Published:Updated:

டிரம்பின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை – என்ன நடந்தது? எதற்காக இந்த விசாரணை?

டொனால்டு ட்ரம்ப் - மெலனியா ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப் - மெலனியா ட்ரம்ப் ( Manuel Balce Ceneta )

அமெரிக்க செனட் சபையில் டிரம்பிற்கு எதிரான கண்டன தீர்மானம் குறித்த விசாரணை தோல்வியில் முடிந்துள்ளது. இதன்மூலம் டிரம்பின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

டிரம்பின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன?

ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு நாளாகப் பலரும் கருதினர். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருந்த அந்நாளில் டிரம்பிம் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடமான கேப்பிடல் கட்டத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

டிரம்புக்கு எதிரான ஜனநாயக கட்சியினர் செனட் சபையில் நடைபெற்ற விசாரணையின்போது டிரம்புக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன என்பதை நிரூபிக்க முயற்சி செய்தனர். பல்வேறு தொலைப்பேசி அழைப்புகளையும், வீடியோ ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் டிரம்ப் ஜனவரி 6ஆம் தேதி அன்று நிகழ்த்திய உரைதான் அந்த நாளில் நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்றதற்குக் காரணம் இது பெருங்குற்றம் என வாதாடினார்கள். டிரம்ப் இதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள்.

போராட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்
போராட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்

ஆனால் டிரம்ப் தரப்பு வழக்குரைஞர்கள், ஒரு தனிப்பட்ட நபர் மீது செனட் சபையில் எவ்வாறு கண்டனத் தீர்மான விசாரணை நடைபெறலாம் என்று வாதாடினார்கள். மேலும் டிரம்பின் ஆதரவாளர்கள் அவர்கள் விருப்பத்திற்கு நடந்து கொண்டார்கள் என்றும் அவர்களின் செயலுக்கு டிரம்பின் பேச்சு காரணம் இல்லை என்றும் வாதாடினர்.

அமெரிக்க செனட் சபை என்பது 100 உறுப்பினர்களைக் கொண்டது. செனட் சபையில் டிரம்ப் குற்றவாளியாக நிரூபிக்கப்பட வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் டிரம்புக்கு எதிராக விழ வேண்டும். தற்போது 57 செனட் உறுப்பினர்கள் டிரம்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர் ஆனால் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் 67 வாக்குகள் தேவை.

ஜோ பைடனின் ஜனநாயக கட்சி செனட் சபையில் பாதி உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எனவே டிரம்பின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் என்றால் குடியரசுக் கட்சி அதாவது டிரம்பின் கட்சியைச் சேர்ந்து 17 பேரின் வாக்குகள் தேவை.

தற்போது 7 பேர் மட்டுமே டிரம்புக்கு எதிராக வாக்களித்தனர் எனவேதான் டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

டிரம்பின் அறிக்கை?

செனட் சபையின் முடிவுக்குப் பின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட டிரம்ப், “வரலாற்றில் இதுவரை நடைபெறாத மிகப்பெரிய சூனிய வேட்டை” இது எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்றும் நமது இயக்கம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்பிற்கு தற்போது 74 வயது. செனட் சபையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர் நினைத்தால் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு அவர் விருப்பம் கொண்டிருப்பதை போலத்தான் பேசி வருகிறார் என்பது மற்றொரு கதை.

எதற்காக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

டிரம்ப் ஏற்கனவே அதிபர் பதவி தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். அதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறி பைடன் புதிய அதிபராகவும் பொறுப்பேற்றுவிட்டார். பின் ஏன் இந்த கண்டனத் தீர்மானம் என்ற கேள்வி எழலாம்.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறை டிரம்பின் தூண்டுதலின் பேரில்தான் நடந்தது என்று செனட் சபையில் நிரூபிக்கப்பட்டுவிட்டால் டிரம்பால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் எந்த ஒரு அரசு பதவியையும் வகிக்க முடியாது.

