Published:Updated:

ஆவண எழுத்தர்கள் ஆதிக்கத்தில் பத்திரப்பதிவுத்துறை! - முடிவுக்கு கொண்டுவருவாரா அமைச்சர் மூர்த்தி?

அமைச்சர் மூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் மூர்த்தி

“டபுள் டாக்குமென்ட் ‘செட்’ செய்யும் நபர்கள் யார் என்று தெரிந்தும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

ஆவண எழுத்தர்கள் ஆதிக்கத்தில் பத்திரப்பதிவுத்துறை! - முடிவுக்கு கொண்டுவருவாரா அமைச்சர் மூர்த்தி?

“டபுள் டாக்குமென்ட் ‘செட்’ செய்யும் நபர்கள் யார் என்று தெரிந்தும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

Published:Updated:
அமைச்சர் மூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் மூர்த்தி

அரசுக்கு வருமானத்தை அள்ளித்தரும் துறைகளில் முக்கியமான ஒன்று பத்திரப்பதிவுத்துறை. தமிழ்நாடு அரசின் 2021-2022-ம் ஆண்டுக்கான இலக்கான ரூ.13,252.67 கோடியைத் தாண்டி, வருவாயை வாரி வழங்கிய துறை இது. ஆனால், அரசுக்கு வரும் வருமானத்துக்கு இணையாக, இந்தத் துறையில் கறுப்புப் பணமும், லஞ்சப் பணமும் புழங்குவதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்த அதிகாரிகள்.

இது தொடர்பாக துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் மையமாகப் பார்க்கப்பட்ட பதிவுத்துறை, இந்த ஆட்சியிலும் அப்படியே தொடர்கிறது. கடந்த ஆட்சியில் லஞ்சம், ஊழலில் கொடிகட்டிப் பறந்த அதிகாரிகள் 125 பேர், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், யாரெல்லாம் சஸ்பெண்டாகியிருக்கிறார்களோ, அவர்களின் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும்தான் இன்னமும் துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலரும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அரசாங்கம், அமைச்சர், துறைச் செயலாளர்கள், பதிவாளர்கள், அதிகாரிகளைத் தாண்டி பத்திரப்பதிவுத்துறையை நில மோசடி மாஃபியாக்களும், ரியல் எஸ்டேட் ஆட்களும், இடைத்தரகர்களும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பதுதான் இந்தத் துறையின் சாபம். சார்பதிவாளர்களை, தவறு செய்யாமல் கண்காணிக்கவேண்டிய கூடுதல் ஐ.ஜி-யே அவர்களைத் தவறுசெய்யத் தூண்டி ‘சஸ்பெண்ட்’ ஆன கூத்தை சமீபத்தில் தமிழ்நாடே பார்த்தது” என்கிறார்கள் வருத்தத்துடன்.

ஆவண எழுத்தர்கள் ஆதிக்கத்தில் பத்திரப்பதிவுத்துறை! - முடிவுக்கு கொண்டுவருவாரா அமைச்சர் மூர்த்தி?

“பதிவுத்துறையைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி என ஒவ்வொரு மண்டலத்திலும் இருக்கும் அதிகாரிகள் சிலர் துறைக்கே ‘டான்’போலச் செயல்படுகிறார்கள். நில மோசடி மாஃபியாக்கள், ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், நில இடைத்தரகர்களுடன் கைகோத்து பணம் சம்பாதிப்பதற்காக, தப்புக்குமேல் தப்பு செய்கிறார்கள். தங்களுக்குக் கீழிருக்கும் அதிகாரிகளையும் மிரட்டி, அதற்கு உடன்பட வைக்கிறார்கள். பதிவுத்துறை அமைச்சர்களாக இருந்த பலர், தங்கள் சமூக ஆட்களுக்கு அதிகாரத்தில் முன்னுரிமை கொடுத்ததும் முக்கியப் பிரச்னை. ஒருசில அதிகாரிகளுக்கு பத்து, இருபது வருடங்களாக ஒரே மண்டலத்தில் பணிபுரியக்கூடிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அவர்கள் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இருக்கிறது” என்று சொல்லும் சமூக ஆர்வலர்கள், இந்தத் துறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்குச் சில கோரிக்கைகளையும் அரசிடம் வைக்கிறார்கள்.

“டபுள் டாக்குமென்ட் ‘செட்’ செய்யும் நபர்கள் யார் என்று தெரிந்தும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதிகாரிகளுக்கும், முறைகேடாகப் பதிவுசெய்ய வருபவர்களுக்கும் மீடியேட்டர்களாக இருக்கும் ஆவண எழுத்தர்களின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். மனைப்பிரிவுகளை உருவாக்கி விற்பனை செய்வதிலுள்ள முறைகேடுகளைக் களைந்தாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும். சாஃப்ட்வேர் துணையோடு ஆன்லைன் பதிவு செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும்” என்பதே அவர்கள் முன்வைக்கும் யோசனை.

இது தொடர்பாக விளக்கம் கேட்க பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியைத் தொடர்புகொண்டோம், “நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. துறையிலேயே மூன்று நான்கு குரூப் பாலிடிக்ஸ் இருக்கின்றன. அதில் ‘நான் பெரிய ஆளா... நீ பெரிய ஆளா?’ என்று சங்கங்களும் உள்ளன. சார்பதிவாளர்கள் தவறு செய்தால், மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல்தான் இந்தத் துறையின் சாபக்கேடு. அதிகபட்சமாக சஸ்பெண்டோ, டிரான்ஸ்ஃபரோதான் செய்ய முடியும். இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவரத்தான், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தவறு செய்யும் அதிகாரிகள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க, சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினோம். ஏழு மாதங்கள் கழித்து இப்போதுதான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அது நடைமுறைக்கு வந்தால், ஆதாரத்தோடு நிரூபிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை நிச்சயம்.

ஆவண எழுத்தர்கள் ஆதிக்கத்தில் பத்திரப்பதிவுத்துறை! - முடிவுக்கு கொண்டுவருவாரா அமைச்சர் மூர்த்தி?

டபுள் டாக்குமெண்டால்தான், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்ந்து நடக்கிறது என்று நான் அமைச்சரானதிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்துக்குப் போய் தீர்ப்பு வாங்குவதற்குள், மோசடிக் கும்பல் மூன்று நான்கு பேருக்கு சொத்தைக் கைமாற்றிவிடுகிறது. அடுத்து ஆவண எழுத்தர்களின் அழிச்சாட்டியம். பல வழக்கறிஞர்களும் ஆவண எழுத்தர்களாக இருக்கிறார்கள். இவர்கள்தான் கிரிமினல் ஐடியாவெல்லாம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகமும் நான்கைந்து ஆவண எழுத்தர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சிண்டிகேட் போட்டு தவறு செய்ய முடிகிறது. கடந்த பத்தாண்டுக்காலமாக இவர்களை எப்படி மோனோபோலி-ஆக விட்டார்கள் என்றே தெரியவில்லை. எனவே, கூடுதலாகப் பத்தாயிரம் பேருக்கு ஆவண எழுத்தர் ‘லைசென்ஸ்’ கொடுக்கப்போகிறோம். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக துறையில் சீர்திருத்தம் செய்துவருகிறோம். இதற்கு முன்பு எப்படி இருந்தது என்பது தெரியாது... ஆனால் சட்டம் இயற்றப்பட்டால் தவறு செய்யும் அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்றார் உறுதியான குரலில்.

மக்களையும் சுரண்டி, அரசையும் ஏமாற்றுபவர்களின் கொட்டம் அடங்கினால் சரி!