Published:Updated:

பத்தாயிரம் கோடி டார்கெட்... போலி பாஸ்போர்ட்... - நித்தியானந்தா ‘சமாதி நிலை’ நாடகத்தின் பின்னணி

நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்தியானந்தா

நான் சமாதி நிலையில் இருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டிருந்ததாகவே சொல்லப்பட்டது.

பத்தாயிரம் கோடி டார்கெட்... போலி பாஸ்போர்ட்... - நித்தியானந்தா ‘சமாதி நிலை’ நாடகத்தின் பின்னணி

நான் சமாதி நிலையில் இருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டிருந்ததாகவே சொல்லப்பட்டது.

Published:Updated:
நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்தியானந்தா

மீண்டு(ம்) வந்திருக்கிறார் நித்தியானந்தா. சமாதி நிலையில் (?!) இருந்தவர், குருபூர்ணிமா நாளான ஜூலை 13-ம் தேதி இரவு, தனது ‘யூடியூப்’ சேனலில் தோன்றியிருக்கிறார். முகம் முழுக்க தாடி, ஆங்கிலத்தில் பேசும்போது ஒரு தலைப்பாகை, தமிழில் பேசும்போது வேறொரு தலைப்பாகை, தொடக்கத்தில் நகை, சிறிது நேரத்தில் வெற்றுக் கழுத்து என்று ‘கெட்டப்’பில் வெரைட்டி காட்டியவர், வழக்கம்போல அடித்துவிட்டிருக்கிறார்.

“உங்களுக்குத்தான் மூன்று மாதங்கள்... எனக்கு ஒரு யுகம்”

அந்தக் காணொளியில், “இந்த நன்னாளில் என்னையே என் குரு பரம்பரைக்கு அர்ப்பணித்து 42-வது நிகழ்வைத் தொடங்குகிறேன். இன்று முதல் சத்சங்கங்கள் வாயிலாக உங்களுடன் தொடர்பிலிருப்பேன். உலகத்துக்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் நிறைய உள்ளன. திடீரெனக் கண்ணைத் திறந்து பார்த்தால் மூன்று மாதங்கள் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது. உங்களுக்குத்தான் இது மூன்று மாதங்கள், எனக்கு ஒரு யுகம். கடந்த மூன்று மாதங்களில் எனது உடல், மூளை அனைத்தும் மாறியிருக்கின்றன. இனிமேல், என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தைக் காண்பீர்கள். இன்னும் எனது சமாதிநிலை முடியவில்லை. இனிவரும் நாள்களில் நான் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன். அடுத்த சில நாள்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த மூன்று மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்குப் புரியும்” என்றவர், “சாவே என்னைப் பார்த்தால் பயந்து ஓடும்டா” என பஞ்ச்செல்லாம் பேசியிருக்கிறார்.

“நான் சமாதி நிலையில் இருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டிருந்ததாகவே சொல்லப்பட்டது. அவருக்குக் கல்லீரல் அலர்ஜியும், சிறுநீரகத் தொந்தரவும், நுரையீரலில் வைரஸ் தொற்றும் ஏற்பட்டதால் மூச்சுவிட முடியாமல் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நித்தியானந்தாவின் இந்த 2.0 அவதாரம் குறித்த விசாரணையில் இறங்கினோம்...

பத்தாயிரம் கோடி டார்கெட்... போலி பாஸ்போர்ட்... - நித்தியானந்தா ‘சமாதி நிலை’ நாடகத்தின் பின்னணி

“ஒரு லட்சம் கோடி லட்சியம் 10,000 கோடி நிச்சயம்...”

நித்தியானந்தாவுக்கு நெருக்கமான நமது சோர்ஸிடம் பேசினோம். “நித்தியானந்தா தன்னுடைய பணத்தையெல்லாம் ஜெயின் கீட்ஸ், ஜாம்பியா, கனடா, அமெரிக்கா என நான்கு இடங்களில் பதுக்கிவைத்திருக்கிறார். அதுபோக, ‘த்வைத வர்ஜிதா’ என்ற அமைப்பின் மூலம் கிலோக்கணக்கில் தங்கத்தை பிரான்ஸில் பதுக்கியிருக்கிறார். ஆனால், அவற்றில் எதையும் தற்போது எடுத்துப் பயன்படுத்த முடியாத சூழல். பல்வேறு சிக்கல்களிலிருந்து தப்பிக்க நித்தியானந்தாவுக்கு மிகப்பெரிய அளவில் பணம் தேவை என்பதாலேயே இவ்வளவு நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பல கோடிக்கு அசையா சொத்து இருந்தாலும், பணமாகக் கையில் வைத்துக்கொள்வதன் மூலம் தன்னால் இந்தச் சிக்கல்களிலிருந்து எளிதில் தப்ப முடியும் என நினைக்கிறார்.

அதற்காக, இந்த முறை அவர் டார்கெட்டாக வைத்திருப்பது LGBTQ எனும் தன்பாலின ஈர்ப்பாளர்களைத்தான். உலகம் முழுவதுமுள்ள LGBTQ-வைச் சேர்ந்த பலர் பெரிய கோடீஸ்வரன்களாக இருந்தும் சமூகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாத ஏக்கத்தில் இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்குத் தன் நாட்டில் அங்கீகாரம் கொடுக்கிறேன் என்ற பிரசாரத்தைத் தொடங்கி அதன் மூலம் மிகப்பெரிய தொகையை குவிக்க நினைக்கிறார். இதற்காகத்தான் சமாதிநிலை என்ற நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். இதன் பிறகு நடக்கும் சத்சங்கங்களால் ஈர்க்கப்பட்டு எப்படியும் ஒரு லட்சம் பேராவது புதிதாக வருவார்கள். அவர்களிடம் ஆளுக்கு ஒரு கோடி என வசூல் செய்தால்கூட ஒரு லட்சம் கோடி சம்பாதித்துவிடலாம். குறைந்தது பத்தாயிரம் பேரிடமாவது தலா ஒரு கோடி ரூபாய் வாங்கிவிடலாம் எனத் திட்டமிட்டார். ஆனால், இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்பதுதான் சோகம்” என்றார்.

ஆளை மாற்றி பாஸ்போர்ட் எடுக்கும் தந்திரம்...

இன்னொரு முன்னாள் சீடரிடம் பேசினோம். “நித்தியானந்தா தன் மீதிருக்கும் குற்றச்சாட்டு களால் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார். அவரது உடல்நிலை மோசமானபோதுகூட சிகிச்சைக்காக வெளியில் செல்ல முடியவில்லை. தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு, போலி பாஸ்போர்ட் வாங்கி சிகிச்சை என்ற பெயரில் அங்கிருந்து செல்வதே அவரது நோக்கம். அதற்காகத்தான் இந்த 92 நாள் சமாதி நாடகம்” என்றார் அவர்.

“அவர் சமாதியெல்லாம் ஆகவில்லை. தீவு ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து அதன் அதிபராகத் தன்னைத்தானே சொல்லிக் கொண்டிருக்கும் நித்தியானந்தா, ஜாம்பியா உள்ளிட்ட சில கரீபியன் நாடுகளில், ‘தூதரக அந்தஸ்தோடு பாஸ்போர்ட் வேண்டும்’ எனக் கேட்டு விண்ணப்பித்தாராம். அப்படித் தூதரக அந்தஸ்து கொடுத்துவிட்டால் தன்னை யாராலும் கைதுசெய்ய முடியாது என்பது அவரது திட்டம். ஆனால், இந்த நாடுகள் மறுத்து விடவே 92 நாள்களாகக் கப்பல்கள் மூலமாக நாடு நாடாகச் சுற்றி, தற்போது ஜாம்பியாவில் அடைக்கலமாகி யிருக்கிறார் என்கிறார்கள். தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பவே நாடகங்களின் திரைக்கதையை மாற்றிக்கொண்டே இருக்கிறார்” என்றும் சொல்கிறார்கள்.

இன்னுமாய்யா இந்த உலகம் அவரை நம்புது?!