Published:Updated:

ஒரு கையில் புத்தகம்... மறு கையில் கத்தி! - பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?

பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?
பிரீமியம் ஸ்டோரி
பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?

வேறு எந்தக் காலத்திலும் இல்லாதவகையில் சமீபகாலமாக இளைஞர்கள் - மாணவர்களிடம் வன்முறை கலாசாரம் மிக மோசமாகப் பெருகிவிட்டது.

ஒரு கையில் புத்தகம்... மறு கையில் கத்தி! - பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?

வேறு எந்தக் காலத்திலும் இல்லாதவகையில் சமீபகாலமாக இளைஞர்கள் - மாணவர்களிடம் வன்முறை கலாசாரம் மிக மோசமாகப் பெருகிவிட்டது.

Published:Updated:
பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?
பிரீமியம் ஸ்டோரி
பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?

சம்பவம் 1

விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட எட்டுப் பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள்!

சம்பவம் 2

சேலம் அருகே மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில், 12-ம் வகுப்பு மாணவனைத் தலைமுடியை ஒழுங்காகச் சீர்செய்துவர அறிவுறுத்தியுள்ளார் தலைமை ஆசிரியர். கோபமுற்ற மாணவன், கைக்குக் கிடைத்த பொருளைக்கொண்டு தலைமை ஆசிரியரைத் தாக்க முற்பட்டுள்ளான். தலைமை ஆசிரியரின் அழைப்பின் பேரில், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மாணவனை அவனுடைய உறவினர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தினர். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே மறைத்துவைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்துத் தலைமை ஆசிரியரைக் குத்த முயன்றுள்ளான் மாணவன். பதறிப்போன தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்களைக் கூச்சலிட்டு அழைக்க, அவர்கள் வந்து பாட்டிலைப் பிடுங்கி, போலீஸுக்கும் தகவல் கூறி வரவழைத்தனர். போலீஸார் “நீ என்ன அவ்வளவு பெரிய ரௌடியா?” என்று கேட்க, “நான் ரௌடிதான்... என்ன இப்ப?” என்றான் அந்த மாணவன். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

சம்பவம் 3

தேனி தேவதானப்பட்டியில், புத்தகம் கொண்டுவராமல் பள்ளிக்கு வந்த மாணவனைக் கண்டித்த ஆசிரியரை வகுப்பறையிலேயே தாக்கியிருக்கிறான் மாணவன். மறுநாள் கத்தியோடு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான் ஒரு மாணவன். ஆசிரியர் அதை வீடியோ எடுக்கவே “என்ன பண்ணிருவாங்க. போலீஸ்கிட்ட காட்டுவீங்களா? போலீஸையே குத்துறதுக்கு எங்கிட்ட திறமை இருக்குது. ஏறினா ரெயிலு... இறங்கினா ஜெயிலு... போட்டா பெயிலு” என்று பஞ்ச் வசனம் பேசியிருக்கிறான். தேனி மாவட்டம் தேவாரம், ஜி.கல்லுப்பட்டி உள்ளிட்ட ஊர்களிலுள்ள ஆசியர்களும் மாணவர்களால் தொடர்ந்து மிரட்டப்படும் சம்பவம் நடக்கவே, அனைவரும் தேனி சி.இ.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

ஒரு கையில் புத்தகம்... மறு கையில் கத்தி! - பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?

சம்பவம் 4

சென்னையில் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் தொங்கி ரகளை செய்துவந்த மாணவர்களைச் சமாளிக்க முடியாமல், போக்குவரத்துக் காவலர் அருகே பஸ்ஸை நிறுத்திப் புகார் செய்திருக்கிறார் நடத்துனர். போக்குவரத்துக் காவலர் அந்த மாணவர்களை இறக்கிவிடவே, பேருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. திடீரென்று பேருந்தைத் துரத்திக்கொண்டு ஓடிய நான்கு மாணவர்களும் அதில் ஏறி நடத்துனரைத் தாக்கியுள்ளனர்.

இவை மட்டுமல்ல, செங்கல்பட்டில் ஓடும் அரசுப் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் இரு பாலரும் சேர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. கும்பகோணத்தில் பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களைக் கண்டித்த ஓட்டுநரை, மாணவர்கள் தாக்கியுள்ளனர். திருச்சியிலும் இதே போன்றதொரு சம்பவத்தில் நடத்துனர் தாக்கப்பட்டுள்ளார். இது தவிர, காரைக்குடி பள்ளி வகுப்பறையில் மொபைல் பயன்படுத்திய மாணவரைக் கண்டித்த ஆசிரியரைக் கத்தியால் குத்தினான் மாணவன். சென்னை எலெக்ட்ரிக் ரயில்களில் ஆபத்தான முறையில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களைக் கண்டித்த ரயில்வே ஊழியர் மிரட்டப்பட்டார். இரவு நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டு மாணவர்கள் கைதாவது வழக்கமாகிவிட்டது. இப்படியாகப் பள்ளி மாணவர்கள் மீதான குற்றப்பட்டியல் சமீபகாலமாக நீண்டுகொண்டே போகிறது. மாணவர்களின் தொடர்ச்சியான குற்றச் சம்பவச் செய்திகளால், ‘ஒரு கையில் புத்தகம்; மறு கையில் கத்தி’ என்கிற பிம்பம்தான் மனதில் எழுகிறது!

வெடிக்கும் மன அழுத்தம்!

