Published:Updated:

‘‘பீதியடைய வேண்டாம்... விழிப்புணர்வு இருந்தால் போதுமானது!’’

கொரோனா விழிப்புணர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா விழிப்புணர்வு

கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

கேரளா, டெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா என இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேள்விப்பட்ட கொரோனாவின் பாதிப்பு, தமிழகத்திலும் பரவிவிட்டது.

கொரியாவுக்குச் சென்று திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸான ‘கோவிட்-19’ பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதை யடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ விதிமுறைகள் காரணமாக, அவர் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிடவில்லை. தொடர்சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘சென்னை மருத்துவக் கல்லூரியில் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளி யிடமிருந்து நோய் பரவுவதை 100 சதவிகிதம் தடுத்துவருகிறோம். அந்த நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 63 பேருக்கும் நோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 55 பேரின் பரிசோதனை முடிவுகள் கொரோனா பாதிப்பு இல்லை (நெகட்டிவ்) என்று வந்துள்ளது. இன்னும் எட்டு பேரின் முடிவுகள் வரவேண்டும். நோய் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

எட்டு கோடிக்கும்மேல் மக்கள்தொகை உள்ள மாநிலமான தமிழகத்தில் இதுபோன்ற தொற்றுநோய்கள் பரவினால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா? கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன?

தமிழக பொது சுகாதாரத் துறையின் மாநில தொற்றுநோய் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பி.சம்பத் விளக்குகிறார்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கண்காணிப்பு: ‘‘ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில், கொரோனா வைரஸ் பரவுவது குறித்து மத்திய அரசு அறிவிக்கை அனுப்பியது. சீனாவிலிருந்து குறிப்பாக வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தியது. அவர்களில் யாருக்கேனும் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவமனைக்கு அனுப்பி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் இந்தியாவில் இருக்கும் 21 சர்வதேச விமானநிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு

சீனாவிலிருந்து வேறு நாடுகளுக்கும் நோய் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, நோய் தாக்கமுள்ள சிங்கப்பூர், மலேசியா, ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகளைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தற்போது அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் விமானநிலையங்களில் மருத்துவக் கண்காணிப்பு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை 1,05,000-க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தில் கண்காணிக்கப்பட்டுள்ளனர். விமானநிலையங்கள் மட்டுமன்றி துறைமுகங் களிலும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, 28 நாள்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அந்த நபர்கள் வசிக்கும் வீடுகளுக்கே கிராமப்புற சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் சென்று ஆய்வுசெய்கின்றனர். கண்காணிக்கப்படுகிறவர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினர், அண்டை வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் தனிநபர் சுகாதாரம் குறித்த ஆலோசனைகளை அளிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதிகள் சுத்தமாக இருப்பதையும் உறுதிசெய்கின்றனர். கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் குறையாதபட்சத்தில், 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப் படுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆய்வகங்கள்: கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகள், புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் செய்யப்படு கின்றன. வட தமிழகத்துக்கு சென்னை கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்திலும், தென் தமிழகத்துக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் செயல்படும் மத்திய வைராலஜி ஆய்வகத்திலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரத்யேக வார்டுகள்: தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சேர்த்து மொத்தம் 300 படுக்கைகள்கொண்ட தனி வார்டுகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தயார்நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இவை தவிர, சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள், செவிலியர் களுக்கான கவச உடைகள், முகக்கவசங்கள், ஹேண்ட் சானிடைசர்கள் ஆகியவையும் வாங்கி இருப்பு வைக்கப் பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விநியோகிப் பதற்காக 10 லட்சம் முகக்கவசங்களும் வாங்கி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இலவச ஹெல்ப்லைன்: கொரோனா குறித்து பொதுமக்களிடம் நிலவும் அச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சில தனியார் மருத்துவமனைகள் லாப நோக்கில் செயல்படுகின்றன. நோய்குறித்த எந்தத் தொடர்பும் இல்லாதவர்களையெல்லாம் பல்வேறு பரிசோதனைகளைச் செய்யுமாறு பணிக்கின்றனர். கொரோனா குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதற்கென வழங்கப்பட்டுள்ள இலவச ஹெல்ப்லைன் எண்களை மக்கள் தொடர்புகொள்ள வேண்டும். அதில் வழங்கப்படும் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, தேவைப்பட்டால் அரசு மருத்துவ மனையை அணுக வேண்டும். தனியார் மருத்துவமனைகளும், ஒரே சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பைக் கையாள, தமிழக சுகாதாரத் துறை தயார்நிலையில் உள்ளது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். விழிப்புணர்வு இருந்தால் போதுமானது’’ என்றார்.