Published:Updated:

நகராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் சண்டை!

பேரணாம்பட்டு ஏரி
பிரீமியம் ஸ்டோரி
பேரணாம்பட்டு ஏரி

நதியும் ஏரியும் வீணாப்போச்சு

நகராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் சண்டை!

நதியும் ஏரியும் வீணாப்போச்சு

Published:Updated:
பேரணாம்பட்டு ஏரி
பிரீமியம் ஸ்டோரி
பேரணாம்பட்டு ஏரி

ஆற்றிலும் ஏரியிலும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீரைக் கலக்கவிட்டதால் ஓர் ஊரே பாலைவனமாக மாறிய அவலம், வேலூர் அருகே நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில், 65 ஏக்கர் பரப்பில் நூற்றாண்டைக் கடந்த மிகப்பெரிய ஏரி உள்ளது. ஆரம்பக்காலத்தில் இந்த ஏரியின் பாசனக்கால்வாயை நம்பியே பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்துவந்தார்கள். கால்நடை வளர்ப்புக்கும் மேய்ச்சலுக்கும் ஏரிப்பகுதி கைகொடுத்தது. ஊரும் செழிப்பாக இருந்தது. பின்னாளில், கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை ஆக்கிரமித்து 300-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டடங்களும் கட்டப்பட்டன. சுருங்கிப்போன ஏரியில், தற்போது நச்சுத்தன்மைகொண்ட கழிவுநீர் மட்டுமே நிரம்பி வழிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வஜ்ஜிரம் மற்றும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அப்படியே ஏரியில் திறந்துவிடுகிறார்கள். இதனால், சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபட்டு நிலத்தடிநீர் கெட்டுப்போய்விட்டது. விவசாயம் முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது. ஏரியிலிருந்து வரும் துர்நாற்றம் மூச்சுத்திணறவைக்கிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு போன்ற பிரச்னைகளால் தினம்தோறும் அவதிப்படுவதாக ஏரியைச் சுற்றி வசிக்கும் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

நகராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் சண்டை!

ஆந்திராவிலிருந்து பத்தலப்பல்லி வனப்பகுதி வழியாகப் பாயும் பாலாற்றின் துணை ஆறான மதினாப்பல்லி மலட்டாற்றிலும் தோல் கழிவுநீரைப் பாயவிட்டு ஆற்றுப்படுகையை நாசப்படுத்தியுள்ளனர். அங்கு உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்மூலம் தோல் கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். ஆனால், கழிவுநீரைச் சுத்திகரிப்பதேயில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தனியே கால்வாய் வெட்டி அபாயகரமான கழிவுநீரை ஆற்றில் விடுவதாகக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுரேஷ்குமார், ‘‘நகரின் குடிநீர் ஆதாரமே இந்த ஏரிதான். மழைநீரை மட்டுமே சேகரித்துவைத்து, குடிப்பதற்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படுத்திவந்தோம். தண்ணீர், இளநீர் மாதிரி இருக்கும். இப்போது கழிவுநீர் தேக்கத்தொட்டியாகக் காட்சியளிக்கிறது. துர்நாற்றத்தால் சுவாசிக்கக்கூட இயலவில்லை. ஏரியைச் சுற்றி மேய்ச்சலுக்கு விடப்படும் பசுக்களின் பால் உற்பத்தி குறைந்துபோனதுடன், பாலின் தன்மையும் சரியில்லை. நகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளையும் ஏரியில்தான் லோடு லோடாகக் கொட்டுகிறார்கள்.

வேறு வழி தெரியாமல் ஏரியை மூடிவிடுமாறு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். இந்த நிலையில், ஏரியைத் தூர்வார கடந்த ஆண்டு நிதி ஒதுக்கினர். டெண்டர் எடுத்த நபர்கள், நகராட்சி கொட்டியிருந்த குப்பைகளை கரையோரத்தில் ஒதுக்கியதோடு பணிகளை முடித்துக்கொண்டனர். ஏரியைத் தூர்வாரவுமில்லை... கரையைப் பலப்படுத்தவுமில்லை.

நகராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் சண்டை!

நகராட்சிப் பகுதியில் உள்ள இந்த ஏரி, ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமானது. ஆனால், இரண்டு நிர்வாக அமைப்புகளுமே ஏரியைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. குற்றச்சாட்டு எழுந்ததால் மாறி மாறிக் கைகாட்டிவிட்டு நழுவிவிடுகிறார்கள். பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்தப் பலனுமில்லை’’ என்றார் கொதிப்புடன்.

விவசாயி லோகநாதன், ‘‘தோல், வஜ்ஜிர தொழிற்சாலைகளின் கழிவுநீரை மொத்தமாகத் தேக்கிவைத்து, மழை பெய்யத் தொடங்கியதும் மதினாப்பல்லி மலட்டாற்றிலும் ஏரியிலும் திறந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாங்கள் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் பலமுறை சொல்லிவிட்டோம். அதிகாரிகளின் அலட்சியத்தால்தான், ஏரியும் ஆறும் கழிவுநீர் ஓடையாக மாறின. இனியாவது, மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். சட்டவிரோதமாகச் செயல்படும் தொழிற்சாலைகளை முடக்க வேண்டும்’’ என்றார்.

பேரணாம்பட்டு நகராட்சி அதிகாரிகளிடம் இதுபற்றிப் பேசியபோது, ‘‘ஏரி, எங்க கன்ட்ரோல்ல இல்லை. ஊராட்சி ஒன்றியம்தான் நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்கள். பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘நகரின் 75 சதவிகிதக் கழிவுநீரை ஏரியில்தான் விடுகிறார்கள். குப்பைகளையும் மலைபோல் கொட்டியுள்ளனர். இந்தப் பிரச்னைக்கு முழு காரணமே நகராட்சி நிர்வாகம்தான்’’ என்று கை நீட்டுகிறார்கள்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரத்தின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுசென்றோம். ‘‘பேரணாம்பட்டு ஏரி மற்றும் மதினாப்பல்லி மலட்டாறு பிரச்னைகளில் விசாரணை நடத்தி நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறேன். குடிமராமத்துப் பணிகள் தொடங்கியபோதே அனைத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லியிருக் கிறேன். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பாதுகாப்போம். ஆக்கிரமிப்பில் ஏழை மக்கள் வசித்தால் அவர்களுக்கு மாற்று இடம் தரவும் முடிவுசெய்துள்ளோம்’’ என்றார் உறுதியாக.

சீக்கிரம் செய்யுங்க சார்!

நகராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் சண்டை!

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், பொன்.வள்ளுவன் என்ற வாசகர் எழுப்பியிருந்த `பேரணாம்பட்டு ஏரியிலும் மதினாபல்லி ஆற்றிலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கிறது. இதைத் தடுக்க முடியாதா?’ என்ற கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள் தோன்றினால் http://bit.ly/DoubtOf CommonMan என்ற இணையப்பக்கத்தில் பதிவுசெய்யலாம். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பின்னர், உரிய பதில்கள் பிரசுரமாகும்.