Published:Updated:

உயில்... பாகப்பிரிவினை... சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..!

உயில்
பிரீமியம் ஸ்டோரி
News
உயில்

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

நீங்கள் ஒரு முறை எழுதிய உயிலை ரத்து செய்யவோ, திருத்தங்களைச் செய்யவோ முடியும்.

பிரச்னைகள் தோன்றும்போதுதான் தீர்வுகளைப் பற்றி யோசிப்போம். கொரோனாநோய்த் தொற்று என்கிற பிரச்னை, `உயில்’ என்ற தீர்வைக் குறித்து நம்மை யோசிக்கவைத்திருக்கிறது. உயில், பாகப்பிரிவினை குறித்த சந்தேகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் அளிக்கும் விளக்கம் இங்கே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
உயில்... பாகப்பிரிவினை...
சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..!

என் அம்மாவின் அம்மா அதாவது, என் பாட்டி வீட்டிலுள்ள நிலத்தை என் இரண்டு தாய் மாமன்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அந்த நிலத்தில் என் அம்மாவுக்குப் பங்கு உண்டா? அந்த நிலம் என் தாத்தா மற்றும் பாட்டியின் பெயரில் உள்ளது. என் தாத்தா நிலத்தை வாங்கும்போது இரண்டு தாய் மாமன்களுக்கு மட்டும் சேரும் என்று அவர்கள் இருவரின் பெயர்களை மட்டும் சேர்த்திருக்கிறார். அந்த நிலம் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. நிலத்தின் பத்திரங்களெல்லாம் எனது தாய் மாமன் ஒருவரிடம் உள்ளது. இந்த நிலத்தில் எனது அம்மாவுக்குப் பங்கு உண்டு என்றால், பெறுவது எப்படி?

- ராகுல், இ-மெயில் மூலம்

“நீங்கள் கூறியுள்ள நிலம், இதுவரை முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளீர்கள். பதிவு செய்து அந்தச் சொத்தானது, உங்கள் குடும்ப நபர்களை வந்தடையாத நிலையில், நீங்கள் உங்கள் தாய் மாமன்களிடம் உங்கள் பங்கை கோர இயலாது. உங்கள் தாய் மாமன் வசமுள்ள பத்திரங்களின் அடிப்படையில் பட்டா முதலானவை அவர்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அந்தச் சொத்தானது அவர்கள் அனுபவத்தில் இருக்கும்பட்சத்தில், இந்த முழு விவரங்களைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தொடர்ந்து உங்கள் பங்கைப் பெறலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயிலைப் பதிவு செய்வது எப்படி? ஒரு முறை எழுதிய உயிலைத் திருத்தம் செய்து எழுத முடியுமா?

- ஹரீஷ் நாராயண்

“உயிலைப் பதிவு செய்வது சுலபமான நடைமுறையே. உயில் எழுதுவதற்கென முத்திரைத்தாள் எதுவும் அவசியமில்லை. ஒரு உயிலானது சாதாரண தாள்களில் கையால் எழுதப்பட்டதாகவோ, கணினி மூலமாக தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம். அதில் தெளிவாக எழுதப்பட்டுள்ள விவரங்களை இரண்டு சாட்சிகளுடன், உங்களின் கையெழுத்தும் போடப்பட்டு, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, பதிவு செய்துகொள்ளலாம். அரசு நிர்ணயம் செய்துள்ள பதிவுத் தொகையை மட்டும் செலுத்தி, பதிவு செய்துகொள்ளலாம். உங்களது மற்றும் சாட்சிகள் இருவரின் அடையாள அட்டைகளும் விவரம் குறிக்கப்பட்டு, `பயோ மெட்ரிக்’ எனப்படும் உங்களின் மற்றும் சாட்சிகளின் ரேகைகள் பதியப்பட்டு, உங்கள் அனைவரின் படங்களும் கேமரா மூலம் எடுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுப் பதிவு செய்யப்படும்.

உயில்... பாகப்பிரிவினை...
சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..!

நீங்கள் ஒரு முறை எழுதிய உயிலை ரத்து செய்யவோ, எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தங்களைச் செய்யவோ முடியும். இறுதி உயிலே (Last Will) நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே எழுதப்பட்ட உயிலில், `திருத்தங்கள்’ எனக் குறிப்பிட்டு, ஓர் இணைப்பாகவும் ஏற்படுத்தி, முன்பு எழுதியுள்ள உயிலுடன் இணைத்துக்கொள்ளலாம். இது, `உயிலின் இணைப்பு’ (Codicil) எனப்படும். இவ்வாறு எழுதும்போது, பயனீட்டாளரின் பெயர், சொத்து விவரங்கள், போன்றவை மிகச் சரியாக, தெளிவாக இருக்க வேண்டும்.”

என் அப்பாவின் உயில் மூலம் எனக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள வீடு கிடைக்கிறது. நான் முத்திரைக் கட்டணம் 7%, பதிவுக் கட்டணம் 4% என மொத்தம் 11% (ரூ.22 லட்சம்) செலுத்தி, அந்தச் சொத்தை என் பெயருக்கு மாற்ற வேண்டுமா... என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே, என்ன செய்வது?

- கணேஷ்குமார், கூடுவாஞ்சேரி

“அப்பாவின் உயில் மூலம் உங்களுக்குக் கிடைக்கப்பெறும் சொத்து, சென்னை போன்ற பெருநகர எல்லையில் இருக்கும்பட்சத்தில், அந்த உயிலை புரோபேட் (Probate) செய்து மெய்ப்பித்தல் அவசியம். இதற்கு, அதிகாரம் படைத்த சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, உயிலைச் சமர்ப்பித்து, மனு ஒன்று தாக்கல் செய்ய வேண்டும். மனுவுடன் உயிலில் சாட்சிக் கையெழுத்திட்டிருக்கும் இரண்டு சாட்சிகளின் பிரமாணப் பத்திரமும் (Affidavit) பெறப்பட்டு, அந்த உயில் எழுதும்போது உங்கள் தந்தை நல்ல மனநிலையில், தெளிவுடன் இருந்தார் எனக் குறிப்பிட்டு, அதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; புரோபேட் கட்டணம் செலுத்தி, பின்னர் சொத்தின் மதிப்புக்கென மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்யும் மதிப்பில் 3% நீதிமன்ற மெய்ப்பிதழ் கட்டணமாகச் செலுத்தி, அதன் பிறகு, உங்களின் சாட்சியம் பதியப்பட்டு, உயிலானது மெய்ப்பித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.

செலவு செய்ய இயலாத சூழ்நிலை இருப்பின், உங்கள் தந்தையின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் பெற்று, இதர வாரிசுதாரர் களிடமிருந்து உங்கள் பெயருக்கான விடுதலைப்பத்திரம் பெறப்பட்டும், அதைப் பதிவு செய்து, சொத்தை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம்.’’

உயில்... பாகப்பிரிவினை...
சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..!

என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். இரண்டு பேர் கிராமத்தில் விவசாயம் பார்க்க, நான் சென்னைக்கு வேலைக்கு வந்துவிட்டேன். இப்போது கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறேன். அப்பாவின் வீட்டில் குடும்பத்துடன் இருக்கிறேன். என் அப்பா கிராமத்திலிருக்கும் இரு தம்பிகளும் கஷ்டப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு அவர் இருக்கும் வீட்டைத் தவிர, அவர் சம்பாதித்த எல்லா சொத்துகளையும் எழுதிக் கொடுத்திருக்கிறார். தம்பிகளுக்குப் பிரித்துத் தரப்பட்ட சொத்தில் நான் பங்கு கேட்கலாமா?

- சிவகுமார், மெயில் மூலமாக

“உங்கள் அப்பாவின் சுயசம்பாத்திய சொத்தை உங்கள் தம்பிகளுக்கு எழுதிக் கொடுத்து, அதை முறையாகப் பதிவு செய்திருக்கும்பட்சத்தில், நீங்கள் அதன்மீது உரிமைகோருவது சாத்தியமில்லை. அப்பா அவ்வாறு எழுதிக் கொடுத்திருக்கும் சூழ்நிலையை நியாயப்படுத்தத் தெளிவான ஒரு காரணம் கூறும் சூழலில், உங்களை ஏமாற்றி அப்பாவிடமிருந்து அந்தச் சொத்தை உங்கள் தம்பிகள் அபகரித்தனர் என்று கூற முடியாது. இவ்வாறான சூழலில், அப்பாவால் அவரது சுய சம்பாத்திய சொத்துகள் அனைத்தையும் தம்பிகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்ட நிலையில், நீங்கள் பங்கு கேட்க இயலாது. வேண்டுமெனில், அவர் இருக்கும் வீட்டை எவருக்கும் எழுதித் தராத சூழ்நிலை இருக்கும் நிலையில், அதில் ஒரு பாகம் கேட்க இயலும்.அப்போது நடந்த அனைத்தையும் தெளிவாக விவரித்து, சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதன் மூலம் பாகம் கோரலாம்.”

பாகப்பிரிவினை மூலம் வந்த சொத்தை வாங்கவிருக்கிறேன். நான் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?

- ஆர்.சக்திவேல், கோயம்புத்தூர்-1

“முதலில் அந்தப் பாகப்பிரிவினைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். அது பதிவு செய்யப்பட்டிருப்பின் நல்லது. கிராமங்களில் முன்னோர்கள் வழிவந்த விவசாய நிலங்களை, இரண்டு மூன்று தலைமுறைகள் வாய்மொழியாகப் பிரித்துக் கொள்ளப்பட்ட சொத்தென அனுபவம் செய்து வருவதுண்டு. இந்தச் சொத்துகளைக் கிரயம் பெறும்போது ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். வாய்மொழியாகப் பிரித்துக்கொள்ளப்பட்ட சொத்து பட்டா, கிராமக் கணக்கு முதலான வருவாய்த்துறை ஆவணங்களில் அந்த உரிமையாளர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட பாகப் பத்திரம் மூலமாகப் பெறப்பட்ட சொத்தாக இருந்தாலும் இத்தகைய வருவாய்த்துறை ஆவணங்கள் அனைத்தும் முறைப்படி விற்பனை செய்பவர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்து, அந்தப் பாகப் பத்திரத்தின் மூலம் கிரயம் செய்யும்போது, உங்கள் வசம் இதர ஆவணங்களுடன் ஒப்புவிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.”

