Published:Updated:

அலோபதி குறித்து சர்ச்சை கருத்து: பாபா ராம்தேவை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு

மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய சர்ச்சைக் கருத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று கருப்பு தினமாக கடைபிடிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக இணையத்தில் பதஞ்சலி நிறுவனரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பாபா ராம்தேவ், `` அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல். ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிடவும் அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர்" என்று தெரிவித்திருந்தார் . மேலும் அவர், "முதலில் ஹைட்ராக்சிக்ளோரோக்வின் தோல்வியுற்றது. பின்னர் ரெம்டிவிசிர் தோல்வியுற்றது. அதற்குப் பின், பிளாஸ்மா தெரபி தடை செய்யப்பட்டது, ஸ்டீராய்டுகள் மற்றும் பல்வேறு மருந்துகளும் தோல்வியடைந்துவிட்டன" என்றும் பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

அலோபதி மருத்துவ முறையில் மக்கள் உயிர்காக்க மருத்துவர்கள் இரவு பகல் பாராமல், பசி தூக்கமில்லாமல் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் உயிர்காக்கும் அலோபதி மருத்துவத்தை முட்டாள்தனமான அறிவியல் என்று கருத்து கூறி சர்ச்சையைக் கிளப்பிய பாபா ராம்தேவைக் கண்டித்து நாடு முழுவதிலும் இருந்து மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டன குரல்களை எழுப்பினர். அந்த வகையில், பாபா ராம்தேவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த இந்திய மருத்துவ சங்கம், ராம்தேவ் தன்னுடைய கருத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்திய மருத்துவ சங்கம் அனுப்பியிருந்த நோட்டீஸில்,``எந்த ஒரு அடிப்படை தரவுகளும் இல்லாமல் பொதுவெளியில் பொறுப்பற்று மரியாதைக் குறைவாகப் பேசிய பாபா ராம் தேவின் கருத்து குறித்து எங்கள் அமைப்பில் உள்ள மருத்துவர்கள் அவமரியாதையாக உணர்கின்றனர். கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் அலோபதி மருத்துவம் தோல்வியடைந்துவிட்டது. அலோபதி மருத்துவத்திற்கு மக்கள் பலியாகின்றனர் என்ற அவதூறுகளைக் கேட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.

தற்போது மட்டுமல்ல பாபா ராம்தேவ் தொடர்ந்து நவீன மருத்துவம் குறித்து இம்மாதிரியாகப் பேசி வருகிறார். எந்தவித அடிப்படை ஆதாரங்களும், அறிவியல் தரவுகளும் இல்லாமல் பாபா ராம்தேவ் மொத்த நவீன மருத்துவர்களின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பது போலப் பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோர வேண்டும். இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், 1000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நேரிடும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

அதைத் தொடர்ந்து, மற்றுமொரு அறிக்கையில் இந்திய மருத்துவ சங்கம், ``மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டு நவீன மருத்துவத்தைக் கலைத்திட வேண்டும் இல்லையேல், பாபா ராம்தேவ் மீது தொற்று நோய்ச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் வலியுறுத்தி இருந்தது. மருத்துவர்களின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெறுமாறு கடிதம் எழுதியிருந்தார்.

நவீன மருத்துவர்களின் தொடர் கண்டனங்களுக்குப் பதிலளித்த பதஞ்சலி நிறுவனம், ``தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாபா ராம் தேவின் கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்திருந்தது. ஆனால், பதஞ்சலி நிறுவனத்தின் சார்பிலோ அல்லது பாபா ராம்தேவ் தரப்பிலோ இதுவரையிலும் இந்திய மருத்துவ சங்கத்திடம் மன்னிப்பு கேட்கப்படவில்லை.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இந்தியா முழுவதும் மருத்துவர்கள் தங்கள் பணியிடங்களில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து (ஜூன்-1) இன்றைய தினத்தை 'கருப்பு தினமாக' அறிவித்து நோயாளிகளுக்கான சேவைகள் தடைப்படாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு மருத்துவ அமைப்புகள் மற்றும் சங்கங்கள் கண்டனங்கள் தெரிவித்தும் இதுவரையிலும் பாபா ராம்தேவ் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்பதாலும், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை என்பதாலும் இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரித்துக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அலோபதி குறித்து சர்ச்சை கருத்து: பாபா ராம்தேவை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு

மருத்துவர்களின் இந்த போராட்டம் குறித்து (FORDA) அமைப்பின் தலைவர் மருத்துவர் மனிஷ் கூறுகையில், ``மருத்துவர்களின் இந்த போராட்டம் ஆயுர்வேதத்திற்கு எதிரானதல்ல...பாபா ராம்தேவுக்கு எதிரான போராட்டம் மட்டுமே. நாங்கள் இரவு பகலாக நோயாளிகளைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த போராட்டத்தில் நாங்கள் எங்கள் சக மருத்துவர்கள் பலரை இழந்திருக்கிறோம். இந்த போராட்டம் இத்தோடு முடிந்து விடப்போவதில்லை. நாங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம். பாபா ராம்தேவ் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார்.

மருத்துவர்களிடம் தன் கருத்து குறித்து மன்னிப்பு கேட்காத பாபா ராம்தேவ், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் கடிதத்துக்கு மட்டும் பதிலளித்திருக்கிறார். அதில் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், பாபா ராம்தேவை கண்டித்து மருத்துவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு