இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? யாருக்குமே தெரியாது. வயிற்றுப் பிழைப்புக்காக உயிரைப் பணயம் வைக்கத் தயாராகிவிட்டார்கள் மக்கள். இந்தநிலையில்தான், `கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை முன்களப் பணியாளர்களைப்போல அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்தலாம்; கோயம்பேடு போன்ற பெரும் தொழில் மையங்களைத் திறக்க இவர்களைப் பயன்படுத்தலாம்’ என்கிற தீர்வை முன்வைக்கிறார் மருத்துவர் அப்துல் கஃபூர். இதற்கு அவர் வைத்திருக்கும் பெயர் ‘இம்யூனிட்டி பாஸ்போர்ட்.’ சுருக்கமாக இ-பாஸ்போர்ட்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசென்னையைச் சேர்ந்த அப்துல் கஃபூர், தொற்று நோயியல் மருத்துவர்களில் கவனிக்கத்தக்கவர். அவரிடம் பேசினோம். ‘‘கடந்த எட்டு மாதங்களில், கொரோனா பாதித்த ஒருவருக்கு மீண்டும் அது தொற்றியதற்கான எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை. மறு தொற்றுக்குள்ளானவர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கும் தவறான சோதனை முடிவுகள் அல்லது தொற்று முழுமையாக குணமாகாதது ஆகியவையே காரணங்களாக இருந்தன.

கொரோனா ஒரு நபரை மீண்டும் மீண்டும் தொற்றும் என்பது உண்மையாக இருந்தால், இப்போது இருக்கும் தொற்றாளர்களைவிடப் பல மடங்கு அதிகமானோர் மறு தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் உடல்களில் அந்தத் தொற்றுக்கு எதிரான நோய்த் தடுப்பாற்றல் உருவாகியிருக்கும். அதனால், அவர்களிடம் தொற்றைப் பரப்பும் அபாயம் இல்லை” என்றவர், தொற்றிலிருந்து மீண்டவர்களைப் பயன்படுத்துவது குறித்த யோசனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
“இவ்வாறு மீண்டவர்களின் உடலில் நோய்த் தடுப்பாற்றல் உருவானதைக் குறிப்பிடும் சான்றிதழைக் கொடுத்து, அவர்களைப் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம். உதாரணமாக, சென்னையில் மூடப்பட்டிருக்கும் கோயம்பேடு மார்க்கெட் போன்ற தொழில் மையங்களைத் திறப்பதற்குப் பயன்படுத்தலாம். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நின்று போரிடும் வீரர்கள் போன்றவர்கள் இவர்கள். இவர்களை எந்தத் தடையுமின்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். பயணத்துக்குப் பிறகு தனிமைப்படுத்தலும் தேவையில்லை. அதேபோல இவர்களை வழக்கமான பணிகளுக்கும் அனுமதிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்கள் இப்படி இயல்பு நிலைக்குத் திரும்புவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் படிப்படியாக மீளலாம்.

ஆன்டிபாடி சோதனைகள் தவறான முடிவுகளைக் காட்டுவதால், இப்படி மீண்டவர்களை அந்தச் சோதனைக்கு உட்படுத்தி நெகட்டிவ் முடிவை உறுதிசெய்ய வேண்டியதில்லை. ஆனால், ஆர்.டி பி.சி.ஆர் சோதனை நம்பகமானது என்று உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில அரசுகளிடம் ஆர்.டி பி.சி.ஆர் சோதனையில் பாசிட்டிவ் முடிவு கண்டுபிடிக்கப்பட்டவர்களின் டேட்டா இருக்கும். அதைவைத்து கொரோனாவிலிருந்து குணமானவர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் அடிப்படையில் இம்யூனிட்டி சான்றிதழ் வழங்கலாம். தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் இதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அதேசமயம் இவர்கள் உட்பட அனைவருமே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைக் கழுவுவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மறக்கக் கூடாது’’ என்றார்.
மீள்வதே உயிரியக்கத்தின் இயல்பு. விரைவில் மீள்வோம்!