செனட் சபை இதுவரை சில கண்டனத் தீர்மானம் குறித்த விசாரணைகளைக் கண்டிருந்தாலும், இதுவரை எந்த அதிபர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதில்லை.

நாடாளுமன்ற தாக்குதல்?

சரி ஜனவரி 6ஆம் தேதி அதாவது டிரம்பின் தூண்டுதலால் நடைபெற்ற தாக்குதல் என்று கூறப்படும் அந்த தாக்குதல் எவ்வாறு தொடங்கியது என்று பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தார். நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார். ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றார் என்று அதிகாரப்பூர்வமாகச் சான்றிதழ் அளிப்பதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க டிரம்பின் ஆதரவாளர்கள் மறுபுறம் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என எந்த ஆதாரமும் இல்லாமல் டிரம்ப் தொடர்ந்து கூறிவந்த ஒரு குற்றச்சாட்டை அவர்களும் கூறிக்கொண்டு அந்த அதிகாரப்பூர்வ நடைமுறை ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்த்தனர்.

அமெரிக்கா
அமெரிக்கா
Manuel Balce Ceneta

ஏற்கனவே தனது ஆதரவாளர்கள் மத்தியில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்த டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அருகாமையில் கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், அனைவரும் கேப்பிடல் கட்டத்திற்கு முன் கூட வேண்டும் என்று பேசினார். “உங்கள் கோரிக்கைகள் கேட்கபட வேண்டும். கேப்பிடல் கட்டத்திற்கு முன்பாக கூடுங்கள். நீங்கள் இப்போது போராடவில்லை என்றால் உங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் போய்விடும்” என்று பேசினார். டிரம்பின் பேச்சைக் கேட்ட அவரின் ஆதரவாளர்கள் காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி கேப்பிடல் கட்டடத்திற்குள் நுழைந்தனர். பாதுகாப்பு வளையங்களை மீறி பல்வேறு தாக்குதல்களையும் நிகழ்த்தினர்.

இதற்கு முன்பு நடைபெற்ற கண்டனத் தீர்மானம்?

இதன்மூலம் இதுவரை இரு கண்டன தீர்மான விசாரணையை எதிர்கொண்ட ஒரே அதிபர் டிரம்ப் என்ற பெயரும் டிரம்புக்கு கிடைத்துள்ளது. மேலும் அதிபர் பதவியிலிருந்து விலகிய பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விசாரணையைச் சந்திக்கும் ஒரு அதிபராகவும் உள்ளார்.

இதற்கு முன்பு டிரம்பின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன எனப் பார்ப்போம். 2019ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக விருப்பம் தெரிவித்திருந்த ஜோ பைடன் மீதும், அவரின் மகன் மீதும் உக்ரைன் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என டிரம்ப் உக்ரைன் அதிபரை வலியுறுத்தியதாக டிரம்பின் மீது செனட் சபையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உக்ரைன் அவ்வாறு செய்யவில்லை என்றால் அந்நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வரும் ராணுவ உதவி நிறுத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

ஜோ பைடன் - ஜில் பைடன்
ஜோ பைடன் - ஜில் பைடன்
Evan Vucci

இந்த இடத்தில் உக்ரைன் அரசு ஏன் ஜோ பைடன் மீதும் அவரின் மகன் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.

ஜோ பைடனின் இரண்டாவது மகன் ஹண்டர் பைடன் உக்ரைனின் தனியார் எரிவாயு தயாரிப்பு நிறுவனமான பரிஸ்மா என்னும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு ஊழலை மறைக்க அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்ய ஜோ பைடனின் மகன் வலியுறுத்தியதாக எந்த வித ஆதாரமும் இல்லாமல் டிரம்ப் குற்றம் சுமத்தி வந்தார். இந்நிலையில்தான் பைடன் மற்றும் அவரின் மகனுக்கு உக்ரைன் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என டிரம்ப் கூறியதாக செனட் சபையில் அவர் மீது விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அதிலும் டிரம்பின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு