Published:Updated:

இதய சிகிச்சைப் பிரிவுக்கு குழந்தைகள் டாக்டர்... மருத்துவர் இடமாறுதலில் குளறுபடி?

மருத்துவர் இடமாறுதல்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவர் இடமாறுதல்

முந்தைய ஆட்சியில் கவுன்சலிங் இல்லாமல் இடமாறுதல் இருந்ததால், இடமாறுதலுக்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது.

இதய சிகிச்சைப் பிரிவுக்கு குழந்தைகள் டாக்டர்... மருத்துவர் இடமாறுதலில் குளறுபடி?

முந்தைய ஆட்சியில் கவுன்சலிங் இல்லாமல் இடமாறுதல் இருந்ததால், இடமாறுதலுக்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது.

Published:Updated:
மருத்துவர் இடமாறுதல்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவர் இடமாறுதல்

‘பணி இடமாறுதல் தொடர்பாக யாரும் என்னை அணுக வேண்டாம்’ என்பது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன் அலுவலகத்தில் வைத்திருந்த அறிவிப்புப் பலகை. ஆனால், இப்போது அவரது துறையில் பணி இடமாறுதல், பதவி உயர்வில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் கிளம்பியிருக்கின்றன.

இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழுத் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளையிடம் பேசினோம். “தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பணியிடை மாற்றம், பதவி உயர்வு, கலந்தாய்வு என எல்லாமே நூறு சதவிகிதம் நேர்மையாகவும், ஒளிவு மறைவின்றியும் நடக்கின்றன என்றார் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஆனால், அவ்வாறு இல்லை என்பதே உண்மை. இடமாறுதல் கலந்தாய்வில் பாதிக்கப்பட்ட 22 மருத்துவர்களுடன் ஜூன் 22-ம் தேதி அமைச்சரை நேரில் சந்தித்தோம். அப்போது, ‘என்ன பிரச்னை?’ என்று கேட்டார். `ஒரு மருத்துவப் பிரிவில் சம்பந்தப்பட்ட மருத்துவர் இருந்தால் தான், சரியான சிகிச்சை கொடுக்க முடியும். இதய சிகிச்சைப் பிரிவு சிறப்பு மருத்துவர் பணியில், குழந்தைகள் நல மருத்துவர் அமர்ந்தால் மக்கள் என்ன பிரச்னைக்காக வருகிறார்களோ அதற் கான தீர்வு கிடைக்காது. பிடித்த ஊருக்கு மாறுதல் பெற வேண்டும் என்பதற்காக, இப்படிச் சிலர் தவறான பணிமாறுதல் பெறுகிறார்கள். இதனால், இடமாறுதல் பெற தகுதியுள்ள நபர்கள் இடமாறுதல் கிடைக்காமல் பாதிப்புக் குள்ளாகின்றனர்’ என்று எடுத்துச் சொன்னோம்.

இதய சிகிச்சைப் பிரிவுக்கு குழந்தைகள் டாக்டர்... மருத்துவர் இடமாறுதலில் குளறுபடி?

எங்கள் எதிரிலேயே மருத்துவக் கல்வி இயக்குநர் (டி.எம்.இ) நாராயண பாபுக்கு போன் செய்து, ‘பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் இங்கே வந்திருக்காங்க. உங்ககிட்ட அனுப்பிவைக்கிறேன். நீங்க அவங்களுடைய பிரச்னைக்குத் தீர்வு கொடுங்க. இல்லைன்னா ஏன் பண்ண முடியலைனு சொல்லி அனுப்புங்க’ என்று சொன்னார் அமைச்சர். பிறகு எங்களிடம், ‘நீங்க நேரா கீழ்ப்பாக்கம் டி.எம்.இ போயிடுங்க. உங்க கூடவே என்னுடைய ஸ்பெஷல் பி.ஏ வரத ராஜனையும் அனுப்பிவைக்கிறேன்’ என்றார். நாங்களும் நம்பிக்கையோடு கிளம்பினோம். அங்கு டி.எம்.இ முறையாக பதில் அளிக்காததால் சச்சரவு ஆனது. உடனே அமைச்சர் பி.ஏ தலையிட்டு, ‘இடமாறுதல் கிடைக்கப் பெறாதவர்களுக்கு ஓரிரு நாள்களில் ஆர்டர் வந்துவிடும்’ என்று எங்களை அனுப்பி வைத்தார். ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் உத்தரவு வரவில்லை. இந்தக் கோரிக்கைக்காக வரும் 28-ம் தேதி குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்” என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்க மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனைத் தொடர்புகொண்டோம். “முந்தைய ஆட்சியில் கவுன்சலிங் இல்லாமல் இடமாறுதல் இருந்ததால், இடமாறுதலுக்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. தி.மு.க ஆட்சியில் எல்லாமே வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பத்துப் பைசாகூட செலவழிக்காமல், 6,000 பேருக்கு மேல் பயனடைந் திருக்கிறார்கள். எங்காவது ஒன்றிரண்டு தவறு நடந்திருக்கலாம். நூறு சதவிகிதம் தவறே நடக்கவில்லை என்று சொல்ல முடியாது.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

மருத்துவர் எஸ்.பெருமாள், ஒரு நாள் 20 பேரைக் கூட்டி வந்து என்னைச் சந்தித்தது உண்மைதான். ‘இவர்களுக்கெல்லாம் இடமாறு தலுக்கான வாய்ப்பிருந்தது. ஆனால், டி.எம்.இ போடவில்லை’ என்றார். டி.எம்.இ-க்கு போன் பண்ணிக் கேட்டால், ‘எல்லாம் முறையாக போய்க்கொண்டிருக்கிறது. இவர் தகுதியில்லாத வர்களுக்குக் கேட்கிறார்’ என்று சொன்னார். இருவர் சொல்வதில் எது உண்மை என்று தெரி யாததால், என் பி.ஏ-வை அனுப்பி, ‘இவர் என்ன குறை சொல்கிறார், அவங்க என்ன பதில் சொல் றாங்க. நீங்க நடுநிலையா பார்த்து நியாயமாக இருந்தால் பண்ணிட்டு வாங்க’ என்றேன். அவரும் நேரில் போய் ஐந்தாறு பேருக்கு பணிமாறுதல் பெற்றுக்கொடுத்துவிட்டு வந்தார்.

எந்த அரசு வந்தாலும் பிரச்னை செய்யக்கூடியவர் டாக்டர் பெருமாள். அவர் வைத்திருக்கும் அமைப்பில் மொத்தமே 20 பேர்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எனவே, அவரது குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்த முடியாது. பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கு யார் பணம் வாங்கினார்கள் என்று ஆதாரபூர்வமாக புகார் அளித் தால் நானே ஒரு நேர்மையான அதிகாரியைக்கொண்டு விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். யாராக இருந்தாலும் விடமாட்டேன்” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பெருமாள் பிள்ளை
பெருமாள் பிள்ளை
நாராயண பாபு
நாராயண பாபு

இதற்கிடையே, பணியிட மாறுதலுக் காக மருத்துவ கல்வி இயக்குநர், பல மருத்துவர்களிடம் பணம் வாங்கியிருப்ப தாகப் புகார்கள் குவிகின்றன. பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபுவின் பெயரைக் குறிப்பிட்டே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார். அது தொடர்பான விசாரணையில் அவருக்கு எதிராகப் பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், யார் மூலம் பணம் கை மாறியது என்பதும் கண்டறியப்பட்டுள் ளதாகவும் சொல்கிறார்கள். ஆதாரங்கள் கிடைத்ததும் அவர் சஸ்பெண்ட் செய்யப்படக் கூடும் என்கிறார்கள் விஜிலன்ஸ் அதிகாரிகள்.

இது குறித்து விளக்கம் கேட்க டி.எம்.இ நாராயண பாபுவைத் தொடர்புகொண்டோம். குறுந்தகவலும் அனுப்பினோம். ஆனால், அவர் பதில் தரவில்லை.

இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மீண்டும் கேட்டபோது, “இதுவரை டி.எம்.இ மீதான புகார் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் மீது மட்டுமல்ல, மருத்துவத்துறை சார்ந்து யார் மீது புகார் வந்தாலும், அது நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்” என்றார்.

பார்க்கலாம்!