அரசியல்
அலசல்
Published:Updated:

சம்பளம் காரைக்காலில்... வேலை புதுவையிலா? - நோயாளிகளைத் தவிக்கவிடும் அரசு மருத்துவர்கள்

காரைக்கால் அரசு மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
News
காரைக்கால் அரசு மருத்துவமனை

ஆட்சியர் உத்தரவுக்குப் பிறகும், ஒருசில மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து கையெழுத்து போட்டுப் பணியில் சேர்ந்தனர்

நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து குணப்படுத்தவேண்டிய, காரைக்கால் அரசு மருத்துவமனை, ‘வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சீட்டு எழுதிக் கொண்டிருக்கிறது எனக் குமுறுகின்றனர் காரைக்கால் பொதுமக்கள்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துத் தட்டுப்பாட்டால், நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துவரும் வேளையில், காரைக்கால் மாவட்டத் தலைமை அரசுப் பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்களோ, சிகிச்சையளிக்கும் வசதிகளோ சரிவர இல்லை எனப் புகார்கள் வரிசைகட்டுகின்றன. ‘சம்பளம் காரைக்காலில்... வேலை புதுவையிலா?’ என்று டாக்டர்களுக்கு எதிராக நோயாளிகள் போராடத் தயாரானார்கள். இதைத் தொடர்ந்து ‘காரைக்காலில் நியமனம் பெற்று, புதுச்சேரியில் பணி செய்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 43 பேரும் உடனடியாகக் காரைக்கால் திரும்ப வேண்டும்’ என அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர்.

சம்பளம் காரைக்காலில்... வேலை புதுவையிலா? - நோயாளிகளைத் தவிக்கவிடும் அரசு மருத்துவர்கள்

“ஆட்சியர் உத்தரவுக்குப் பிறகும், ஒருசில மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து கையெழுத்து போட்டுப் பணியில் சேர்ந்தனர். இப்போது அவர்களும் புதுச்சேரிக்கே திரும்பிவிட்டனர். மற்றவர்கள் ஆட்சியரின் உத்தரவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை’’ என்று கொதிக்கிறார் ‘காரைச் சிறகுகள் இயக்கம்’ அமைப்பின் நிறுவனர் வெங்கடேஷ். தொடர்ந்து மருத்துவமனையின் அவலங்களை அடுக்கினார்.

சம்பளம் காரைக்காலில்... வேலை புதுவையிலா? - நோயாளிகளைத் தவிக்கவிடும் அரசு மருத்துவர்கள்

“மருத்துவர்களோ பணியாளர்களோ இல்லாததால், உயிருக்கு ஆபத்தாக வரும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியாமல், புதுச்சேரி, திருவாரூர், தஞ்சை என மற்ற ஊர் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். நோயாளிகளை இப்படி ஊர் ஊராக அனுப்பிவைப்பதற்கு இதென்ன தபால் நிலையமா... சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட சி.டி ஸ்கேனை இயக்குவதற்கு ஆபரேட்டர் இல்லாததால் பயன்பாட்டிலேயே இல்லை. ஆறு அறுவை சிகிச்சை மையங்களில் நான்கு தியேட்டர்கள் எப்போதும் பூட்டியே கிடக்கின்றன. பிணவறை எந்த நிமிடமும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருக்கிறது. மருத்துவமனை மேம்பாட்டுக்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற புதுவை முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்பு, வாயால் சுட்ட வடையாகவே இருக்கிறது’’ என்றார் ஆதங்கத்துடன்.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்
முகம்மது மன்சூர்
முகம்மது மன்சூர்

இது குறித்து விளக்கம் கேட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூரிடம் பேசினோம். “40-க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் இங்கு (காரைக்கால்) பணியாற்றுவதாகக் கணக்கு காட்டி, சம்பளம் பெற்றுவந்தது உண்மைதான். அதற்காகவே ‘இங்கு வந்து பணிபுரிந்தால்தான் சம்பளம் தர வேண்டும்’ என்று கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கிறேன். படிப்படியாக மூன்று மாத காலத்துக்குள் காரைக்கால் அரசு மருத்துவமனை சிறப்பாகச் செயல்படுவதற்குவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறேன்” என்றார்.

நோயாளிகள் ‘தங்கள், இல்லம் தேடி வந்து’ சிகிச்சை பெறட்டும் என்று நினைக்கிறார்களோ மருத்துவர்கள்?!