லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அமெரிக்க பண்டிகையாகி வரும் தீபாவளி!

அமெரிக்க பண்டிகையாகி வரும் தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்க பண்டிகையாகி வரும் தீபாவளி!

- விஜி ராஜா

உலகமெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களும், இந்தியர்களும் நம் கலா சாரத்தை தாங்கள் வாழும் நாடுகள் தோறும் சிறப்பாக எடுத்துச்சென்றிருக்கிறார்கள். மேலும் அந்தச் சங்கிலியை அடுத்த தலைமுறை யினருக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அதன் ஓர் அங்கம்தான், வெளிநாடுகளில் கொண்டாடப் படும் நம் பண்டிகைகள். குறிப்பாக, அமெரிக்கா வில் களைகட்டும் தீபாவளி!

விஜி ராஜா
விஜி ராஜா

ஒரு காலத்தில் தீபாவளி பற்றி அமெரிக்க ஊடகங்களில் படிப்பதே அரிது. ஆனால் இப்போது நிலைமையே வேறு. இந்தியாவில் இருந்து இங்கு குடியேறிய மக்களின் எண்ணிக்கை அதிகமானது மட்டும் இல்லாமல், அவர்களின் கலாசார பற்று, இந்திய உணவு, இனிப்புகள் மற்றும் பண்டிகை கால தேவைகளின் விநியோக சங்கிலியின் காரணமாக, தீபாவளி பற்றி இப்போது அமெரிக்காவில் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரியும். ஆம், தீபாவளி ஒரு அமெரிக்கப் பண்டிகையாக மாறி வருகிறது.

நிறைய பெருநகரங்களில், பள்ளிகளிலேயே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? டெக்சாஸில் இருக்கும் மான்டிசோரி பள்ளிகளில் தீபாவளி வரும் வாரத்தில், குழந்தைகளுக்கு தீபாவளி பற்றி இந்திய, குறிப்பாக தமிழ் ஆர்வலர் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து பகிரச் சொல்லிக் கேட்கிறார்கள். பள்ளி மட்டுமா... ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி தொடங்கி முக்கிய அமெரிக்க தலைவர்கள் வரை தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வது, இந்திய மக்களின் எண்ணிக்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத் துக்கான சான்று.

 தீபாவளி குரூப் போட்டோ...
தீபாவளி குரூப் போட்டோ...

சரி, அமெரிக்க தீபாவளி எப்படி இருக்கும்? தீபாவளி இங்கு முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டமாக மாறி வந்தாலும், அதற்காக நம் நாட்டைபோல் ஃபெஸ் டிவல் ஹாலிடே எதிர் பார்க்க முடியாது அல்லவா? எனவே, மக்கள் தங்கள் தினசரிகளில் ஓடிக்கொண்டே தீபாவளி கொண்டாட வேண்டிய சூழல். மாணவர்கள் காலை 6:30 மணி முதல் கிளம்ப வேண்டும், பெரியவர்கள் வீட்டை விட்டு 8 மணிக்கெல்லாம் புறப்பட்டாக வேண்டும். எனவே, தீபாவளி வார நாள்களில் வந்தால் அன்று எளிமையாக சாமி கும்பிட்டுவிட்டு, ஊருக்கு வீடியோ கால் செய்து பெரியவர்களிடம் ஆசிர் வாதம் வாங்குவோம். ஃபேஸ் டைம் (Facetime) மூலம் நம் பெற்றோர் வழங்கும் அந்த ஆசி, கடல் தாண்டி இருக்கும் பிள்ளைகளுக்கு எல்லாம் உணர்வுசார்ந்த எரிபொருள். பிறகு, தீபாவளி மெயின் கொண்டாட்டம் அந்த வார இறுதிக்கு ஒத்திவைக்கப்படும்.

தீபாவளியை ஒட்டி வரும் வீக் எண்ட்... பிஸியான, உற்சாகமான, மகிழ்சியான, கொண்டாட்டமான ஃபெஸ்டிவல் மோடில் தளும்பும். கட்டிவைத்த ஆசையை எல்லாம் போதும் போதும் எனும் அளவுக்குக் கொண்டாடுவிடுவோம். அமெரிக்காவில், தமிழ் குடும் பங்களுக்கு பெரும்பாலும் நண்பர்கள்தான் உறவினர்கள். பண்டிகையைக் கொண்டாட நாங்கள் ஒன்றாய் சேரும் அந்த கூடல்... வருடத்தின் சிறப்பான, பெரிய கெட்-டுகெதர். அதற்கான திட்டமிடலை எல்லாம், ஒரு மாதத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடுவோம்.

சரி, அமெரிக்காவில் இருந்த படியே நாங்கள் இந்தியாவில் ஷாப்பிங் செய்யும் அனுபவம் பற்றி தெரியுமா?

அமெரிக்க பண்டிகையாகி வரும் தீபாவளி!

ஒரு மாதத்துக்கு முன்பே, டெக் னாலஜி புண்ணியத்தில் ஊருக்கு அப்பா, அம்மா/மாமனார், மாமி யாருக்கு வீடியோ கால் பண்ணி, புடவையை செலக்ட் பண்ணி, அதுக்கு மேட்ச் ஆக வீட்டுக்காரருக்கு சட்டையை செலக்ட் பண்ணி, குட்டீஸுக்கு ஷாப் பண்ணி, என்ன ஸ்வீட், காரம் வேண்டும் என்று பெரிய லிஸ்ட் கொடுத்து, தெய்வ தூதர்களாக இருக்கும் கொரியர் கம்பெனிகள் மூலம் அனுப்பி வைக்கச் சொல்வோம். ஊரில் இருக்கும் பெரியவர்கள், வெளி நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்படி பண்டிகை வேலைகளை ஆசையும் பாசமுமாகச் செய் வார்கள். அப்படி, ஊரில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட இனிப்புகள், புத்தாடைகளை, நாங்கள் சமைத்த அறுசுவை உணவுடன், இங்கு கெட்-டுகெதரில் நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ளும் திருப்தி அலாதியானது.

உணவு மட்டுமல்ல... பாட்டு, நடனம், பட்டி மன்றம் என்று தீபாவளி கொண்டாட்டங்கள் தாம்தூம் என்றிருக்கும். கொஞ்சம் இருட்டிய வுடன் மத்தாப்பு, புஸ்வானம், சங்கு சக்கரம் என்று போடுவோம். ஆனால், வெடிக்கும் வெடிகள் வெடிக்க பல நகரங்களில் அனுமதி கிடையாது. கோயில்களில் வானவேடிக்கை விடுவார்கள்; அங்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொள்ளலாம்.

அமெரிக்க பண்டிகையாகி வரும் தீபாவளி!

கோயில்களிலும், தமிழ் சங்கங்களிலும் தீபாவளி ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கும். அங்கெல்லாம் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கலந்துகொள்வது தவறாமல் செய்யும் ஒரு தீபாவளி சடங்காகி இருக்கிறது. காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பட்டிமன்றம், நடன நிகழ்ச்சி, பாட்டு கச்சேரி என்று மண் மணக்கும். ’மாம்... பர்கர் ரெடி?’ என்றிருக்கும் நம் குழந்தைகள், அன்று பட்டுப்பாவாடை, பின்னல் ஜடை, லெஹங்கா என்று கலை நிகழ்ச்சிகளில் கலக்குவதை பார்க்க கண் பூரித்துப்போகும்.

ஹைலைட்டாக, பெண்கள் ஷாப்பிங் செய்யும் வண்ணம் ஃபேன்ஸி நகைக்கடைகள், துணிக்கடைகள், கைவினை பொருள்கள், திண்பண்ட கடைகள் எனத் திருவிழாக் கோலம்தான். அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பாவோடு எல்லாம் சேர்ந்து பண்டிகையை கொண்டாட வாய்ப்பு இல்லாத வெளிநாட்டில், அவர்கள் சாயலில், வயதில் இங்கு நாம் பார்க்கும் ஒவ்வொரு வரையும், ‘எங்க அண்ணன் பொண்ணு மாதிரியே இருக்க’, ‘எங்க சித்தப்பா மாதிரியே கலகலனு பேசுறீங்க’ என்று சொல்லி பூரித்துக் கொள்வோம்.

அலங்காரம் பண்ணி, அழகழகாகப் புடவை கட்டி, கல்யாணம், காதுகுத்து என்று போக வாய்ப்பில்லாத அமெரிக்க தமிழ்ப் பெண்கள் எல்லாம், அந்த ஏக்கத்தை தீபாவளி யில் தீர்த்துக்கொள்வோம்.

அமெரிக்க பண்டிகையாகி வரும் தீபாவளி!

பொதுவாக ஜெர்கின், ஷூஸ் என்று அலுவல் வேலைகளில் பரபரக்கும் தமிழ்ப் பெண்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரே மாதிரி எடுத்த புடவையை உடுத்த, தீபாவளி எப்போது வரும் எனக் காத்திருந்து குரூப் போட்டோ எடுத்துக்கொள்ளும்போது, அக்கா, தங்கைகளுடன் இருப்பது போன்ற ஆத்ம திருப்தி. அலுவலகம் முதல் குடியிருப்புகள் வரை, அமெரிக்கர்களும், அமெரிக்காவில் வாழும் மற்ற நாட்டினரும், இந்தியர்களின் தீபாவளி அலப்பறைகளை ஆச்சர்யமாகப் பார்ப்பதும், வாழ்த்துவதும், கொண்டாட்டத்தில் இணைந்துகொள்வதும் இன்னும் சிறப்பு.

இப்படி... தீபாவளி பட்டும், இனிப்பும், மத்தாப்பும், மகிழ்ச்சியும் பிரமாண்டமாகி வருகிறது அமெரிக்காவிலும்!