Published:Updated:

ராஜதானிகோட்டையில் யார் கொடி? - தொடர் பலியாகும் தி.மு.க-வினர்!

திண்டுக்கல்
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல்

எங்க ஊரில் எப்பவுமே அ.தி.மு.க-வைத் தவிர வேறு கட்சிகளின் கொடியோ, பேனரோ வைப்பதில்லை.

ராஜதானிகோட்டையில் யார் கொடி? - தொடர் பலியாகும் தி.மு.க-வினர்!

எங்க ஊரில் எப்பவுமே அ.தி.மு.க-வைத் தவிர வேறு கட்சிகளின் கொடியோ, பேனரோ வைப்பதில்லை.

Published:Updated:
திண்டுக்கல்
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில், தேர்தல் முன்விரோதம் காரணமாக தி.மு.க-வினர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதாகக் கிளம்பியிருக்கும் புகார் தென் தமிழ்நாட்டை அதிரவைத்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்டது ராஜதானிகோட்டை கிராமம். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்துவரும் ராஜதானிகோட்டையில் மாற்றுக் கட்சியினர் பிரசாரத்துக்காக நுழையக்கூட முடியாது. இந்த ஊருக்கான பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில், தொடர்ச்சியாக நான்கு முறை அ.தி.மு.க-வே வென்றிருக்கிறது.

அப்படிப்பட்ட கிராமத்தில், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது முதன்முறையாகப் போட்டி யிட்ட தி.மு.க வெற்றிபெற்றது. தொடர்ந்து நான்கு முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க-வின் கணேசனை, தி.மு.க வேட்பாளர் விஜயகுமார் வீழ்த்தினார். விஜயகுமாரின் மனைவி கவிதாவும் பக்கத்து வார்டில் கவுன்சிலராகத் தேர்வானது, அ.தி.மு.க-வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கணேசன் - விஜயகுமார்
கணேசன் - விஜயகுமார்

இதையடுத்து தி.மு.க-வின் வெற்றிக்குக் காரணமாக இருந்த மணிபாண்டி, ராஜ்குமார், கேசவன், சுகுமார், சதீஷ்குமார், பெருமாள் உள்ளிட்ட 10 பேரின் உயிருக்குக் குறிவைக்கப்பட்டு தொடர் கொலைகள் நடக்கத் தொடங்கியிருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் கிராமத்து மக்கள்.

இது குறித்துப் பேசுபவர்கள், “எங்க ஊரில் எப்பவுமே அ.தி.மு.க-வைத் தவிர வேறு கட்சிகளின் கொடியோ, பேனரோ வைப்பதில்லை. ஆனால், கடந்த மே மாதம் நடந்த பங்குனித் திருவிழாவின்போது ஊருக்குள் தி.மு.க பேனர்கள் முதன்முறையாக வைக்கப்பட்டன. அவற்றை அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரான கணேசனின் மகன் அன்பழகனும், அவரின் நண்பர் மனோஜ்குமாரும் கிழித்தெறிந்தனர்.

இதை தி.மு.க-வினர் தட்டிக்கேட்டபோது அவர்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்தனர். இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் சப் இன்ஸ்பெக்டரான விஜயபாண்டி கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவே இப்போது தொடர் கொலைகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன” என்கின்றனர் விலகாத அச்சத்துடன்.

ராஜதானிகோட்டையில் யார் கொடி? - தொடர் பலியாகும் தி.மு.க-வினர்!

தி.மு.க-வின் சார்பில் வெற்றிபெற்று கவுன்சிலரான விஜயகுமாரிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, ‘‘கடந்த மே 20-ம் தேதி கேசவன், சுகுமார் ஆகியோர் டூ வீலரில் கொடைரோடு பாலத்தின் அடியில் சென்றபோது டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார்கள். அது திட்டமிட்ட கொலை என்று போலீஸாரிடம் சொன்னபோதும் விபத்து வழக்காகவே முடித்துவிட்டார்கள். அடுத்த ஒரே மாதத்தில் (ஜூன் 20-ம் தேதி) அன்பழகன், மனோஜ்குமார் ஆகியோர் மதுபோதையில், தி.மு.க-வைச் சேர்ந்த பெருமாளைத் தலையில் தாக்கினர். இதை மற்றொரு தி.மு.க-காரரான ராஜ்குமார் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த அவர்கள் ராஜ்குமாரைக் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்றுவிட்டனர். ராஜதானிகோட்டையில் அ.தி.மு.க கொடி தவிர யார் கொடியும் பறக்கக் கூடாது, கணேசனைத் தவிர யாரும் ஜெயிக்கவே கூடாது என்பதற்காகவே இந்தத் தொடர் கொலையில் இறங்கியிருக்கிறார்கள். குற்றவாளிகளோடு சப் இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி நெருக்கமாக இருப்பதால் அவரையும் விசாரிக்க வேண்டும்” என்றார்.

ராஜ்குமார்
ராஜ்குமார்

கொலையான ராஜ்குமாரின் தந்தை சந்திரனிடம் பேசியபோது, ‘‘என் மகனைக் கொலை செய்த இருவரும் அவர்களின் உறவினரான ஒரு போலீஸ்காரர் வீட்டிலேயே பதுங்கியிருக்கிறார்கள் என்பது உள்ளூர் போலீஸாருக்கும் தெரியும்... ஆனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ‘அடுத்தடுத்து இதேபோல சம்பவங்கள் நடக்கும். இன்னும் நாலு பேரைச் சீக்கிரத்தில் கொல்வோம்’ என்று மனோஜ்குமாரும் அன்பழகனும் எச்சரித்துவிட்டுப் போயிருப்பதால் ஊரே அரண்டுபோயிருக்கிறது” என்றார் வேதனையோடு.

அன்பழகன், மனோஜ்குமார்
அன்பழகன், மனோஜ்குமார்

அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரும், அன்பழகனின் தந்தையுமான கணேசனிடம் இந்தத் தொடர் கொலைகள் பற்றிக் கேட்டபோது, ‘‘தி.மு.க-வைச் சேர்ந்த விஜயகுமார் தேர்தலின்போது ஊரிலிருந்த 25 இளைஞர்களை டூர் அழைத்துச் சென்று கஞ்சா, சரக்கு வாங்கிக் கொடுத்து தவறான வழிக்கு மாற்றிவிட்டார். அந்தக் கும்பல் திருவிழாவின்போது மனோஜ்குமாரின் தந்தையைத் தாக்கியது. இப்போதுகூட ராஜ்குமார்தான் முதலில் என் மகனை வெட்டியிருக்கிறார். தற்காப்புக்காகவே என் மகனும் மனோஜ்குமாரும் ராஜ்குமாரை வெட்டியிருக்கின்றனர்” என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி,முக செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரை பலவழிகளில் தொடர்புகொண்டோம். ஆனால், நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியிடம் கேட்டதற்கு, ‘‘அரசியல் விரோதம் காரணமாக இளைஞர்கள் பலிகடா ஆகின்றனர். பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். தொடர் குற்றங்களில் ஏடுபடுவதால், அன்பழகன், மனோஜ்குமார் இருவர் மீதும் குண்டாஸ் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’’ என்றார்.

சந்திரன், பாஸ்கரன்
சந்திரன், பாஸ்கரன்

எஸ்.ஐ விஜயபாண்டியிடம் விளக்கம் பெற அவருடைய எண்ணுக்குப் பலமுறை அழைத்தோம். நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரனிடம் இது பற்றிக் கேட்டதற்கு, ‘‘குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மனோஜ்குமார் ஏற்கெனவே குண்டாஸில் சிறை சென்று வந்தவர்‌. அவரைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம்.‌ போலீஸார் யாருக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. இருந்தாலும் இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். போலீஸார் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அரசியல்வாதிகளின் பதவிப் பசிக்காக, அப்பாவி இளைஞர்கள் பலி கொடுக்கப்படுவதை உடனடியாகத் தடுத்தாக வேண்டும்!