லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

 தமிழக தீபாவளி ரவுண்ட் அப்!
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழக தீபாவளி ரவுண்ட் அப்!

தமிழக தீபாவளி ரவுண்ட் அப்!

திருமணம் முதல் புதுமனைப் புகுவிழா வரை வீட்டில் கொண்டாடும் விசேஷங்களில் ஒரு வகை மகிழ்ச்சி பொங்கும். அதுவே திருவிழா, தேர் என ஊர்கூடி கொண்டாடும் வைபவங்களில் அனைவரது வீடுகளிலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். மேலும் தீபாவளி, பொங்கல் என அனைத்து ஊர்களிலும் மக்கள் ஒரே நாளில் ஒரு பண்டிகையைக் கொண்டாடும்போது அது நிலம் சார்ந்த கொண்டாட்டமாகி மாநிலத்தையே, நாட்டையே உச்சகட்ட உற்சாகப் புள்ளியில் கொண்டு நிறுத்துவிடுகிறது.

அப்படி, பண்டிகை மகிழ்வையும், உற்சாகத்தையும் கை நிறைய எடுத்துக் கொண்டு, மனம் நிறைய கொடுக்க நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது தீபாவளி!

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...
shylendrahoode

`ஏய், எங்க ஊருல தீபாவளிக்கு என்னாகும்னா...’ என்று, தமிழகத்தில் ஒவ்வோர் பகுதிக்கும் தீபாவளி சார்ந்த சிறப்புப் பழக்கங்கள், தொழில்கள், தெய்வ நம்பிக்கைகள், கொண்டாட்ட முறைகள் உள்ளன. அப்படி, தமிழகத்தை ஒரு ரவுண்ட் அப் வந்து தொகுத்திருக்கும் தகவல்கள் இந்த இணைப்பிதழில்.

`பொது உரல், ஆட்டுக்கல்னு ஊர்ல இருக்கும். அதுலதேன் பலரும் வந்து மாவு ஆட்டுவாக, திரிப்பாக...’ என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் சொல்லும் கறுப்பு, வெள்ளை தீபாவளிக் காட்சிகள், ‘கரூர் ஆட்டுக்கறியோட திரட்சி, ருசி மாதிரி வேறெந்த மாவட்டத்து ஆட்டுக்கறியிலும் வராதுப்போய்...’ என்று கோடிகளில் வியாபாரம் நடக்கும் தீபாவளி ஆட்டுச்சந்தை பற்றி பகிரும் வியாபாரிகள், `உஷ்..! எங்கூருக்கு வலசை வர்ற பறவைகளுக்கான 50 வருஷமா தீபாவளிக்கு நாங்க ஊருக்குள்ள பட்டாசு வெடிக்கிறதில்ல’ என்று பட்டாசு விரதம் இருக்கும் ஆச்சர்ய கிராமங்கள், ‘வெற்றிலை, கொட்டை பாக்கு, வாழைப்பழம், பணத்தை தாம்பாளத் தட்டில் வைத்து பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து புதுமணத் தம்பதியை தலை தீபாவளிக்கான அழைப்பார்கள்’ என்று தங்கள் பகுதி தலை தீபாவளிக் கொண்டாட்ட பழக்க, வழக்கங்கள் பற்றிச் சொல்லும் புதுமணத் தம்பதிகள் என, தீபாவளி குறித்த சிறப்பான வாசிப்பு அனுபவமாக மட்டும் அல்லாமல் வாழ்வியல் அனுபவத்தையும் கொடுக்கும் வகையில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன இந்த இணைப்பிதழில்!

ஒளி பரவட்டும், மகிழ்வு பெருகட்டும்!

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

தீபம் அணைந்து நின்ற ஊர்... ‘திருநின்றியூர்’!

தீபாவளி திருநாளில் கோயில்கள்தோறும் லட்சுமிதேவியின் அருளாசியை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுண்டு. ஆனால், திருமகளான லட்சுமி தேவியே பூஜித்த ஈசன், மயிலாடுதுறை மாவட்டம் திருநின்றியூரில் கோயில் கொண்டு, ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் என்ற நாமத்தோடு அருள்பாலிக்கிறார். எனவே இத்தலத்தில் தீபாவளி, அட்சய திருதியை மற்றும் அனுஷ நட்சத்திர நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தீபங்களால் இக்கோயில் உருவான வரலாறே ஒரு சுவாரஸ்யம்தான். `தஞ்சையை ஆண்ட குலோத்துங்கச் சோழன், அடிக்கடி சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் செல்வது வழக்கம். மன்னனின் இரவுப் பயணங்களில் தேருக்கு முன்னால் தீவட்டி ஏந்திய வீரர்கள் செல்வர். அப்படிச் செல்லும்போது ஓரிடத்தில் தீபங்கள் எல்லாம் தானாகவே அணையும். கொஞ்சம் தூரம் சென்றதும் தானாகவே எரியும். இதைப் பார்த்த மன்னன், `தீவட்டிகள் எரிய தேவையான எண்ணெய் ஊற்ற மாட்டீர்களா?’ என்று வினவ, `எப்போது வந்தாலும் இந்த இடத்தில் மட்டும் தீபங்கள் அணைந்து, பின் தானாகவே எரிகின்றன மன்னா’ என்றிருக்கிறார்கள் வீரர்கள்.

ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர்
ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர்

அதைக்கேட்டு மன்னன் யோசனையில் ஆழ்ந்தவாறே, சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் செய்தான். அப்போது அவன் காதில், `அங்கும் நான்தான் குடி கொண்டுள்ளேன். என்னைக் கண்டறிந்து கோயில் கட்டு’ என்று ஒலித்திருக்கிறது. பரவசத்துடன் மன்னன் திரும்பி வரும்போது அவ்விடத்தில் மக்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறான். அப்போது அவர்கள், `இந்தக் காட்டுக்குள் இரவில் வானிலிருந்து ஒரு பசு மாடு இறங்குகிறது. மாட்டின் சப்தம் கேட்கிறது. விடியற்காலை அது மேலே எழும்பிச் செல்கிறது. இதைக் கண்ட நாங்கள் பயத்தின் காரணமாக காட்டுக்குள் செல்வதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.

உடனே மன்னன் அந்தக் காட்டை அழித்து சுத்தம் செய்யச்சொல்லி உத்தர விட்டபோது, ஓரிடம் ஈரமாக இருந்திருக்கிறது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது ஈசனார் அங்கே சுயம்புலிங்கமாக காட்சி தந்திருக்கிறார். ‘தில்லை நடராஜர் உரைத்தது பலித்ததே' என்ற மகிழ்ச்சியில் சோழ மன்னன், அங்கு மிகவும் பிரமாண்டமான கலைநயமிக்க ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் கோயிலைக் கட்டினான். எரிகின்ற தீபம் அணைந்து நின்ற ஊர் இது என்பதால் ‘திருநின்றியூர்' என்றழைக்கப்படுகிறது’ என்கிறது தலவரலாறு.

சமயக்குரவர்கள் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் என மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம் இது. இத்தலத்து பெருமானை பூஜித்து இந்திரன், அகத்தியர், பரசுராமன், ஐராவதம், சோழ மன்னன் ஆகிய பலரும் சாபவிமோசனம் பெற்றுள்ளனர். கோயிலைச் சேர்ந்த ராஜேஸ் சிவம் குருக்கள், “கருவறையில் ஈசனோடு அம்பாள் வீற்றிருப்பதும், நவகிரகங்கள் இடமாறி அமைந்திருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் இடப்பாகத்தில் நிரந்தரமாக இருக்கும் வரத்தை இத்தலத்தில் வேண்டிப் பெற்றதால், ஆடி மாதம் முழுவதும் வரலட்சுமி நோன்பு இருந்து பெறுகின்ற பலனை, இங்குள்ள ஈசனை ஒருமுறை தரிசனம் செய்தாலே பெறலாம். இக்கோயிலுக்கு வந்து வழி பட்டால் தடைபட்ட காரியங்கள் அனைத் தும் நிவர்த்தி அடையும். குறிப்பாக திருமணத்தடை, குழந்தை பாக்கிய மின்மை, வேலைவாய்ப்புத் தடை, வீடு கட்ட தடை போன்றவை வெற்றியாகும். அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகாரத் தலமாகும்.

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

தீபாவளி நாளில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை 4 மணிக்கே ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரருக்கு 11 திரவியங் களுடன் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து சிறப்பு ஆராதனை நடை பெறும். பல ஊர்களிலிருந்தும் வரும் பக்தர்கள் அவர்கள் வசதிக்கேற்ப பொன், பொருள், பணத்தை ஈசன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு எடுத்துச் செல்வர். இதனால் அவர்கள் குடும்பத்தில் செல்வம் செழிக்கும் என்பது கண்கூடு” என்றார்.

`‘கொழுந்தன் வந்து ஆட்டினாத்தேன் மாவு பொங்கும்!'’

அந்தக்கால தீபாவளி கொண்டாட்ட நினைவுகளையும், தீபாவளிக்கு பட்டிமன்றமும் ஒரு சடங்காக இணைந்தது பற்றியும் பகிர்ந்துகொள்கிறார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

“தமிழர்கள் மாசங்களை ஆறு பருவங்களா பிரிச்சிருந்தாங்க. அதுல அடைமழைக் காலத்துலதான் தீபாவளி வரும். அப்போதான் முதல் போகம் அறுவடை முடிஞ்சு வீட்டுக்கு நெல்லு வந்திருக்கும். பெரும்பாலானவங்க விவசாயிங்க என்பதால எல்லார் கையிலயும் காசு இருக்கும்.

தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஊரு களைகட்டிடும். பள்ளிக் கூடம் போற பிள்ளைங்க எல்லாம் சனி, ஞாயிறுக்கு முன்னாலயோ, பின்னாலயோ தீபாவளி வரணும்னு வேண்டிக்குவாக. இப்ப மாதிரி நினைச்சவுடன புதுத்துணி எடுக்கிற பழக்கம் அப்ப இல்ல. தீபாவளிக்குத்தேன் புத்தாடை கெடைக்கும். அதுலயும் தீபாவளி காலை வரை டெய்லர் கடையில காத்திருக்குற கதை யெல்லாம் நடக்கும்.

பலகாரமும் முக்கிய விஷயம். தீபாவளி அன்னிக்கு வீட்டுல இட்லி போட்டா அது பெரிய சந்தோஷம். கிராமங்கள்ல எல்லா வீட்டுலயும் பெரிய அம்மிக்கல், உரல் இருக்காது. பொது கல், உரல்னு ஊர்ல இருக்கும். அதுலதேன் பலரும் வந்து ஆட்டுவாக. ‘கொழுந்தன் வந்து ஆட்டினாத்தேன் மாவு பொங்கும்’னு ஊர் இளவட்டங்களை பொம்பளைக உசுப்பேத்திவிட்டு ஆட்ட வச்சுருவாக. வெடிக்கடைகள் அப்ப குறைவுதேன். கேப்பு வச்ச, ரோல் வச்ச துப்பாக்கிங்கதேன் பசங்ககிட்ட இருக்கும். பெரிய வெடிகளான லட்சுமி வெடி, டைம்பாம், அணு குண்டு எல்லாம் யாராவது போட்டா ஊரே நின்னு வேடிக்கை பார்க்கும்.

நகரங்கள்ல புதுப்படம் ரிலீஸாகும். கிராமங்கள்ல செகண்டு ரிலீஸ் படங்கள் வரும். அதுல எம்.ஜி.ஆர் படமா, சிவாஜி படமாங்கிறது எதிர்பார்ப்பா இருக்கும். அப்பல்லாம் நாலு காட்சிகள்தேன், இப்ப மாதிரி அதிகாலை நாலு மணிக் காட்சியெல்லாம் கெடையாது. தீபாவளி அதிகாலையில நாதஸ்வரக்காரவுக வீடு வீடா வந்து வாசிச்சு காசு வாங்குவாக. நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவோம். பலகாரங்கள் வீட்டுலதேன் செய்வோம். அதை ஒவ்வொரு வீடா போய் கொடுத்துட்டு வரும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். ‘விடிய விடிய அமாவாசை, விடிஞ்சு பார்த்தா தீபாவளி’னு, சில வீடுகள்ல கறி எடுத்துச் சாப்பிடுவாக.

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

தீபாவளிக்கு முதல் நாள் லேட்டாத்தேன் தூங்குவோம். காலையில எந்திருச்சு பார்த்தா நார்ப்பெட்டி நிறைய அம்மா பலகாரம் சுட்டு வச்சுருப்பாக. வெறகு அடுப்புலயே அம்புட்டும் பண்ணியிருப்பாக. வீட்டு வாசல்ல வந்து நிக்கும் எளிய மக்களுக்கு பலகாரங்கள் கொடுப்பாக. தீபாவளி அன்னிக்கு கோயிலுக்குப் போவாக. உறவினர்கள் மொத்தமா சேர்ந்து வெளியூர் கோயில்களுக்கு டூர் போவாக. குழந்தைகளுக்கு, தீபாவளி டிரஸ்ஸை மறுநாள் பள்ளிக்கூடத்துக்குப் போட்டுட்டுப் போறது கிட்டத்தட்ட இன்னொரு தீபாவளி மாதிரி.

அப்பவெல்லாம் வீடுகள்ல வானொலிப்பெட்டி மட்டும்தேன் இருக்கும். அதுல தீபாவளி சம்பந்தமான சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவாக. அதை ஊர்மக்கள் ரசிச்சுக் கேப்பாக. முதல் முதலா பொதிகை சேனல்லதான் தீபாவளி பட்டிமன்றம் ஒளிபரப்பாச்சு. அதைத் தொடர்ந்து எல்லா சேனல்களும் அதை ஒளிபரப்பத் தொடங்கி, இப்போ தீபாவளிக்கு பட்டிமன்றம் இல்லாத சேனல்களே இல்லைனு ஆகிடுச்சு. யூடியூப் சேனல்கள்லயும் தீபாவளி சிறப்பு பட்டிமன்றங்கள் நடத்துறது டிரெண்டாகியிருக்கு. அது உலகமெங்கும் உடனே போய்ச்சேருது. தீபாவளி போன்ற திருநாள்ல பட்டிமன்றத்துக்கு மவுசு ஏற்பட்டிருக்கறது நல்ல விஷயம்.

அப்போ, பெரும்பாலான ஊர்கள்ல விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, பட்டிமன்றமெல்லாம் பொங்கலுக்குத்தேன் நடத்துவாக. நான் மதுரைக்கு வந்ததுக்கு அப்புறமும் பல வருஷம் சொந்த கிராமத்துக்குப் போய்தான் தீபாவளி கொண்டாடினேன். வெளியூர் பட்டிமன்றங்களுக்குப் போய் மாட்டிக்கிட்டு, விடிய விடிய பயணம் பண்ணி, தீபாவளி அன்னிக்கு காலையில ஊர் வந்து சேந்துருக்கேன். ஒருமுறை தீபாவளியப்போ அமெரிக்காவுல இருக்க வேண்டிய தாயிடுச்சி. அதனால அங்கே, பிட்ஸ்பெர்க் வெங்கடாஜலபதி கோயில்ல குடும்பத்தோட தீபாவளியைக் கொண்டாடினேன்.

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

ஆனாலும் சின்ன வயசுல, தீபாவளியன்னிக்கு தவறாம பெய்யுற மழையோட கொண்டாடின தீபாவளிதான் மனசோட ஈரமா கெடக்கு இப்பவும். பொண் ணுங்களும், பையன்களும் புது டிரஸ் போட்டுக்கிட்டு பலகாரத் தட்டோட வீட்டுக்கு வீடு வந்து போயிட்டு வர்றதும், ஒரே கலர் தாவணி, சட்டைனு போட்டுக்கிட்டு இளவட்டங்கள் ரகசியமா சிரிச்சுக்கிறதும்னு... பார்க்கப் பார்க்க சந்தோஷமா இருக்கும். இப்ப பண்டிகை அன்னிக்கும் மொபைலைத்தான் பார்த்துக்கிட்டிருக்காங்க!’’

