Published:Updated:

சிறையில் பாலியல் உறவுக்கு அனுமதி... கைதிகளை சீர்திருத்துமா... முறைகேட்டுக்கு வழிவகுக்குமா?

சிறையில் பாலியல் உறவுக்கு அனுமதி
பிரீமியம் ஸ்டோரி
சிறையில் பாலியல் உறவுக்கு அனுமதி

சிறைச்சாலைகளில் ஓரினச்சேர்க்கை அதிக அளவில் நடப்பதாகப் பல செய்திகள் வருகின்றன.

சிறையில் பாலியல் உறவுக்கு அனுமதி... கைதிகளை சீர்திருத்துமா... முறைகேட்டுக்கு வழிவகுக்குமா?

சிறைச்சாலைகளில் ஓரினச்சேர்க்கை அதிக அளவில் நடப்பதாகப் பல செய்திகள் வருகின்றன.

Published:Updated:
சிறையில் பாலியல் உறவுக்கு அனுமதி
பிரீமியம் ஸ்டோரி
சிறையில் பாலியல் உறவுக்கு அனுமதி

கைதிகள் தங்கள் இணையருடன் சிறையிலேயே பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான அனுமதி இந்தியாவிலேயே முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அங்கு, பல்வேறு குற்றங்களுக்காகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஆண், பெண் கைதிகள் தங்கள் இணையரை சிறைக்கு வரவழைத்து, அவர்களுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்வதற்கான வசதிகள் செய்துதரப்பட்டிருக்கின்றன.

பாலியல் உணர்வு...

இந்தியச் சிறைகளில் 22,918 பெண் கைதிகள் உட்பட மொத்தம் 5,54,034 கைதிகள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக் குள்அடைபட்டுக் கிடக்கும் அவர்களின் வயிற்றுப் பசியைப் போக்க அங்கு உணவு வழங்கப்படுகிறது. ஆனால், குடும்பத்தைப் பிரிந்திருக்கும் அவர்களின் பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் இல்லை. அதனால், முறையற்ற பாலியல் உறவுகளும், அத்துமீறல்களும், பாலியல் வன்கொடுமைகளும் சிறைகளில் நிகழ்கின்றன.

சிறைச்சாலைகளில் ஓரினச்சேர்க்கை அதிக அளவில் நடப்பதாகப் பல செய்திகள் வருகின்றன. அதன் காரணமாக, ஹெச்.ஐ.வி., பால்வினை நோய்கள் ஆகியவற்றால் கைதிகள் பாதிக்கப் படுகிறார்கள். ஆகவே, சிறைக் கைதிகளின் இணையர்கள் சிறைக்குச் சென்று தாம்பத்யம் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக இந்தியாவில் எழுப்பப்பட்டுவருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், சவுதி அரேபியா, கனடா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பிரேசில், பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் இதற்கான அனுமதி உண்டு. தற்போது, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு இத்தகைய நடைமுறையை அங்கு கொண்டுவந்திருக்கிறது.

சிறையில் பாலியல் உறவுக்கு அனுமதி... கைதிகளை சீர்திருத்துமா... முறைகேட்டுக்கு வழிவகுக்குமா?

ஏன் இந்த ஏற்பாடு?

பஞ்சாப் மாநிலத்தில், கோவிந்த்வால் சாஹிப் மத்திய சிறை, பதிண்டா பெண்கள் சிறை, நபா மாவட்டச் சிறை ஆகிய மூன்று சிறைகளில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் கைதிகள் தங்கள் இணையருடன் தாம்பத்யம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அமிர்தசரஸ் உட்பட மேலும் சில மத்தியச் சிறைகளிலும், மாவட்டச் சிறைகளிலும் இத்தகைய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தங்கள் இணையருடன் உறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பதால், சிறைக் கைதிகளின் மன அழுத்தம் குறைந்து, அவர்களுக்கு நம்பிக்கை உருவாகும் என்று மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள். பஞ்சாப் சிறைத்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ், “சிறைக் கைதிகளிடம் நன்னடத்தையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், குடும்ப உறவை வலுப்படுத்தவும், சிறைவாசத்தின் எதிர்மறைத் தாக்கத்தைத் தவிர்க்கவும், சமூகத்தில் சிறைவாசிகளின் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் இத்தகைய முடிவு எடுக்கப் பட்டிருக்கிறது” என்கிறார்.

யாருக்கெல்லாம் அனுமதி?

நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள், பரோலில் செல்லத் தகுதி இல்லாதவர்கள், நன்னடத்தைக் கைதிகள், கடைசி ஓராண்டுக் காலம் சிறையில் தவறு எதுவும் செய்யாதவர்கள் போன்ற கைதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பரோலில் அடிக்கடி வீட்டுக்குச் செல்லக் கூடியவர்கள், ஆபத்தான கைதிகள், ‘தாதா’க்கள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் வியாபாரிகள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், குடும்ப வன்முறையில் ஈடுபட்டவர்கள், ஹெச்.ஐ.வி., பால்வினை நோய்கள், காசநோய் போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த அனுமதி வழங்கப்படாது என்று பஞ்சாப் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டிருக்கிறது.

முறைகேடுக்கு வழிவகுக்குமா?

தாம்பத்யம் வைத்துக்கொள்ள சிறை வளாகங்களுக்குள் பாதுகாப்பான இடங்களில் அறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கட்டில், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் அறையில் சுமார் இரண்டு மணி நேரம் இணையருடன் தனிமையில் இருக்கலாம். இட வசதியைப் பொறுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அனுமதி வழங்கப்படும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. கைதியின் மனைவி அல்லது கணவர் என்பதை நிரூபிக்க திருமணச் சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற சான்று ஒன்றை அளிக்க வேண்டும். ஹெச்.ஐ.வி., கொரோனா, காசநோய், பால்வினைத் தொற்று நோய் எதுவும் இல்லை என்ற மருத்துவச் சான்றிதழை அரசு மருத்துவ மனையிலிருந்து வாங்கிவர வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தைப்போல தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் இத்தகைய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சிறைவாசிகள் மத்தியில் எழுந்திருக்கிறது. பணம் பாதாளம்வரை பாய்வதால் பீடி, கஞ்சா, மது, செல்போன் உட்பட அனைத்தும் சிறைகளுக்குள் கிடைக்கும் நிலையில், சிறைக்குள் தாம்பத்யத்தை அனுமதித்தால் அதிலும் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இது குறித்து மனித உரிமைகள் செயற் பாட்டாளரும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான ஹென்றி திபேனிடம் பேசினோம்.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

“தவறு செய்தவர்களைச் சீர்திருத்துவதற்கான இடம்தான் சிறை. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் சிறைகளில் இல்லை என்பது வருத்தத் துக்குரியது. ஊழலுடன் பின்னிப்பிணைந்த ‘காக்கி கலாசாரம்’ அங்கு இருக்கிறது. செல்போன், கஞ்சா போன்றவற்றை உள்ளே அனுமதிப்பதன் மூலம் மட்டுமல்லாமல், வேறு பல வழிகளிலும் அங்கு பணம் கொட்டுகிறது. இந்த நிலையை முதலில் மாற்ற வேண்டும். மருத்துவர்கள், மனநல நிபுணர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சுழற்சி முறையில் சிறைகளுக்கு ‘விசிட்’ செல்ல வேண்டும். அவர்களின் கண்காணிப்பில் சிறை இருக்க வேண்டும். சிறைகளில் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய பிறகு தான் சிறைக்குள் தாம்பத்யத்தை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அதிலும் முறைகேடுகள் நடக்கும். பணமும், அரசியல் செல்வாக்கும் படைத்தவர்கள் சிறையைப் பாலியல் விடுதியாக்கிவிடுவார்கள்” என்கிறார் ஹென்றி திபேன்.

இருக்கிற வசதியிலேயே ஆயிரத்தெட்டு முறைகேடுகள் நடக்கும்போது, இந்த விஷயத்தில் அவசரம் கூடாது!