Published:Updated:

பெண்களால்... பெண்களே... பெண்ணுக்காக! 2,500 கி.மீ சென்னை டு மகாராஷ்டிரா நெகிழ்ச்சிப் பயணம்!

உன்னதியுடன் கலைச்செல்வி மற்றும் பொன்மணி
உன்னதியுடன் கலைச்செல்வி மற்றும் பொன்மணி

மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரியைச் சேர்ந்த 22 வயது பெண்ணான உன்னதி அணில் சாகேத்தை, 2,500 கிலோமீட்டர் பயணித்து அவர் வீட்டில் சேர்த்துவிட்டு வந்த பாலவாக்கம் பகுதி தி.மு.க மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, அந்த அனுபவத்தைப் பகிர்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரியைச் சேர்ந்தவர், 22 வயது பெண் உன்னதி அணில் சாகேத் (Unnati Anil Zagade). இவர், சென்னையில் இயங்கிவரும் ஒரு தனியார் மென்பொருள நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கொரோனா ஊரடங்கின் காரணமாக ஊருக்குச் செல்ல முடியாதவர், வீட்டில் இருந்தபடியே வேலைபார்த்துவந்துள்ளார். இந்த நிலையில், உன்னதியின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாக  வீட்டிலிருந்து ஓர் அதிர்ச்சித் தகவல் வர, நிலைகுலைந்து போனார் அவர். எப்படியாவது ஊருக்குப் போய்விட வேண்டும் எனத் துடித்தவர், ட்விட்டரில் மகாராஷ்டிரா முதல்வர், அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் தமிழக முதல்வரை Tag செய்து ட்வீட் செய்துள்ளார். அடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலேவையும் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார். அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வரின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். பின்னர், தி.மு.க மகளிரணித் தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் எப்படியாவது உதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார், சுப்ரியா சுலே.

Supriya sule tweet
Supriya sule tweet

கனிமொழி, உடனடியாக உன்னதியிடம் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு, உதவுவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், உன்னதி பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தாரோ, அவருடன் யாராவது ஒரு பெண் உடன் சென்றால்தான் அனுப்புவோம் எனச் சொல்லியிருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட கனிமொழி எம்.பி, இந்த கொரோனா சமயத்தில் இதுபோன்ற உதவிகளுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குழு ஒன்றில் இவ்விஷயத்தைப் பகிர, பாலவாக்கம் பகுதி தி.மு.க மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி உதவ முன்வந்துள்ளார். அடுத்து என்ன நடந்தது என்பதை கலைச்செல்வியே விளக்கினார்...

``சென்னை பாலவாக்கம்தான் என் சொந்த ஊரு. திருவான்மியூர் மார்க்கெட்டுல, மொத்த பூ வியாபாரம் பார்த்துட்டு இருக்கேன். தி.மு.க மகளிரணியில் பாலவாக்கம் பகுதிச் செயலாளர் நான். கொரோனாவுல பாதிக்கப்படுறவங்களுக்கு உதவி செய்றதுக்காகவே, கனிமொழி அக்கா ஒரு க்ரூப் ஓப்பன் பண்ணியிருக்காங்க. அதுல, இந்த மாதிரி விஷயம்... யாராவது ஹெல்ப் பண்ண முடியுமா, கூடப் போக முடியுமான்னு கேட்டாங்க. உடனே, நான் போறேன்னு சொன்னேன்.  தனியா போக முடியாதுண்ணு என் துணைக்கு காஞ்சிபுரம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரியின் மகள் பொன்மணி கூட வந்தாங்க.

உன்னதியுடன் கலைச்செல்வி மற்றும் பொன்மணி
உன்னதியுடன் கலைச்செல்வி மற்றும் பொன்மணி

போன செவ்வாய்க்கிழமை (28.4.2020) சாயங்காலம் ஆறு மணிக்குதான் அவங்க கம்பெனியில இருந்து ஊருக்குப் போறதுக்கு லெட்டர் கொடுத்தாங்க. நாங்க சரியா 11 மணிக்கு சென்னையில இருந்து கிளம்பி, அடுத்தநாள் ராத்திரி 11 மணிக்கு அவங்க வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். வண்டி கிளம்பும்போது, அந்தப் பொண்ணு ரொம்ப சோர்வா அழுதுட்டே இருந்தாங்க. நாங்க, அந்தப் பொண்ணுக்கு ஆறுதல் சொல்லிட்டே போனோம். முதல்ல, தயக்கத்தோடு இருந்தவங்க, போகப்போக எங்ககூட நல்லாப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. `எனக்காக நீங்க யாரோ ஒருத்தர் உதவி செய்றீங்க. அப்பா இறந்த இந்த நேரத்துலயும் ரொம்ப மன ஆறுதலா இருக்கு’ன்னு' சொன்னாங்க. அங்க போறதுக்குள்ள எங்களுக்கு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க.

அதேமாதிரி, அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சதும், அவங்க பொண்ணைப் பார்த்த வீட்டுல உள்ளவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். வீட்டுல ஒருத்தர் இறந்துபோன துக்கத்துல இருந்தாலும், எங்களை நல்லா கவனிச்சாங்க. `எங்க பொண்ண நாங்க ரொம்ப மிஸ் பண்ணிட்டு இருந்தோம், நல்லவேளையா நீங்க உதவி செஞ்சீங்க. தமிழ்நாட்டு மக்கள் நல்ல உதவி செய்ற குணம் உள்ளவங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். இப்போதான் நேர்ல பார்க்கிறோம்... ரொம்ப மகிழ்ச்சி'ன்னு சொன்னாங்க. கனிமொழி மேடத்துக்கும் நன்றி சொல்லச் சொன்னாங்க. கொரோனா காலகட்டம் முடிஞ்சவுடனே ஒருமுறை வீட்டுக்கு கண்டிப்பா வரணும்னு கேட்டுக்கிட்டாங்க.

புதன் கிழமை ராத்திரி அங்கிருந்து கிளம்பி, மறுநாள் ராத்திரி சென்னைக்கு வந்து இறங்கினோம். கிட்டத்தட்ட மூணு நாள் ட்ராவல்ல தான் இருந்தோம். போய்வர செலவு எல்லாம் கனிமொழி மேடம்தான் பார்த்துக்கிட்டாங்க.

சென்னையில இருந்து கிளம்பும்போது, வீட்டுக்குப் பக்கத்துல உள்ளவங்களே இந்த நேரத்துல இது முக்கியமான்னு கேட்டாங்க, இந்த நேரத்துலதான் நாம உதவி பண்ணணும்னு சொல்லிட்டு கிளம்பினேன். எங்க வீட்டுல உள்ளவங்களும் ஒண்ணும் சொல்லல. கொரோனா ஊரடங்கு ஆரம்பிச்ச நாள்ல இருந்தே, தினமும் 100 பேருக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கேன். ஊருக்குப் போன நேரத்துல வீட்டுல உள்ளவங்கள கொடுக்கச் சொல்லிட்டுப் போனேன். வந்ததுல இருந்து நானே நேர்ல போய் உதவி செஞ்சுட்டு இருக்கேன். கட்சியில இருக்கோம், அக்கா சொன்னாங்க அப்டிங்கிறதத் தாண்டி, கஷ்டத்துல இருந்த ஒரு பொண்ணுக்கு உதவி செஞ்சிருக்கோம்னு மன நிறைவா இருக்கு'' என்கிறார் கலைச்செல்வி.

உன்னதியுடன் கலைச்செல்வி மற்றும் பொன்மணி
உன்னதியுடன் கலைச்செல்வி மற்றும் பொன்மணி

உன்னதி இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில், ``நான் பாதுகாப்பாக வீட்டுக்கு வந்துவிட்டேன். இதுபோன்ற நேரத்தில் உடனடியாக உதவி செய்த சுப்ரியா சுலே மேமுக்கு, மிகவும் நன்றியுள்ளவளாக உணர்கிறேன். கனிமொழி  மேம் அளித்த ஆதரவுக்கு நன்றி. எனது பாதுகாப்பு மற்றும் ஏற்பாட்டை உறுதிப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்த மற்ற அனைவருக்கும் நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சந்திக்க விரும்பிய காதலி.. பல மைல்கள் கடந்து போலீஸை அதிரவைத்த இளைஞர்கள்!

தி.மு.க மகளிரணியினரின் இந்தச் செயலுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார் கனிமொழி. அவர் தனது ட்வீட்டில் 

``சென்னையில் பணிபுரிந்துவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த உன்னதி என்பவரது தந்தை மரணமடைந்துவிட்டதால், அப்பெண்ணை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பிவைக்க உதவ வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே கேட்டார். சம்பந்தப்பட்ட ஐ.டி நிறுவனம் உன்னதியை பெண் துணையின்றி அனுப்ப மறுத்த நிலையில், சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதி மகளிரணி அமைப்பாளர் ந.கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரியின் மகள் பொன்மணி ஆகிய இருவரும் உடன் செல்ல முன்வந்து, அப்பெண்ணுடன் 2,400 கி.மீ பயணித்து மகாராஷ்டிரா சென்று, வேண்டிய உதவிகளைச் செய்து திரும்பியுள்ளனர். இச்செயல் அந்த சகோதரிகளின் துணிச்சலையும், மனிதாபிமானத்தையும் காட்டுகிறது. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி, பாராட்டு'' எனத் தெரிவித்துள்ளார். தவிர, பல்வேறு தரப்பில் இருந்தும் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

உணவளிக்கும் கலைச்செல்வி
உணவளிக்கும் கலைச்செல்வி

கட்சி, அரசியல் என்பதையெல்லாம் தாண்டி, பெண் ஒருவர் கஷ்டப்படுகிறார் என அறிந்ததும் உடனடியாக உதவி செய்யத் துணிந்த கலைச்செல்வியையும், அவருக்கு துணையாகச் சென்ற பொண்மணிக்கும், நாமும் ஒரு பாராட்டு தெரிவிக்கலாமே...

அடுத்த கட்டுரைக்கு