Published:Updated:

கள்ளக்குறிச்சி விவகாரம்... சாதிப் பிரச்னையாக்க பார்க்கிறதா உளவுத்துறை?

கள்ளக்குறிச்சி
பிரீமியம் ஸ்டோரி
கள்ளக்குறிச்சி

அதிகார மையங்கள் நினைத்தால், ஒரு விஷயத்தை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போய்விடலாம் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது உளவுத்துறையின் அறிக்கை.

கள்ளக்குறிச்சி விவகாரம்... சாதிப் பிரச்னையாக்க பார்க்கிறதா உளவுத்துறை?

அதிகார மையங்கள் நினைத்தால், ஒரு விஷயத்தை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போய்விடலாம் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது உளவுத்துறையின் அறிக்கை.

Published:Updated:
கள்ளக்குறிச்சி
பிரீமியம் ஸ்டோரி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறி, இப்போது சாதிச் சாக்கடையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது!

பரபரப்பைக் கிளப்பிய செய்‘தீ’!

கள்ளக்குறிச்சி கலவரத்துக்குக் காரணம் உளவுத்துறையின் தோல்வியே என்பதை அரசே ஒப்புக்கொண்டு, காவல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், ‘கள்ளக்குறிச்சி வன்முறைக்கு இவர்கள்தான் காரணம் என ஒரு குறிப்பிட்ட சாதி மீது உளவுத்துறை கைகாட்டுகிறது’ என்று சமீபத்தில் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. பரபரப்பைக் கிளப்பிய இந்தச் செய்தியின் அடிப்படையில், ஒவ்வோர் அரசியல் தலைவரும் உளவுத்துறைக்குக் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரம்... சாதிப் பிரச்னையாக்க பார்க்கிறதா உளவுத்துறை?

“கள்ளக்குறிச்சி கலவரத்துக்குப் பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. கூடவே, “தி.மு.க ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை கள்ள மௌனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினர், தங்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கிவைத்துள்ளனர்” என்றும் கண்டித்திருக்கிறார்.

இதேபோல வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், “அரசுக்கு அளித்த ரகசியத் தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்... இந்தத் தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் வி.சி.க-வுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும், ஆதிதிராவிடருக் கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் மாணவியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறிய முடிகிறது” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

திசைதிருப்பும் வேலை...

இந்தப் பிரச்னை குறித்து வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம். “மாணவியின் மரணம், மரணத்துக்குப் பின் உள்ள சந்தேகம், கொலை என்றால் அதன் பின்னணி என்ன, பள்ளி நிர்வாகத்திலுள்ள சிக்கல்கள் என்னென்ன என்று விசாரிக்காமல், முழுக்க முழுக்க வன்முறை என்று சொல்லி திசை திருப்புகிறார்கள் போலீஸார். அதிலும், தன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டத்தை, இப்போது சாதிரீதியாக மடைமாற்றுகிறார்கள். குறிப்பாக, பள்ளி நிர்வாகத்தினரின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகிற ஆதிதிராவிடர் இளைஞர்களைப் தொடர்ந்து கைதுசெய்கிறார்கள். வீடியோ ஆதாரங்களை வைத்து வன்முறை செய்தவர்களைக் கைதுசெய்யுங்கள்... அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட சமூகத்தவர்களை மட்டும் அடையாளம் கண்டு கைதுசெய்வது எந்த விதத்தில் நியாயம்? ஒரு பக்கம், ‘கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி வேண்டும்’ என்று பேசிக் கொண்டிருக்கும்போது, கல்வித்துறை அமைச்சர் எதற்காக பள்ளியைத் திறக்க இவ்வளவு அவசரப்படுகிறார்... இப்போதுதானே விசாரணை தொடங்கியிருக்கிறது... ஏற்கெனவே அந்தப் பள்ளியில் ஆறு மரணங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கும் உரிய விசாரணை வேண்டும். அதுவரை பள்ளிக்கு சீல் வையுங்கள். பள்ளிக்கல்வித்துறை சரியாகச் செயல்படாமல் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுப்பற்று இருப்பது மாணவர்களின் மீது அக்கறை இல்லாத போக்கையே காட்டுகிறது” என்றார்.

பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் இது குறித்துக் கேட்டோம். “அதிகார மையங்கள் நினைத்தால், ஒரு விஷயத்தை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போய்விடலாம் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது உளவுத்துறையின் அறிக்கை. நீதி கேட்டுப் போராடும் மக்களை இது கொச்சைப்படுத்துகிறது. யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கம் சாயக்கூடியதாகத்தான் அரசும் நிர்வாகமும் இருக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை பற்றி எந்த அக்கறையும் இல்லாத ஆட்கள்தான் தொடர்ந்து அந்த பொறுப்புகளில் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு” என்றார்.

வன்னி அரசு, திலகபாமா, கரு.நாகராஜன், பிரவீன் குமார் அபினவ், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,
வன்னி அரசு, திலகபாமா, கரு.நாகராஜன், பிரவீன் குமார் அபினவ், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,

அண்ணாமலை குற்றச்சாட்டின் பின்னணி என்ன என்று பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு நாகராஜனிடம் கேட்டோம். “சம்பவம் நடந்த நாளிலிருந்தே காவல்துறை இதை மெத்தனமாகவே கையாண்டது. எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்திய பிறகே வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவில், எந்த உண்மை வெளிவந்தாலும் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறோம். அதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தவர்களை மட்டும் குறிவைத்து கைது செய்வதைத்தான் அண்ணாமலை சுட்டிக்காட்டியிருக்கிறார்” என்றார்.

சமயம் பார்த்து பழிவாங்கியிருக்கிறார்கள்..!

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனோ, “கள்ளக்குறிச்சியில் நடந்த போராட்டம் நீதி கேட்டு நடக்கவில்லை. அந்தப் பகுதியில் பள்ளி நிர்வாகத்தின் மீது வெறுப்பு, ஆத்திரத்தில் இருந்த சிலர், சமயம் பார்த்து பழிவாங்கியிருக்கிறார்கள். இதைக் கண்காணிக்கத் தவறிய சில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சம்பந்தப் பட்டவர்களைக் கண்டுபிடித்து தொடர்ந்து கைது செய்துவருகிறது அரசு. யார் அதிகமான தவறு செய்திருக்கிறார்களோ, அவர்கள் தரப்பில் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கலாம். அதற்கு சாதிச் சாயம் பூசுவதிலோ, மாணவி மரண விவகாரத்தில் சாதியப் பிரச்னைகளை உள்ளே கொண்டுவருவதிலோ தி.மு.க-வுக்கு உடன்பாடில்லை. அரசுக்குத் தெரியாமல் உளவுத்துறை ரிப்போர்ட் எப்படி வெளியேவரும்... எனக்கு பா.ஜ.க மீது சந்தேகம் வருகிறது. காரணம், எந்த மாநிலத்தில், எது நடந்தாலும் அதைச் சாதி, மத பிரச்னையாக்குவது பா.ஜ.க-வின் வழக்கம். விசாரணை நேர்மையாக நடந்தால், ஆர்.எஸ்.எஸ் பின்புலம்கொண்ட அந்தப் பள்ளிக்குப் பாதிப்பு வரலாம் என்கிற காரணத்தால் இதை திசைதிருப்ப அண்ணாமலை முயல்கிறார்” என்றார்.

காவல்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை கவனிக்கும் சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவரும், சேலம் சரக டி.ஐ.ஜி-யுமான பிரவீன் குமார் அபினவிடம் விளக்கம் கேட்டோம். “உளவுத்துறை சொன்னதாக ஒரு தகவலை பத்திரிகைக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. அது தவறான தகவல். சிறப்புப் புலனாய்வுக்குழு பொறுப்பேற்ற பிறகு இதுவரை கிட்டத்தட்ட பத்து குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறோம். அந்த 10 பேரில் அனைத்துத் தரப்பினரும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்று சொல்ல முடியாது. எல்லா குற்றவாளிகளையும் வீடியோ ஆதாரம், சாட்சிகளின் அடிப்படையிலேயே கைதுசெய்கிறோம். யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்தார்கள் என்பதைப் பொறுத்துத்தான் நடவடிக்கை இருக்கும்” என்றார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தினம் தினம் புரளிகள் கிளம்புவதைத் தடுக்க வேண்டுமென்றால், நடந்தது என்ன என்று விரைவில் கண்டுபிடித்து, அரசே வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்... செய்யுமா அரசு?!