Published:Updated:

`30 நிமிடங்களில் பீட்சா டெலிவரி.. இல்லையெனில் இலவசம்!’- விவாதத்தைக் கிளப்பிய கமிஷனரின் பதிவு

பீட்சா
பீட்சா ( Representational image )

காலக்கெடுவுக்குள் வீட்டிற்கு உணவு வராவிட்டால் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு மக்கள் இதய மற்றவர்களா

பீட்சா நிறுவனங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அத்தொழிலில் போட்டியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்க அந்நிறுவனங்கள் தினந்தோறும் புதுப்புது ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. சண்டே ஸ்பெஷல், நோ குக்கிங் வீக், பை ஒன் கெட் ஒன் என இவர்கள் அறிவிக்கும் திட்டங்கள் பல விதம். அந்த வகையில் ஆர்டர் செய்த 30 நிமிடங்களில் பீட்சா டெலிவரி கிடைக்காமல் போனால் பீட்சா இலவசம் என்ற அறிவிப்பினை பிரபல பீட்சா நிறுவனங்கள் சமீபமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த வியாபார யுக்தியின் மூலம் கணிசமான வருமானமும் அந்த நிறுவனங்களுக்குக் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அதிவேக டெலிவரி என்ற பெயரில் பீட்சா நிறுவனங்கள் தங்கள் டெலிவரி ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். காலக்கெடுவுக்குள் வீட்டிற்கு உணவு வராவிட்டால் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு மக்கள் இதய மற்றவர்களா?" எனவும் பதிவிட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார்.

30 நிமிடங்களுக்குள் உணவு டெலிவரி எனும் போது நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்குக் கொடுக்கும் அழுத்தத்தை நம்மால் உணர முடிகிறது. 30 நிமிடங்களில் உணவினை எப்படியாவது ஆர்டர் செய்தவரின் கையில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்துப் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செயல்படுகின்றனர் என்றும், உணவினைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு அவர்களுக்குக் கொடுக்கப்படும் கால நேரமான 30 நிமிடங்களை 40 நிமிடங்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் அதைப் பற்றி நிறுவனங்களிடம் விரைவில் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள போலீஸ் அதிகாரியின் பதிவு ட்விட்டரில் சூடான விவாதங்களுக்கு விதையாய் அமைந்துள்ளது.

Representation Image
Representation Image

அதிகாரியின் இந்தப் பதிவிற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து கருத்துகள் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். சிலர் பெருகி வரும் வியாபாரப் போட்டியில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அப்படி இருக்க, நிறுவனங்கள் இது போன்ற புதுப்புது திட்டங்களை கையாள்வது தவறில்லை. இதுவும் ஒரு வகை தொழில் யுக்தியே என்று பதில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரியின் இந்தப் பதிவு தற்போதுவரை மட்டும் 19,500 க்கும் மேற்பட்ட லைக்ஸ்'களைப் பெற்று வைரலாக இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பதிவுக்குப் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, ``உங்கள் கருத்துக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். எங்கள் ஊழியர்களை நாங்கள் ஒரு போதும் அப்படி அணுகுவதில்லை. போக்குவரத்து விதிகளையும் மதிக்கிறோம். அவர்களின் உயிருக்கும் நாங்கள் மதிப்பளிக்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளது.

மேலும், இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலாகப் பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணமாக இருக்கின்றனர். இந்த விவாதத்தில் இணைந்தவர்களில் உணவு டெலிவரி நிறுவனங்களின் ஊழியர்களும் குறிப்பிடத்தக்கவர்கள், `எங்களுக்கு ஆதரவாகப் பதிவிடுவது நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் உங்களின் ஆதரவு எங்கள் பக்கம் ஒரு போதும் இருந்ததில்லை’ என்று காவல்துறையினரைக் கடிந்தும் வருகின்றனர். எங்களின் உணவு டெலிவரி உடையையும் உணவு பையையும் பார்த்தாலே அவர்களின் முகம் மாறிவிடுகிறது. எங்களிடம் அவர்களின் அணுகுமுறை முற்றிலும் ஏற்புடையதாக இல்லை என்றும் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

பீட்சா...
பீட்சா...

இன்னும் சிலர், `உணவு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு இத்தனை ஆர்டர்கள் எடுத்தால்தான் இன்சென்டிவ் மற்றும் குறைந்தபட்ச கமிஷன் தொகை கிடைக்கும் என்று நிர்ணயிக்கும் போது, எங்களுக்கும் வேறு வழி தெரிவதில்லை. நாங்களும் அவசரகதியில் செல்ல வேண்டியதாகிறது என்றும் ஆர்டர் செய்யும் கஸ்டமர்கள் சிறிது தாமதமானாலும் எங்களின் ரேட்டிங்கைக் குறைத்து விடுகின்றனர் என்றும் தங்கள் ஆதங்கத்தினைத் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் போலீஸ் அதிகாரியின் இந்த ஒற்றைப் பதிவு பல தரப்பு மக்களிடையே ட்விட்டரில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். போலீஸ் அதிகாரி கூறியது போல காலக் கெடுவினை 30 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்களாக மாற்றி அமைத்தால், நன்றாகத்தான் இருக்கும் என்கின்றனர் உணவு டெலிவரி ஊழியர்கள்.

பின் செல்ல