``இதை நம்பியிருக்கும் 2.50 லட்சம் தொழிலாளர்கள்!”

இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள்‌ வரை வியாபித்திருக் கும் பட்டாசு மார்க்கெட்டுக்கு நம்ம தமிழ்நாட்டின் சிவகாசி தான் விசிட்டிங் கார்டு. பொட்டு வெடியிலிருந்து வானத்தை வண்ணமயமாக்கும் பட்டாசு வரைக்கும் அனைத்துக்கும் சிவகாசி தான் ஐடியா பேங்க். இந்த நிலையில் தற் போதைய சூழலில் பட்டாசு உற்பத்தியில் ஏற்பட்டிருக் கும் சிக்கல்கள், அதை சமாளிக்க உற்பத்தி நிறுவனங்கள்‌ எடுத்துள்ள மாற்று முயற்சிகள், பணியாளர்கள், வியாபாரத் தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார், சோனி ஃபயர்ஒர்க் மற்றும் அரசன் குரூப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பிரியங்கா கணேஷ்குமார்.

 பிரியங்கா கணேஷ்குமார்
பிரியங்கா கணேஷ்குமார்
திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

‘`காலையில 6 மணிக்கு வேலை தொடங்கிடும். முதல் வேலையா அன்றைய உற்பத்திக்குத் தேவையான கெமிக்கல்ஸை எடைபோட்டு மிக்ஸிங் நடக்கும். பிறகு அது, பெரிய வெடிகள் தயாரிக்க, சின்ன வெடிகள் தயாரிக்கனு தனித்தனியே அந்தந்த இடங்களுக்கு போயிடும். அதன்பிறகு ஒவ்வொரு படியாக வேலை ஆரம்பிச்சிருவோம். கெமிக்கல் கலப்பது, உலர்த்துவது, வெடிக்குழாய்களில் நிரப்புறது, பேக்கிங்னு நாலு நிலைகள் இருக்கு. எல்லா பணிகளும் அரசு சொல்லி யிருக்கிற பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிச்சுதான் நடக்குது. அதேபோல பணிகள் நடைபெறும் கட்டடங்களும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றித்தான்‌ கட்டப்பட்டுருக்கு. பணியாளர்கள் மற்றும் மூலப் பொருள்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு குறை பாடுகள்‌ இல்லாத அளவுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கு.

2018-ல் உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசு உற்பத்தியை ஊக்குவிக்க அறிவுறுத்தியது. அதன்படி பாதுகாப்பான கெமிக்கல்களை வைத்து சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை எப்படி தயாரிக்கலாம்னு நிபுணர் குழு மூலம் வழிகாட்டுதல் நடத்தியது. தற்போது அதுபடியே எல்லா வகையான பட்டாசுகளும் உற்பத்தி செய்றோம். பசுமை பட்டாசு தயாரிக்கிறது மூலமா நாங்க இழந்த உற்பத்தியை மீட்டெடுக்க முடிஞ்சுதானு கேட்டால், கட்டாயம் ஓரளவு மீட்டெடுத்திருக்கோம். ஆனாலும் வண்ணங்களில் வித்தியாசம் காட்டும் வகையிலான பட்டாசு உற்பத்தி இழப்பை மட்டும் சரிக்கட்ட முடியல. ஆனா, அது மொத்த வருவாயை பாதிக்காத அளவுக்கு மாற்று நடவடிக்கை எடுத்திருக்கோம். என்றாலும், பாது காப்பான பசுமை பட்டாசை அரசு சொல்ற விதிகளை பின்பற்றி தயாரிக்கிறதால அரசுக்கு நாம பக்கபலமாக இருக்கிற நிறைவு கிடைக்குது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இதே முறையில் புதுப் புது வகையான பட்டாசுகளை உற்பத்தி செய்யவிருக்கோம். மனித சக்தியை சார்ந்து இருக்கக்கூடிய இந்தத் தொழிலில் எந்த இடத்தில் இயந்திர சக்தியை பயன்படுத்த லாமென ஆய்வு செய்றோம்’’ என்றார்.

 விநாயக மூர்த்தி
விநாயக மூர்த்தி
திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

தீபாவளி பட்டாசு விற்பனை வருமானம் குறித்து மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விநாயக மூர்த்தி, “கடந்த 2019-ல் ஆண்டு வருமானமாக ரூ.6,000 கோடிக்கு சிவகாசியில் பட்டாசு விற்பனை நடைபெற்றதா புள்ளி விவரங்கள் தெரிவிக்குது. அடுத்து கொரோனா பொது முடக்கம். சமீபத்தில் டெல்லியில் பட்டாசு வெடிக்க அம்மாநில அரசு தடை விதிச்சதால, சுமார் 100 கோடி ரூபாய் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்த வருஷம் சுமார் ரூ.3,500 கோடி வரை தீபாவளி வர்த்தகம் நடை பெற்றால்தான் இழப்பிலிருந்து தப்பிக்கலாம்; இதையே தொழிலா நம்பியிருக்குற 2.50 லட்சம் தொழிலாளர்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்’’ என்றார்.

தித்திக்கும் செட்டிநாட்டுப் பலகாரங்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயார் செய்யப்படும் செட்டிநாட்டுப் பலகாரங்களுக்கு தனிச்சுவையும் சிறப்பும் உண்டு. கலப்படாமல் இல்லாமல், கைப்பக்குவத்துடன் தயாராகும் பலகாரங்கள் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், தற்போது, வெளிநாடுகள் வரை அனுப்பப்பட்டு வருகின்றன.

