Published:Updated:

“1100 அனைத்துக்கும் தீர்வு அல்ல!” - புலம்பும் மக்கள்

முதலமைச்சர் பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
முதலமைச்சர் பழனிசாமி

‘இத்தனை இருந்தும் எதற்காக இந்தத் திட்டம்’ என்று கேட்டதற்கு, ‘ஒரே எண்ணுக்கு போன் செய்து அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முடியும்!’

“1100 அனைத்துக்கும் தீர்வு அல்ல!” - புலம்பும் மக்கள்

‘இத்தனை இருந்தும் எதற்காக இந்தத் திட்டம்’ என்று கேட்டதற்கு, ‘ஒரே எண்ணுக்கு போன் செய்து அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முடியும்!’

Published:Updated:
முதலமைச்சர் பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
முதலமைச்சர் பழனிசாமி

“ஏதோ ஆராய்ச்சி மணியைக் கட்டிவிட்டு, அது அடிக்கப்பட்ட அடுத்த நொடியே மக்கள் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவது போன்ற பில்டப்பில் தொடங்கப்பட்ட ‘1100 அனைத்துக்கும் தீர்வு’ என்ற திட்டம் வெறும் கண்துடைப்பு. அந்த எண்ணுக்கு அழைத்தால், கிளிப்பிள்ளைகளைப்போலச் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி எரிச்சலூட்டுகிறார்கள். இன்னும் சில நேரங்களில் அவர்கள் சொல்லும் பதில்களால் தலைசுற்றுகிறது. போன் செய்தால் கிடைப்பது தீர்வு அல்ல, சோர்வு மட்டும்தான்!” என்று புலம்புகிறார்கள் மக்கள்.

பிப்ரவரி 13-ம் தேதி, இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்து, தனது வாழ்நாள் சாதனையைப்போலப் புளகாங்கிதமடைந்து பேசினார் முதலமைச்சர் பழனிசாமி. தொடர்ச்சியாக, அனைத்து வகை ஊடகங்களிலும் இத்திட்டம் குறித்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டுவருகிறது. இதற்கான திட்ட மதிப்பு 69.21 கோடி ரூபாய். முதற்கட்டமாக 12.78 கோடி ரூபாய் செலவில் 100 இருக்கைகள்கொண்ட உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

“1100 அனைத்துக்கும் தீர்வு அல்ல!” - புலம்பும் மக்கள்

ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மீனவர் குறைதீர்க்கும் நாள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் எனத் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. போதாததற்கு மனுக்களைப் பெறுவதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவு உட்பட பல அமைப்புகள் உள்ளன. ‘இத்தனை இருந்தும் எதற்காக இந்தத் திட்டம்’ என்று கேட்டதற்கு, ‘ஒரே எண்ணுக்கு போன் செய்து அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முடியும்!’ என்று சொல்லப்பட்டது. `உண்மையிலேயே இத்திட்டம் அப்படி பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தருகிறதா... உண்மை நிலவரம் என்ன?’ என்பதை விசாரிக்கக் களமிறங்கியது ஜூ.வி டீம். பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஒரு துறை, ஒரு புகார் என எடுத்துக்கொண்டு பொதுமக்கள் மூலம் 1100-க்குக் கோரிக்கைவைத்தோம். கோரிக்கை வைத்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நம்பிக்கைக்குரிய எந்தப் பதிலும் இல்லை. “உங்கள் கோரிக்கை, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும். விரைவில் உங்கள் கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கும்” என்ற கிளிப்பிள்ளை பதிலைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. இன்னும் சில பதில்களோ அதிர்ச்சி ரகம்!

“1100 அனைத்துக்கும் தீர்வு அல்ல!” - புலம்பும் மக்கள்

“உங்க கிராமத்தைக் காணோம்!”

கடலூர் மாவட்டம், அகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தில்லை கோவிந்தன், சமூக நலத்துறை மூலம் 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைத் தன் பெண் குழந்தைக்குக் கேட்டு ‘மகளிர் நலனுக்கான பிரிவில்’ விண்ணப்பித்திருக்கிறார். விண்ணப்பித்த உடனேயே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படக்கூடிய அந்தத் தொகை, ஓராண்டு ஆகியும் அவருக்குக் கிடைக்கவில்லை. இது குறித்து, 1100-க்குத் தொடர்புகொண்டு புகாரளித்தார். உதவி மையத்திலிருந்து அவரிடம் பேசியவர், “உங்க கிராமம் கடலூர் மாவட்டத்துலயே இல்லையே” என்று ஷாக் கொடுத்தார். இப்ப, அகரநல்லூர் கிராமம் எங்கே இருக்குனு கண்டுபிடிக்க யாருக்கு போன் போடுறது?

“ரேஷன் கார்டுல பேர் இருக்கா?”

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த பார்வதிநாதன், இரண்டு பெண் குழந்தைகளுக்கான ‘சிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்தை பாதுகா­ப்­புத் திட்­டம்’ மூலம் தலா 25,000 ரூபாய் பெறுவதற்காகப் பலமுறை விண்ணப்பித்தும் பலனில்லை. இவர், 1100-ஐத் தொடர்புகொண்டு புகாரளித்தார். இவருக்கு பதிலளித்தவர் “ரேஷன் கார்டில் உங்கள் குழந்தைகள் பெயர் சேர்க்கப்பட்டிருக்கா?” என்று கேட்க, “ரேஷன் கார்டுல பெயர் சேர்க்காமலா விண்ணப்பிப்பாங்க?” என்று நம்மிடம் நொந்துகொண்டார்.

“1100 அனைத்துக்கும் தீர்வு அல்ல!” - புலம்பும் மக்கள்

“எவ்ளோ ரேட்டிங் கொடுப்பீங்க?”

திருச்சி பாலக்கரைப் பகுதியைச் சேர்ந்த சதீஷ் நாராயணன், ‘போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, 1100-க்குத் தொடர்புகொண்டு பேசினார். “இது குறித்து அதிகாரிகள் உங்களிடம் பேசுவார்கள்” என்று பதில் வந்தது. சிறிது நேரம் கழித்து உதவி மையத்திலிருந்து அழைப்பு வர, ஆஹா ஏதோ நல்ல விஷயம் நடக்கப்போகிறது என்று ஆவலாக போனை எடுத்துப் பேசினார். எதிர்முனையில் இருந்தவர் “உதவி மையத்திலிருந்து உங்களிடம் பேசிய பெண்ணுக்கு எத்தனை மார்க் (ரேட்டிங்) கொடுப்பீங்க?” என்று கேட்டிருக்கிறார். மறுபடியும் இவர், “என் கோரிக்கைக்கு என்ன தீர்வு?” என்று கேட்க, அந்தப் பக்கம் ஒரு பதிலும் இல்லை!

“உங்களுக்கு என்ன ஹெல்ப் பண்றதுனு தெரியலையே!”

தேனியைச் சேர்ந்த சங்கரநாராயணன், கடந்த 20 ஆண்டுகளாக பி.வி.சி பைப் தயாரிப்புத் தொழிற்சாலை நடத்திவருகிறார். கொரோனா ஊரடங்கால் பொருளாதார பாதிப்புக்குள்ளானவர், மீண்டும் நிறுவனத்தை இயக்க, எம்.எஸ்.எம்.இ துறை மூலம் கடன் உதவி கேட்டு 1100-க்குத் தொடர்புகொண்டார். “இந்த மாதிரி பிரச்னைக்கு என்ன ஹெல்ப் பண்றதுனு தெரியலையே” என்ற உதவி மையப் பணியாளர், “இதுபோன்ற கோரிக்கைகளைப் பதிவுசெய்ய முடியாது” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார். “அப்புறம் என்ன மாதிரி கோரிக்கைகளைத்தான் பதிவு செய்வாங்களாம்” என்று அப்பாவியாக நம்மிடம் கேட்டார் சங்கரநாராயணன்.

தில்லை கோவிந்தன் - பார்வதிநாதன் - சதீஷ் நாராயணன்
தில்லை கோவிந்தன் - பார்வதிநாதன் - சதீஷ் நாராயணன்

“பாட்டுப் பாடவா... தீர்வு சொல்லவா?”

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சேதுராமலிங்கமும் அவரின் தாயாரும் நீரிழிவு நோயாளிகள். சேதுராமலிங்கத்தின் தந்தை ஜனவரி 1-ம் தேதி இறந்துவிட்டார். சிகிச்சைச் செலவுக்காகத் தந்தையின் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை எடுக்க, வாரிசுச் சான்றிதழ் தேவைப்பட்டிருக்கிறது. விண்ணப்பித்து ஒன்றரை மாதங்களாகியும் கிடைக்காத நிலையில், 1100-ஐத் தொடர்புகொண்டார். இவரிடம் பேசிய உதவிமையப் பணியாளர், “இது தொடர்பாக உரிய துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொல்லிவிட்டு, ஏதோ திரைப்படப் பாடலை முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார். சில விநாடிகள் கழித்து, சேதுராமலிங்கம் இணைப்பைத் துண்டிக்காமல் இருப்பதை அறிந்து சுதாரித்துக்கொண்டு, “உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று கூலாகச் சொல்லி இணைப்பைத் துண்டித்திருக்கிறார். “கஷ்டத்தைச் சொல்லி போன் பண்ணினா, பாட்டுப் பாடி வெறுப்பேத்துறாங்க. என்ன நிலைமையில மனுஷங்க போன் பண்றாங்கன்னுகூட அவங்களுக்குத் தெரியலையே... என்னத்தச் சொல்றது?” என்று விரக்தியடைந்தார் சேதுராமலிங்கம்.

‘யுவர் நம்பர் நாட் எக்ஸிஸ்ட்!’

புதுக்கோட்டை மாவட்டம், தாந்தாணி கிராமத்தைச் சேர்ந்த வித்யா, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார். இதுவரை உதவி கிடைக்காத நிலையில், 1100-ஐத் தொடர்புகொண்டார். “உங்களுடைய புகாரைப் பதிவுசெய்திருக்கிறோம். பதிவுசெய்ததற்கான எஸ்.எம்.எஸ் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும். சீக்கிரத்திலேயே இதற்கான தீர்வு கிடைக்கும்” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த இணைப்பிலிருந்து டௌன்லோடு செய்த செயலியில், தனது கோரிக்கையின் ஸ்டேட்டஸ் என்னவென்று வித்யா செக் செய்தபோது, ‘நம்பர் நாட் எக்ஸிஸ்ட்’ என்று வந்திருக்கிறது. அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நிற்கிறார் வித்யா.

சங்கர நாராயணன் -  சேதுராமலிங்கம்
சங்கர நாராயணன் - சேதுராமலிங்கம்

எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில்தான்... “விரைவில் தீர்வு காணப்படும்!”

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, வள்ளிவிளையைச் சேர்ந்த இயற்கை விவசாயி சக்திகுமார், பள்ளிப்பத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு 1,60,000 ரூபாய் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதுவரை கடன் கிடைக்காத நிலையில் 1100-ஐத் தொடர்புகொண்டு கோரிக்கைவைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், ஐவேலி கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், மழையில் பயிர் வீணாகிப்போனதால் இழப்பீடு கோரி மனு செய்திருக்கிறார். நிவாரணம் கிடைக்காத நிலையில் 1100-ஐத் தொடர்புகொண்டு கோரிக்கைவைத்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை வள்ளுவர் நகரில் வசிப்பவர் கல்பனா தினேஷ்குமார். புதிய ரேஷன் கார்டு கேட்டு இரண்டு மாதங்களாக அலைகிறார். இவர் ஆன்லைனில் இரண்டு முறை விண்ணப்பித்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 1100-ஐத் தொடர்புகொண்டு கோரிக்கை வைத்தார்.