``வேறு எந்தக் காலத்திலும் இல்லாதவகையில் சமீபகாலமாக இளைஞர்கள் - மாணவர்களிடம் வன்முறை கலாசாரம் மிக மோசமாகப் பெருகிவிட்டது. தன்னலம் பெருகி, சகிப்புத்தன்மையே இல்லாமல் போய்விட்டது. சமூகத்தைப் பற்றியோ, மற்றவர்கள் கஷ்டத்தைப் பற்றியோ கவலை இல்லாமல், தனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும், தான் விரும்பியது கிடைக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். தங்கள் போக்கில் யாராவது குறுக்கிட நேர்ந்தால், அவர்கள்மீது வெறுப்புணர்வுகொள்வதும், வன்முறையை நிகழ்த்துவதுமாகச் செயல்பட்டுவருகிறார்கள்” என்று நம்மிடம் இந்தச் சம்பவங்கள் குறித்த வருத்தத்தைப் பதிவுசெய்த மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் இவற்றுக்கான காரணம் குறித்துக் கேட்டோம்...

“பதின்ம வயதில் மாணவர்கள் சிறு சிறு குறும்புகளும், விளையாட்டுத்தனங்களும் உடையவர்களாக இருப்பார்கள். பள்ளியில் சக நண்பர்களிடம் அது வெளிப்பட்டு ஒரு விளையாட்டாகக் கடந்துபோகும். கொரோனா காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கிறார்கள் மாணவர்கள். அவர்களின் பதின்ம வயதுக் குறும்புகளைப் பெற்றோர்கள் உடனுக்குடனே கண்டிப்பதும், திருத்த முயல்வதும் நடக்கிறது. இதனால் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகும் சிறுவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்களாக மாறிவிடுகின்றனர். கொரோனா முடிந்து பள்ளிகள் திறந்ததும், அந்த அழுத்தங்களெல்லாம் வெடித்து இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்கின்றன” என்றவர், கல்விக்கூடங்கள் குறித்தும் கவலை பகிர்ந்தார்.

“கல்விக்கூடங்கள் முழுமையாக மதிப்பெண் அடிப்படையில் மாறிவிட்டன. அன்றைய காலகட்டத்தில் பாடத்திட்டம் என்பது நீதிநெறி, ஒழுக்கம் என மானுட அறத்தைக் கற்பித்தது. ஆனால், இன்றைக்கு மதிப்பெண் மட்டுமே இலக்கு. நீதிநெறிகள் இடம்பெறும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களையெல்லாம் நுழைவுத்தேர்வுகளுக்கும், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கும் பயன்படாது என ஒதுக்கிவைக்கிறார்கள். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே மதிப்பெண்ணை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், சிறு வயதிலேயே மாணவர்களுக்குச் சரி எது, தவறு எது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது” என்றார்.

சிவபாலன் இளங்கோவன் - லிபி ஆரண்யா
சிவபாலன் இளங்கோவன் - லிபி ஆரண்யா

“நாம் அனைவருமே பொறுப்புதான்!”

“மாணவர்களை மட்டுமே குற்றவாளிகளாகக் கூறிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. இவை அனைத்துக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் என அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் கல்வியாளர் லிபி ஆரண்யா. ``கடந்த பத்தாண்டுகளாகவே அரசியல், திரைத்துறை, ஊடகம், கல்வி என அனைத்துத் துறைகளும் ஒரு நிலைமாற்ற காலத்தில்தான் (Transition Period) இருக்கின்றன. இந்தப் பிரச்னையை இவர்களின் கூட்டு முயற்சியால்தான் சரிசெய்ய முடியும். பள்ளிகளில் மாணவர்களின் மனநிலை இரண்டுவிதமாக இருக்கிறது. ஏதேனும் ஒரு தவறு செய்து, அதை ஆசிரியர் கண்டித்துவிட்டால், மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்துகொள்வதும் நிகழ்கிறது. அதேசமயம், வெறுப்பான மாணவர் அந்த ஆசிரியரைத் திருப்பித் தாக்குவதும் நிகழ்கிறது. கேட்டாலும் சிக்கல், கேட்காவிட்டாலும் தவறு என்ற சூழ்நிலையில் பல ஆசிரியர்கள் நமக்கு எதுக்கு வீண் பிரச்னை என எதையும் கண்டுகொள்ளாமல் விலகிச்செல்ல நேரிடுகிறது. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உறவு நீர்த்துப்போவதோடு மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகிறது” என்றவரிடம், இதற்கான தீர்வு குறித்துக் கேட்டோம்.

“இவற்றைச் சரிசெய்ய வேண்டுமானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் சேர்ந்த ஒரு நிபுணத்துவம் பெற்ற குழுவை மாவட்டவாரியாக அரசாங்கம் உருவாக்க வேண்டும். மாணவர்களுக்காக மனநல ஆலோசனை முகாம்கள், பள்ளியில் நடக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வுகள் நடத்தித் தீர்வுகாணும் வகையில் இயங்க வேண்டும். அதேபோல, பள்ளிகளில் நடக்கும் பிரச்னைகளை நேரடியாகக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று, வழக்காக்கி மாணவர்களைக் கூர்நோக்கு இல்லங்களுக்குக் கொண்டுசெல்லும் தீவிரமான நடைமுறை இருக்கிறது. அவற்றைத் தவிர்க்க பள்ளிக்கும் காவல்துறைக்கும் இடையில் பொதுவான ஒரு நபரையோ, குழுவையோ நியமித்து, பிரச்னைகள் ஏற்படும் சூழ்நிலையில் சுமுகமாகப் பேசித் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

மிக அவசரமாகக் கவனிக்கவேண்டிய, மிக முக்கியமான சமூகப் பிரச்னை இது. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?