
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஒரு பக்கம் அதிகரித்துவந்தாலும், “கவனம் தேவை... அதேசமயம் அதீத பயம் தேவையில்லை’’ என்பதே மருத்துவர்களின் கூற்றாக இருக்கிறது. நம் வாசகர்களுக்காக கொரோனா குறித்த முக்கியச் சந்தேகங்களை துறை வல்லுநர்களிடமிருந்து கேட்டுப் பெற்றோம்.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு கொரோனா தொற்றாளருக்கு எப்போது ஆக்ஸிஜன் வசதியுடன்கூடிய படுக்கை தேவைப்படும்?”
சையது முஸ்தாக் அஹமது, சிறப்பு மருத்துவர்

“ஒருவருக்கு எந்த அளவுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவருக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் பாதிப்பின் அளவையும் பொறுத்துத்தான் ஆக்ஸிஜன் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது. கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்ற பரிசோதனையில் `பாசிட்டிவ்’ வரும் சிலருக்கு நுரையீரல் பாதிப்பு இல்லாமல், ஆக்ஸிஜன் அளவு 98 முதல் 97 சதவிகிதம் வரை இருப்பவர்களுக்கும், `நெகட்டிவ்’ என வந்து நுரையீரல் பாதிக்கப் பட்டிருந்தாலும் ஆக்ஸிஜன் அளவு சீராக இருப்பவர்களுக்கும் ஆக்ஸிஜன் தேவையில்லை. கொரோனா தொற்றோடு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை முடித்தவர்கள் மற்றும் புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு வேகமாகக் குறையும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இத்தகைய துணை நோய்களுடன் இருப்பவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு ஆரம்பம் முதலே ஆக்ஸிஜனுடன் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்கிறோம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாது. எனவேதான், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவராக இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவராக இருந்தாலும் ஆக்ஸி மீட்டர் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்க அறிவுறுத்துகிறோம். இப்போது கொரோனா பரவல் அதிகமாகியிருக்கிறது. ஒரு குடும்பத்தில் இருக்கும் நான்கில் மூவருக்கோ அனைவருக்குமோ கொரோனா தொற்று இருக்கிறது. அவர்களில் ஒருசிலருக்குக் குறைவான பாதிப்பும், சிலருக்குத் தீவிர பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால்தான் தற்போது ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, காய்ச்சல் அல்லது லேசான கொரோனா அறிகுறி இருக்கும்போது சுயமாக மருந்துக்கடைகளில் சென்று மாத்திரை வாங்கி உட்கொள்வதை விடுத்து மருத்துவரை அணுக வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்றை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்து, கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவருவது எளிதாகும். அப்படிச் செய்யாமல் காலம் தாழ்த்துவதுதான் தற்போது ஆக்ஸிஜன் தேவை ஏற்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம்.
ஆரம்பநிலையில் இருப்பவர்கள், பயத்தில் படுக்கை வசதிக்காக மருத்துவமனைகளை நாடுவதாலும், குணமடைந்து ஆக்ஸிஜன் கொடுக்கத் தேவையில்லாதவர்களும் ‘இன்னும் ஓரிரு நாள் இருக்கிறோம்’ என்று பயம் காரணமாக மருத்துவமனையில் இருப்பதாலும், தேவையான பல நோயாளிகளுக்குப் படுக்கை வசதி கிடைக்காமல் போகிறது. இதை மக்கள் புரிந்துகொண்டு அச்சத்தைத் தவிர்த்தாலே, இப்போதுள்ள கட்டமைப்பைவைத்தே சமாளித்துவிடலாம்.”
“வீட்டிலே தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?”
மருத்துவர் ஆனந்த குமார் (ஓமந்தூரார் மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் கதிரியக்கத்துறைத் தலைவர்)

