Published:Updated:

தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா நீடிக்குமா?

தேசத்துரோக சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
தேசத்துரோக சட்டம்

காலனியாதிக்க காலத்தைக் கடுமையாகச் சாடும் பா.ஜ.க அரசு, ராஜ துரோகச் சட்டப் பிரிவையும் தூக்கியெறியவேண்டிய நேரம் வந்துவிட்டது.

தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா நீடிக்குமா?

காலனியாதிக்க காலத்தைக் கடுமையாகச் சாடும் பா.ஜ.க அரசு, ராஜ துரோகச் சட்டப் பிரிவையும் தூக்கியெறியவேண்டிய நேரம் வந்துவிட்டது.

Published:Updated:
தேசத்துரோக சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
தேசத்துரோக சட்டம்

இந்தியா முழுவதும் ‘தேசத்துரோகிகள்’ பெருகிவிட்டார்களோ என்று அச்சப்படும் அளவுக்கு இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ-வின் கீழ் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இந்தச் சட்டப்பிரிவை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், `நீக்க முடியாது’ என்று உறுதிகாட்டிய மத்திய அரசு, இப்போது அந்தச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிசீலிப்பதாக இறங்கிவந்திருப்பது எதிர்பாராத திருப்பம்.

‘ராஜ துரோகம்’ எனப்படும் ‘தேசத்துரோக’ நடவடிக்கைகளுக்கான பிரிவு 124 ஏ காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுக்கு எதிராகப் பேசினாலே தேசத்துரோகச் சட்டத்தை ஏவும் போக்கு அதிகரித்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினர் மீதும் தேசத்துரோக வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.

தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா நீடிக்குமா?

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிருணாள் பாண்டே, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உட்பட ஏழு பேர் மீது பிரிவு 124 ஏ பாய்ந்தது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனின் சமூகச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி, பெங்களூரைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டார். ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தபோது, அங்கு சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதும் இவ்வழக்கு பாய்ந்தது. பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இவ்வழக்கைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதற்கு உதாரணமாக, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமன் பாடல்களைப் பாட முயன்ற சுயேச்சை எம்.பி நவ்நீத் ராணா, சுயேச்சை எம்.எல்.ஏ ரவி ராணா ஆகியோர் கைதுசெய்யப்பட்டதைச் சொல்லலாம்.

2019-ம் ஆண்டு, “இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை அபர்ணா சென், வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா உட்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்களே... அதற்காக அவர்கள்மீது பிரிவு 124 ஏ பாய்ந்தது.

தியேட்டரில் தேசியகீதம் பாடப்பட்டபோது எழுந்து நிற்காத ‘குற்றத்துக்காக’க்கூட தேசத்துரோக வழக்கு ஏவப்படுகிறது. இப்படி வகைதொகை இல்லாமல் 124 ஏ-வை ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதற்கு எதிராகவும், அப்பிரிவை நீக்க வலியுறுத்தியும் எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி எஸ்.ஜி.வொம்பாட்கெரே உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு 2021-ம் ஆண்டு, ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர்கொண்ட அமர்வு இந்த வழக்கை மே 5-ம் தேதி விசாரித்தது. “தேசத்துரோகச் சட்டப் பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். அதை நீக்கவேண்டியதில்லை” என்று அப்போது மத்திய அரசு கூறியது. “இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை, ஒரு மரத்தை அறுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட ரம்பத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த காட்டையே அழிப்பதற்கு ஒப்பிடலாம்” என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்தார். கூடவே, “பிரிவு 124 ஏ-வுக்கு எதிரான வழக்கை ஏழு நீதிபதிகள்கொண்ட அமர்வுக்கு மாற்றலாமா என்று ஆராயப்படும்” என்று கூறிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்கியது.

தியாகு
தியாகு

ஆனால், வழக்கின் போக்கைப் புரிந்துகொண்ட மத்திய அரசு, “தேசத்துரோகச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்” என்று தன் நிலைப்பாட்டை மாற்றியது. “அப்படி ஒரு முடிவெடுக்கும்வரை இப்பிரிவின் கீழ் வழக்கேதும் பதியக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளரான தியாகுவிடம் பேசினோம். “Sedition (பிரிவு 124 ஏ) என்பதை ‘தேசத்துரோகம்’ என்று மொழிபெயர்த்துச் சொல்கிறார்கள். ஆனால், Sedition என்றால் ‘ராஜ துரோகம்’ என்று அர்த்தம். மன்னராட்சிக் காலத்தில் மன்னரை விமர்சிப்பது ராஜ துரோகம் என்று இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் காந்தி, பெரியார், திலகர் உட்பட பல பெரிய தலைவர்களுக்கு எதிராக இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டது. குடியரசு நாட்டில் இப்படியொரு சட்டம் இருக்கவே முடியாது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில்கூட இப்படிப்பட்ட சட்டம் கிடையாது. இந்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது. பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கெல்லாம் பிரிவு 124 ஏ-வைப் பயன்படுத்துகிறார்கள். இதுபோல, என்மீது பல வழக்குகள் இருக்கின்றன. தற்போது, என்.எஸ்.ஏ எனப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டம், உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என பயங்கரமான சட்டங்களை அரசு கையில் வைத்திருக்கிறது. ஆனாலும்கூட, அரசின் அதிகாரத்துக்கான ஓர் அடையாளமாக பிரிவு 124 ஏ-வை வைத்திருக்க வேண்டும் என்று இந்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்” என்கிறார் தியாகு.

காலனியாதிக்க காலத்தைக் கடுமையாகச் சாடும் பா.ஜ.க அரசு, ராஜ துரோகச் சட்டப் பிரிவையும் தூக்கியெறியவேண்டிய நேரம் வந்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism