``என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டாங்க... இந்த வழக்குல ‘அவங்க ரெண்டு பேரையும் கைது பண்ணணும்’னு கோர்ட் ஆர்டர் வந்து ஒரு மாசம் ஆகிடுச்சு. ஆனா, கட்சி செல்வாக்கை வெச்சு குற்றவாளிகள் தப்பிச்சுக்கிட்டு இருக்காங்க. எங்க வீட்டுப் பொண்ணை மட்டும் அவங்க சாகடிக்கலை... நீதியையும் சேர்த்து சாகடிக்குறாங்க...’’ - இப்படிக் கண்ணீருடன் தங்களது குமுறல்களைக் கொட்டித் தீர்க்கின்றனர் சென்னை கீழ்ப்பாக்கம், அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து, தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் அமலி விக்டோரியாவின் குடும்பத்தினர். என்ன நடந்தது?

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தவர் மரியானோ ஆண்டோ புரூனோ. இவருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த அமலி விக்டோரியாவுக்கும் 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அமலி விக்டோரியா 2014, நவம்பர் 5-ம் தேதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கணவர் புரூனோ, அவரின் தாய் அல்போன்சாள், தந்தை ஜான் பிரிக்ஸ் ஆகியோர்மீது அயனாவரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். “ஒரு வருடம் வரை குழந்தை இல்லை என்பதால், பூஜைகள் நடத்தி அமலியை கோமியம் குடிக்க வைத்தார்கள்; வரதட்சணை கேட்டு அமலியைக் கொடுமைப்படுத்தினார்கள்” என்று அமலியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஆனால், புரூனோ தரப்பிலோ, “2014-ல் அமலி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தபோது, கர்ப்பம் கலைந்துவிட்டது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான அமலி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்” என்று சொல்லப்பட்டது.
இந்த வழக்கில் புரூனோ குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், புரூனோ, அவரின் தாய் அல்போன்சாள் ஆகியோருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 2021, மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தது. ஜான் பிரிக்ஸ் விடுவிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த புரூனோ தரப்பு, “அமலியின் தற்கொலைக்கும் மனுதாரர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்துகொண்டார்” என்று வாதிட்டது.

இந்த வழக்கு மீண்டும் கடந்த ஜனவரி 31-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கில் அனைத்துச் சாட்சிகளையும் தீர ஆராய்ந்த பிறகே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நன்றாகப் படித்து, மனநல மருத்துவத்தில் தங்கப்பதக்கம் பெற்ற ஒரு பெண் மருத்துவரே, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்றால், பிரச்னையின் தீவிரத்தை உணர முடிகிறது. எனவே, அவரது மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு கீழமை நீதிமன்றம் அளித்துள்ள ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்வதுடன், அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க வேண்டும்” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் புரூனோவும் அல்போன்சாளும் கைதுசெய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் “ஆளுங்கட்சியினருடன் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு இருவரும் தப்பித்துவருகிறார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார்கள் அமலியின் குடும்பத்தினர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அமலியின் சகோதரர் ராயன், ``புரூனோ அரசு மருத்துவரா இருக்குறதால, அரசுத் தரப்புலயும், ஆளுங்கட்சியிலயும் சிலரைச் சரிக்கட்டி கைது நடவடிக்கையில இருந்து தப்பிச்சுக்கிட்டு வர்றாரு. தமிழக அரசு உடனடியா அவரைப் பணிநீக்கம் செஞ்சு கைது செய்யணும். தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, சட்டப்படி எங்களுக்குக் கிடைச்ச நீதியை நிலைநாட்டுவார்னு நம்புறோம்” என்றார்.
நம்மிடம் பேசிய இன்னும் சிலரோ, ``புரூனோ தி.மு.க ஆதரவாளர் என்பதால்தான் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் இப்படி அலட்சியமாக வெளியே விட்டிருப்பார்களா? இந்த விவகாரத்தில் தி.மு.க சட்ட ஆலோசனைக்குழுவில் இருக்கும் எம்.பி ஒருவர்தான் புரூனோவுக்கு ஆதரவாக இருக்கிறார். புரூனோ கைதுசெய்யப்படாமல் இருப்பதற்கு அவர்தான் காரணம்” என்று போட்டு உடைத்தார்கள்!

இந்த விவகாரம் பற்றி தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சிவ.ஜெயராஜிடம் கேட்டோம்... ``டாக்டர் புரூனோ தி.மு.க உறுப்பினரோ அல்லது ஆதரவாளரோ கிடையாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த பலர்மீது புகார் வந்தபோதெல்லாம் நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, நீங்கள் சொல்லும் இந்தக் குற்றச்சாட்டு தவறானது. முதல்வரின் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என்றார்.
நீதிமன்ற உத்தரவுப்படி கைது நடவடிக்கை எடுக்கவேண்டிய அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசனிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம்... “கைதுசெய்வதற்கான ஆர்டர் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அதனால், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்பதுடன் முடித்துக்கொண்டார்.
செய்யாத குற்றத்துக்கு அப்பாவிகளை லாக்கப்பில் அடைத்துவைத்து கொலையும் செய்யத் துணியும் போலீஸாருக்கு, நீதிமன்றமே கைதுசெய்ய உத்தரவிட்டும், கைதுசெய்யத் துணிச்சல் வராதது ஏன்? போலீஸ் என்று சொல்வதற்கே இவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!