Published:Updated:

படுகர் இன மக்களின் கோரிக்கையும் தி.மு.க அடிக்கும் பல்டியும்!

நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

படுகர்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்த்தால், மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது.

படுகர் இன மக்களின் கோரிக்கையும் தி.மு.க அடிக்கும் பல்டியும்!

படுகர்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்த்தால், மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது.

Published:Updated:
நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ‘படுகர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்’ என்று தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க., தற்போது ‘இது நடைமுறை சாத்தியமற்றது’ என்று பல்டியடித்திருக்கும் விவகாரம் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பிவருகிறது.

படுகர் இன மக்களின் கோரிக்கையும் தி.மு.க அடிக்கும் பல்டியும்!

நீலகிரியில் பெரும் இனக்குழுவாக வாழ்ந்துவருகிற படுகர்கள், தங்களையும் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பல ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர். அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலிலும் ‘படுகர் இன மக்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக’ வாக்குறுதி கொடுத்து வருகின்றன. கடந்த தேர்தலின்போது, தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. ஆனால், அண்மையில் அரசு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்துவரும் படுகர்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும் எனப் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் பல ஆண்டுகளாக முயன்றுவருகிறார்கள். ஆனால், அது நடக்காது எனச் சொல்லிவிட்டேன். ஓர் அமைச்சரே இப்படிச் சொல்லலாமா என நீங்கள் கேட்கலாம். உண்மை அதுதான். முடியும் என்றால் முடியும் எனச் சொல்லியிருப்பேன். பொய் சொல்லி ஏமாற்றும் பழக்கம் என்னிடம் கிடையாது. சமீபத்தில் ஊட்டிக்கு வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவிடம் இது குறித்து மனு அளிக்கப்பட்டது. இதற்கு முன் அத்வானியிடமும் இதே போன்ற மனுவைக் கொடுத்திருக்கிறோம். யாரிடம் சென்று நாம் மனு கொடுத்தாலும், மத்திய அரசின் கீழ் டெல்லியிலிருந்து குழு ஒன்றை அனுப்புவார்கள்‌. படுகர் இன மக்களின் நிலையை அந்தக் குழு ஆய்வுசெய்து அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். இதற்கு முன்பு ஆய்வுக்கு வந்த குழு ஒன்று ஏற்கெனவே இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. அதில், ‘படுகர் இன மக்களின் உடை, வீடு, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றின் வளர்ச்சியைப் பார்த்தால், இந்த மக்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க எந்த முகாந்திரமும் இல்லை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே அமைச்சர், முதலமைச்சர் மட்டுமல்ல... பிரதமரே இருந்தாலும் இந்த கமிட்டியை மீறி எதுவும் செய்ய முடியாது” என உறுதிபடக் கூறியிருக்கிறார்.

படுகர் இன மக்களின் கோரிக்கையும் தி.மு.க அடிக்கும் பல்டியும்!

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் வினோத், ‘‘ஓர் அமைச்சர் இப்படிப் பேசுவார் என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஓட்டுக் கேட்க வரும்போது ஒரு மாதிரியும், வெற்றிபெற்று மந்திரியானதும் வேறு மாதிரியுமாக இவர் கருத்து சொல்லியிருப்பது, படுகர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது” என்றார்.

அமைச்சரின் கருத்து குறித்து நம்மிடம் பேசிய ‘படுகு தேச பார்ட்டி’யின் நிறுவனத் தலைவர் மஞ்சை மோகன், “படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரே இப்படி ஒரு கருத்தைச் சொல்லி எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார். மக்கள் அவர்மீது கொதிப்பில் இருக்கிறார்கள். சமுதாயத்தின் பேரைச் சொல்லி இனி அவர் எங்கள் மக்களிடம் ஓட்டுக்கு வந்து நிற்க முடியாது. மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்றார் கோபமாக.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

அதேசமயம் அமைச்சரின் இந்தக் கருத்து குறித்து எழுத்தாளர், பழங்குடியினச் செயற்பாட்டாளர் ஒடியன் லக்ஷ்மணன், “வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அமைச்சர் கூறியிருக்கும் இந்தக் கருத்து சரியானது. படுகர் இன மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கப் போதுமான முகாந்திரம் இல்லை என்பதே கள நிலவரம். அதைத்தான் அமைச்சரும் சொல்லிருக்கிறார்” என்று ஆமோதித்தார்.

வினோத்
வினோத்
மஞ்சை  மோகன்
மஞ்சை மோகன்
ஒடியன் லக்ஷ்மணன்
ஒடியன் லக்ஷ்மணன்

இதையடுத்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடமே விளக்கம் கேட்டுப் பேசினோம். ‘‘படுகர்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்த்தால், மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதனால்தான் நானும் நீலகிரி தி‌.மு.க மாவட்டச் செயலாளர் முபாரக்கும் முதல்வரின் கவனத்துக்கு, கோரிக்கையைக் கொண்டு சென்றோம். அதன் அடிப்படையிலேயே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க வாக்குறுதியில் சேர்க்கப்பட்டது. ஆனால், அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்ன என்பதையும் மக்களுக்கு விளக்கமாகச் சொன்னேன். அதாவது, ‘ஒன்றிய அரசில், பா.ஜ.க இருக்கும் வரை படுகர்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்கச் சாத்தியம் இல்லை’ என்ற அர்த்தத்தில்தான் அன்றைக்கு நான் பேசினேன். எனக்கு ஆகாதவர்கள்தான் இதைத் தவறாகச் சித்திரித்துவருகின்றனர்” என்றார்.

செய்ய முடிந்ததைச் சொல்லுங்கள். அதையும், தெளிவுறச் சொல்லுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism