அரசியல்
அலசல்
Published:Updated:

‘இடத்தை எழுதிக்கொடுத்தால்தான் குடிநீர் இணைப்பு...’

முத்துகணேஷ் குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
முத்துகணேஷ் குடும்பம்

- விருதுநகரில் வில்லங்கம் செய்கிறாரா தி.மு.க பிரமுகர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகணேஷ். அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் விநாயகமூர்த்தி. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்கெனவே நிலத்தகராறு இருந்துவரும் நிலையில், ‘தன் வீட்டுக்குக் குடிநீர் இணைப்பு தரவிடாமல் தடுக்கிறார் விநாயகமூர்த்தி’ எனக் குமுறுகிறார் முத்துகணேஷ்.

இது குறித்துப் பேசும் அவர், “சொக்கம்பட்டியில் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக 2.15 ஏக்கர் பட்டா நிலம் இருக்கிறது. இதில் எங்கள் வீட்டார் புழக்கத்துக்காக, மொத்த நிலத்திலிருந்து 16 அடியை மட்டும் வண்டிப் பாதைக்காக ஒதுக்கி பத்திரப்பதிவு செய்திருக்கிறோம். பாகப்பிரிவினைப்படி எனது இடத்தில் புதிதாக வீடு கட்டிக்கொண்டு, மனைவி, மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு வசித்துவருகிறேன்.

‘இடத்தை எழுதிக்கொடுத்தால்தான் குடிநீர் இணைப்பு...’

வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் பெறும்போதே வீட்டுப் பட்டா நகல், மின்சார இணைப்பு, தீர்வை மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்து குடிநீர் இணைப்பு வழங்கக் கேட்டு பஞ்சாயத்தில் விண்ணப் பித்தேன். ஆனால், கடந்த ஒன்றரை வருடமாக குடிநீர் இணைப்பு தரப்படவில்லை. பஞ்சாயத் துத் தலைவராக இருக்கும் மாரியம்மாளின் மருமகனான தி.மு.க பிரமுகர் விநாயக மூர்த்திதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம்.

அதாவது, எங்கள் குடும்ப நிலத்துக்கு மத்தியில் விநாயகமூர்த்திக்குச் சொந்தமான 15 சென்ட் நிலம் இருக்கிறது. அவரது நிலத்துக்குச் சென்றுவர தடையிருக்கக் கூடாது என்பதற்காக எங்கள் குடும்ப நிலத்திலுள்ள 16 அடி வண்டிப்பாதையை ஊராட்சி மன்றத்துக்கு எழுதிவைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார் விநாயகமூர்த்தி. எங்கள் குடும்பச் சொத்தை எப்படி ஊருக்கு எழுதிவைக்க முடியும் என்று மறுத்ததால், இன்றுவரை எனது வீட்டுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கவிடாமல், பஞ்சாயத்துத் தலைவர் மூலம் தடுத்துவருகிறார்.

இது தொடர்பாக நான் தொடுத்த வழக்கில், ‘உடனடியாக வீட்டுக்குக் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியரும் வீட்டுக்குத் தண்ணீர் இணைப்பு வழங்கச் சொல்லி ஏற்கெனவே வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனாலும் உத்தரவை யாரும் செயல்படுத்தவில்லை’’ என்றார் கவலையுடன்.

விநாயகமூர்த்தி
விநாயகமூர்த்தி
மாரியம்மாள்
மாரியம்மாள்

இதையடுத்து பஞ்சாயத்துத் தலைவர் மாரியம்மாளிடம் விளக்கம் பெற அவரது எண்ணைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவருக்கு பதிலாக விநாயகமூர்த்தியே நம்மிடம் போனில் பேசினார். “பஞ்சாயத்துத் தலைவர் நம்பர் மாத்திட்டாங்க. இப்போ அவங்ககிட்ட பேச முடியாது. தண்ணீர் இணைப்பு சம்பந்த மான வழக்கில், மேல்முறையீடு செய்திருக் கிறேன். கோர்ட்டில் கேஸ் இருக்குறப்ப செய்தி போட்டா பிரச்னையாகிடும்” என்றார் மிரட்டலாக.

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் அனுப்பி விசா ரணை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

ஊராட்சித் தலைவர்களை ஆட்டு விப்பவர்களின் கொட்டத்தை அடக்குமா அரசு?