Published:Updated:

ஜீரோ ஆகும் வரை மணல் அள்ளலாம்! - மீனவ கிராமங்களை தாரைவார்த்ததா தி.மு.க அரசு?

மணல்
பிரீமியம் ஸ்டோரி
மணல்

எங்கள் பகுதியில் பத்து வருடங்களுக்கு முன்புவரை, மெரினா கடற்கரைபோல் பரந்து விரிந்த கடற்கரை இருந்தது.

ஜீரோ ஆகும் வரை மணல் அள்ளலாம்! - மீனவ கிராமங்களை தாரைவார்த்ததா தி.மு.க அரசு?

எங்கள் பகுதியில் பத்து வருடங்களுக்கு முன்புவரை, மெரினா கடற்கரைபோல் பரந்து விரிந்த கடற்கரை இருந்தது.

Published:Updated:
மணல்
பிரீமியம் ஸ்டோரி
மணல்

மத்திய அரசின் கனிம ஆலைக்கு (ஐ.ஆர்.இ.எல்), எட்டு கிராமங்களில் மணல் எடுக்க தி.மு.க அரசு அனுமதி கொடுத்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. “இப்படி மணல் எடுத்தால், ஒட்டுமொத்தமாகக் குமரி மாவட்டக் கடற்கரைகளே காணாமல்போய்விடும்” என்று கொந்தளிக்கின்றன மீனவ அமைப்புகள்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை மணலில் ‘மோனோசைட்’ என்ற தாது அதிகமாகக் காணப்படுகிறது. இந்த மோனோசைட்டில் யுரேனியம், தோரியம் என அணுசக்திதுறைக்குப் பயன்படுத்தப்படும் கதிரியக்கத் தனிமங்கள் நிறைந்துள்ளன. இந்தத் தனிமங்களை மோனோசைட்டிலிருந்து பிரித்தெடுப்பதற்காக, மத்திய அரசு சார்பில், மணவாளக் குறிச்சியில் ஐ.ஆர்.இ.எல் எனப்படும் மணல் ஆலை செயல்பட்டுவருகிறது. இந்த ஆலைக்குத் தேவையான மணலை, இரண்டு கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த விதியைத் தளர்த்தி, ‘எட்டு கிராமங்களிலிருந்தும் மணல் எடுத்துக்கொள்ளலாம்’ எனத் தமிழ்நாடு அரசு தாராள அனுமதி வழங்கியிருப்பதே மீனவர்களின் கோபத்துக்குக் காரணம்.

ஜீரோ ஆகும் வரை மணல் அள்ளலாம்! - மீனவ கிராமங்களை தாரைவார்த்ததா தி.மு.க அரசு?

இது குறித்து நம்மிடம் பேசிய ‘நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்’ குறும்பனை பெர்லின், “மணவாளக்குறிச்சி, லட்சுமிபுரம் வருவாய் கிராமங்களிலும், குளச்சல் நகராட்சியின் சில பகுதிகளிலும் மட்டுமே மணல் ஆலைக்காக மண் எடுக்க முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இப்போது கீழ்மிடாலம் ஏ, மிடாலம் பி, இனயம் புத்தன் துறை, கொல்லங்கோடு ஏ, பி மற்றும் ஏழுதேசம் ஏ, பி, சி என எட்டு வருவாய் கிராமங்களிலிருந்தும் மண் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. 1,144 ஹெக்டேர் நிலப்பரப்பில், ‘கனிம வளம் ஜீரோ ஆகும் வரை மணல் அள்ளலாம்’ என அனுமதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை கரைப் பகுதியில் மண் எடுக்கப்போகிறார்களாம். இதனால் ஆமணத்தன் தேரி, இனயம் தோப்பு, தேரிவிளை போன்ற பகுதிகளிலுள்ள மணல் குன்றுகளும், தேரிகளும் அழியும். தேரிகள் அழிந்தால் விவசாய நிலங்களில் உப்புத் தண்ணீர் புகுந்துவிடும்.

