Published:Updated:

ஒரு மரணம்... நான்கு கேள்விகள்!

தன் பதவியைப் பயன்படுத்தி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர் களுக்குக் கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்.

பிரீமியம் ஸ்டோரி

ஆசிரியர் பாலியல் வன்முறை செய்ததால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டாள் கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி. தொடரும் ஆசிரியர்-மாணவி பாலியல் துன்புறுத்தல்களைக் கையறு நிலையில் கவனித்துக்கொண்டிருக்கிற நமக்கு, நான்கு கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நம் சமூகத்துக்கு சில விஷயங்களில் நிச்சயம் தெளிவைத் தரும் என்ற நம்பிக்கையில் உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர், வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோரிடம் பேசினோம்.

1. நம் குடும்பங்களில் இன்னமும் பெண் பிள்ளைகள் பெற்றோரிடம் பாலியல் துன்புறுத்தல் பற்றி பகிர முடியாத சூழல் ஏன் உள்ளது?

பெற்றோரிடம் பகிர்ந்தால், திட்டுவார்கள் அல்லது அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இவையிரண்டுமே தீர்வு கிடையாது. முதலில், மகள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். இரண்டாவது, நடந்துகொண்டிருக்கிற பிரச்னையில் மகளுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். மூன்றாவதாக, மகள் பள்ளிக்கு அல்லது ஸ்பெஷல் கிளாஸுக்கு செல்ல மறுக்கிறாள் என்றால், ‘இவ படிக்கப் பிடிக்காம போக மறுக்கிறா’ என்ற முடிவுக்கு வந்து விடாமல், ‘அங்கு மகளுக்கு ஏதாவது பிரச்னை நிகழ்கிறதா’ என்று விசாரிக்க வேண்டும். இவையெல்லாம் நிகழாதபோது, ‘எனக்கு ஏதோ தப்பா நடக்குது; அது எனக்குப் பிடிக்கலை; என்னால அதைத் தடுக்கவும் முடியல; வீட்டுல சொன்னாலும் திட்டுவாங்க; என்னை நம்பவும் மாட்டாங்க; நான் தான் இதைத் தனியா ஹேண்டில் பண்ணணும்; ஆனா, என்னால முடியலை; இதுல இருந்து தப்பிக்கணும்னா செத்துடணும்’ என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பெண் பிள்ளைகள்.

ஒரு மரணம்... நான்கு கேள்விகள்!

2. உடலைப் புனிதப்படுத்துவதி லிருந்து பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களை எப்படி வெளிக்கொண்டு வருவது?

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ‘என்னைத் தவறா பயன்படுத்திட் டாங்க; அப்படிப் பயன்படுத் தினப்போ எனக்கு நோ சொல்லத் தெரியல; அதனால நானும் அந்தத் தப்புல பங்கெடுத்துட்டேன்’ என்கிற அவமான உணர்வும், குற்றவுணர்வும் வந்துவிடும். இந்த எண்ணத்தை கவுன்சலிங் மூலம், ‘உனக்கு விருப்பமில்லாமல் நடத்தப்பட்டது அல்லது உன்னை ஏமாற்றி உன் சம்மதத்துடன் நடத்தப்பட்டது’ என்பதைப் புரிய வைத்து, அவமானத்தையும் குற்ற உணர்வையும் நீக்கி விடலாம்.

சரஸ் பாஸ்கர்
சரஸ் பாஸ்கர்

3. பாலியல் கொடுமையால் பாதிக்கப்படும், உயிரிழக்கும் பெண்களின் அடையாளம் வெளியிடப்படுவதைத் தடுப்பது எப்படி?

2018-ல் உச்ச நீதிமன்றம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்களின் பெயர், இருப்பிடம், புகைப்படம் என எந்த விவரங்களையும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. கோவை மாணவியின் புகைப் படத்துடன் அவருடைய தற்கொலைச் செய்தியை வெளி யிட்ட 42 யூடியூப் சேனல்களை, போக்சோ சட்டம் 2012 பிரிவு23(2) படி பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் அவர் தொடர்பான தகவல்களை நீக்கும்படி கேட்டுக்கொண்டது கோவை மாநகர காவல்துறை. இதுதொடர்பான விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் பள்ளிக்கூட நிர்வாகத்தில் ஆரம்பித்து ஊடகங்கள் வரை இருக்க வேண்டும்.

கண்ணதாசன்
கண்ணதாசன்

4. 18 வயதுக்கு உட்பட்ட பெண் சட்டப்படி சிறுமி என்பதால், அவள் விரும்பி உடலுறவு ((consensual sex) வைத்துக்கொண்டாலும் பாலியல் கொடுமையே... பாதிக்கப்பட்ட பெண்ணை அவதூறு சொல்லாமல் இதை எப்படி அணுகுவது?

பதின்பருவத்தில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகம் நிகழும். அந்த வயதில் ‘நீ ரொம்ப அழகா இருக்கே; உன் சிரிப்பு அழகா இருக்கு’ என்று ஆண் பேசும்போது, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும். இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பெண்களிடம் நினைத்ததைச் செய்துவிடுவார்கள். இதை மேலோட்டமாகப் பார்க்கும் சமூகத்துக்கு, ‘அந்தப் பொண்ணும்தான் இதுக்கு சம்மதிச்சிருக்கு’ என்று தோன்றும். ஆனால், மைனர் சிறுமியைத் திட்டமிட்டு ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது, இது தொடர்பான நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்த எங்களைப்போன்ற உளவியல் நிபுணர்களுக்கு மட்டுமே தெரியும். பாலியல் கல்வியோடு, இப்படிப்பட்ட நபர்களை அடையாளம் காணும் அறிவையும், அதைப்பற்றிப் பெற்றோரிடம் தைரியமாகப் பேசலாம் என்ற நம்பிக்கையையும் மாணவிகளுக்குக் கொடுக்க வேண்டும். இதைவிட முக்கியமாக, தன் பதவியைப் பயன்படுத்தி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர் களுக்குக் கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு