Published:Updated:

குழந்தைகளைக் காப்பாற்றியதுதான் குற்றமா?

டாக்டர் கஃபீல் கான்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் கஃபீல் கான்

2017-ம் ஆண்டு உ.பி மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்தது.

குழந்தைகளைக் காப்பாற்றியதுதான் குற்றமா?

2017-ம் ஆண்டு உ.பி மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்தது.

Published:Updated:
டாக்டர் கஃபீல் கான்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் கஃபீல் கான்
தினம் பல வைரல் வீடியோக்களைக் கடந்து வருகிறோம். ஆனால், ஒரு சில வீடியோக்களை அவ்வளவு எளிதில் மறக்க முடிவதில்லை. அப்படி ஒரு வீடியோ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதன்மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர்தான் டாக்டர் கஃபீல் கான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2017-ம் ஆண்டு உ.பி மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்தது. அப்போது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஆக்ஸிஜன் வேண்டி டாக்டர் கபீல் போராடி அலைந்த வீடியோ வைரலானது. அடுத்த சில தினங்களிலேயே, இந்த விபத்துக்குக் காரணமே அவர்தான் எனக் குற்றம் சுமத்தப்பட்டு கஃபீல் கான் உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுப் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். அதன்பிறகு, நடந்த விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் ஒன்பது மாதங்கள் கழித்து கஃபீல் கான் விடுவிக்கப்பட்டார். ஆனால், பணியிடை நீக்கம் மட்டும் திரும்பப் பெறப்படவில்லை. பின்னர் உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கிய கஃபீல் கான், மருத்துவ உலகின் அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.

2019-ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் தேச ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் எதிராகப் பேசியதாக அம்மாநிலக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் விடுதலை செய்யப்படவில்லை. புதிதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். ‘டாக்டர் கஃபீல் கானைச் சிறையில் அடைத்தது சட்ட விரோதமானது’ என்று கூறி உடனடியாக அவரை விடுதலை செய்ய உ.பி காவல்துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செய்யாத குற்றத்திற்காக ஐந்நூற்றுக்்கும் மேற்பட்ட நாள்களைச் சிறையில் கழித்துவிட்டு, செப்டம்பர் மாதம் விடுதலையாகியிருக்கிறார். ட்விட்டர் வழியே தொடர்புகொண்டு ‘பேட்டி’ என்றதும் சம்மதித்தார். “எனக்காகக் குரல் கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றிகள்” எனத் தொடங்கியவர், நம் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

“எப்படி இருக்கிறீர்கள் ?”

“உடலளவிலும் உளவியல் ரீதியாகவும் மிகவும் சோர்ந்து போய், பலவீனமாக இருக்கிறேன். ஆனால் நம்பிக்கையோடு இருக்கிறேன். மூன்றாண்டுக் காலமாக ஏராளமான கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.”

குழந்தைகளைக் காப்பாற்றியதுதான் குற்றமா?

“2017, கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவத்தன்று என்ன நடந்தது?”

“கர்நாடகாவில் படித்துமுடித்து, சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு 2016-ல்தான் BRD மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கிருப்பதிலேயே ஜூனியர் நான்தான். ஆகஸ்ட் 10-ம் தேதி இரவு மருத்துவர்களுக்கான வாட்ஸப் குழுவில், குழந்தைகள் பிரிவில் ஆக்ஸிஜன் தீர்ந்து போனதாகத் தகவல் வந்தது. நானும் மற்ற பணியாளர்களும் எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சென்று சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தோம். அதில் ஒரு சில நிமிடங்கள் யாரோ வீடியோ எடுத்து, வெளியானது. ஆக்ஸிஜன் இல்லாத 54 மணிநேரத்தில் 250 சிலிண்டர்களை சுமார் 15 பேர் கொண்ட மருத்துவக் குழு ஏற்பாடு செய்தது. அப்படியிருந்தும், 400 குழந்தைகளில் 70 குழந்தைகளின் உயிரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நபருக்கு ஆறு மாத காலமாக அரசு தர வேண்டிய பாக்கி 68 லட்ச ரூபாய். அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் அதில் பத்து சதவிகிதம் அவரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அதை அவர் தர மறுத்ததால், அவருக்குப் பணம் வழங்கப்படவில்லை. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.”

“உ.பி அரசு உங்கள்மீது குற்றம் சுமத்தியது ஏன் ?”

“இந்த ஒரு வீடியோ வெளியானதும் அத்தனை ஊடகங்களும் மருத்துவமனை வாசலில் முகாமிட்டிருந்தார்கள். அப்போதுதான் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அங்கு வந்தார். வந்ததும் ‘டாக்டர் கஃபீல் யார்? அவரை அழைத்து வாருங்கள்’ என்றார். உண்மையில் அவர் பாராட்ட அழைக்கிறார் என்றுதான் நினைத்துச் சென்றேன். கோபமாக என்னைப் பார்த்தவர், ‘ஓடி ஓடி சில ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்து வந்தால், நீங்க என்ன பெரிய ஹீரோவா?’ என்றார். அவ்வளவுதான், அந்த சில வரிகளில் என் வாழ்க்கையே மாறிவிட்டது. நான்தான் அந்த நிகழ்வுக்குப் பொறுப்பானவன், துறை மேலாளர், சீனியர் அதிகாரி என்றெல்லாம் ஊடகங்கள் எழுதின. கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

குழந்தைகளைக் காப்பாற்றியதுதான் குற்றமா?

சிறையிலிருந்து வெளிவந்ததும், இந்தக் குழந்தைகளின் மரணத்திற்கு யார் காரணம் என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்டேன். மருத்துவமனைக்கும் அரசுக்கும் எதிராகச் செயல்படுவதாகப் புகார் செய்து, துறை விசாரணை நடந்தது. அப்போதும், என்மீது தவறில்லை என நிரூபணம் ஆனது. ஒருநாள் மும்பை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டேன். மூன்று நாள்கள் என் கண்களையும் கைகளையும் கட்டி வெவ்வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள். பலமுறை தாக்கப்பட்டேன். இனி பிழைக்கப்போவதில்லை என நினைத்த போதுதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதியிடம், நான் பேசிய 40 நிமிட உரையில் 2 நிமிடம் எடிட் செய்யப்பட்ட உரையை மட்டுமே காட்டினார்கள். சிறையிலடைக்கப்பட்டேன்.”

“சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?”

“மிகவும் சித்ரவதையாக இருந்தது. உணவில்லை. தண்ணீரில்லை. பல நாள்கள் நிர்வாணமாக்கி அடித்தார்கள். எழுந்து நிற்கக்கூட முடியாத அளவிற்கு பலவீனமடைந்தும்கூட, மருத்துவ உதவி அளிக்கப்படவில்லை. என் நிலையை விளக்கி நீதிமன்றத்திற்குப் பத்துப் பக்கக் கடிதம் எழுதினேன். சிறைக்கு என் மனைவியும் மகளும் வந்தபோது, என் மகளின் டைரியில் அந்தக் கடிதத்தை ஒளித்து வைத்து அனுப்பினேன். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை 12 மாதம் வரை விசாரணையின்றிச் சிறையில் வைத்திருக்கலாம். ஆனால் இவரை விடுதலை செய்வது ஆபத்து என மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய சான்று அளிக்கவேண்டும். அரசு இந்த வகையில் இரண்டு முறை என்னைச் சிறையில் வைக்கக் கால நீட்டிப்பு கேட்டது. ஆனால் ஒருமுறைகூட புதிய காரணங்களை அரசு கொடுக்கவில்லை.”

குழந்தைகளைக் காப்பாற்றியதுதான் குற்றமா?

“உங்கள் குடும்பத்தினர் இவ்வளவையும் எவ்வாறு எதிர்கொண்டனர்?”

“2016-ம் ஆண்டுதான் எனக்குத் திருமணம் ஆனது. இரண்டு பிள்ளைகள். என் மகளுக்கு 4 வயதாகிறது. என் மகன் கைக்குழந்தையாக இருக்கும்போது இரண்டாவது முறை கைதானேன். நான் திரும்பி வந்தபோது என்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. 65 வயதான என் தாய் இந்தக் கொரோனா காலத்திலும், நீதிமன்றம், சிறைச்சாலை, வீடு என அலைந்து கொண்டிருக்கிறார்.”

“இப்போது எங்கே இருக்கிறீர்கள்?”

“ஜெய்ப்பூரில் இருக்கிறேன். மதுரா சிறையிலிருந்து என் சொந்த ஊருக்கு 16 மணி நேரப் பயணம். வழியில் என் உயிருக்கு ஆபத்து வரலாம் என என் குடும்பத்தினர் அஞ்சினார்கள். அப்போது மரியாதை நிமித்தம் தொடர்புகொண்ட பிரியங்கா காந்தியிடம் இதைச் சொல்லி யிருக்கிறார்கள். அவர், உ.பி-யில் இருப்பது ஆபத்து என்பதால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எங்களைத் தங்க வைத்துப் பாதுகாப்பு வழங்க முன்வந்து உதவினார். கூடிய விரைவில் உத்தரப்பிரதேசத்துக்குத் திரும்புவேன்.”

“அரசியலில் ஈடுபடுவீர்களா?”

“இப்போதுவரை எந்தக் கட்சி சார்பும் இல்லை. பிரியங்கா காந்தி உதவியதும்கூட மனிதாபிமான அடிப்படையில்தான். ஆனால் என்னைச் சுற்றி நிகழும் அநீதிகள் என்னை மிகவும் பாதிக்கிறது. மாற்றங்கள் நிகழவேண்டும் எனில் அரசியலே ஆயுதம். அந்த ஆயுதத்தை என் கைகள் ஏந்த வாய்ப்பிருக்கிறது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism