Published:Updated:

கொத்தடிமைகளாக 8,000 ஆர்டர்லிகள்... போலீஸ் பயிற்சி பாத்திரம் தேய்க்கவா?

ஆர்டர்லி முறை
பிரீமியம் ஸ்டோரி
ஆர்டர்லி முறை

ஓரிரு உயர் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தவிர, இதர அதிகாரிகளின் வீடுகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 8,000 பேர் ஆர்டர்லிகளாகப் பணிபுரிகிறார்கள்.

கொத்தடிமைகளாக 8,000 ஆர்டர்லிகள்... போலீஸ் பயிற்சி பாத்திரம் தேய்க்கவா?

ஓரிரு உயர் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தவிர, இதர அதிகாரிகளின் வீடுகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 8,000 பேர் ஆர்டர்லிகளாகப் பணிபுரிகிறார்கள்.

Published:Updated:
ஆர்டர்லி முறை
பிரீமியம் ஸ்டோரி
ஆர்டர்லி முறை

“நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும், ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது. ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கு ஒரு வார்த்தை போதும். ஆனால், அது அரசிடமிருந்தோ, டி.ஜி.பி-யிடமிருந்தோ வருவதில்லை” - ஆர்டர்லி முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் சீற்றம்தான் இது.

ஆர்டர்லி முறைக்கு எதிராக நீதிமன்றம் சீறுவது இது முதன்முறையல்ல. 2018-ல் ஆர்டர்லி முறைக்கு எதிரான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றுவோரின் பட்டியலைத் தாக்கல் செய்யுங்கள்” என்று அப்போதைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ‘ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக, 1979-ல் வெளியிடப்பட்ட அரசாணையைத் தீவிர மாகக் கடைப்பிடித்துவருகிறோம்’ என்று காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்காதது தனிக்கதை. அந்த வழக்கும் நாளடைவில் மங்கிப்போனது.

கொத்தடிமைகளாக 8,000 ஆர்டர்லிகள்... போலீஸ் பயிற்சி பாத்திரம் தேய்க்கவா?

இப்போது உத்தரவு பிறப்பித்திருக்கும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். ஆர்டர்லி விவகாரத்தில் போலீஸ் டி.எஸ்.பி-யில் தொடங்கி, டி.ஜி.பி-க்கள் வரை பலருமே இந்தக் கொத்தடிமை முறையைக் கையாள்வதால், நீதிமன்றத்தின் உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆர்டர்லியாகப் பணிபுரியும் காவலர்கள் சிலரிடம் பேசினோம். “கிரேடு-2 காவலர்கள் பணிக்குச் சேரும்போது, பட்டாலியன், ஆயுதப் படையில்தான் முதலில் பணியாற்றுவார்கள். காவல் உயரதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்ப்பதற்கு, இந்த கிரேடு-2 காவலர்கள்தான் ‘ஆர்டர்லி’யாக அனுப்பி வைக்கப்படுவார்கள். சில சமயங்களில், இதர காவல் பிரிவில் பணிபுரியும் காவலர்களையும் ஆர்டர்லியாகப் பணியமர்த்துவது உண்டு. சம்பளமெல்லாம் ஒன்றுதான்... ஆனால், வேலைதான் அடிமையைவிட மோசமானது.

அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதில் தொடங்கி, சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது, கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவருவது வரை அனைத்தையும் செய்தாக வேண்டும். அதிகாரிகள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் இன்னும் சிரமம். ‘டயாபர்’ மாட்டிவிடுவதில் தொடங்கி, அந்தக் குழந்தைகளுடன் விளையாடுவது வரை எங்கள் வேலைதான். சில வீடுகளில், வளரிளம் பருவத்திலிருக்கும் அதிகாரிகளின் பிள்ளைகள், நண்பர்கள் முன்னிலையில் தங்கள் கெத்தைக் காட்டுவதற்காக, எங்களைக் கேவலமாகப் பேசி அவமானப் படுத்துவார்கள். அதிகாரி வீட்டு நாயைக் குளிப்பாட்டுவதும், வாக்கிங் அழைத்துச் செல்வதும்கூட எங்கள் வேலைதான்.

‘ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், வீட்டு வேலைக்கென ஒருவரை நியமித்துக் கொள்ளலாம். அவர்களுக்கான சம்பளமாக மாதம் 8,000 ரூபாய் அரசே கொடுத்துவிடும்’ என்று 2011-லேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. 2017-ல், இந்தச் சம்பளம் 12,000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கப்பட்டது. அந்தச் சம்பளத்தில் ஆட்களையும் பணியில் அமர்த்திக்கொண்டு, ஒவ்வோர் அதிகாரியும் தனக்கெனத் தனியாக ஆர்டர்லிகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிறைத்துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி உச்சபட்சமாக 24 பேரை ஆர்டர்லியாகத் தன் இல்லத்தில் வைத்திருக்கிறார். தென்மாவட்டத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியின் அடைமொழியே ‘பட்டு’தான். அவரின் பட்டுப் புடவைகளை க்ளீன் செய்வதற்கென தனி பெண் ஆர்டர்லி ஒருவர் பணியில் இருக்கிறார்.

கொத்தடிமைகளாக 8,000 ஆர்டர்லிகள்... போலீஸ் பயிற்சி பாத்திரம் தேய்க்கவா?

மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எஸ்.பி., தன் வீட்டில் 16 ஆர்டர்லிகளை வைத்திருக்கிறார். எஸ்.பி-யின் உறவினர்களை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதில் தொடங்கி, அவரின் ஆடைகளை அயர்ன் செய்வதுவரை சகலத்தையும் முடிப்பது ஆர்டர்லிகள்தான். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி தூக்கியடிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், 19 பேரை ஆர்டர்லிகளாக வைத்திருக்கிறார். சி.பி.சி.ஐ.டி., பொருளாதாரக் குற்றப்பிரிவு, தீயணைப்பு, கடலோரப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் உயரதிகாரிகள்கூட, 10-க்கும் குறையாத ஆர்டர்லிகளை வீட்டு வேலைக்கென வைத்திருக்கிறார்கள். முன்னாள் டி.ஜி.பி-க்கள் பலருடைய வீட்டிலும் இன்னமும் ஆர்டர்லிகள் பணியில் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... இன்றைய டி.ஜி.பி-யும்கூட ஆர்டர்லி வைத்திருக்கிறார்.

ஓரிரு உயர் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தவிர, இதர அதிகாரிகளின் வீடுகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 8,000 பேர் ஆர்டர்லிகளாகப் பணிபுரிகிறார்கள். இந்தக் கணக்கை அதிகாரிகள் ஒருபோதும் சொல்லப்போவதில்லை. ஒவ்வொருவர் வீட்டிலும் ஐந்துக்கும் குறைவானவர்களே பணிபுரிவதாக ஒரு பொய்க் கணக்கையும் காட்டுவதால், உண்மை நிலவரம் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி., ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் இவர்கள் நினைத்தால், ஒரே இரவில் ஆர்டர்லி முறையை ஒழித்துவிடலாம். ஆனால், அதைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை” என்றனர் ஆற்றாமையுடன்.

‘ஆர்டர்லி முறையே வெட்கக்கேடானது. அதை முற்றிலுமாக ஒழியுங்கள்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, ‘தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆர்டர்லிகளை திருப்பி அனுப்புங்கள்’ என்று புது ரூட்டில் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்புகிறார் டி.ஜி.பி சைலேந்திரபாபு. எது தேவை, தேவைக்கு அதிகம் என்பதற்கு என்ன வரையறை... `போலீஸ் பயிற்சி எடுத்தது பாத்திரம் தேய்க்கத்தானா?’ என்பதை டி.ஜி.பி தெளிவுபடுத்த வேண்டும்.

“அதிகாரிகளின் குழப்படி பதில்களுக்கு இசைந்து போகாமல், ஆர்டர்லி அடிமை முறையை ஒழிக்க வேண்டும்” என்பதே காவலர்களின் ஏக்கக் குரல்!