாயமும் இங்கே முன்வைக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, இந்தக் காரணம் ஆண்களுக்குத் தாங்கள் செய்யும் தவறுகளைப் பெண்கள் மீது தள்ளிவிட ஒரு வழியாகத்தான் தெரிகிறது.

எது சரி, எது தவறு... புரியாத புதிரா பெண்?

ஆகவே, நம் கலாசாரத்தில் பெண்கள் என்றுமே புரியாத புதிராகத்தான் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் உடல் உபாதைகள் பற்றிய புரிந்துணர்வுகூட ஆண்களுக்குப் பல நேரங்களில் இருப்பதில்லை. உதாரணத்துக்கு, அம்மாவுக்கு பீரியட்ஸ். எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. அப்போது தன் மகனை அனுப்பி சானிட்டரி நாப்கின் வாங்கி வரச்சொல்ல முடியுமா? அவளுக்குத் தயக்கம். மகனுக்கும் வெட்கம். ஓர் ஆண் கடைக்குச் சென்று எல்லோர் முன்னும் நின்று சானிட்டரி நாப்கின் வாங்குவது எவ்வளவு அவமானம்.

இங்குதான் புரிந்துணர்வு வருகிறது. அவன் வாயில் ஊறும் எச்சில் போல்தான் அவள் உடலில் ஏற்படும் ஒரு மாற்றம் அது என்பது புரிய வேண்டும் அல்லது புரிய வைக்கப்பட வேண்டும். ஆனால், நாம் இவ்வாறான புரிந்துணர்வுக்கு என்றும் வழி வகுத்ததில்லை. பீரியட்ஸின்போது பெண்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அதன் மூலம் அவர்களுக்கு அந்த நாள்களில் தேவைப்படும் ஓய்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்தான். ஆனால், அது ஏதோ பெண் செய்யும் ஒரு தவறு போல் கருதப்பட்டு, அருவருப்போடு அவளை ஒதுக்கி வைப்பது தவறு என்ற புரிந்துணர்வை ஆண்களுக்குக் கொடுக் காததால்தான்.

உங்கள் கேள்வி புரிகிறது. சரி பெண்கள் என்றால் அவர்கள் மார்புகள் அவ்வாறுதான் இருக்கும் என்பது புரிந்துவிட்டால் வன்கொடுமைகள் நடக்காமல் போய்விடுமா? இல்லை, முழுவதும் அழிப்பது என்பது என்றும் சாத்தியப்படாது. ஆனால், இப்போது இருப்பது போல் பெருவாரியான சதவிகிதத்தில் நிச்சயம் நடக்காது. வன்முறையில் அடுத்து முக்கியப் பங்கு வகிப்பது உடலுறவு பற்றிய புரிந்துணர்வு. தற்போது பள்ளிப் பாடங்களில் இது பாடமாகச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஆனால், இதையும் மீறிப் பல நேரங்களில் சிறுவர்கள் மனம் இதனால் ஈர்க்கப்படுகிறது. காரணம், இந்த உணர்வு உடலோடு இணைந்தது. பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு வலி கொடுத்துக்கொண்டிருக்கும் சிறு தேங்காயை அகற்றும்போது எப்படி சுகமான ஓர் உணர்வை மனம் பெறுகிறதோ அதைப்போல், ஏன் அதைவிடப் பல மடங்கு அதிக சுகத்தைக் கொடுக்கக்கூடியது உடல் சேர்க்கை.

எது சரி, எது தவறு... புரியாத புதிரா பெண்?

நண்பர் ஒருவர். மிகவும் பதற்றத்தோடு இருந்தார். காரணம், அவரும் மனைவியும் வேலைக்குச் செல்வதால், பத்தாவது படிக்கும் அவர் மகன் பல நேரம் வீட்டில் தனியாக இருக்கிறான். அந்த நேரத்தில் அவன் போர்ன் படங்கள் பார்ப்பதைக் கண்டுபிடித்ததால்தான் அவருக்குப் பதற்றம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வயதானவர்கள்கூட இத்தகைய படங்களைப் பார்க்கிறார்கள். ஆனால், சிறுவயதில் அவற்றைப் பார்க்கும்போது, குழந்தைகளின் மனத்தில் அவை தவறான எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. அதனால் அவரிடம் இப்படிச் சொன்னேன்... ‘உங்கள் பையனை இதற்குக் கோபிக்க வேண்டாம். அப்படிச் செய்யும்போது இதைப் பற்றிய ஆர்வத்தை நீங்கள் தேவையில்லாமல் தூண்டுகிறீர்கள். தவறு என்று சொல்லும்போது, அதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித மனம். அதனால் அவனிடம் பொறுமையாக இதைப் பற்றிப் பேசுங்கள். இதற்கான சரியான புத்தகங்கள் இருப்பதையும், இது அதற்கான வயது இல்லை இருந்தாலும் ஆர்வமாக இருந்தால் சரியானபடி படித்து புரிந்துகொள்ளச் சொல்லுங்கள். இவ்வாறு செய்யாமல் இருந்தால், போர்ன் படங்களில் காட்டப்படும் வக்கிரங்கள்தான் எல்லோரும் செய்வது என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் பதிந்துவிடக்கூடும்.

இதன் தொடர்ச்சியாக, அவர்களிடம் இவ்வாறான உணர்ச்சிகள் சாதாரணமாக அனைவருக்கும் எழக்கூடியவையே அதில் அவர்கள் அவமானப்படத்தேவை இல்லை என்பதைப் புரிய வைப்பது. வெறும் உடல் சம்பந்தப்பட்ட ஒரு தேவையை நாம் வெளிப்படையாகப் பேசாமல் போவதால் தான், அது ஏதோ ஒரு மர்மக்கதையோ என்று தீண்டிப் பார்க்கும் உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள் எனும்போது அவளை நாம் கட்டி அணைத்து ஆறுதலா கூறுகிறோம்? ஏதோ அவள் குற்றம் செய்துவிட்டது போல் அல்லவா கருதுகிறோம். இருவரோ, மூவரோ செய்யும் செயலுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள்? பல நேரங்களில் இவ்வாறான தவறான உணர்ச்சி வெளிப்பாடுகள்தான் அந்தப் பெண் தற்கொலையில் முடிகிறது. ஓர் உயிரை மாய்த்துக்கொள்ளும்படியான உன்னதமான நிலையா கற்பு? அதுவும் அந்தப் பெண் தவறு ஏதும் செய்யாதபோது.

இவ்வாறான மனநிலைக்குக் காரணம், கற்பைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சில்க் வலைகள் தான். இதில் பெரும்பாலும் பெண்கள் சிலந்தியாக வலைக்குள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். இங்கேயும் புரிந்துணர்வுக்கான தேவை ஏற்படுகிறது. சரி, வன்முறைகள் பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் நடக்கின்றனவா என்று பார்த்தால், இல்லை ஆண் பிள்ளைகளும் அவற்றுக்குப் பலி ஆகிறார்கள். இதற்கு எந்த வகை தெளிவு தேவை?

ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பற்றிப் பேசி இருப்பார். தொடுதல் மூலம் பலவற்றை நாம் உணர்த்த முடியும். பல நேரங்களில் அம்மா நெற்றியைத் தடவிக்கொடுக்கும்போது தலைவலி மறைந்துவிடும். அதே போல் துக்கத்தில் இருக்கும்போது யாராவது அன்புடன் அணைத்தால் அந்த சுகமே தனி.

இதே தொடுதல்தான் ஒருவர் நல்ல நோக்கத்துடன் தான் நம்மைத் தொடுகிறாரா என்பதையும் நமக்கு உணர்த்தும். இதைத்தான் `குட் டச் பேட் டச்’ என்று கூறுகிறோம். இதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. இங்கே நான் சொல்ல விரும்புவது, இந்தப் புரிந்துணர்வு பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் தேவை. இது, அவர்கள் அவ்வாறான நோக்கோடு பெண்களைத் தொடாமல் இருப்பதற்கும், அதே போல் அவர்களை அவ்வாறு தொடும் மற்றவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் உதவும்.

நம்மிடம் வழக்கில் இருக்கும் ஒரு பேச்சு. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண் குழந்தையைத் தகப்பனும், அதே போல் பிள்ளைகளை அம்மாவும் மிகவும் நெருக்கமாக வைக்கக் கூடாது என்பதே. காரணம், உடலுடன் உண்டாகும் உணர்வு களுக்குச் சரி தவறு தெரியாது. மனதுக்குத் தெரியும். ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்களில்

மனம் சொல்வதை உடல் கேட்காது. ஆக... சரி எது, தவறு எது என்பதை அந்தந்தச் சமுதாயமே தீர்மானிக்கும். ஆனால், எது நம்மால் செய்ய இயலும் என்றால், இந்தப் புரிந்துணர்வை

நாம் முதலில் அறிந்து கொண்டு பின் அடுத்த தலைமுறைகளுக்கு அவற்றைக் கொண்டு செல்வதே.