Published:Updated:

“இந்தியப் பொருளாதாரம்... இனிவரும் காலத்தில் சிறப்பாகவே இருக்கும்!”

வி.அனந்த நாகேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
News
வி.அனந்த நாகேஸ்வரன்

டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் விளக்கம்

கொரோனா நோய்த்தொற்று காரணமாகக் கொண்டு வரப்பட்ட பல மாத ஊரடங்கு நம் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் முடக்கிவிட்டது. பலரும் வேலை இழந்தனர்; பலரது மாத வருமானம் பாதியாகக் குறைந்தது.

இந்த நிலையில், ‘நம் நாட்டின் பொருளாதாரம் உள்ளபடியே இன்றைக்கு எப்படி இருக்கிறது? அது மோசமாக இருக்கிறதா அல்லது மீண்டும் எழுந்துவருவதற்கான அறிகுறி ஏதும் தென்படுகிறதா என்கிற கேள்விகளே நமக்குள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.

“இந்தியப் பொருளாதாரம்... இனிவரும் காலத்தில் சிறப்பாகவே இருக்கும்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நமது இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிற மாதிரி நாணயம் விகடன் நடத்திய ஆன்லைன் கூட்டத்தில் பேசினார் சர்வதேசப் பொருளாதார நிபுணரும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினருமான டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன். ‘‘இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, நிகழ்காலம் கேள்விகள் நிரம்பியதாக இருந்தாலும், வருங்காலம் சிறப்பாகவே இருக்கிறது’’ என்று பேசி முடித்தார்.

அவர் பேசி முடித்த பிறகு இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அந்தக் கேள்விகளும் பதில்களும் இனி...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், சந்தை மட்டும் உயர்ந்துகொண்டே உள்ளது. இதற்கு என்ன காரணம்?

‘‘இது ஒரு உலகளாவிய பிரச்னை. பங்குச் சந்தைக்கும், பொருளாதாரத்துக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், மத்திய வங்கிகள் உலகம் முழுவதிலும் வட்டி விகிதத்தைக் குறைத்து பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளன.

வி.அனந்த நாகேஸ்வரன்
வி.அனந்த நாகேஸ்வரன்

பணப்புழக்கம் அதிகரித்தாலும், அதைப் பயன்படுத்தும் அளவுக்குப் பொருளாதார நடவடிக்கைகள் இல்லை. ஏனென்றால், நிறுவனங்கள் இந்தச் சூழலில் முதலீடு செய்ய யோசிக்கின்றன. எதிர் காலத்தைப் பற்றிய கேள்விக்குறி உள்ளதால், அவர்கள் கடன் வாங்கி முதலீடு செய்ய முன்வருவதில்லை.

முதலீடு நடக்காதபோது பணப்புழக்கம் அதிகரிப்பதால், அது பங்குச் சந்தை பக்கம் திரும்புகிறது. அதனால் பங்குச் சந்தை உயர்கிறது. இந்த வகைப் போக்கு, இந்தியாவைவிட அமெரிக்காவில் தீவிரமாக உள்ளது. பங்குச் சந்தை ஏதோ ஒரு காரணத்தால் கீழே இறங்கலாம். அவ்வாறு இறங்கினால் நம்பிக்கை மேலும் குறையும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்குச் சந்தையின் போக்கு அடுத்த வருடம் எவ்வாறு இருக்கும்?

‘‘இதை அறுதியிட்டுக் கூற முடியாது. பங்குச் சந்தையின் இன்றைய மதிப்பீடு தக்கவைத்துக்கொள்ளக் கூடியதல்ல. பங்குச் சந்தையின் மதிப்பு தற்போது இருப்பதைவிட குறைய அதிக வாய்ப்பு உள்ளதே தவிர, கூடுவதற்கான வாய்ப்பு குறைவு. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பல உலக நாடுகளுக்கும் பொருந்தும்.’’

“இந்தியப் பொருளாதாரம்... இனிவரும் காலத்தில் சிறப்பாகவே இருக்கும்!”

தங்க விலை போக்கு எப்படி இருக்கும்?

“தங்கம் என்பது என்னைப் பொறுத்தவரை, ஒரு முதலீடு கிடையாது. அது ஒரு தற்காப்பு. தங்கத்தின் விலை உயர்ந்தால் பலவித பிரச்னைகள் உள்ளன என அர்த்தம். உலக அளவில் நாம் பார்க்கும்போது தங்கம் டாலருக்கு எதிராக (Anti Dollar) செயல்படக் கூடியது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த ஆறு மாதங்களில் டாலரின் மதிப்பு கீழ் இறங்கியதால், தங்கத்தின் மதிப்பு கூடியுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய, பிரிட்டன் மத்திய வங்கி வட்டி விகிதத்தை ஏற்றப் போவதில்லை. அதனால் பணவீக்கம் அதிகரிக்கும்போது, விலைவாசி மேலும் உயரும்போது, பணவீக்கம் போக வட்டி விகிதத்தின் உண்மையான நிலவரம் ஜீரோவுக்கும் குறைவாக இருக்கும்.