காரைக்குடி, `அழகு செட்டிநாடு ஸ்நாக்ஸ்’ உரிமையாளர் அலமேலுவிடம் பேசினோம். “காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதி நகரத்தார் வீட்டு விசேஷங்களில் பலகாரங்கள்தான் பிரதானம். அந்தக் காலத்துல கடல் கடந்து வணிகம் செஞ்ச அவங்க, உணவு கிடைக்காத சூழலுக்குத் தாக்குப்பிடிக்க இந்தப் பலகாரங் களைத்தான் செஞ்சு எடுத்துப்போனதா சொல்வாங்க. வீட்டு விசேஷத்துக்குனு செஞ்சது, இப்போ இங்க வணிகமா வளர்ந்து நிக்குது.

 அலமேலு
அலமேலு
திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி, பள்ளத்தூர், கொத்தமங்கலம், கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகள்ல இந்தப் பலகாரங்கள் தயாரிக்கப்படுது. இங்கெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடிசைத் தொழிலாவும், இருபத்தைக்கும் மேற்பட்டோர் பெரிய அளவிலும் செட்டிநாடு பலகாரங்களைத் தயார் செய்றோம். இப்போ சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா போன்ற பல வெளிநாடு களுக்கும் அனுப்பிக்கிட்டிருக்கோம். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்தாததுடன், கலப்படம் எதுவும் இல்லாம, தரமான மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுறதால இதெல்லாம் நாள்கணக்குல கெடாமல் இருக்கும். குறைந்தபட்சம் 25 - 30 நாள்கள் வரை தாங்கும்.

தேன்குழல், சுத்து கைமுறுக்கு, சீப்புச்சீடை, சின்ன சீடை, மணகோலம், தட்டை, இனிப்பு சீடை, லட்டு, உளுந்தமாவுருண்டை, முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பல பலகாரங்கள் தயாரிக்கிறோம். சில்லறையாவும், மொத்தமாவும் விற்பனை செய்றோம். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து இப்போ கிஃப்ட் பேக்கிங்கிலும் தர்றோம். என்னிடமே இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கிறாங்க. குறிப்பா, எங்க பகுதியில இருக்கும் பெரும்பாலான தொழிலாளிகள் பெண்கள் தான். பொதுவா, தீபாவளி நேரத்தில் இங்கிருந்து கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கும். இந்த வருஷமும் அடுப்புகள் எரிஞ்சுட்டே இருக்கு’’ என்கிறார் உற்சாகமாக.

அவர்களுக்கு அது குளிர் நெருப்பு!

கோடிகளில் வியாபாரம் நடக்கும் ஆட்டுச்சந்தைகள்!

தீபாவளி என்றாலே பெரும்பாலான வீடுகளில் அசைவம்தான். குறிப்பாக, ஆட்டுக்கறி. அதனால்தான் தீபாவளி நேரத்தில் புகழ்பெற்ற சில ஆட்டுச் சந்தைகளில் கோடிகளில் கூட வருமானம் நடக்கும். அப்படிப்பட்ட ஊர்கள் இங்கே...

சேலத்தில் இருந்து கேரளாவுக்கும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் கறிக்காக அதிக அளவில் ஆடுகள் அனுப்பப்படுகின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம்... சேலம் மாவட்டம் அருகே உள்ள வீரகனூர் கிராமத்தில் வாரவாரம் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ஆடு விற்பனை நடைபெறும் சந்தையில் இதுவும் ஒன்று. ஒரே நேரத்தில் சுமார் 40,000 முதல் 60,000 ஆடுகள் விற்பனை செய்யப்படும் சந்தையாக இது இருந்து வருகிறது.

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

தீபாவளி நெருங்கி வருவதால் ஆடுகள் விற்பனை இங்கு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக மலை ஆடுகள் விற்பனைதான் இந்த சந்தையின் தனித்துவம். வியாபாரிகள் அதிகமாக மலை ஆடுகளில் கவனம் செலுத்தி எவ்வளவு விலையை அடித்துப் பேசமுடியுமோ பேசி ஆட்டை வாங்கிச் செல்வார்கள்.

மலை ஆட்டில் அப்படி என்ன இருக்கிறது? கள்ளக்குறிச்சி மாவட்டம்... கல்வராயன் மலை மற்றும் நாமக்கல் மாவட்டம்... கொல்லிமலையிலிருந்து ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, மலைகளில் வளர்க்கப்படும் ஆடுகள் தங்களது உணவாக மலைகளில் கிடைக்கும் மூலிகை செடி, கொடிகளை உட்கொள்ளுவதால் அதனுடைய கறி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் என்கின்றனர். வியாபாரிகள். இதனாலேயே இஸ்லாமியர்கள் பொதுவாக தங்களது வீட்டுத் தேவைக்கு மலை ஆட்டுக்கறியைத் தேர்ந்தெடுத்து பிரியாணி சமைக்கின்றனர். இதனால் கேரளா போன்ற பகுதிகளிலிருந்து இந்த ஆடுகளை விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

மலை ஆட்டுக்கு அடுத்தபடியாக விற்பனையாவது, நாட்டு ஆடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கொடி ஆடு வகைகள். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு இங்கு விற்பனையானது. இந்த ஆண்டு இதைவிட இரு மடங்கு விற்பனை இருக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

“கரூர் ஆட்டுக்கறியோட திரட்சி, ருசிக்கு ஈடில்லை!”

ஆடு வளர்ப்புக்கு பிரசித்தி பெற்ற கரூர் மாவட்டத்தில் உள்ள ஆட்டுச்சந்தைகள் நிலவரம் குறித்து, ஆடு வளர்க்கும் விவசாயியான செல்லமுத்துவிடம் பேசினோம்.

“கரூர் மாவட்டத்துல, காவிரி, நொய்யல், அமராவதினு மூணு ஆறுகள் ஓடினாலும், இங்குள்ள 70 சதவிகிதம் பகுதிகள் மழையை அதிகம் ஈர்க்காத சுண்ணாம்பு மண்ணைக்கொண்ட, வானம் பார்த்த பூமிதான். அதனால, இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடுனு கால்நடை வளர்ப்பில் ஈடுபடுறாங்க. குறிப்பா, ஆடுகளை இங்குள்ள க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர், தோகைமலை ஆகிய ஒன்றியங்கள்ல உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம் வளர்க்குறாங்க. அதிலும் குறிப்பா, க.பரமத்தி, அரவக் குறிச்சி ஒன்றியங்கள்ல மட்டும் சதுர கிலோமீட்டருக்கு 186 ஆடுகள் இருக்கும்.

 செல்லமுத்து
செல்லமுத்து

இங்குள்ள விவசாயிகள் இப்போ சராசரியா ஆடு ரூ.5,000 என விலைவைத்து விற்பனை செய்றாங்க. இங்குள்ள விவசாயிகள், வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமா கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி, மணல்மேடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி, முத்தூர் என நாலு சந்தைகள் இருக்கு. இந்த சந்தைங்க ஒவ்வொண்ணும் வாரத்துல ஒரு நாள் செயல்படும் (திங்கள் - க.பரமத்தி சந்தை, புதன் - மணல்மேடு சந்தை, வியாழன் - கன்னிவாடி சந்தை, சனி - முத்தூர் சந்தை). கன்னிவாடி சந்தையில வாரத்துக்கு தோராயமா 6,000 ஆடுகளும், க.பரமத்தியில 4,000 ஆடுகளும், மணல்மேட்டில 3,000 ஆடுகளும், முத்தூருல 4,000 ஆடுகளும் விற்பனையாகும்.

தீபாவளி பண்டிகையின்போது, இந்த விற்பனை ரெண்டு மடங்கு, மூணு மடங்குவரை அதிகரிக்கும். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே ஆட்டு விற்பனை தொடங்கிடும். விவசாயிகள்கிட்ட இருந்து 20 உருப்படி, 30 உருப்படினு மொத்தமா வாங்கும் சிறு வியாபாரிகள், அதை இந்தச் சந்தைகள்ல விற்பனை செய்வாங்க. அதை வாங்கும் ஆட்கள், கசாப்புக் கடைகளுக்கு எடுத்துப் போவாங்க. இந்த சந்தைகள்ல விற்கப்படும் கரூர் விவசாயிகளின் ஆடுகளை மதுரை, கோவை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், சென்னை எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்தவங்க வந்து ஆர்வமாக வாங்கிப் போவாங்க.

கரூர் மாவட்டத்துல பெரும்பாலும் செம்மறி அல்லது வெள்ளாடுகள்தான் வளர்க்கப்படும். ‘கரூர் ஆட்டுக்கறியோட திரட்சி, ருசி மாதிரி வேறெந்த மாவட்டத்து ஆட்டுக்கறியிலும் வராதுப்போய்...’னு பலரும் மெச்சுவாங்க. என்கிட்ட 100-க்கு மேல செம்மறி ஆடுகள் இருக்கு. சாதாரண நேரத்திலேயே இந்த சந்தைகள்ல கோடிகளில் விற்பனை நடக்கும். தீபாவளி நேரத்துல, அந்த விற்பனை பல மடங்கு அதிகமாகும். அந்த நேரத்து டிமாண்டை பொறுத்து, கரூர் ஆடுகளுக்கு ரேட்டும், கிராக்கியும் உயரும்” என்றார்.

தலை தீபாவளிக் கொண்டாட்டம்... தேனி தம்பதியின் உற்சாகம்!

நவீன யுகத்தில் திருமண நிகழ்வில் ஆன்லைனில் பங்கேற்று, டெலிவரி பாய் மூலம் உணவு வழங்கும் டிரெண்ட் வரை வந்துவிட்டது. இன்னொரு பக்கம், தேனி போன்ற பழமை மாறா பகுதிகளில், திருமணச் சடங்குகளில் உள்ள பாரம்பர்யங்கள் இன்னும் மாறாமல்தான் உள்ளன. நிச்சயதார்த்தம், திருமணம், தலை பொங்கல், தலை ஆடி, தலை தீபாவளி, தலை பிள்ளை பெற்றெடுத் தல், காது குத்துதல், பெண் குழந்தை பூப்படையும் நிகழ்வு என உற்றார், உறவினர் சூழ ஒன்று கூடி வாழ்த்தியும் கொண்டாடியும் வருகின்றனர். இதில், அந்தப் பகுதியின் தலை தீபாவளி கொண்டாட்ட முறையை அறிய இவ்வருடம் தலை தீபாவளி கொண் டாடும், தேனி, அல்லிநகரத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான விக்னேஸ்வரன், பிருந்தாவிடம் பேசினோம்.

 பிருந்தா - விக்னேஸ்வரன் 
திருமணத்தின்போது,,,
பிருந்தா - விக்னேஸ்வரன் திருமணத்தின்போது,,,

‘`எங்க ஊர்ல ’சுருள் வைத்து அழைத்தல்’னு சொல்வோம். அதாவது வெற்றிலை, கொட்டை பாக்கு, வாழைப்பழம், பணம் ஆகியவற்றை தாம்பாளத் தட்டுல் வெச்சு, பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து புதுமணத் தம்பதிக்கு தலை தீபாவளிக்கான அழைப்புக் கொடுப்பாங்க. சிலர் அப்போதே மாப்பிள்ளை, மகளுக்கான புத்தாடைகளையும், தங்க நகையையும் சீர்வரிசையா கொடுத்துடுவாங்க. தங்கநகை, பணம் கொடுக்கணும்னு கட்டாயமில்லை. பொருளாதாரத்துக்கேற்றாற்போல சீர் செஞ்சிக்குவாங்க.

புதுமணத் தம்பதி பெண் வீட்டுக்குச் சென்றவுடன், தீபாவளியன்னிக்கு பெரியவங்க அவர்களை ஒண்ணா உக்காரவெச்சு, தலைக்கு எண்ணெய் வெச்சுவிடுவாங்க. குளிச்சு முடிச்சதும் புது டிரஸ் போட்டு இனிப்புடன் காலை உணவு சாப்பிட்டுட்டு பட்டாசு கொளுத்துவாங்க. குறைந்தபட்சம் மூணு நாள் தம்பதி பெண் வீட்ல இருக்கணும். தம்பதி வீடு திரும்பும்போது, வெண்கல பாத்திரங்கள், சில்வர் பாத்திரங்கள்ல லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை போன்ற பலகாரங்களை நிரப்பிக் கொடுத்து அனுப்புவாங்க. அவங்ககூட பெண் வீட்டார் சிலரும் சென்று, அவங்களை மாப்பிள்ளை வீட்டில் விட்டுட்டு வருவாங்க. மருமகள் கொண்டுவந்த அந்த தலை தீபாவளி பலகாரத்தை மாப்பிள்ளை வீட்டார் உறவினர்கள், அக்கம் பக்கம்னு கொடுப்பாங்க.

 பிருந்தா - விக்னேஸ்வரன்
தலை தீபாவளியின்போது...
பிருந்தா - விக்னேஸ்வரன் தலை தீபாவளியின்போது...

இதுவரை இதையெல்லாம் வேடிக்கை பார்த்த நாங்க, இந்த வருஷம் அனுபவிச்சிட்டு இருக்கோம். உறவினர்கள் எல்லாம் எங்களை தலை தீபாவளி விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்த வருஷம் பழைய பொண்ணு, மாப்பிள்ளை ஆகிடுவோம், யாரும் கண்டுக்க மாட்டாங்க. அதனால இந்த வருஷம் தலை தீபாவளி பவுசை முழுசா கொண்டாடிடுவோம்’’ என்றனர் கலகலவென.

பணம், பொருள் என சீர்வரிசைக்காக அல்லாமல் புதிய தம்பதிகளுக்குத் தேவையானவற்றை உறவினர் சூழ வரவழைத்துக் கொடுத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கும் ஒரு நிகழ்வாக தலை தீபாவளி கொண்டாடப்படுகிறது.

பட்டாசு வெடிக்காத கிராமங்கள்!

தமிழகத்தின் சில கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதுதானே? காரணம், அந்த கிராமங்களுக்கு விருந்தாளிகளாக வரக்கூடிய பறவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற நல்ல எண்ணமே. அத்தகைய சில கிராமங்கள் இங்கே...

 கூந்தங்குளம்
கூந்தங்குளம்

கூந்தங்குளம்: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே இருக்கிறது, கூந்தங்குளம் கிராமம். கடந்த 30 வருடங்களுக்கு முன்பிருந்தே சைபீரியா, நைஜீரியா, ஆஸ்திரிலேயா, ஜெர்மன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அங்கு வெளிநாட்டு விருந்தாளிகளாக பட்டைத்தலை வாத்து, செண்டு வாத்து, ஊசிவால் வாத்து, முக்குளிப்பான், செங்கால் நாரை, கரண்டி வாயன், உப்புக் கொத்தி என 40-க்கும் அதிகமான நீர்ப்பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. சில பறவைகள் குஞ்சுகளுடன் மீண்டும் சொந்த நாட்டுக்குச் சென்று திரும்புகின்றன. இப்படி, தங்கள் ஊர்க்குளத்துக்கு வந்த பறவைகளை கிராம மக்கள் பராமரித்து வந்த நிலையில், 1994-ம் ஆண்டு கூந்தங்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லட்சம் பறவைகள் வந்த செல்லும் இந்த கிராமத்தில் யாரும் எந்த விசேஷத்துக்கும் பட்டாசு வெடிப்பதில்லை.

 வேட்டக்குடி
வேட்டக்குடி

வேட்டக்குடி: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வேடக்குடி கிராமத்தின் பறவைகள் சரணாலயத்துக்கு உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல்நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரளி, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொக்கு உள்ளிட்ட 217 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. பறவைகளுக்கு சிறிய தொந்தரவுகூடக் கொடுக்கக்கூடாது எனக் கருதும் கிராம மக்கள் கடந்த 50 வருடங்களாக மேளதாள இசையையோ, ஒலி பெருக்கியோ பயன்படுத்துவதில்லை. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை.