2015-ம் ஆண்டு முதலே மத்திய அரசு, இந்த இடங்களில் மண் எடுக்க அனுமதி கேட்டுவருகிறது. அ.தி.மு.க ஆட்சி முடியும்வரை அதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மத்திய கனிம வளத்துறையிலிருந்து கடிதம் வந்த இரண்டு மாதங்களிலேயே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ‘மோடி அரசிடமிருந்து மக்களைக் காக்கும் திராவிட மாடல் அரசு’ என்று சொல்லிக்கொண்டே இவ்வளவு விரைவாக அனுமதி அளித்திருக்கின்றனர்.

ஜீரோ ஆகும் வரை மணல் அள்ளலாம்! - மீனவ கிராமங்களை தாரைவார்த்ததா தி.மு.க அரசு?
ஜீரோ ஆகும் வரை மணல் அள்ளலாம்! - மீனவ கிராமங்களை தாரைவார்த்ததா தி.மு.க அரசு?

எங்கள் பகுதியில் பத்து வருடங்களுக்கு முன்புவரை, மெரினா கடற்கரைபோல் பரந்து விரிந்த கடற்கரை இருந்தது. ஆனால், இரண்டு கிராமங்களிலிருந்து தொடர்ச்சியாக மண் எடுக்கப்பட்டதால் கடலரிப்பு ஏற்பட்டு கடற்கரையே அழிவுக்குள்ளாகிவிட்டது. இப்போது வீட்டு வாசலில் கடல் அலை அடிக்கிறது, குடியிருப்புகள் இடிந்து விழுகின்றன. அழிக்கால், கொட்டில்பாடு, மணக்குடி, மேல்மிடாலம், ராமன் துறை, தூத்தூர் கிராமங்களில் கடல் அலையால் தொடர்ந்து அழிவு ஏற்பட்டுவருகிறது.

கனிமங்கள் நிலத்துக்கு அடியில் புதைந்துகிடக்கும் வரை பிரச்னை இல்லை. அவற்றைத் தோண்டி எடுத்து, தனிமங்களைப் பிரித்தெடுப்பதால் கதிரியக்க வீச்சு அபாயம் ஏற்படும். கடந்த 2019-ம் ஆண்டு பெரியவிளையில் 26 பேர் புற்றுநோய்த் தாக்கத்தால் இறந்திருக்கிறார்கள். மற்ற பகுதிகளைவிடவும் குமரிக் கடற்கரையில் நான்கு மடங்கு வேகமாகப் புற்றுநோய் பரவுகிறது. எனவே மணல் ஆலைக்கு மண் எடுக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த ஆயத்தமாகிவருகிறோம்” என்றார் கொதிப்புடன்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

ஐ.ஆர்.இ.எல் நிறுவனத் தரப்பில் கேட்டபோது, “மணல் தட்டுப்பாடு இருப்பதன் காரணமாக தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து தனியார் இடங்களில் மணல் எடுப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். கடற்கரையில் மண் எடுக்க மாட்டோம்; தனியார் இடங்களில், அதன் உரிமையாளர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே மண் எடுப்போம். மணவாளக்குறிச்சி பகுதியில், இப்போது மண் எடுக்கப்படும் ஒரு தனியார் நிலத்துக்கு, ஏக்கருக்கு ஐம்பது லட்சம் ரூபாய் என உரிமையாளரிடம் ஒப்பந்தம் போட்டு மண் எடுக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு லாபமே சேரும். சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கவனத்தில்கொள்வோம்” என்றனர்.

பெர்லின்
பெர்லின்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். “மண் எடுப்பதற்கு இடம் வழங்கப்பட்டதற்கான நடவடிக்கைகள் 2015-2016-ல் தொடங்கியது. மூன்று அதிகாரிகள் இடங்களை ஆய்வுசெய்து 2019-ல் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். 2020-ம் ஆண்டு மாநில அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பியதன் அடிப்படையிலேயே தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி தி.மு.க அரசுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. குறிப்பிட்ட ஏக்கர் நிலத்தில், அரியவகை மணல் இருப்பதாக அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். அதில் அதிகமான இடங்கள் தனியார் வசமே இருக்கின்றன. நில உரிமையாளர்கள் அனுமதித்தால், மண்ணிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்துவிட்டு, மீண்டும் மணலை அதே நிலத்தில் நிரப்பிவிடுவார்கள். 11 மாத ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இது நடைபெறும். எனவே மக்கள் அச்சப்படத் தேவை இல்லை” என்றார்.

நம்புவோம்!