Published:Updated:

தேசத்துரோக சட்டப்பிரிவு 124 ஏ... தூக்கியெறியப்பட வேண்டுமா?

தேசத்துரோக சட்டப்பிரிவு
பிரீமியம் ஸ்டோரி
தேசத்துரோக சட்டப்பிரிவு

தேசத்துரோக வழக்குகள் அதிகம் பயன்படுத்தப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

தேசத்துரோக சட்டப்பிரிவு 124 ஏ... தூக்கியெறியப்பட வேண்டுமா?

தேசத்துரோக வழக்குகள் அதிகம் பயன்படுத்தப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

Published:Updated:
தேசத்துரோக சட்டப்பிரிவு
பிரீமியம் ஸ்டோரி
தேசத்துரோக சட்டப்பிரிவு

‘இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவான 124 ஏ-வை சட்டப் புத்தகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்’ என்று அரசியல் கட்சிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவரும் நிலையில், தற்போது உச்ச நீதிமன்றமும் அதே குரலை ஒலித்திருக்கிறது.

இந்தியாவில் பிரிவு 124 ஏ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு உதாரணமாக, காஞ்சிபுரத்தில் 2006-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ‘காஞ்சி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பினர் பலமுறை கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். அவற்றின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதிருப்தியடைந்த மக்கள் மன்றத்தினர், ஒரு கழுதையின்மீது ‘மாவட்ட நிர்வாகம்’ என்று எழுதி, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நிறுத்தினர். அந்தக் கழுதையிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். கோபமடைந்த மாவட்ட ஆட்சியர், காஞ்சி மக்கள் மன்றத்தினர்மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி-க்கு உத்தரவிட்டார். உடனே, காஞ்சி மக்கள் மன்றத்தினர்மீது இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ-ன்கீழ் தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. கழுதையிடம் மனு கொடுத்த செயல், தேசத்துரோகம் ஆனது.

இன்னோர் உதாரணம்... ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தேசத்துரோக வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களில் விடுதலையான அவர் காந்தி சிலை, அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை ஆகிய சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தார். அதற்காக அவர்மீது மூன்று தேசத்துரோக வழக்குகள் பாய்ந்தன.

அனந்த பத்மநாபன், ஹென்றி திபேன்
அனந்த பத்மநாபன், ஹென்றி திபேன்

தேசத்துரோக வழக்குகள் அதிகம் பயன்படுத்தப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பீகார் மாநிலம் 168 வழக்குகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 139 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. உத்தரப்பிரதேசம் 112 வழக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

இப்படியான சூழலில்தான், பிரிவு 124 ஏ தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து மத்திய அரசிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘பிரிவு 124 ஏ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கும் இந்தப் பிரிவை சட்டத்திலிருந்து நீக்க வேண்டும்’ என்று ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி எஸ்.ஜி.ஓம்பத்கரே மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.கோபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவற்றை விசாரித்தது. அப்போது, மத்திய அரசை நோக்கிக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ‘‘பிரிவு 124 ஏ எனப்படும் தேசத்துரோக சட்டப்பிரிவு, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகக் காலனிய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. மகாத்மா காந்தி, கோபாலகிருஷ்ண கோகலே உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தலைவர்கள்மீது இந்தப் பிரிவின்கீழ் வழக்குகள் போடப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், இந்தச் சட்டம் தேவைதானா... இந்தச் சட்டத்தை மத்திய அரசு ஏன் இன்னும் ரத்துசெய்யவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘இந்தச் சட்டப்பிரிவு தேவையான ஒன்று. அதை நீக்க முடியாது’’ என்று கூறியதைத் தொடர்ந்து, பிரிவு 124 ஏ குறித்து தேசிய அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனந்த பத்மநாபனிடம் பேசினோம். ‘‘அரசின் கொள்கைகளையும் முடிவுகளையும் நியாயமான வரையறைக்கு உட்பட்டு யாரும் விமர்சிக்கலாம். கருத்துச் சுதந்திரம் என்ற அந்த உரிமையை அரசியல் சட்டத்தின் பிரிவு 19 (1), நம் அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுடன் கொள்கை மாறுபாடு கொண்டவர்களுக்கு எதிராக, நியாயமற்ற வகையில் இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் நிறைய பொய் வழக்குகள் பதியப்படுகின்றன. இந்தத் தவறு சரிசெய்யப்பட வேண்டும். பிரிவு 124 ஏ-வை நீக்கிவிட வேண்டும் என்பது சரியல்ல. அது, பிரச்னைக்குத் தீர்வும் அல்ல. இந்திய தேசத்துக்கு எதிரான சதிச் செயல்கள் நடைபெறுமானால், அப்போது பிரிவு 124 ஏ-வைப் பயன்படுத்தலாம். இந்தப் பிரிவை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய கறாரான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டும்’’ என்றார்.

தேசத்துரோக சட்டப்பிரிவு 124 ஏ... தூக்கியெறியப்பட வேண்டுமா?

மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், `மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் நிர்வாக இயக்குநருமான ஹென்றி திபேன், ‘‘இந்தியா சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக நாடாக மலர்ந்து, பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடும் உரிமை எனப் பல்வேறு உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன. பிறகெங்கே தேசத்துரோகச் சட்டத்துக்கு இடமிருக்கிறது? காஞ்சிபுரத்தில் கழுதைக்கு மனு கொடுத்த சம்பவத்தில், பிரிவு 124 ஏ-வை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியே பயன்படுத்தியிருக்கிறார். அந்த வழக்கு முடிவதற்கு 10 ஆண்டுகள் ஆகின. எத்தனை முறை அவர்கள் நீதிமன்றத்துக்கு அலைந்தார்கள்.., எத்தனை நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்று பார்த்தால், அது மிகப்பெரிய கொடுமை. கூடங்குளத்தில் அணுமின் திட்டத்துக்கு எதிராகப் போராடிய பெண்களின் இடுப்பில் இருந்த குழந்தைகள் மீதெல்லாம் தேசத்துரோக வழக்குகள் போட்டிருப்பதும் கொடுமையானதுதான்.

இந்தியாவில் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் 97 சதவிகிதம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எவ்வளவு கொடூரமான குற்றங்களாக இருந்தாலும், அவற்றுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் உரிய பிரிவுகள் இருக்கின்றன. அவைபோக, சிறப்புச் சட்டங்கள் இருக்கின்றன. எனவே, பிரிவு 124 ஏ கட்டாயம் நீக்கப்பட வேண்டும்’’ என்றார்.

மக்களுக்குத்தான் சட்டம்... சட்டத்துக்காக அல்ல மக்கள்!