 பெரம்பூர்
பெரம்பூர்

பெரம்பூர்: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் வளர்ந்து நிற்கும் வேம்பு புளிய மரங்களில் நத்தைகொத்தி, நாரை, கொக்கு, பாம்புத்தாரா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பறவைகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தப் பறவைகளைப் பாதுகாக்கும் வகையில் கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டி, அக்ரஹார நாட்டாமங்கலம், மருமந்துறை ஆகிய மூன்று கிராமங்களிலும் ஏராளமான பழம்தின்னி வௌவால்கள் வசிக்கின்றன. இரவு நேரங்களில் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு இரைதேடிச் செல்லும் வௌவால்கள், பகல் நேரங்களில் மரங்களில் தொங்கி ஓய்வெடுக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வௌவால்களைப் பராமரிக்கும் வகையில் பட்டாசுகளையோ இரைச்சலுடன் கூடிய ஒலிப்பெருக்கிகளையோ பயன்படுத்துவதில்லை. மருந்துக்காக வௌவால்களை வேட்டையாட வரும் வேட்டைக்காரர்களையும் கிராம மக்கள் விரட்டியடிக்கிறார்கள்.

இயற்கையையும் பறவைகளையும் நேசிக்கும் இந்த கிராம மக்களை பாராட்டி கௌரவிக்கட்டும் அரசு!

வரலாறு சொல்லும் உரல்!

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

ஊருக்கே ஒரு பொது உரல் என்பது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்திருக் கிறது. அத்தகைய உரல்களை வீடுகளில், கோயில்களில் பார்த்திருப்போம். ஆனால், ஆளரவமே இல்லாத காட்டுப்பகுதியிலும்கூட இப்படிப்பட்ட உரல்கள், அதுவும் பெரிய வடிவிலான உரல்கள் காணக்கிடைக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம், சாஸ்த்தரம்பாக்கம், தாசரி குன்னத்தூர் பகுதியில் உள்ள மலைகளில் இன்றும் வரலாற்றின் எச்சங்களாக இத்தகைய உரல்கள் கிடக்கின்றன.

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்... காரைக்குடி பலகாரம்... சிவகாசி பட்டாசு... கரூர் ஆட்டுச்சந்தை...

இதுகுறித்து தமிழர் தொன்மம் அமைப்பின் தலைவர் வெற்றித்தமிழனிடம் பேசியபோது, “இந்தப் பகுதி முழுக்கவே பெருங்கற்கால வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், உரல்களும் இருக்கின்றன. இவை வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அதாவது, அரசர்கள் காலத்துக்கு முன்பாக இனக்குழுக்களாக மக்கள் வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். கூட்டம் கூட்டமாக மட்டுமல்லாது, கூட்டாகவேதான் அந்தக் காலத்தில் மக்கள் வாழ்ந்தனர். கூட்டாக வேட்டையாடி, கூட்டாக சமைத்துச் சாப்பிடுவதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். இன்றைக்குப் பேசப்படும் ‘சமுதாய சமையல்’ என்று கூட்டாக சமைத்துச் சாப்பிடுவது குறித்து அடிக்கடி பேசப்படுகிறது.ஒரு காலத்தில் சமையல் என்பதே இந்த வடிவத்தில்தான் இருந்திருக்கிறது. இப்போதுகூட கிராமங்களில் ஏதாவது குடும்பவிழா என்றால், அக்கம்பக்கத்து வீட்டினரும் ஒன்றாக சேர்ந்து சமைப்பதைப் பார்க்க முடியும். ஒருவீட்டில் மிளகாய் அரைப்பார்கள், இன்னொரு வீட்டில் காய்கறிகளை நறுக்குவார்கள், இன்னொரு வீட்டில் அடுப்பெரியும். அந்த வகையில் தங்களுடைய தினசரி சமையலுக்கு மட்டுமல்லாது திருவிழாக்கள், குடும்ப விழாக்கள், ஊர் விழாக் களுக்கும் தேவையான சமையல் பொருள்களை இடிக்கவும், அரைக்கவும் பொதுவான இந்த உரலைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் காலத்தில் மூலிகைப் பயன்பாடு வாழ்வின் அங்கமாக இருந்து வந்தது. எனவே, மனிதர் களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான மூலிகைகளைத் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்தியிருக்கலாம்.

 வெற்றித்தமிழன்
வெற்றித்தமிழன்

கூட்டு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்; கற்கருவிகளை எப்போதிருந்து பயன்படுத்தி வருகிறோம் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் இந்த உரல்களால் நாம் அறிய முடிகிறது. ஏதோ ஒரு காரணத்தால் மக்கள் இடம்பெயர்ந்தபோது... இந்த உரல்கள் மட்டும் காட்டுப்பகுதிகளில் தங்கி விட்டன. இந்தப் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்தால், இதுபோல இன்னும் பல தகவல்கள் வெளிவரலாம்'' என்று சொன்னார்.

தொகுப்பு: த.ஜெயகுமார், பிஆண்டனிராஜ், செ.சல்மான், மு.இராகவன், துரை.வேம்பையன், மு.கார்த்திக், இரா.மணிமாறன், ஜெ.ஜான் கென்னடி, க.பாலசுப்பிரமணியன்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், க.தனசேகரன், நா.ராஜமுருகன், ஈ.ஜெ.நந்தகுமார்,பா.பிரசன்ன வெங்கடேஷ்