Published:Updated:

இலங்கை - ஒரே நாடு ஒரே சட்டம்... தமிழர்களைத் தனிநாடு கேட்கத் தூண்டுகிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோத்தபய ராஜபக்சே - கலகொட அத்தே ஞானசார தேரர்
கோத்தபய ராஜபக்சே - கலகொட அத்தே ஞானசார தேரர்

இந்தச் சட்டம் தமிழினப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணம். மீண்டும் தமிழர்கள் தனிநாடு கேட்டுப் போராடும் சூழலை இலங்கை அரசாங்கம் உருவாக்குகிறது

பிரீமியம் ஸ்டோரி

‘சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழி’ என்ற தனிச் சிங்களச் சட்டம் 1956-ல் கொண்டுவரப்பட்டது. அதுவே ஈழத்தமிழர்களை `ஒரு மொழி எனில் இரு நாடு; இரு மொழிகள் எனில் ஒரு நாடு’ என்கிற கோஷத்தை எழுப்பி, தனிநாடு கேட்டுப் போராடவும் அடித்தளமிட்டது. தற்போது, இலங்கையில் மீண்டும் அதே போன்றதொரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது!

இலங்கையில் ஒரே நாடு... ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்காக, சட்ட வரைவு தயாரிக்கும் குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருக்கிறார். ஒன்பது சிங்களவர்களும், நான்கு இஸ்லாமியர்களும் இடம்பெற்றிருக்கும் 13 பேர்கொண்ட அந்தக் குழுவில் தமிழர் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ‘கலகொட அத்தே ஞானசார தேரர்’ என்கிற புத்த பிக்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் தொடர்புடையவர் என்பதுடன், நீதிமன்ற அவமதிப்பில் சிறை சென்றவர் என்பதாலும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

இலங்கை - ஒரே நாடு ஒரே சட்டம்... தமிழர்களைத் தனிநாடு கேட்கத் தூண்டுகிறதா?

இதையடுத்து, ‘‘இந்தச் சட்டம் தமிழினப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணம். மீண்டும் தமிழர்கள் தனிநாடு கேட்டுப் போராடும் சூழலை இலங்கை அரசாங்கம் உருவாக்குகிறது’’ என்று தமிழ்த் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான சி.வி.விக்னேஸ்வரன், ‘‘ஒரே நாடு... ஒரே சட்டமானது, தற்போது நடைமுறையில் இருக்கும் ரோம டச்சு சட்டம், ஆங்கிலச் சட்டம், கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம் ஆகியவற்றைப் புறக்கணித்து இந்த நாட்டை முழு சிங்கள-பௌத்த நாடாக மாற்றியமைக்கவே உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்கள மாகாணங்களுடன் இணைத்து, அவை சிங்கள பௌத்தத்துக்குள் அடங்கியவை என்று எடுத்துக்காட்டவே, இந்த இனரீதியிலான குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தச் சட்டமும் குழுவும், 1948-லிருந்து தமிழர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே’’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

“சுதந்திர தமிழீழ தேசத்தை உருவாக்கிக்கொள்வதற்கும் நாங்கள் தயார்” என்று வெடித்திருக்கும் தமிழ்த் தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ‘‘இந்தக் குழுவில் பெயருக்குக்கூட ஒரு தமிழரைச் சேர்க்கவில்லை. அப்படி எனில், இந்த நாடு தமிழர்களுக்குச் சொந்தமில்லையா... இங்கு தமிழர்கள் வாழ்வதற்கான உரிமையில்லையா... பல இனங்களையும், பல மதங்களையும்கொண்ட இந்த நாட்டில், ‘ஒரே நாடு... ஒரே சட்டம்’ என்ற பெயரில் சிங்கள-பௌத்தத்தைத்தான் அமல்படுத்தப்போகிறீர்கள் என்றால், நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்று அறிவிக்க என்ன தடை இருக்கிறது? தனி நாட்டை, சுதந்திரத் தமிழீழ தேசத்தை உருவாக்கிச் செல்லுங்கள் என்று சொன்னால், அதற்கும் நாங்கள் ஆயத்தமாகவே இருக்கிறோம்’’ என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இலங்கை - ஒரே நாடு ஒரே சட்டம்... தமிழர்களைத் தனிநாடு கேட்கத் தூண்டுகிறதா?

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனோ, ‘‘இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரர் 2014 கலவரம், ஹலால் விவகாரம் என்று தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆறாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். பின்னர், மைத்திரிபால சிறிசேனா அரசால் பொதுமன்னிப்பு வழங்கி, விடுவிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவரின் தலைமையிலான குழுவில் நான்கு இஸ்லாமிய உறுப்பினர்களையும் நியமித்திருக்கிறார்கள் என்றால், அது இஸ்லாமிய சகோதரர்கள் மீதான பாசமோ, பற்றோ அல்ல! இஸ்லாமியர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவே திட்டமிட்டிருக்கிறார்கள்’’ என்று காட்டம் தெரிவித்திருக்கிறார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி பதில் அளித்திருக்கும் ஞானசார தேரர், ‘‘இலங்கையில் எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அதில் சிங்களவர்கள் இருக்கிறார்களா, தமிழர்கள், முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்று ஆராய்கிறார்கள். அது தேவையற்றது. தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால்தான், இந்தக் குழுவில் அவர்கள் இடம்பெறவில்லை. இனம், மதம், மாகாணம் போன்ற வேறுபாடுகளே தேசிய ஒருங்கிணைப்புக்குத் தடைகளாக இருக்கின்றன. நாட்டு மக்களின் தனிப்பட்ட கொள்கைகளை மறந்து, `இலங்கையர்’ என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டுவரப்படும் ஒரே நாடு... ஒரே சட்டத்தைச் செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

சி.வி.விக்னேஸ்வரன் - சிவாஜிலிங்கம் - மனோ கணேசன்
சி.வி.விக்னேஸ்வரன் - சிவாஜிலிங்கம் - மனோ கணேசன்

ஒரு பக்கம் இந்த வாத, பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்க... அதிபர் கோத்தபய ராஜபக்சே, `ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கையை, வரும் 2022, பிப்ரவரி மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று 13 பேர் அடங்கிய குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இலங்கை இனப் பிரச்னையில் பழைய கோட்பாடு புதிய வீச்சு அடைந்திருக்கிறது. இது மீண்டுமொரு பிரளயத்தை இலங்கை அரசியலில் உண்டுபண்ணக்கூடும்!

`ஒரே நாடு... ஒரே சட்டம்’ பின்னணி என்ன?

கடந்த 2019-ல் இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 270 பேர் உயிரிழந்தனர். `இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் உள்நாட்டு அமைப்புதான் காரணம்’ என்று சொல்லப்பட்டது. இந்த விவகாரம் 2019 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராஜபக்‌சே சகோதரர்கள், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் உள்ளிட்ட இதர சட்டங்கள் நீக்கப்பட்டு, ஒரே சட்டம் கொண்டுவரப்படும்’ என்று தேர்தலில் பிரசாரம் செய்தனர். தொடர்ந்து, அந்தத் தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன பெராமுனா கட்சி வெற்றிபெற்றது. இதையடுத்தே, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு