அரசியல்
அலசல்
Published:Updated:

காட்டுமாடு தாக்கி உயிரிழந்த தி.மு.க நிர்வாகி... எதிர்க்கோஷ்டி என்பதால் கைவிட்டாரா அமைச்சர்?

சூரியகாந்தன் குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
சூரியகாந்தன் குடும்பம்

காட்டுமாடு தாக்கிய சில நிமிடங்களில் அவர் அருகில் இருந்தவன் நான். விரிந்த கொம்புகளுடன் இருந்த காட்டுமாடு, நெற்றிப் பகுதியால் அப்பாவின் வயிற்றில் வேகமாக முட்டியிருக்கிறது

‘காட்டுமாடு தாக்கி உயிரிழந்த தி.மு.க நிர்வாகியின் குடும்பத்துக்கு, சொந்தக் கட்சியினரே நிவாரண உதவி கிடைக்கவிடாமல் தடுக்கிறார்கள்’ என குபீர் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள மேல்பாரதிநகரைச் சேர்ந்தவர் சூரியகாந்தன். தி.மு.க-வில் பேச்சாளராகவும், உலிக்கல் பேரூர் கழக துணை பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். கூலித் தொழிலாளியான இவர் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி, 21-ம் தேதி மேய்ச்சலுக்காக தேயிலைத் தோட்டப் பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் சூரியகாந்தனின் அலறல் சத்தம் கேட்கவே.... பதறிப்போன அவருடைய மகன் நாகராஜ் அப்பாவைத் தேடி ஓடியிருக்கிறார்.

சூரியகாந்தன்
சூரியகாந்தன்

அங்கே தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் வலியால் துடிதுடித்துக் கிடந்த சூரியகாந்தன், ‘தன் வயிற்றில் காட்டுமாடு முட்டிவிட்டதாக’க் கூறியிருக்கிறார். உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, குன்னூரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சூரியகாந்தனை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் ஊட்டியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். அங்கு சூரியகாந்தனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பியிருக்கின்றனர். கோவையில், சூரியகாந்தனுக்கு குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். சிகிச்சை பெற்ற 20 நாள்களில் மீண்டும் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் சூரியகாந்தன்.

சூரியகாந்தனின் மருத்துவச் செலவுகளுக்காக இருந்ததையெல்லாம் விற்றுச் செலவழித்த அவரது குடும்பம் தற்போது நிர்க்கதியாக நிற்கிறது. இந்தத் துயரம் குறித்து நம்மிடம் பேசிய சூரியகாந்தனின் மகன் நாகராஜ், “அம்மா செல்வராணியும் முடியாமல் இருக்கிறார். கூலி வேலைக்குக்கூடப் போக முடியாது. அப்பா இல்லாமல் மொத்தக் குடும்பமுமே வறுமையில் அல்லாடுகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் வேறு. வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், ‘உங்கள் அப்பாவுக்கு வெளிக் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, அரசின் நிவாரண உதவியை வழங்க முடியாது’ என நிவாரண உதவியை மறுக்கிறது வனத்துறை.

நாகராஜ்
நாகராஜ்

காட்டுமாடு தாக்கிய சில நிமிடங்களில் அவர் அருகில் இருந்தவன் நான். விரிந்த கொம்புகளுடன் இருந்த காட்டுமாடு, நெற்றிப் பகுதியால் அப்பாவின் வயிற்றில் வேகமாக முட்டியிருக்கிறது. இதனால் கொம்பு கிழித்த வெளிக்காயம் இல்லை. ஆனால், காட்டுமாடு தாக்கியதில் குடல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சிதைந்து அப்பா உயிரிழந்ததற்கான மருத்துவச் சான்று இருக்கிறது. அப்பா தாக்குதலுக்கு உள்ளான சமயத்தில் சம்பவ இடத்தில் காட்டுமாடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் வனத்துறையிடமும் இருக்கின்றன. இத்தனை ஆதாரங்கள் இருந்தும் எங்கள் குடும்பத்துக்கு கிடைக்கவேண்டிய உரிமையைப் பெற மொத்தக் குடும்பமும் எட்டு மாதங்களுக்கும் மேலாகப் போராடிவருகிறோம்’’ என்றார் சோகத்துடன்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

நிவாரண உதவி மறுக்கப்படுவதற்கான பின்னணி குறித்து நம்மிடம் பேசிய சூரியகாந்தனின் முதல் மகள் தனலட்சுமி, “அப்பா இறந்த பிறகு, ஆ.ராசா எம்.பி., தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆகியோரிடமிருந்து கொஞ்சம் நிவாரண உதவி கிடைத்தது. ஆனாலும்கூட எங்களுக்கான அரசின் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை.

மொழிப்போரில் ஈடுபட்டு சிறைக்கெல்லாம் சென்றவர் அப்பா. ஆனால், ‘கட்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு எதிர்க்கோஷ்டியில் அப்பா இருந்ததால்தான் எங்களுக்கு இந்த வஞ்சனை நடந்திருக்கிறது’ என்று கட்சிக்காரர்கள் சொல்லிவருகிறார்கள். வனத்துறை கொடுக்கவேண்டிய 4 லட்ச ரூபாய் நிதி கிடைத்தால், அம்மாவின் மருத்துவச் செலவுக்கு உதவியாக இருக்கும்’’ என்றார் கண்ணீருடன்.

நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் இந்தப் பிரச்னை குறித்து விளக்கம் கேட்டபோது, “நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயத்தையே கேள்விப்படுகிறோம். நிவாரணம் அளிப்பதற்கான நிதி இருப்பில் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களை மாவட்ட வன அலுவலகத்துக்கு வரச் சொல்லுங் கள். விவரங்களைச் சரிபார்த்துவிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர்.

காட்டுமாடு தாக்கி உயிரிழந்த தி.மு.க நிர்வாகி... எதிர்க்கோஷ்டி என்பதால் கைவிட்டாரா அமைச்சர்?

‘தி.மு.க-வில் உங்களுடைய எதிர்க் கோஷ்டியைச் சேர்ந்தவர் சூரியகாந்தன் என்பதால், அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவியை வழங்க விடாமல் தடுத்துவருகிறீர்கள் என்கிறார்களே...’ என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘அமைச்சராக இருக்கிற நான், அரசாங்க உதவியிலெல்லாம் பாகுபாடு காட்ட முடியுமா... என்னைப் பிடிக்காதவர்கள்தான் இது போன்ற செய்தியைப் பரப்புகிறார்கள். சூரியகாந்தன் விவகாரம் ஏற்கெனவே என் கவனத்துக்கும் வந்தது. ஆனால், சூரியகாந்தன் இறப்பு குறித்த மருத்துவ அறிக்கையில், ‘காட்டுமாடு தாக்கியதாக எந்த ஆதாரமும் இல்லை’ எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. எனவே, காட்டுமாடு தாக்கித்தான் சூரியகாந்தன் இறந்தார் என்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால் எடுத்துவரச் சொல்லுங்கள். நான் பார்க்கிறேன்’’ என்றார்.