தங்கத்துக்கு பொதுவாக வருமானம் கிடையாது. நாம் தங்கத்தில் முதலீடு செய்யும்போது நமக்கு வட்டி கிடைப்பதில்லை. மற்ற நாடுகளிலும் பாண்ட் மார்க்கெட் போன்ற வேறு எதிலும் வட்டி கிடையாது. ஆக தங்கத்தில் முதலீடு செய்வதால் எந்தப் பாதகமும் இல்லை. மேலை நாடுகளில் விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குகின்றனர்.’’

ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் போக்கு இனி எப்படி இருக்கும்?

‘‘வளர்ச்சி மந்தமாக இருக்கும் காலகட்டத்தில் ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்காது. பொருளாதார நிலைமை சீராகும் வேளையில் ரியல் எஸ்டேட்டின் மார்க்கெட் கூடும்.’’

விவசாய விளைச்சல் இந்த ஆண்டு சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் வேளையில், அதனால் நம்முடைய ஜி.டி.பி மதிப்பு கூடுமா?

‘‘ஜி.டி.பி மதிப்பு இதனால் கூடாது. ஆனால், விவசாயம் சிறப்பாக இல்லாமல் இருந்திருந்தால் நாம் எதிர்பார்க்கிற ஜி.டி.பி மேலும், குறைவாக இருந்திருக்கக்கூடும். தற்போது இதனால் வெகுவாக ஜி.டி.பி வீழாது.’’

நம்முடைய இறக்குமதி குறைந்துள்ளதா?

‘‘ஆம். இறக்குமதி குறைந்ததற்கான காரணம் நம் பொருளாதார நிலைமை குறைந்திருப்பது. கச்சா எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி குறைந்துள்ளது. ஏற்றுமதி ஜூலை மாதம் அதிகரித்திருந்தாலும், அது தற்காலிக நிலைதான். அது அவ்வாறே தொடராது. சில துறைகளில் ஏற்றுமதி சிறப்பாக அமையலாம். ஆனால், அனைத்துத் துறைகளிலும் அதை நிலைநாட்டுவது கடினமே.’’

தனிநபர் வருமானம் அதிகரிக்க அரசாங்க தரப்பில் என்ன செய்ய வேண்டும்?

‘‘தனிநபர் வருமானம், மொத்த வருமானத்தை நம் நாட்டின் மக்கள் தொகையை வைத்து வகுத்துக் கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம் அதிகரிக்க வேண்டுமெனில், மொத்த வருமானம் அதிகரிக்க வேண்டும். மொத்த வருமானத்தை அதிகரிக்க எடுக்கப்படும் முடிவுகள் வரும் காலத்தில் நன்மை பயக்காது. நாம் செய்வதை செய்துவிட வேண்டும். அதில் என்ன முடிவு வருகிறது என்பது நம் கையில் இல்லை.’’

சீனாவின் வளர்ச்சி நம்மைவிட மிக அதிகமாக இருக்க என்ன காரணம்?

‘‘சீனா நம்மைவிட அதிக வளர்ச்சியடையக் காரணம், அதிக கடன் வாங்கியிருப்பதே. அத்தகைய வளர்ச்சி நல்லதல்ல. விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் விலையில் நம் அரசாங்கம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறு தொழில்கள் சிறப்பாக வளர்ச்சியடைய கடன் கிடைக்கும் வழி முறைகளை எளிதாக்க வேண்டியது அவசியம். இவற்றை மேற்கொண்டாலே வளர்ச்சி தானாக வரும்.’’

அமெரிக்க தேர்தல் முடிவுகள் இந்தியாவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

‘‘அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதே பெரிய கேள்வி. 2000-ல் தேர்தல் நடந்தபோது யார் ஜெயித்தார்கள் என்று கூறுவதற்குச் சில காலம் எடுத்தது. இம்முறையும் அவ்வாறுதான் யார் ஜெயித்தார்கள் என்று சொல்ல முடியாத நிலை அமையலாம். ட்ரம்ப்பின் கடந்தகால நடவடிக்கைகளைப் பார்த்தவர்கள், ஜனநாயக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். நம்மூரைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதால் இந்த எண்ணம் இன்னும் வலுவடைந்திருக்கிறது. ஆனால், ஜனநாயக் கட்சி என்றைக்குமே இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. எனவே, ட்ரம்ப் தோற்று ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வருவது இந்தியாவுக்கு நல்ல முடிவாக அமையாது.’’

டாக்டர் அனந்த நாகேஸ்வரனின் பேச்சை வீடியோவில் பார்க்க: https://bit.ly/34EKWkb