Published:Updated:

பேக்கிங் எண்ணெய் விற்பனை... கலப்படத்தைத் தடுக்கவா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவா?

பேக்கிங் எண்ணெய் விற்பனை
பிரீமியம் ஸ்டோரி
News
பேக்கிங் எண்ணெய் விற்பனை

‘இரண்டு எண்ணெய்களைக் கலந்து விற்பனை செய்யலாம்’ என்று 2011-ல் கொண்டு வந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்ட விதிகள் சொல்கின்றன.

`சமையல் எண்ணெயை பாட்டில் அல்லது பாக்கெட்டுகளில் பேக் செய்துதான் விற்க வேண்டும். சில்லறையில் (லூஸில்) விற்பனை செய்யக் கூடாது’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, தமிழகம் முழுவதுமுள்ள சில்லறை எண்ணெய் வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதமே நடைமுறைக்கு வர வேண்டிய தமிழக அரசின் இந்த உத்தரவு, கொரோனா ஊரடங்கால் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது அதை மீண்டும் ஆகஸ்ட் வரை தள்ளிவைத்திருக்கிறார்கள். இந்தநிலையில், “பெரு நிறுவனங்களுக்காகவே இப்படி ஓர் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது” என்று புகார் எழுப்புகிறார்கள் சில்லறை எண்ணெய் வியாபாரிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது குறித்து மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி யிடம் பேசினோம். “நாடு முழுவதும் லூஸில் சமையல் எண்ணெய் விற்க எந்தத் தடையும் இல்லாதபோது, தமிழகத்தில் மட்டும் இதை நடைமுறைப்படுத்துவது ஏன்? இதன் மூலம் சிறிய அளவில் எண்ணெய் வியாபாரம் செய்யும் லட்சக்கணக்கான சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறார்கள்.

பேக்கிங் எண்ணெய் விற்பனை... கலப்படத்தைத் தடுக்கவா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவா?

உணவுக்கான எண்ணெய் விற்பனையில் ‘கலப்படம்’ என்று சொல்வதே தவறு. ‘இரண்டு எண்ணெய்களைக் கலந்து விற்பனை செய்யலாம்’ என்று 2011-ல் கொண்டு வந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்ட விதிகள் சொல்கின்றன. சிக்கரி கலந்து காபி தூள் விற்பனை செய்வதுபோலத்தான் இதுவும். கடலை எண்ணெய், எள் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றில் பாமாயில் எண்ணெயைக் கலந்து விற்பனை செய்யலாம். இதைத்தான் அதிகாரிகள் `கலப்படம்’ என்கிறார்கள்.

பேக்கிங் எண்ணெய் விற்பனை... கலப்படத்தைத் தடுக்கவா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவா?

விற்பனை செய்யும் உணவுப் பொருள் தரமானதா என்றுதான் உணவுப் பாதுகாப்புத்துறையினர் பார்க்க வேண்டும். அதில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். நம் நாட்டில் 30 சதவிகித சமையல் எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் அர்ஜென்டினா, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெயுடன் கலந்தே இங்கு சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்யவில்லை யென்றால், சாதாரண மக்களுக்குக் குறைந்த விலையில் எண்ணெய் கிடைக்காது. பெரிய நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன.

சிறு மளிகைக்கடைகளில் லூஸில்தான் எண்ணெய் வியாபாரம் செய்கிறார்கள். அங்கெல்லாம் பத்து, இருபது ரூபாய்க்கு எண்ணெய் வாங்கும் ஏழை மக்கள் என்ன செய்வார்கள்... அப்படியே பேக்கிங் செய்து விற்பனை செய்யலாமென்றால் 200 மி.லி பாட்டிலுக்கு எட்டு ரூபாயும், ஒரு லிட்டர் பாட்டிலுக்கு 15 ரூபாயும் கூடுதல் செலவாகும். இது மக்களுக்குக் கூடுதல் சுமை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிர, பேக்கிங் செய்ய தனியாகவும், அதற்கு லேபிள் ஒட்டத் தனியாகவும் லைசென்ஸ் வாங்க வேண்டும். அதற்கு ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகும். எண்ணெய் தரமாக இருந்து, லேபிளில் எழுத்துப்பிழை ஏற்பட்டால்கூட 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். சிறு வியாபாரிகளால் இதைத் தாக்குப்பிடிக்க முடியாது. கொரோனா ஊரடங்கால் எண்ணெய் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படியான சூழலில் லூஸில் எண்ணெய் விற்கக் கூடாது என்று சொல்வது மேலும் நஷ்டத்தில் தள்ளும்’’ என்றார்.

கிருஷ்ணமூர்த்தி - சோமசுந்தரம்
கிருஷ்ணமூர்த்தி - சோமசுந்தரம்

இது குறித்து மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரத்திடம் கேட்டோம்.

“ `லூஸில் சமையல் எண்ணெய் விற்கக் கூடாது’ என்பது இப்போது போடப்பட்ட உத்தரவு இல்லை. ஏற்கெனவே உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளில் உள்ளதுதான். இரண்டு எண்ணெய்களைக் கலந்தாலே அது கலப்படம்தான். அவர்கள் சொல்வதுபோல வைத்துக்கொண்டாலும், 80 சதவிகித நல்லெண்ணெயில் 20 சதவிகிதம் பாமாயில் கலக்கலாம். ஆனால், இவர்கள் 20 சதவிகித நல்லெண்ணெயில் 80 சதவிகிதம் பாமாயிலை கலந்து விற்கிறார்கள். இப்படிச் செய்துவிட்டு, அதை நியாயப்படுத்துவதுதான் வேதனை. பாமாயில் தவிர வேறு சில ரசாயனங்க ளையும் கலக்கிறார்கள்.

இதில் சிறு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. விற்பனையாகும் அனைத்து எண்ணெய்களையும் சோதனை செய்கிறோம். அதனால், பேக்கிங்கில் எண்ணெய் விற்பனை செய்தால்தான் கலப்படம் செய்வதைத் தடுக்க முடியும்” என்றவரிடம், ‘‘பேக்கிங்கில் கலப்பட எண்ணெயை அடைத்து விற்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’’ என்று கேட்டோம். ‘‘தரச்சான்று வாங்கினால் மட்டுமே பேக்கிங் செய்து விற்க முடியும். அதன் பிறகும் கலப்பட எண்ணெயை பேக்கிங்கில் விற்பது கண்டுபிடிக்கப் பட்டால் தரச்சான்றை ரத்துசெய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்போம். இதனால், கலப்படம் குறையும்’’ என்றார்.

சார், நல்ல எண்ணெய் கிடைக்குமா?