உயில்... பாகப்பிரிவினை...
சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..!

பங்கு முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், வங்கிக் கணக்கு, பிராவிடன்ட் ஃபண்ட், வீடு, நகை, வாகனச் சொத்துடைய ஒருவர், தன் வாரிசுகளுக்கு எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் உயில் எழுதி வைப்பது எப்படி... அதை எவ்வாறு பதிவு செய்வது?

- சாருமதி, இமெயில் மூலம்

“அசையும் சொத்துகள் வரிசையில் நகைகளைப் பொறுத்தமட்டில், அதன் மதிப்பு வித்தியாசப்படும் நிலை உள்ளதால், அதன் எடை மற்றும் பெயரைக் குறிப்பிட்டு, சென்றடையும் நபர் குறித்த விவரங்களைத் தெளிவாக விவரித்து, ஓர் அட்டவணையாக (Schedule) உயிலில் கூறிவிடலாம். வாகனங்களையும் இவ்வாறே உயில் வழியாக அதன் எண்ணைத் தெரிவு செய்து எழுதலாம்.

பங்கு முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பிராவிடன்ட் ஃபண்ட் போன்றவற்றையும் உயில்வழியே எழுதி வைக்கும்போது, அவற்றின் மதிப்பை நீதிமன்றத்தில் தெரிவித்து, அதற்கான முத்திரைக் கட்டணமாக நீதிமன்றக் கட்டணத்தைச் செலுத்தி (Probate Fee) பயனாளர் பெயருக்கான உத்தரவைப் பெற்ற பிறகு, அவர் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்கைப் பொறுத்தமட்டில் நாமினி என ஒருவர் குறிப்பிடப்படாதபட்சத்தில், மேற்சொன்னவாறு உத்தரவு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறான நிலையில், அசையாச் சொத்துகள் எதுவும் இல்லாத போதும் மேற்கூறிய விவரங்களை மட்டுமே தெரிவித்து உயில் ஏற்படுத்தி வைக்க இயலும்.

நீங்கள் வசிக்கும் இடத்தின் வரம்புக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தையோ, சொத்து அமைந்துள்ள பதிவாளர் அலுவலகத்தையோ அணுகிப் பதிவு செய்யலாம்.

என் அம்மா பிறந்த வருடம் 1940. அவருடன் உடன்பிறந்த ஒரு சகோதரியும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். என் தாத்தாவின் வாரிசுதாரர்களாக வாரிசுச் சான்றிதழில் எனது தாய் மாமன்களின் பெயர்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. என் தாத்தா எழுதிய உயிலின் நகலையும் காண்பிக்க மறுக்கின்றனர். `சொத்தில் பங்கு கேட்க மாட்டேன்’ என என் அம்மாவிடமும் சித்தியிடமும் வற்புறுத்தி எழுதியும் வாங்கியுள்ளனர். சொத்தில் என் அம்மாவுக்கும் பங்கு கிடைக்க ஆலோசனை கூறவும்.

- கிருஷ்ணகுமார், இ-மெயில் மூலம்

“முதலில் உங்கள் அம்மா மற்றும் சித்தியிடம், உங்கள் தாய் மாமன்கள் எழுதி வாங்கிய ஆவண விவரம் என்ன என்பது தெளிவாகத் தெரிய வேண்டும். அது முறையாகப் பதிவு செய்யப்படாதபட்சத்தில், தாத்தாவின் வாரிசுச் சான்றிதழில் பெண் பிள்ளைகளின் பெயரை வேண்டுமென்றே சேர்க்கவில்லை என்ற காரணத்தைத் தெளிவுபடுத்தி, உயிலைக் காட்ட மறுக்கும் நிலையையும் எடுத்துக்கூறி, வழக்கு தொடர்ந்து அம்மாவுக்கான பங்கைப் பெற முறைப்படி நடவடிக்கை எடுக்கலாம். `அம்மா மற்றும் சித்தியிடம் வற்புறுத்தி எழுதி வாங்கிய ஆவணம் செல்லாது’ என ஒரு விளம்புகை உத்தரவு (Declaration Suit) பரிகாரமும் அவ்வழக்கில் கோரலாம்.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்குவது, அதற்கான பணத்தைச் செலுத்துவது தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி (Myassetsconsolidation.com) பதில் அளிக்கிறார்.

உயில்... பாகப்பிரிவினை...
சந்தேகங்கள்..! - சரியான தீர்வுகள்..!

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.