“கொரோனா தொற்றா, இல்லையா என்று பரிசோதனைக்குக் கொடுத்தது முதல் ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தொற்றின் தீவிரம், வயது, துணை நோய்கள் இருக்கின்றனவா என்பவற்றைப் பொறுத்து அருகிலிருக்கும் மருத்துவமனைக்குத் தொற்றாளரை மருத்துவர்கள் வரச் செய்வார்கள். அங்கே ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உட்பட அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து நோய்த்தொற்றின் தீவிரத்தை அறிந்துகொள்வார்கள்.
சி.டி ஸ்கேன் செய்வது மிகவும் ஆபத்தானது என்று ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அது முற்றிலும் தவறு. கோவிட் அறிகுறிகள் இருந்து, `நெகட்டிவ்’ என முடிவுகள் வரும்பட்சத்தில் சி.டி ஸ்கேன் கட்டாயம் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்டு முடிவுகள் `பாசிட்டிவ்’ எனக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே சி.டி ஸ்கேன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பரிசோதனை முடிவுகளின்படி கொரோனா தொற்றாளர் வீட்டில் இருக்கலாமா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதைக் கண்டறிந்து மருத்துவர்கள் கூறுவார்கள். அப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள நல்ல காற்றோட்டமுள்ள தனி அறை இருக்க வேண்டும். அவர்களைப் பார்த்துக் கொள்ள, தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியாளர் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் தொற்றாளர்களை மட்டும்தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்
கொள்ள மருத்துவர் பரிந்துரை செய்வார். இல்லையெனில், அரசின் கொரோனா தடுப்பு முகாம்களுக்குச் செல்லத்தான் அறிவுறுத்துவார்கள். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் தொற்றாளர் ஆக்ஸிஜன் அளவை அளக்கும் ஆக்ஸி மீட்டர், வெப்பநிலையைக் கண்காணிக்கும் தெர்மா மீட்டர், ஆயுஷ் மருந்துகள் உள்ளிட்டவற்றுடன் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பல மாவட்டங்களில் அரசே இந்தப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிவருகிறது. இவர்கள் தொடர்ந்து வீடியோ அல்லது தொலைபேசி மூலமாக மருத்துவர் ஒருவரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு மருத்துவர்கள் மூலம் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பது, மூச்சுப்பயிற்சி செய்வது குறித்துத் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்படும். தனி அறையில் தனிமைப்படுத்திக்கொண்டாலும் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவருக்கான உணவு அறையின் கதவு அருகே வைக்கப்பட்டு எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகளை அவர் பயன்படுத்திய 12 மணி நேரத்துக்குப் பின் சலவை செய்யலாம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்ததும், மூன்று அல்லது நான்கு நாள்கள் கழித்து அந்த அறையைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆரம்பநிலைத் தொற்றுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு பெரும்பாலும் 10 நாள்களுக்குள் தொற்று முற்றிலும் நீங்கியிருக்கும். எனவே, இரண்டாவதாக கொரோனா பரிசோதனையெல்லாம் செய்ய வேண்டியதில்லை.”

“கொரோனா தொற்று ஏற்பட்டபோதும், அதன் பின்னரும் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் என்னென்ன?”
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது ஒரு மாதத்துக்கு உணவு முறையில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். புரதம், நீர்ச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சக்கரைநோய் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். பச்சைக் காய்கறிகள், கீரைகள் என அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் சி மற்றும் துத்தநாக சத்து (Zinc) அதிகமுள்ள அசைவ உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றோடு சேர்த்து மூச்சுப் பயிற்சிகள், உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டிருந்தாலும், கொரோனா வந்து குணமடைந்தவர்களாக இருந்தாலும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். கபசுரக் குடிநீர், அதிமதுரம் உள்ளிட்ட கஷாயங்களையோ, ரசம் அல்லது மோர் என ஏதாவது ஒரு நீராகாரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு எவ்வளவு நீர் ஆகாரம் எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இனிப்பு வகைகள், ஆல்கஹால் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். நுரையீரல் பாதிப்புக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கும் புகைப் பழக்கத்தையும் கட்டாயம் கைவிட வேண்டும். 10 நாள்களில் குணமடைந்தால்கூட தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு மேலாக எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை எடுக்க வேண்டும்.”
‘‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்?’’
தேரணி ராஜன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர்.

“ஆரம்பநிலை சசதொற்றாளர்கள், மத்திய நிலைத் தொற்றாளர்கள், தீவிரநிலைத் தொற்றாளர்கள் என கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மூன்றாக வகைப்படுத்தலாம். லேசான காய்ச்சலுடன், ஆக்ஸிஜனின் அளவு 96-க்கு மேல் இருக்கிறது. மூச்சுவிடுவதில் எந்தச் சிரமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். ஆனாலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் ஆரம்பநிலைத் தொற்றாளர்கள். இவர்களை நோய்த்தொற்று கண்டறியப்பட்ட முதல் ஐந்து நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்களே பரிந்துரை செய்வார்கள். அந்த நாள்களில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து ஆக்ஸிஜனின் அளவு 94-க்கு மேல் இருக்குமானால் அடுத்த ஐந்து நாள்களும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இவர்கள் தொற்று கண்டறியப்பட்ட பத்து நாள்களுக்குள்ளாகவோ இரண்டு வாரங்களுக்குள்ளாகவோ முழுவதும் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துவிடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட நாள்களில் தேவையெனில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் படவும் தயாராக இருக்க வேண்டும்.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் அதிகமாக இருக்கும். மூச்சுவிடும் எண்ணிக்கை அதிகரித்து, ஆக்ஸிஜன் அளவு 85-க்கு மேலும் 94-க்கு கீழும் இருக்கும். இவர்கள் கட்டாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆக்ஸிஜனின் அளவு 85-க்குக் கீழே இருந்து, சுயநினைவு இன்றி, படபடப்பு மற்றும் அதிக அளவு காய்ச்சலுக்கு ஆளானவர்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை தேவைப்படும். கொரோனா தொற்று அதிகரிப்பதுபோலவே குறைவதும் தீவிரநிலையிலிருந்து ஆரம்பநிலைக்கு படிப்படியாகத்தான் நடக்கும்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதல் அலையைவிட இரண்டாவது அலையின்போது கொரோனா தொற்று குறித்து மிகத் தெளிவான பார்வை கொண்டிருக்கிறார்கள். அதனால் சவால் நிறைந்த இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை அவர்களால் மிக எளிதாகக் கையாள முடிகிறது. தேவையற்ற அச்சத்தை விடுத்து மக்கள் கவனத்துடன் இருந்தாலே போதும்.”
“கொரோனா சிகிச்சைக்காகச் செல்லும் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுமா?”
மருத்துவர் அருணாச்சலம், பொதுநல மருத்துவர்

“ரெம்டெசிவிர் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் காக்கும் மருந்து இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சுவிடும் எண்ணிக்கை அதிகரித்தவர்களுக்கும், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே ரெம்டெசிவிர் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் தொற்று பாதிக்கப்பட்ட முதல் 10 நாள்களுக்கு மட்டும்தான் இது பலன் தரும். இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இதை வழங்குவதற்கு முன் பலகட்ட பரிசோதனைக்கும் ஆலோசனைக்கும் உட்படுத்துகிறோம்.
அமெரிக்காவிலும், உலக சுகாதார மையத்தாலும் பிளாஸ்மா தெரப்பியோ, ரெம்டெசிவிர் சிகிச்சையையோ கொரோனாவுக்கான தடுப்பு மருந்தாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் நமக்குப் பலன் தருகிறது என்பதால் ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தலின்படி அதை இங்கு பயன்படுத்திவருகிறோம். கொரோனா வைரஸ் பல்கிப் பெருகும் ஆற்றல் உடையது. அதுமட்டுமல்ல, நுரையீரலைப் பாதிக்கும் திறன் உடையது. இந்த ரெம்டெசிவிர் ஒரு வைரஸ் கிருமி பல்கிப் பெருகுவதைத் தடுக்கும் ஆற்றல் உடையது. அந்த வகையில்தான் இதை ஆரம்பநிலைத் தொற்றாளர்களுக்கு மட்டும் பயன்படுத்து
கிறோம். இரண்டாம் நிலை மற்றும் தீவிர கொரோனா தொற்றாளர்களுக்கு இந்த ரெம்டெசிவிரால் எந்தப் பயனும் இல்லை. எந்தச் சூழலில், யாரால் ரெம்டெசிவிர் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டன என்று தெரியவில்லை. காரணமே இல்லாமல் மக்கள் அவற்றை வாங்கி வீட்டில் பதுக்கும் அளவுக்குச் சூழல் உருவாகிவிட்டது. இந்தியாவிலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டுமே இதை வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இருப்பதுபோல இருக்கலாம். ஆனால், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரெம்டெசிவிர் கொள்முதல் செய்யப்படுகிறது. தேவைப்படும் அனைத்துத் தொற்றாளர்களுக்கும் எந்தத் தொய்வும் இல்லாமல் வழங்கப்படுகிறது.”