Published:Updated:

கொரோனாவைவிட ஆபத்தானது ஏற்றத்தாழ்வு வைரஸ்!

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

விண்ணை முட்டும் கட்டடங்கள் ஒரு பக்கமும், குடிசைகள் இன்னொரு பக்கமும் இருக்கும் சமநிலையற்ற சமூகம் பல நாடுகளில் உண்டு.

‘முகேஷ் அம்பானி ஒரு நொடியில் சம்பாதிக்கிற பணத்தை, ஒரு சாதாரண கூலித் தொழிலாளி மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தால்தான் சம்பாதிக்க முடியும்.’ - கொரோனாகால பொருளாதாரச் சூழல் குறித்து ஆக்ஸ்ஃபாம் அறிக்கை சொல்லும் உண்மை இது.

டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெறும். பல நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, முக்கியமான பொருளாதார முடிவுகளை எடுப்பார்கள். இந்த மாநாட்டையொட்டி, ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். உலகெங்கும் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த அறிக்கை இது.

விண்ணை முட்டும் கட்டடங்கள் ஒரு பக்கமும், குடிசைகள் இன்னொரு பக்கமும் இருக்கும் சமநிலையற்ற சமூகம் பல நாடுகளில் உண்டு. இந்த இரண்டுவித மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. பெரும் கோடீஸ்வரர்கள் மேலும் மேலும் கோடீஸ்வரர்களாக ஆகிக்கொண்டே போக... ஏழைகள் இன்னும் ஏழைகளாகும் அவலம் குறித்து இந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கை விவரிக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வின் மோசமான விளைவு குறித்து இது எச்சரிக்கும்.

கொரோனாவைவிட ஆபத்தானது ஏற்றத்தாழ்வு வைரஸ்!

கொரோனா சமத்துவமாக எல்லோரையும் பாதித்தது என நாம் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், ‘இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு, கொரோனா காலத்தில் இன்னும் மோசமாகிவிட்டது’ என்கிறது, இப்போது வெளியாகியுள்ள ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.

கொரோனாவும் ஊரடங்கும் இரட்டை இடிகளாக எளிய மக்களை வதைத்த நாள்களில், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் அகதிகள்போல நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினார்கள். பலர் இறந்தேபோனார்கள். ‘எத்தனை பேர் இறந்தார்கள் என்ற புள்ளிவிவரம் இல்லை’ என அரசு சொன்னது. அதே காலகட்டத்தில் உலகின் நான்காவது பெரிய பணக்காரராக ஆனார் முகேஷ் அம்பானி. ‘கொரோனா வைரஸைவிட ஏற்றத்தாழ்வு வைரஸ் மிக மோசமாக மக்களைத் தாக்கியிருக்கிறது. கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வாழ்க்கையே போராட்டமான இந்தக் காலகட்டத்தில்தான் பல பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்தது’ என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. இது தரும் பல புள்ளிவிவரங்கள் முகத்தில் அறைகின்றன...

 கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து மீள முடியாமல் உலகெங்கும் கோடிக்கணக்கான எளிய மக்கள் தவிக்கிறார்கள். ஆனால், உலகின் டாப் 1,000 பணக்காரர்கள், வெறும் ஒன்பதே மாதங்களில் தங்கள் இழப்பைச் சரிக்கட்டிவிட்டனர்.

 உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்தக் காலத்தில் பெருமளவு உயர்ந்தது. கொரோனா காலத்தில் அவர்கள் ஈட்டிய பணத்தைக் கொடுத்தால், இந்த உலகிலுள்ள எல்லோருக்குமே இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுவிட முடியும்.

 கொரோனாவுக்காக மார்ச் மாதம் ஊரடங்கு அமலான நாளிலிருந்து, இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. இந்தியா முழுக்க இருக்கும் 13.8 கோடி ஏழைகளுக்கு இந்தப் பணத்தைப் பிரித்துக் கொடுத்தால், ஆளுக்கு 94,045 ரூபாய் கொடுக்க முடியும்.

 கடுமையான ஊரடங்கின்போது இந்தியாவின் 84 சதவிகித குடும்பங்கள் பல்வேறு வருமான இழப்புகளைச் சந்தித்தன. அதேநேரத்தில் இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பு 35 சதவிகிதம் உயர்ந்தது.

 இந்தியாவின் டாப் 11 பணக்காரர்கள் இந்தக் காலத்தில் அடைந்த சொத்து மதிப்பு உயர்வைவைத்து, இந்திய சுகாதார அமைச்சக பட்ஜெட் செலவை 10 ஆண்டுகள் செய்ய முடியும். இப்படி அதிகரித்த சொத்துகளுக்கு வெறும் ஒரு சதவிகித வரி விதித்தாலே, தரமான மருந்துகளை மிகக் குறைந்த விலையில் வழங்கும் மத்திய அரசின் ஜன் ஔஷதி திட்டத்துக்கு 140 மடங்கு அதிக நிதி ஒதுக்க முடியும்.

கொரோனாவைவிட ஆபத்தானது ஏற்றத்தாழ்வு வைரஸ்!

எளிய மக்களையே கொரோனாகாலக் கட்டுப்பாடுகள் பெரிதும் பாதித்தன என்பதையும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை வேதனையுடன் விவரிக்கிறது. ‘அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவுவதே இந்தியாவில் பல குடும்பங்களுக்கு ஆடம்பரமான வசதியாகத் தெரிந்தது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு தண்ணீர் என்பது விலைமதிப்புள்ள பொருள். 32 சதவிகித நகர்ப்புறக் குடும்பங்கள் ஒற்றை அறை வீடுகளில் வசிக்கின்றன. சமூக இடைவெளியை இவர்களால் பின்பற்றவே முடியவில்லை’ என்கிறது அறிக்கை.

வெறுமனே அவலங்களையும் ஏற்றத்தாழ்வு களையும் பட்டியலிடாமல், சில தீர்வுகளையும் சொல்கிறது இந்த அறிக்கை. ‘குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும். விலைவாசிகளுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட கால இடைவெளியில் இதை அவ்வப்போது அதிகரிக்க வேண்டும். ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு இரண்டு சதவிகித கூடுதல் வரி விதிக்க வேண்டும். கொரோனா நாள்களில் அதிக லாபம் சம்பாதித்த நிறுவனங்களைத் தனியாகப் பட்டியல் எடுத்து, அவர்களுக்குத் தற்காலிக வரி விதிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருக்கிறது அறிக்கை.

ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி விட்டு, பணக்காரர்கள் இன்னும் மேலே மேலே போகும் சமநிலையற்ற சமுதாயம் ஆபத்தானது. ஏழைகளுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை ஏற்படுத்துவது அரசின் பொறுப்பு.