மதுரை மாவட்டம், பழைய சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கருப்பி. இவருக்கு உறவினர்கள் யாருமில்லை. கண்பார்வை குன்றியவர். சில மாதங்களுக்கு முன்பு இவரது வீடு மழையில் இடிந்துவிட்டது. இவருக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என எதுவுமில்லை. இவர் சார்பாக இவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞர் ஆனந்த், 1100-ஐத் தொடர்புகொண்டு உதவி வேண்டி கோரிக்கைவைத்தார்.

வேலூர் மாவட்டம், வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதர்ஷினி. இவர், காட்பாடி காந்தி நகரிலுள்ள வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவருகிறார். கொரோனா ஊரடங்கு காரணத்தால், இவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தொகையை மாணவியால் செலுத்த முடியவில்லை. இதனால், ஆன்லைன் வகுப்பில் மாணவியைச் சேர்த்துக்கொள்ளாத பள்ளி நிர்வாகம், தொடர்ந்து பள்ளிக்குள்ளும் அனுமதிக்கவில்லை. இவரது சான்றிதழ்களையும் கொடுக்காததால், அரசுப் பள்ளியிலும் சேர்க்க முடியவில்லை. இந்நிலையில், 1100-ஐத் தொடர்புகொண்டு பேசினார் தேவதர்ஷினி.

தஞ்சாவூர் மாவட்டம், மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. கணவரை இழந்தநிலையில் விதவை பென்ஷன் கேட்டுப் பல ஆண்டுகளாக அலைந்துவருகிறார். இன்னமும் கிடைக்காத நிலையில் 1100-ஐத் தொடர்புகொண்டு பேசினார் லட்சுமி.

சக்திகுமார் - ஜனார்த்தனன் - கல்பனா
சக்திகுமார் - ஜனார்த்தனன் - கல்பனா

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட செல்லப்பிள்ளை கரடு பகுதியில், சுமார் 110 குடும்பங்கள் வசித்துவருகின்றன. அந்தக் கிராமத்துக்கு இதுவரை பேருந்து வசதியில்லை. பேருந்து வசதி வேண்டி அந்த மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்பவர், 1100-ஐத் தொடர்புகொண்டு கோரிக்கைவைத்தார்.

தஞ்சாவூர் மருங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டு. இவரின் தந்தை பெயரில் இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை இவரின் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். முறையாக அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கும் பட்டு, ‘முறைகேடாக மாற்றப்பட்ட பட்டாவைத் தனது பெயருக்கே மீண்டும் மாற்றித்தர வேண்டும்’ என்று கடந்த 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், பட்டுவின் மகன் குணசங்கர், 1100-ஐத் தொடர்புகொண்டு கோரிக்கை வைத்தார்.

கருப்பி - தேவதர்ஷினி
கருப்பி - தேவதர்ஷினி

மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவர் பவானி. இவரின் மகன் தினேஷ்குமாருக்கு கால்களும் கைகளும் செயலிழந்துபோயிருக்கின்றன. அவருக்குக் கடந்த சில மாதங்களாக ஊனமுற்றோர் உதவித்தொகை வரவில்லை. இது குறித்து 1100-ஐத் தொடர்புகொண்டு பேசினார், பவானி.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மாதாந்தர மருந்து மாத்திரைக்கான செலவைச் சமாளிக்க முடியாமல் திணறும் இவர், 1100-க்கு போன் செய்து, ``எனக்கு மாதா மாதம் தேவையான மருந்துகள் அல்லது உதவித்தொகை வேண்டும்” எனக் கோரிக்கைவைத்திருக்கிறார்.

மதுரை மாவட்டம் நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம். இவர் தனது பகுதியில் விபத்தைத் தவிர்க்க வேகத்தடை அமைத்துத் தருமாறு 1100-ஐத் தொடர்புகொண்டு கோரிக்கைவைத்தார்.

லட்சுமி - பவானி - பரமசிவம் -
லட்சுமி - பவானி - பரமசிவம் -

ஈரோடு ஆண்டவர் வீதியைச் சேர்ந்தவர் ஈரோடு ஏ.எம்.முஸ்தபா. எலெக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் வேலை செய்துவருகிறார். நிரந்தர வருமானம் இல்லாததால், வீட்டு வாடகை செலுத்த சிரமப்பட்டுவருகிறார். அரசிடம் இலவச வீட்டுமனை கேட்டு பத்தாண்டுகளாக அலைந்துவரும் நிலையில், 1100-ஐத் தொடர்புகொண்டு புகாரளித்தார் முஸ்தபா.

ஹக்கீம் - முஸ்தபா
ஹக்கீம் - முஸ்தபா

புகார் செய்த அனைவருக்குமே கிடைத்தது என்னவோ ஒரே பதில்தான். “தங்களின் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும். விரைவில் தீர்வுபரமசிவம் காணப்படும்!’’ என்பதுதான். “கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை; ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன்... சிறு வழிகாட்டுதல்கூட கிடைக்கவில்லை. சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்கிறார்கள்; அவர்களுக்கே புரியாத பதில்களைச் சொல்கிறார்கள். கோரிக்கைவைக்கப் போய் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இந்தத் திட்டத்தைப் பெரிய சாதனையாக மார்தட்டிக்கொள்ளும் முதல்வரால், இந்தத் திட்டத்தின் வழியே ‘எத்தனை மனுக்கள் பெறப்பட்டன, எத்தனை மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன’ என்று சாதனைப் பட்டியல் வெளியிட முடியுமா?’’ என்று கொந்தளிக்கிறார்கள் சாமானிய மக்கள்.

ஐயா முதல்வர் அவர்களே... இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே!

*****

“முதலமைச்சரைப் போய்ப் பாருங்க!”

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷனின் கீழ், தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் மொத்தம் 1,355 பேர் பணியாற்றுகிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இவர்களுக்கு, நபர் ஒருவருக்கு மாத ஊதியமாக 7,778 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இவர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு மனுக்களை அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அவற்றின்மீது நடவடிக்கை இல்லாததால், இவர்களின் ‘யுனைட்’ என்ற சங்கம் மூலமாக, 1,355 பேரும் 1100-ஐத் தொடர்புகொண்டு புகாரளிக்க முடிவுசெய்து போன் செய்திருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய பொறுப்பாளர் ஒருவர், ‘‘ஒவ்வொருத்தரா போன் பண்ணி புகாரைச் சொல்ல ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட 100 பேரின் அழைப்பு வரைக்கும் காதுகொடுத்துக் கேட்டாங்க. அதுக்கப்புறம், இ-சேவை மையம்னு சொன்னதுமே, ‘நீங்க புகாரா எழுதி முதலமைச்சருக்கு அனுப்புங்க. அல்லது நேர்ல போய் முதலமைச்சரைப் பாருங்க’னு சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க. நாங்க முதலமைச்சரைச் சந்திக்க முடியாமதானே 1100-க்கு போன் பண்ணினோம். போன் பண்ணின கொஞ்ச பேருக்கு மட்டும் எஸ்.எம்.எஸ் வந்துச்சு. மீதிப் பேருக்கு எஸ்.எம்.எஸ்-கூட வரலை. அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வுங்கிறாங்க. ஆனா, பிரச்னையைக் காதுகொடுத்துக்கூட கேட்க மாட்றாங்க!” என்று வேதனைப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism